POSITIVISM
செலுத்துக........
செல்லுமளவும்!
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கொலம்பஸ்
ஐரோப்பியர்களுக்குப் பழங்காலத்தில் ஒரு நம்பிக்கை.
அதாவது அட்லாண்டிக் சமுத்திரமே உலகின் கடைசி;
அதற்குப் பிறகு அதல பாதாளம். கப்பல்கள் மேற்கு நோக்கிப் போகும்போது கடலில்
நின்று கொண்டிருக்கும் இரண்டு பெரும் பாறைகளுக்கு நடுவில்தான் நுழைந்து போக
வேண்டும். இவற்றை Pillars of Hercules
என்று சொல்வார்கள். இவைதாம் மேற்குக்கடலின் எல்லைக் கற்கள்.
இவற்றைக் கடந்துவிட்டால் அதற்கும் அப்பால் எதுவுமே கிடையாது. இன்னும்
தூரம் செல்லச்செல்ல அதலபாதாளத்துக்குள் கப்பல் விழுந்துவிடும்.
மிகப் பழங்காலத்தில் கிரேக்க வானநூல் வல்லுனர்களும் பௌதிக அறிஞர்களும் பூகோள
நூலறிவாளர்களும் பூமி உண்மையிலேயே உருண்டையான கோளமாக இருக்கிறது என்று கண்டறிந்திருந்தனர்.
ஆனால் எப்படியோ நாளடைவில் அந்த ஆராய்ச்சி அறிவெல்லாம் மறைந்துபோய்,
தட்டை உலக சித்தாந்தமே செல்வாக்குப்பெற்றது.
ஆனால் கோள சித்தாந்தம் முழுவதுமாக மறைந்துவிடவில்லை. பூமி உருண்டை என்று சொன்னானாலேயே
பைத்தியம் என்பார்கள்; அல்லது heresy எனப்படும் மதவிரோதக்
கோட்பாட்டளன் என்று
பட்டங்கட்டி ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவார்கள்.
இதனாலேயே பயந்துகொண்டு அவரவர்பாட்டுக்கு பேசாமல் இருப்பார்கள்.
கீழ்த்திசை நாடுகளிலிருந்து வரும் பொருள்கள், இடையில் அராபியர்கள், துருக்கியர்
போன்றோரின் கைகளின் வழியே ஐரோப்பாவுக்கு வந்தன. அவ்வாறு வரும்போது அவற்றின்
விலை பன்மடங்கு அதிகமாகிப்போனது. அடிக்கடி நடைபெற்ற போர்களால் சரக்கு வரத்து
தடங்கலாகுவதும் அதிகமாக இருந்தது. வர்த்தகர்களுக்கும் பாதுகாப்பில்லை.
இந்த நிலையில் கோள சித்தாந்த்தை தூசி தட்டி எடுத்து வைத்து மீட்பாராய்ச்சியைச்
சிலர் செய்தனர்.
அவர்களில் ஒருவர் கொலம்பஸ்.
'பூமி கோளவடிவினது; மேற்கு நோக்கிச் சென்றால் சீனாவின் கிழக்குக் கரையை
அடைந்துவிடலாம். அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்றால் சம்பாரத்தீவுகளையும்
இந்தியாவையும் அடையலாம்', என்று
முழுமையாக நம்பினார்.
அவர் ஐரோப்பாவின் முக்கிய மன்னர்களிடம் சென்று "பூமி உண்மையிலேயே உருண்டையாக
இருக்கிறது; மெற்கே சென்று கிழக்கை அடையலாம். ஆகவே கப்பல்கள் கொடுத்து உதவுங்கள்",
என்று கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களோ
செவி சாய்க்க வில்லை.
இறுதியில் காஸ்ட்டீல் நாட்டின் அரசியாகிய இஸபெல்லாவின் கருணா கடாட்சத்துக்கு
ஆளாகினார். அந்த அம்மையார் கொலம்பஸின் கோட்பாடுகளை நம்பியது தம்பிரான் செயல்தான்.
மகாராணி இஸபெல்லா, மன்னன் ·பெர்டினண்டிடம்
கொலம்பஸ் தரும் விளக்கம்
ஏனெனில் இஸபெல்லாவின் கணவர் ·பெர்டினண்ட், அரகன் நாட்டின் அரசர். இருவரும்
மணந்து கொண்டபின்னர் அரகன் காஸ்ட்டீல் ஆகிய இருநாடுகளும் இணைந்தன. இருப்பினும்
காஸ்ட்டீலின் நிர்வாகம் இஸபெல்லாவிடம்தானிருந்தது.
இந்த இருவருக்கும் போப் விசேஷ உரிமை கொடுத்திருந்தார்.
அதன்படி மதவிரோதமாக செயல்படுபவர்களை விசாரித்து, சித்திரவதை செய்து கொன்றுவிடுவதற்கு
அந்த உரிமை வழிசெய்தது. அதற்காக விசாரணையாளர்களையும்
அரசர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் போப் கொடுத்தார்.
Inquisitors என்று
அந்த விசாரிப்பாளர்களுக்குப் பெயர். அந்த விசாரணையை
Spanish Inquisition என்று குறிப்பிடுவார்கள்.
அந்தக் காலத்தில் பூமி உருண்டையானது என்று சொன்னால் அந்த இன்க்விஸிஷனுக்கு
ஆட்படுத்தி அக்குவேறு ஆணிவேறாக ஆக்கிவிடுவார்கள்.
உண்மையிலேயே அக்கு வேறு ஆணிவேறுதான். அதற்கென Drawing and Quartering,
Rack என்றெல்லாம் விசேஷ உபகரணங்களை அதற்கென பிரத்தியேகமாக வைத்திருந்தார்கள்.
இஸபெல்லாவின் கருணையினால் அந்த கதி கொலம்பஸ¤க்கு ஏற்படவில்லை.
அதற்கு மாறாக மேற்கு நோக்கிப் பயணம் செய்ய மூன்று கப்பல்களையும் அதற்குரிய
ஆட்களையும் ஏற்பாடு செய்து பணமும் அந்த அம்மையார் கொடுத்தார்.
இந்தியாவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்து இந்தியா முதலிய இடங்களை
ஸ்பெய்ன் நாட்டுக்காக பாத்தியதா உரிமையை ஏற்படுத்திக்கொண்டு வரவேண்டும்.
இதற்கும் போப் விசேஷ உரிமையைக் கொடுத்தார்.
கொலம்பஸ¤க்கு அட்மிரல் என்னும் சன்னத்தையும் இஸபெல்லா ராணியார் கொடுத்தார்.
இந்த சாசனங்கள் சன்னத்துக்கள் முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு கொலம்பஸ்
அஸோரஸ் என்னும் தீவுகளை நோக்கி மூன்று கப்பல்களையும் செலுத்தினார்.
அங்கிருந்து மேற்கு நோக்கிக் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன.
நீண்ட தூரம் சென்ற பின்னர், கொலம்பஸின் போஸன் என்னும் துணைக் கப்பித்தான் கேட்டார்:
"நம்
பின்புறம் இருந்த கரைகளும் மறைந்துவிட்டன. ஹெர்க்குலஸ் தூண்களையும் தாண்டிவிட்டோம்.
நமக்கு எப்போதும் தெரிந்த நட்சத்திரங்களெல்லாம் மறைந்துவிட்டன.
இதுவரைப் பார்த்திராத புதிய நட்சத்திரங்கள்
தெரிகின்றன. கடல் நீரின் நிறமும் மாறிவிட்டது. எதிரிலே கரையிருப்பதாக அறிகுறியோ
சுவடோ அடியோடு கிடையாது.
இப்போதுதான் நாம் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டும். என்ன வார்த்தைகள் சொல்லி
நாம் பிரார்த்தனை செய்யவேண்டும்?சொல்லுங்கள் தளபதியாரே சொல்லுங்கள்! என்ன
வார்த்தைகளை நான் சொல்லவேண்டும்?"
"இப்படியே சொல். 'கப்பலைச் செலுத்துக! இன்னும் கப்பலைச் செலுத்துக. இடைவிடாது
கப்பலைச் செலுத்துக. செலுத்திக்கொண்டேயிருக்கவும்."
போஸன் சென்று மாலுமிகளிடம் சொன்னான்.
இன்னும் அவர்களுடைய வெறுப்பு மறையவில்லை.
கொலம்பஸைத் தூக்கி ஒரு மிதப்பில் வைத்து கடலில் இறக்கிவிட முடிவு செய்தனர்.
அவரைப் பிடிப்பதற்குச் சிலர் அவருடைய கேபினுக்குச் சென்றனர்.
அப்போது கப்பலின் தளத்திலிருந்து ஒரு பெரும் கூவல் கேட்டது.
அனைவரும் சென்று பார்த்தனர்.
கடலின் நீரோட்டத்துடன் ஓர் இலை மிதந்து வந்துகொண்டிருந்தது.
அந்த இலையின்மீது.....
ஒரு நண்டு.
நடுக்கடலில் நண்டு இருக்கமாட்டாது. அது நிலத்தில் வலைகட்டி வசிப்பது.
அப்படியானால் அருகாமையில் நிலம் இருக்கவேண்டும்.
பலநாட்களாக இழந்திருந்த புத்துணர்ச்சி அனைவரின் மனத்திலும் பெருக்கெடுத்து
ஓடியது.
சில வாரங்கள் கழிந்தன.......
மேற்கு நோக்கிப் பறந்து செல்லும் பறவைகள் தெரிந்தன.
பின்னர்.....
நிலம் தென்பட்டது.
புதிய உலகத்தை கொலம்பஸின் கப்பல் அடைந்துவிட்டது.
அதற்குக் காரணம் அந்த இலை. இலையின் மீதிருந்த நண்டு. அவைதாம் இழந்த நம்பிக்கையை
ஊட்டி விடாமுயற்சியைத் தொடரச் செய்தன.
ஒரே ஒரு விஷயம் உதைக்கும்.
அவர்கள் பார்த்த நண்டு ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது. அது கடலில் மிதக்கும்
பொருள்களிலேயே வாழ்க்கையை நடத்தக்கூடியது. அது நிலத்தில் வசிக்காது. உலகிலேயே
அந்த ஒருவகை நண்டுதான் நடுக்கடலிலும் மிதந்து சென்றுகொண்டிருக்கும்.
கோடியில் ஒரு சந்தர்ப்பம் என்று சொல்வதுகூட குறைவானதுதான்
இதுதான் Providence எனப்படுவது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU