தமிழ் சாண்டோக்கள்.
பாகம் I
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
(முன்குறிப்பு: சாண்டோ என்ற பட்டம் நல்ல உடற்கட்டைப் பல பயிற்சிகளால்
ஏற்படுத்திக் கொண்டவர்கள். மிகுந்த பலசாலிகள். தங்கள் பலத்தால் அரும்பெரும்
சாதனைகளைச்செய்யக்கூடியவர்கள். பளுத்தூக்குவதிலிருந்து மயிரைக்கட்டி ஜெட்விமானத்தை
இழுப்பதுவரைக்கும் பல காரியங்களைச் செய்வார்கள்.
சாண்டோ என்று ஒரு பலசாலி, உடற்கட்டு அமைப்பு வல்லுனர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார்.)
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பத்தேவர்' என்ற பெயர்
அவ்வளவாகப் பரிச்சயமாக இராது.
ஆனால் 'தேவர் ·பிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள்.
'அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர்' என்று அறிந்திருப்பார்கள்.
அவருடைய படங்களில் வெற்றிபெற்றவை அதிகம். 'தாயார்' செண்டிமெண்ட் படங்களும் எம்ஜீயாரை
வைத்து எடுத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகள் நிறைய இருக்கும்.
ஆனால் அந்தக் காட்சிகளுக்காக உண்மையிலேயே பயிற்சி பெறுவார்கள். அக்காலத்து நடிகர்கள்
பலருக்கு உண்மையிலேயே சிலம்பச்சண்டை போன்றவை தெரிந்திருந்தது. தேவருக்கும் அவையெல்லாம்
நன்கு தெரியும்.
சின்னப்ப தேவருக்குப் பட்டப்பெயராக 'சாண்டோ' என்ற பெயர் அமைந்திருக்கிறது.
சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுனர். நல்ல உடற்கட்டு உள்ளவர். அவர் எடுக்கும்
படங்களில் சிறிய வேடங்களிலும் அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார்.
மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார். ஆனால்
அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கிறது.
பெரிய வள்ளல். பெரிய முருக பக்தர். மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர். அவரால்
உதவி செய்யப்பட்டவர்கள் அனேகர். ஆனால் கறாரான ஆசாமி. பழனியில் தேர் செய்துவிட்டிருக்கிறார்.
ரத்னகிரி போன்ற பல முருகன் ஸ்தலங்களும் அவரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளன.
குன்றக்குடி வைத்தியநாதன், திருமுருக கிருபாநந்த வாரியார், மதுரை சோமசுந்தரம்
முதலியவர்களை சினிமாவில் நடிக்கவைத்தவர். 'மருதமலை மாமணியே' முருகையா பாட்டில்,
'தேவரின் குலம் காக்கும் வேலையா, ஐயா'
என்பதில் வரும் 'தேவர்' என்னும் சொல்லால் விண்ணுலக தேவர் மட்டுமன்றி
சின்னப்பத்தேவரும் குறிப்பிடப்படுகிறார்.
பரமநாஸ்திகரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவை ஆஸ்திகராக நடிக்கவைத்த பெருமையும் அவருக்கு
உண்டு.
இந்த 'சாண்டோ' என்ற சொல் இன்னும் பலருக்கு அடைமொழியாக விளங்கியது.
எனக்குத் தெரிந்து இன்னும் இருவர் இருந்தனர்.
ஒருவர் சாண்டோ சோமசுந்தரம் செட்டியார்.
இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார்.
அவர்களெல்லாம் அக்காலத்தில் உடற்பயிற்சி போன்ற விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள்.
கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருந்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தாலேயே ஒருமாதிரியாக மேல்
உதட்டைமட்டும் சுருக்கி மூக்கைச் சற்று விடைத்துக்கொண்டு பார்ப்பார்கள். புருவம்
சற்றே உயரும். கண்ணிமைகள் சற்றே தாழும். அந்த மாதிரியான சங்கேதக் குறிப்பை இன்னொரு
செட்டியாரோ அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களோதான் அறிந்துகொள்ளமுடியும்.
இருந்தாலும் அந்தக் காலத்திலேயே அவர் உடற்பயிற்சியெல்லாம் செய்து வாட்டசாட்டமாக
இருந்தார்.
புலால் உணவு சாப்பிடமாட்டார்.
நான் அவரைப் பார்த்தது 1956, 57-இல். ஒரு குறுகிய கால
விசாவில் மலாயாவுக்கு வந்தார். பினாங்கில் சில நாட்கள் இருந்தார். என் தந்தையாருக்குப்
பழைய நண்பர். அப்பாவுக்கு Maverickகளை ரொம்பவும் பிடிக்கும்.
அவரே ஒரு maverickதானே. தினசரி எங்கள் கடைக்கு/வீட்டுக்கு
வருவார். எங்கள் சமையற்காரர் சேவுகக்கோனார் வைக்கும் தக்காளிசூப் சாப்பிட்டுச்
செல்வார்.
நான் சந்திக்கும்போது அவருக்கு அறுபது சொச்சமோ எழுபதோ வயது. எப்படியும் அறுபதுக்கு
மேல்தான். ஆள் கொஞ்சம் கட்டையானவர். ஐந்தடியும் இரண்டொரு அங்குலமும்தான்.
ஒருநாள் பினாங்கில் ஓர் அரங்கில் அவர் உடற்பயிற்சிக் கலையைப் பற்றி உரையாற்றினார்.
அழகாகச் சுருக்கமாகபேசினார். அவரைப் பார்த்தால் அப்படியெல்லாம் பேசுவார் என்று
யாரும் நினைத்துவிட முடியாது.
பின்னர் சில demonstrations செய்து காட்டினார்.
மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விட்டார். அப்படியே 'தம்' பிடித்தவாறு ஒரு
தாம்புக் கயிற்றைத் தன் மார்பில் மூன்று சுற்றாகச் சுற்றி, மிக இருக்கமாகக் கட்டினார்.
நன்றாக இழுத்து இழுத்துக் கட்டப ்பட்டது. இருக்கமாக முடிச்சுப்போட்டப்பட்டது.
கீழே சற்றுக் குனிந்தவாறு கீழ்ப்பார்வையாக அரைக்கண்ணை மூடியவாறு இருந்தார். திடீரென்று
நிமிர்ந்து கழுத்தை நன்கு பின்புறமாக நீட்டியவாறு "ஹ¤ம்ப்" என்ற ஓசையிட்டவாறு
மூச்சை இழுத்தார். அவ்வளவுதான். படீரென்று தாம்புக்கயிறு தெரித்து விழுந்தது.
அவர் மூச்சை இழுத்தது, நிமிர்ந்தது எல்லாமே மிக விரைவாக நடைபெற்ற செயல்கள்.
கம்பராமாயணத்தில் வருமே...."எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்". அதுபோலவே இருந்தது.
அந்த டெமோவுக்கு முன்பதாக அந்தக் கயிற்றை நன்றாக இழுத்துப்பார்த்து கையாலேயே
அக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை. வல்லுவான கயிறு.
மூச்சை இழுத்து மார்புக்கூட்டை விரியவைத்து மூன்று சுற்று சுற்றப்பட்ட தாம்புக்கயிற்றை
அறுந்துவிழச்செய்தார்.
மூன்று இளநீர்களை ஒரு பெரிய மேஜையின்மீது வைத்து, தன் வலக்கையை மடக்கிக்கொண்டு,
தன் முழங்கையாலேயே இடித்து இடித்து அதைப் பிளந்து நசுக்கி நீர் வரச்செய்தார்.
தேங்காயைக் கையால் அடித்து உடைத்தார்.
பச்சையான எலுமிச்சங்காயை உள்ளங்கையில் முழுசாக வைத்து விரல்களால் நசுக்கிச்சாறு
வரச்செய்தார்.
ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு மேஜைகளைப் போட்டு அதன்மேல் ஓர் ஆளை ஏறி நிற்கச்செய்தார்.
செட்டியார் கீழே படுத்துக்கொண்டார்.
அவர் சைகை கொடுத்தபோது அந்த ஆள் தொபீரென்று மேஜையிலிருந்து அவர் வயிற்றின்மேல்
குதித்தான்.
குதித்தவேகத்தில் அவர் வயிற்றிலிருந்து அப்படியே பின்புறமாகத் தடுமாறிக் கீழே
சாய்ந்தான். எழுந்திருக்கமுடியவில்லை.
சோமசுந்தரம் செட்டியார் எழுந்து அவனைத் தூக்கிவிட்டார்.
அவர் வயிற்றிலிருந்து பின்புறமாகச் சாய்ந்ததில் அவனுக்குப் பிட்டத்திலும் அடிபட்டு
இடுப்பும் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
செட்டியாருக்கு ஒன்றுமில்லை.
இன்னும் சில டெமோக்களைச் செய்துகாட்டினார்.
ஞாபகமில்லை.
அவர் செய்த அந்த Feats சம்பந்தமாக அவரிடம் தனிப்பட நான்
கேட்டபோது விரிவான விளக்கத்தைச ்சொன்னார்.......
"எல்லாமே மூச்சுத்தான்யா. முச்சக் கையில பிடுச்சுக்கினம்னா எத்தையுஞ் சாதிக்கலாம்யா.
இதுல ஒண்ணுங் கம்பச்சித்திரமா ஒண்ணுமேயில்லைய்யா.
நம்ம பையங்க மூச்சக் கண்ட்ரோல்ல வச்சுக்க மாட்டாஹ. பாரு. ஒக்கார்ரதே இங்க்லீசு
எழுத்து 'ஸீ ' மாதிரியில்ல ஒக்கார்ராஹ? நல்லா 'எல்' மாதிரி ஒக்காரோணும்ல?
முதுகெலும்பு இருக்கே, அது எப்பவும் நிமுந்தே இருக்கோணும். அதுல இயற்கையா இருக்குற
வளசல்தான் இருக்கலாம். நாமளே அதுல இல்லாத வளசலையெல்லாங் கொணாந்திறக் கூடாது.
அப்புடி நம்மள படைக்கலய்ங்க்றேன்.
படுக்குரதுங்கூட ஒருக்கனிச்சாப்புலதான் படுக்கோணும். எடது பக்கமாத்தான்யா திரும்பிப்
படுக்கோணும். அதுனாலதான்யா கல்யாணமானவுஹ பொண்டுஹள எடது பக்கமாப் படுக்கவச்சுக்குறது.
அதுக்கு உண்டான தாத்பரியமெல்லாம் யாருக்குந் தெரியாது. அவுஹவுஹ அப்பிடியப்பிடி
முன்னால வந்த வழக்கப்படி செய்துக்குவாஹ. ஆனா அதெல்லாம் தெரிஞ்சுதான்யா நம்ம முன்னொர்ஹள்லாம்
அதத அப்பிடியப்பிடின்னு வச்சாஹ. அர்த்தமில்லாம அவுஹ வக்யல.
மூச்சப் பிடிச்சுக் கயற அக்குறம்னா அது எப்பிடி?அந்த சக்திங்குறது நம்ம உள்ளுக்குள்ளதானேய்யா
இருக்கு? வெளியேர்ந்து எங்கிட்டிர்ந்து வரப்போகுது? அதெல்லாம் கெடையாதுய்யா.
எல்லாம் நம்மளுக்குள்ளதான்யா இருக்கு.
அதுனாலதான்யா திருமூலர் அப்டி சொல்லீருக்காரு...
"உள்ளம்பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்,
வள்ளல்பிரானார்க்கு வாய்க் கோபுர வாசல்,
தெள்ளந் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,
கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே".
இதெல்லாம் ஒருகாலத்துல நீயே படிப்பெ. அப்ப உனக்கே புரியும். இப்ப நாஞ் சொன்னன்னாக்க
பிடிபடமாட்டாது. ஒங்கப்புச்சிக்கு இதெல்லாம் நல்லாத் தெரியும். அவுஹ சாமியில்லங்யிற
கச்சி. ஆனாலும் இதெல்லாம் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்ட பின்னாலதான் அவுஹ அப்புடி
மாறுனாஹ. விசயம் தெரிஞ்சவுஹ. அதுனாலதான் அவுஹ மேல அவ்வளவுக்கு மதிப்பு வச்சிருக்கோம்.
அதுனாலதான் நானும் தெனசரி அவுஹளப் பாக்காம இருக்குறது கெடையாது. நீயும் படி.
ஒண்ணு ஞாபகம் வச்சுக்க.
மூச்சப் பிடிச்சுக்க.
அதுலதான்யா இருக்கு சூச்சுமம்".
பின்னர் கனமான பொருளைத் தரையிலிருந்து சுலபமாகத் தூக்குவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தார்.
அதிலும் மூச்சு சம்பந்தப்பட்டது.
அந்த வித்தையை வைத்துத்தான் பிரான்மலை இளவட்டக்கல்லைத் தூக்கினேன்.
அது வேறு கதை.
RETURN TO MAIN MENU