துவந்தயுத்தம்
ஸ்பார்ட்டாக்குஸ்

பாகம் 1

கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee


   

                    சில காலத்துக்கு முன்னர் துவந்த யுத்தம் என்னும் தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதியிருந்தேன்.
                    துவந்த யுத்தம் என்பது ஒத்தைக்கு ஒத்தை என்று இப்போது நம்மால் குறிப்பிடப்படும் சண்டை. ஆங்கிலத்தில் Duel என்று சொல்வார்கள்   
                    வாலி வதை, பீமன்/துரியோதனன் யுத்தம், கார்த்தவீர்யார்ஜுனன்/ராவணன் யுத்தம், வாலி/ராவணன் யுத்தம், சிக்கந்தர் ஷா/குமாரகம்பண உடையார், விஸ்வநாதநாயக்கர்/நாகமநாயக்கர் போர், டாராஸ் பல்பா/அவர் மகன், Dropping the Gauntlet போன்ற தலைப்புகள்/நிகழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தேன்.
                    இன்னும் வேடிக்கையான ஒரு துவந்த யுத்தத்தையும் பற்றியும் எழுதியிருந்தேன்.
                    Virchoff என்னும் Pathologyதுறை விஞ்ஞானி/ஆய்வாளர் எப்படி தம்முடைய எதிரியுடன் துவந்த யுத்தம் புரிந்தார் என்பதைப் பற்றிய மடலொன்று போட்டிருந்தேன்.
                    என்னுடைய மனதைத் தொட்ட துவந்த யுத்தங்களும் போட்டிகளும் போராட்டங்களும் இருக்கின்றன. வரலாற்றிலும் புராணங்களிலும் மிதாலஜி எனப்படும் கதைகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டு.
                    இன்னும் சில நிகழ்ச்சிகளையும் பார்ப்போம்.

                    முதல் கதைக்காக பண்டைய கால ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும்.
                    அந்த மாநகரத்துக்குப் பெயர் ரோமா.
                    ட்ராய் என்னும் நகரம் இன்னும் புராதனமானது. அது பண்டைய கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. தற்கால துருக்கியில் இருந்தது. மிகப் பெரிய மதில்களுடனும் சிறந்த போர்வீரர்களுடனும் பலத்த பாதுகாப்புச் சாதனங்களுடன் அது விளங்கியது. அதன் இளவரசன் ஒருவன் பாரிஸ். கிரேக்கர்கள் அந்தக் காலத்தில் தமிழர்களைப் போலவேதான். அவர்களிடமும் சங்கம் இருந்தது. இயல், இசை, நாடகம் ஆகிய முக்கிரேக்கம் இருந்தது. (முத்தமிழ் மாதிரி முக்கிரேக்கம். ஏனுங்க இருக்கப்படாதா, என்ன?) தமிழகத்தில் முடியுடை மன்னர் மூவரும் அவர்களில் யாராவது ஒருவர் தலையாக இருப்பதும்(Hegemon), சிற்றரசர், வேளிர் போன்ற குறுநாட்டுச் சிறு மன்னர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு ஜாம் ஜாம் என்று இருந்தனர். நம் நாட்டு க்ஷத்திரியக் குடிமக்களைப் போன்றே ஸ்பார்ட்டா என்னும் நாட்டு மக்களும்.
                    'குழவி இறப்பினும் ஊண் தடி பிறப்பினும் வாளில் தப்பார்' என்னும் மரபு ஸ்பார்ட்டாக்காரர்களிடமும் இருந்தது.
                    ஒரு நல்ல நாள் பார்த்து பாரிஸ் பையன் மெதுவாக ஏதென்ஸ் மன்னனாகிய மெனலேயஸின் மனைவியாகிய உலகப்பேரழகி  ஹெலனை அசத்தி அழுத்திக்கொண்டு ட்ராய்க்குப் போய்விட்டான்.
                    மெனலேயஸின் அண்ணன்காரன் அகமெம்னான் ஆனானப்பட்ட ஸ்பார்ட்டாவின் மன்னன்.
                    ஆகவே அக்கம்பக்கத்து கிரேக்க நாடுகளிலிருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டிக்கொண்டு ஆயிரம் கப்பல்களில் ட்ராயைத் தாக்குவதற்குப் புறப்பட்டனர். பெரிய பெரிய மாவீரர்களெல்லாம் அந்தப் படையில் இருந்தனர்.
                    ட்ராயுடன் போர் நிகழ்ந்தது.
                    இருபுறமும் சேதம்.
                    பன்னிரண்டு ஆண்டுகள் போர் நடந்தது.
                    இந்தக் காலகட்டத்துக்குள் ஹெலன் கிழடு தட்டிப்போனாளா என்பது தெரியவில்லை. Fat Forty Female என்று இந்தக் காலத்தில் சொல்லப்படுவதுபோல புருஷன் சின்னவீடு தேடக்கூடிய பருவத்தில் இருந்தாளா என்பதும் தெரியவில்லை. 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' என்பார்கள். ஆனால் பார்ஸின் மோகம் பன்னிரண்டு வருடங்கள் இருந்திருக்கிறது.

                    கிரேக்கர்களின் பெருவீரனும், யாராலும் வெல்லப்பட முடியாதவனுமாகிய அக்கிலீஸ் பாரிஸால் கொல்லப்பட்டுவிட்டான். அக்கிலீஸின் மர்மஸ்தானத்தில் அம்பு எய்து கொன்றான். ட்ராய் நகரை வெல்லவே முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் கிரேக்கநாடுகளின் மன்னர்களில் ஒருவனாகிய ஒடீஸியஸ் ஒரு சூழ்ச்சியைச் செய்தான்.
                    ஒரு பெரிய மரக்குதிரையைச் செய்து அதற்குள் கிரேக்கக் கமாண்டோக்களை இருக்கச்செய்து ட்ராய்க்காரர்களின் வெற்றிக்குரிய கப்பமாக அதைக் கோட்டை வாசலில் விட்டுவிட்டு கிரேக்கார்கள் சென்றனர். அதாவது கடலுக்குள் சில மைல்கள் சென்று மறைந்து நின்றனர்.



                    இரவில் மீண்டும் வந்தனர். அதற்குள் குதிரையை ட்ராயர்கள் (Trojan என்பதை இப்படியும் தமிழாக்கம் செய்யலாம்தானே) நகருக்குள் எடுத்துச்சென்றனர்.
                    நடுச்சமத்தில் கிரேக்கக் கமாண்டோக்கள் குதிரையிலிருந்து வெளிவந்து கோட்டை வாசலைத் திறந்துவிட்டனர்.
                    இரவில் நடந்த குழப்பத்தில் ட்ராய் வீழ்ச்சியுற்றது. பாரிஸைக் கொன்று ஹெலனை அழைத்துக்கொண்டு கிரேக்கர்கள் திரும்பினர். ட்ராய் மக்கள் அனைவரையும் கொன்றுவிட்டு நகரத்துக்கு நெருப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
                    ட்ராயர்கள் அனைவரையும் கொன்றனர் என்றா சொன்னேன்.
                    ஒரே ஒரு சிறு திருத்தம்.
                    ட்ராய் மன்னனின் மகளும் அவளுடைய கணவனும் அவர்களின் பணியாட்கள் சிலரும் ரகசியப் பாதை வழியாகத் தப்பிச்சென்றனர்.
                    கால்நடையாகவே சென்று கொஞ்ச தூரத்திலிருந்து கப்பலேறி கிரேக்கத்தையெல்லாம் கடந்து சென்று இத்தாலியை அடைந்தனர்.
                    அங்கு அனைவரும் இறந்துபோயினர்.
                    இறப்பதற்கு முன்னால் ட்ராய் மன்னனின் மகள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப்போட்டுவிட்டாள்.

                    அந்தக் குழந்தைகள் அழுதுகொண்டு பரிதவிப்பதை அங்கிருந்த ஓர் ஓநாய் பார்த்தது.
                    தன்னுடைய குட்டிகளுடன் அந்தக் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்த்தது.
                    அங்கிருந்த கோவலர்களால் கண்டெடுக்கப்பட்ட ரோமுலுஸ், ரேமுஸ் என்ற அந்த சகோதரர்கள் பெரியவர்கள் ஆனபிறகு அங்கு ஏற்கனவே இருந்த எட்ருஸ்கர் என்னும் இனத்தவரை ஒழித்துக்கட்டிவிட்டு, தாங்களே அரசர்களாயினர்.
                    மூத்தவனாகிய ரோமுலுஸின் பெயரால் மிகப் பெரிய மிகப் பாதுகாப்பான மாநகரம் ஒன்றை நிறுவினார்கள்.
                    அதன் பெயர்தான் ரோமா Roma.
                    பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் சீடர்களுக்கும் ஒரு வழக்கம். கூடுமானவரைக்கும் தமிழ்ப்படுத்தவோ தமிழ் மாதிரியாகப் படுத்தவோ செய்வார்கள். ஷேக்ஸ்பியரை செகசிற்பியர் என்றும் பார்லிமெண்டைப் பாராளுமன்றம் என்றெல்லாம் ஆக்கினார்கள்.
                    பேரறிஞர் அண்ணா ரோம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்த நகரை 'ரோமாபுரி' என்று பெயரிட்டு அழைத்தார்.
                    ரோமாபுரிக்கு வந்தாயிற்று.
                    அடுத்து........

GO TO PART 2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
RETURN TO MAIN MENU