இதெல்லாம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மதுரையில் மதுரைக் காலேஜில் ப்ரீயுனிவர்ஸிட்டி வகுப்பில் சேர்ந்தேன். பினாங்கில் இருந்த வாக்கில் மார்க்கு லிஸ்ட்டை அனுப்பி லொயோலாவிலும் மெட்ராஸ் கிரிஸ்டியனிலும் இடம் வாங்கிவிட்டேன். ஆனால் சொந்தக்காரர்களின் குறுக்கீட்டால் மதுரை - அதிலும் மதுரைக் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன்.
கஜானா பாபுராவ் ஹாஸ்டல் என்ற கட்டடத்தில் ஓர் அறையில் இன்னும் இருவருடன் தங்கினேன். அங்குதான் தமிழகத்தின் ஒரு ரியலிட்டி - யதார்த்தத்தை நேரடியாக அனுபவித்து அறிந்துகொண்டேன். பிராம்மணர் - பிராம்மணரல்லாதார் என்ற பிரிவினை மிக அதிகமாக இருந்தது. இப்படியும் ஒரு மாதிரி discrimination இருக்கிறது என்பதை அப்போதுதான் முதன்முதலாக அறிந்துகொண்டேன். மலாயாவில் வாழ்ந்திருந்துவிட்டு வந்தவனுக்கு திடீரென்று இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்போதே இவ்வளவு மோசமாக இருக்கிறதே. அப்போது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும்.
மெஸ்ஸில் சாப்பாடு பிராம்மணாள் சாப்பாடு. நல்லவேளை அங்கு தனிப் பந்திகள் இருந்தமாதிரி தெரியவில்லை. கவனிக்கவில்லை.
சாதீயத்தின் இன்னொரு கொடுமையைப் பின்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் அனுபவித்தேன். அது இன்னொருவகை. பிராம்மணரல்லாருக்குள் காட்டப்படும் சாதிவெறி.
மதுரைக் கல்லூரியில் ஹிஸ்ட்ரி சடகோபன், இங்கிலீஷ் ப்ரொ·பெஸர் தேவநாராயணன், லாஜிக் சீதாராமைய்யர் ஆகியோர் மிகவும் பிரியமாக இருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சடகோபனையும் அவர் தந்தையார் சாண்டில்யனையும் மாம்பலத்தில், மகாலட்சுமி தெருவிலிருந்த அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
கதைக்கு வருகிறேன்.
நிறைய ஈ. படைபடையாக மொய்க்கும். பந்தி ஆரம்பிக்கும் முன்பாக ஒரு இரும்புக் கரண்டியில் நெருப்பைக் கொட்டி வைத்துக்கொண்டு சாம்பிராணியை நிறையப் போட்டு புகையைக் கிளப்பிவிட்டவாறு வேகமாகத் தரையில் வைத்து இழுத்துக்கொண்டு போவார்கள். ஈயெல்லாம் அரம்பரமாக தறிகெட்டுத் தட்டுக்கெட்டுப் பறந்து போகும். புகை குறைந்ததும் மீண்டும் வந்துவிடும். அந்த ஆயிரக்கணக்கான ஈக்களின் இறக்கைகளின் அடிப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட காற்றின் அலைகளின் ஒட்டுமொத்தமான கூட்டுவிளைவே அந்தச் சாம்பிராணிப் புகையை வேகமாக அப்புறப் படுத்தியது.
இது ஒரு மாதிரியான Bio-physics விளைவு.
தினசரி கொத்தவரங்காய்ப் பொரியல் இருக்கும்.
ஹாஸ்டலில் தண்ணீர் வராது. ஆகவே கழிவறைகள் பயங்கரமான நிலையில் இருந்தன.
சில வாரங்களில் வயிற்றுக்கோளாறு; வயிற்றுவலி. அடிக்கடி சிங்கம்புணரிக்கு ஓடிவிடுவேன்.
மதுரையில் இருக்கும்போது தினந்தோறும் எங்களுக்குச் சொந்தமான மேலச்சித்திரைவீதி வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கு மூர்த்தி டேய்லரிங் பாலஸ் இருந்தது. அங்கு ஒரு அருமையான ரெஸ்ட் ரூம். அங்கு போய் இருந்துகொள்வேன்.
பார்த்தார்கள்.
ஏகமனதாக முடிவு செய்து எனக்கு வெளியிலேயே ரூம் பார்த்துக்கொடுத்து ஒரு தனியார் மெஸ்ஸில் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
இப்படியாகத்தானே நான் ஒரு டேய்ஸ்காலராக மாறினேன்.
மலாயாவிலிருந்து கொண்டுவந்த புது ராலி சைக்கில் இருந்தது.
அதில் தினசரி இரண்டுமுறை காலேஜுக்குப்போய் வந்துகொண்டிருந்தேன்.
ஒரே ஒரு பிரச்னை.
மதுரைக ்கல்லூரியை ஒட்டி ரயில்பாதை இருந்தது. காலேஜ் போகும் வழியில் சுப்பிரமணியபுரம் லெவல் க்ராஸிங். மத்தியான்னம் காலேஜுக்குப் போகும்போதெல்லாம் கேட் மூடியிருக்கும். ஏதோ கூட்ஸ் ரயில் அப்போது அந்தப் பக்கமாகப் போகும்.
காத்துக்கொண்டேயிருந்துவிட்டுக் காலேஜ் போய்ச்சேரும்போது ரெண்டேகால் மணியாகும்.
ரயில் லேட்டானால் இங்க நம்ம கிலாஸ் கட்.
இதற்கென்ன செய்வது?
வடக்குக் கிருஷ்ணன் கோயில் சந்து என்று ஒன்று இருக்கிறது. அது வடக்காவணிமூலவீதி முக்கிலிருந்து வடக்கு மாசிவிதியில் போய்ச் சேரும்.
அந்த வழியாக சைக்கிலில் போகும்போதெல்லாம் ஒரு சிறிய கட்டடமும் அதில் மாட்டப்பட்ட போர்டும் கவனத்தை ஈர்த்தன.
ஊதாக்கலர் எழுத்துக்களில் எழுதியிருந்தது.......
'Modern Physical Culture Institute'.
அந்தச் சந்தில் கிருஷ்ணன்கோயிலுக்கு எதிர்புறத்தில் அந்த Physical Culture Institute இருந்தது.
அதனை நடத்தியவர் பெயர் சாண்டோ சுப்பிரமணியம்.
அவரும் கட்டையாக இருந்தார். ஐந்தடி ப்லஸ் ஒன்றிரண்டு அங்குலங்கள். ரொம்பவும் வாட்டசாட்டமாக இருந்தார்.
அவர் பெரிய பெரிய பஸ்களைக் கயிற்றால் கட்டி பற்களால் கடித்து இழுப்பார். காரின் பின்புறமாகக் கயிற்றைக் கட்டி பற்களால் கடித்து இழுத்து, எஞ்சினை ஸ்டார்ட் செய்யச்சொல்லிவிட்டு வண்டியை நகரவிடாமல் செய்வார். கோபால் பல்பொடிக்காரர்களோ பயோரியா பல்பொடிக்காரர்களோ அவர்களிடௌய விளம்பரத்தில் சாண்டோ சுப்பிரமணியம் பல்லால் பஸ்ஸை இழுப்பதைப் போடிருந்தார்கள்.
அவரும் புலால் உண்ணாதவர்.
அவர் ஒரு பிராம்மணர்.
ஆனால் அவரிடம் ·பிஸிக்கல் கல்ச்சர் பயிற்சி பெற்றவர்கள் எல்லாருமே பிராம்மணரல்லாதார்தான்.
வஞ்சகமில்லாமல் சொல்லிக் கொடுத்தார்.
அவரிடம் போய்ச் சேர்ந்தேன். வாரமிருமுறைப் பயிற்சி.
பயிற்சிக்காகப் பயன்படுத்தும் பல சாதனங்களை அவரே டிஸைன் செய்து ஆர்டர் கொடுத்து உருவாக்கியிருந்தார்.
அவற்றைப் பார்க்கும்போது எங்கேயே பார்த்த ஞாபகமாக இருந்தது.
பினாங்கில் சில ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கிறேன்.
மெடீவல் காலத்து டார்ச்சர் உபகரணங்கள்!
அந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது ஏற்படும் வலி வேதனை ஆகியவை அவற்றை இன்னும் ரியலிஸ்ட்டிக்காக ஆக்கின.
சாண்டோ சார் சும்மா விடமாட்டார்.
"சார்! சார்! இன்னக்கி பத்து நிமிஷம் மட்டும் போதும் சார். கையை அசைக்கமுடியலை, சார்!".
சாண்டோ சாருக்கு இடிமுழக்கம்போல் குரல். எல்லாருக்கும் கேட்குமாறு அதட்டிக் கத்துவார்.
'அதுக்கு இதுவே பரவாயில்லை', என்று அரைமணி நேரம் செய்துமுடித்துவிடுவேன்.
இரண்டே வாரத்தில் பல மாறுதல்கள்.
சுப்பிரமணியபுரம் லெவல் க்ராஸிங்கில் ஒரு சிறிய turn-gate இருக்கும். ஒரே ஒரு ஆள்மட்டும் நுழைந்து மறுபக்கத்துக்குச் செல்லலாம்.
பசக்கென்று சைக்கிலை அலாக்காகத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு டக்டக்கென்று டர்ன் கேட்டுக்குள் நுழைந்து மறுபக்கம் சென்று சைக்கிலை இறக்கிவைத்து ஓட்டிக்கொண்டு போய்விடுவது.
முன்பெல்லாம் மேலச்சித்திரை வீதியிலிருந்து மதுரைக் கல்லூரிக்கு வருவதற்கு அரைமணி நேரம் பிடிக்கும். தூசி, வெய்யில் இவற்றுடன் களைப்பு மேலிடும். அப்போதெல்லாம் மதுரைத் தூசிக்கு ஒருவகையான அலாதியான நெடி இருக்கும். காய்ந்து போன குதிரை லத்தி. எல்லாம் ஜட்காவண்டிக் குதிரைகள்.
ஆனால் பயிற்சி செய்தபோது இருபதே நிமிடத்தில் கல்லூரிக்கு வந்துவிடுவேன். களைப்பே இருந்ததில்லை.
அவர் கொடுத்த பயிற்சியை அடித்தளமாக வைத்து இன்னும் உடல் வலுவை நன்கு அதிகரித்துக ்கொண்டேன்.
அதையும் வைத்து நான் பினாங்கில் கற்றுக்கொண்ட Martial Arts- உத்தியையும் வைத்து மூன்று தேங்காய்களைக் குத்தி உடைத்தேன்.
அது வேறொரு கதை.
மூன்று சாண்டோக்களைப் பற்றி எழுதினேன்.
அவர்கள் அடைமொழியாகப் போட்டுக்கொண்டிருக்கும் அந்த சாண்டோ என்பது என்ன? அல்லது யார்?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$