ஸ்ரீகணேச
சஹஸ்ரநாமம்
பாகம் 1

கடாரத்
தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா
தெய்வங்களுக்கு உரிய நாமாவளிகள்
அல்லது நாம ஸ்தோத்திரங்கள் குறிப்பிட்ட சில எண்ணிக்கைகளைக் கொண்டவையாக
அமைந்திருப்பதுண்டு. ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட முறைகளில் பூஜை
அமைந்திருக்கும். அவற்றிற்குரிய பலன்களும் குறிப்பிட்டவகையில் இருக்கும்.
நாமங்களைக் குறிப்பிட்ட சந்தஸில் சுலோகங்களாகத்
தொடுத்து ஸ்தோத்திரமாக அமைத்திருப்பார்கள். பெரும்பாலும் அனுஷ்டுப் சந்தஸ்
என்னும் சந்தம் பயன்படுத்தப்பட்டிருக்கும். முதல் நாமத்திலிருந்து கடைசி
நாமம் வரைக்கும் அந்த தோத்திரத்தில் தொகுக்கப்பட்டு ஒரு மாலையாக
விளங்கும். இத்தகைய ஸ்தோத்திர அமைப்பில் உள்ள நாமமந்திரங்களை மாலா
மந்திரம் என்பார்கள்.
"ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திர மாலா மஹமந்தரஸ்ய" என்று சங்கல்பத்தில்
வருவதை சிலராவது கவனித்திருக்கக்கூடும்.
நாம மந்திரங்களைத் தனித்தனியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
அமைத்திருப்பதை நாமாவளி என்பார்கள். நாமாக்கள் ஆவளியாக - வரிசையாக
அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நாமத்துக்கு முன்னால் பிரணவமோ அல்லது அதைப் போன்ற வேறு
பீஜமந்திரமோ சொல்லி, நாமத்துக்குப் பின்னால் நம: அல்லது ஸ்வாஹா
போன்றவற்றைச் சொல்வது வழக்கம்.
இதெல்லாம் எதற்காக அந்த நாமாவளியைச் செய்கிறோம்
என்பதைப் பொறுத்தது.
அகத்தியத்தில் ஏற்கனவே விநாயகரின் பன்னிரண்டு பெயர்கள் கொண்ட நாமாவளியைப்
பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
அது சங்கடநாசனத்துக்கு உரியது.
அண்மையில் பதினாறு பெயர்கள் கொண்ட நாமாவளியையும் அதன் ஸ்லோகத்தையும்
விஸ்வாக் காம்ப்லெக்ஸில் வலை யேற்றியிருந்தேன். அது விக்னநாசனத்துக்கு
உரியது.
நாமாவளிகளின் எண்ணிக்கை சாதாரணமாக பன்னிரண்டு, பதினாறு, இருபத்தொன்று,
ஐம்பத்தொன்று, நூறு, நூற்றெட்டு, ஆயிரம் என்று அமைந்திருக்கும்.
லட்சார்ச்சனை என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
லட்சம் பெயர்கள் கொண்ட நாமாவளிகள் ஏதோ ஒரு காலத்தில் இருந்தனவாம்.
எண்ணிக்கை அதிகமாகவும் ரொம்பவும் Complex-ஆகவும்
இருந்த பலவற்றை கலியுகத்தில் வாழும் மக்களுக்காகச் சுருக்கியும்
எளிமைப்படுத்தியும் ரிஷிகள் அமைத்திருக்கிறார்கள் என்று புராண வரலாறு
கூறும்.
இப்போது இருக்கும் பதினெண் புராணங்களிலேயே மிகவும்
பெரிய ஸ்காந்த புராணம். அது லட்சம் கிரந்தங்களுக்கும் மேற்பட்டது.
இதிகாசங்களில் மகாபாரதம் ஆரம்பத்தில் பன்னிரண்டாயிரம்
கிரந்தங்களைக் கொண்டதாக இருந்தது.
பின்னால் அது இருபத்தையாயிரமாக விரிவாக்கம் கண்டது. அதற்கும் பின்னால்
ஹரிவம்சம் போன்றவற்றையெல்லாம் அடக்கிக்கொண்டு லட்சம் கிரந்துக்கு
மேற்பட்டவற்றைக் கொண்டு பரந்து விரிந்து விளங்குகின்றது.
இதற்கெல்லாம் முற்பட்ட காலத்தில் - ஏதோ ஒரு புராதனமான பழங்காலத்தில்
பிரபஞ்சத்தில் எங்கோ பெரும் பெரும் எண்ணிகைகளில் புராணங்கள், நாமாவளிகள்
போன்றவை இருந்தன.
சிவபெருமானுக்கு எண்ணாயிரம் கோடிப் பெயர்கள் இருக்கின்றன என்று அப்பர்
பெருமான் ஒரு பாடலில் கூறுவார்.
இறைவனின் பெயர்கள், பெயர்களில்லாமை முதலியவற்றைப்
பற்றி விஸ்வாக்காம்ப்லெக்ஸில் உள்ள கீழ்க்கண்ட நான்கு வலைப் பக்கங்களைப்
படித்துப ்பாருங்கள்.
http://www.visvacomplex.com/Anaamikaa.html
http://www.visvacomplex.com/Peyarili.html
http://www.visvacomplex.com/eNNaayiram%20kOdi%20peyar.html
http://www.visvacomplex.com/Nine_Billion_Names_Of_God.html
இப்போதெல்லாம் லட்சார்ச்சனை என்றால்
லட்சம் பெயர்கள் கொண்ட நாமாவளி என்று நினைத்துவிடக்கூடாது. ஆயிரம்
பெயர்கள் கொண்ட சகஸ்ரநாமத்தையே ஒரே சமயத்தில் நூறு பேர் ஒருமுறை சொன்னால்
அது லட்சார்ச்சனையாகக் கருதப்படுகிறது.
ஒரே ஆள் ஒரு சஹஸ்ரநாமத்தை நூறு தடவை சொன்னாலும்
அதுவும் லட்சார்ச்சனையாகத்தான் கணக்கிடப்படும்.
முருகனுடைய திருக்கோலங்களில் சிறப்பானது ஒன்று உண்டு. ஆறுதிருமுகங்கள்,
பன்னிரு கைகள், பன்னிரண்டு ஆயுதங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள்,
வள்ளி, தேவசேனா, வேல், மயில், சேவல் ஆகியவை உள்ள சமஷ்டித் திருக்கோலம்.
இந்தத் திருக்கோலத்தில் உள்ள ஆறு திருமுகங்களுக்கும் - ஒவ்வொரு
திருமுகத்துக்கும் ஒவ்வொன்று என்ற கணக்கில் - ஆறு சஹஸ்ரநாமங்கள் உண்டு.
லட்சார்ச்சனையைப் போலவே அதே பாணியில் கோடி அர்ச்சனையையும் செய்கிறார்கள்.
சஹஸ்ரகோடி அர்ச்சனை என்று ஏதும் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்பது
தெரியவில்லை.
இந்தக் கோடியில் ஒருவர், அந்தக் கோடியில் ஒருவர் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு
பக்கமாக ஆயிரம் பேர் உட்கார்ந்துகொண்டு செய்கிறார்களோ என்னமோ?
அல ்லது சஹஸ்ரநாமம் என்ற பெயர் கொண்ட ஆட்களை இந்தக்
கோடி, அந்தக் கோடி என்று மூலைக்கு மூலை உட்காரச்செய்து பூஜையை அல்லது
ஹோமத்தைச் செய்யக்கூடும்.
இந்தக் காலத்தில் எப்படி வேண்டுமானாலும் செய்வார்கள்.
வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.
தெய்வங்களுக்குரிய நாமாவளிகளில்(நாம ஆவளி-
பெயர்களின் வரிசை) இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்.
இதைத் தவிர விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சில
சஹஸ்ரநாமங்களும் புழக்கத்தில் இருக்கின்றன. அகத்திய
உறுப்பினர்கள்/வாசகர்கள் ஆகியோரில் நியூபி எனப்படும் புதியவர்களில்
இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இவர்களில் பலருக்கு இந்து சமயத்தைப் பற்றிய விபரங்கள்,
தகவல்கள், Wealth Of Material
போன்றவை தெரிந்திருக்கமாட்டாது என்று அறிகிறேன்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்
போகிறார்கள்? சொல்லிக்கொடுப்பவர்களும் இருந்து சொல்லிக் கொடுப்பதற்கான
விஷயஞானமும் அவர்களுக்கு இருக்கவேண்டுமே?
கோயிலுக்குப் போய் மணியடித்துச் சாமி கும்பிடுவது என்ற
பழக்கத்தைத்தான் 'ஆன்மீகம்' என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் சிந்தனைகள்
திசை திருப்பப்பட்டுள்ளன.
ஆகவேதான் எதை எழுதினாலும் ஒவ்வொன்றுக்கும் குறைந்த
பட்ச விளக்கமாவது கொடுக்கவேண்டியுள்ளது. சஹஸ்ரநாமம் என்பதையே
எடுத்துக்கொள்வோம். நாம ஆவளி என்பதும் தீப ஆவளி போல ஒரு வரிசையைக்
குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க மாட்டாது.
மீண்டும் சொல்கிறேன்.
இதெல்லாம் எந்த ஸிலபஸிலாவது இருக்கவா போகிறது? அப்படி
அப்படி யாராவது சொன்னால்தான் உண்டு.
இன்னொன்று......
எல்லாருக்கும் இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் ஆர்வம்
இருக்கும் என்று சொல்லிவிடுவதற்கில்லை.
விஷயத்துக்கு வருகிறேன்.
பழைய 'கிரந்தங்கள்' என்று குறிப்பிடப்படும் மூல ஏடுகளிலிருந்து சில
சஹஸ்ரநாமங்களை எடுத்துத் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த தாந்திரீக நூல்களில் கண்டுள்ள
சஹஸ்ரநாமங்களும் வெளிப்பட்டிருக்கின்றன.
மூன்று சஹஸ்ரநாமங்களுக்குத்தான் முழுமையான உரை- பாஷ்யம்- எனப்படுவது
இருக்கிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு உரிய உரையை ஆதிசங்கரர் எழுதினார் என்று
சொல்வார்கள்.
இதற்கு ஒரு கதை இருக்கிறது.
அடுத்தாற்போல அதைச் சொல்கிறேன்.
கணபதி சஹஸ்ரநாமத்துக்கும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்கும் பாஸ்கரராய மஹி
என்னும் மஹா சாக்தரான பெரும்ஞானி ஒருவர் உரை எழுதியிருக்கிறார்.
புழக்கத்தில் உள்ள சஹஸ்ரநாமங்களில் மிகவும்கடினமானவையாகக் கருதப்படுபவை
துர்கா சஹஸ்ரநாமமும் கணேச சஹஸ்ரநாமமுமாக இருக்கின்றன.
சொல்வதற்குக் கடினமாக உள்ளது துர்கா சஹஸ்ரநாமம் என்று பெரும்பாலும்
கருதப்பட்டு வருகிறது.
"கடல்ல ஒரு உரல் உருளுது பெரளுது தத்தளிக்குது தாளம்போடுது" என்று வேகமாக
அடுத்தடுத்து நிற்பாட்டாமல் சொல்லச் சொல்லி வேடிக்கை பார்ப்பார்கள்.
அந்த மாதிரி.
சில சஹஸ்ரநாமங்கள் மிகவும் ஆழமானவை.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்கு 'சௌபாக்ய பாஸ்கரம்' என்னும் பெயரில் பத்து
அத்தியாயங்களாக பாஸ்கரராயர் உரையை எழுதியிருக்கிறார்.
வலையில் அதெல்லாம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இப்போது உரைக்கு உரை, அதற்கும் உரை என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.
'டீக்கா' என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அந்தப் பெயரில் பிரிட்டிஷ் இந்தியப் படையில் ஓர் உயரிய மெடல்
கொடுத்தார்கள்.
இன்னொரு டீக்காவும் இருக்கிறது.
உரைக்கு உரை. அதற்கு விரிவுரை. தமிழ் இலக்கண மரபில் உரை, விரிவுரை,
காண்டிகை உரை என்றெல்லாம் சொல்வதுண்டு.
பாஷ்யத்துக்கு விரிவுரையாக அமைவது டீக்கா.
இப்போது ஒரு சிறந்த வழிபாட்டு/மந்திர/தத்துவ நூலைப் பற்றிச் சொல்வோம்.
அதுதான் கணேச சகஸ்ரநாமம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU