நம்பிக்கை வரிசை -#5
ஒரு புத்தகத்தின் கதை


NAPOLEON HILL'S
THINK AND GROW RICH

பாகம் 1 

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


            நம்பிக்கையைப் பற்றியும் holistic healing பற்றியும் மேலும் பேசுமுன், இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டியிருக்கிறது.

            டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் என்னுடைய mentor-ஆக  இருந்தவர். இப்போது நான் பலருக்கு இருப்பதுபோல எனக்கு அவர்.
            அவர் ஒரு மேதை. பலதுறைகளில் அவர் பிரகாசித்தார்.
            ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏகப்ப முதலியார் என்பவர் ஒரு பெரிய வள்ளல். அவருடைய மகனாகிய விநாயக முதலியாரும் புலவர்களை ஆதரித்தவர். அவருடைய மகனே ஜெயச்சந்திரன். திருத்தணி  கோயிலின் நீராழி மண்டபம் ஏகப்ப முதலியாரின் கைங்கர்யம். அதன் டிரஸ்டியாக ஜெயச்சந்திரன் செயல்பட்டுவந்தார்.
            பீ.ஏ. படிப்புக்கு வானசாஸ்திரமும் எடுத்தார். எம்.ஏ. ஷேக்ஸ்பியர்,  அரசியல், பொதுநிர்வாகம் ஆகியவறில் டிப்லமா பெற்றார். பி.எல். படித்தார்.
            ஆனால் வழக்கறிஞராகத் தொழில் புரிய விரும்பவில்லை.
            அப்போது Free Press, பாரதமாதா போன்ற செய்தி நிறுவனங்கள்  இருந்தன. அவற்றில் அவர் நிருபராகச் சேர்ந்தார்.
            லட்சுமி காந்தன் கொலைவழக்கு என்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக் விளங்கியது.               
             லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு மஞ்சள் பத்திரிக்கையை நடத்திவந்தார். அதில் சினிமா சம்பந்தப் பட்டவர்கள், சில ஆதினகர்த்தர்கள், பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் பலமாதிரியான தகவல்களை வெளியிட்டார். ஒருநாள் அவர் ரிக்ஷாவில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ கொலை செய்துவிட்டார்கள். அப்போது சினிமாவில் பிரபலமாக விளங்கிய எம்கே தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கை ஜெயச்சந்திரன் விசேஷ நிருபராக இருந்து செய்திகளைத் திரட்டினார். அந்தக் கேஸின் பல ரகசியக்குறிப்புகளை அவர் பார்த்திருக்கிறார்.

            அரசுத் துறையில் சேர்ந்த பின்னர் இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் எக்ஸிபிஷன் ஆ·பீஸராக இருந்து கண்காட்சி ஒன்றை சிறப்பாக ஏற்படுத்தினார். பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட ஏவீஜே, மதுரைக்குத் தகவல் இலாகா அதிகாரியாக மாற்றப்பட்டார்.

            சாக்தம், கௌமாரம், சித்தரியல், சைவ சித்தாந்தம், மந்திர, தந்திர சாஸ்திரம், பௌத்தம், சில்ப சாஸ்திரம், ஓவியம், ஆலய கட்டடக்கலை, அறுபத்துநான்கு கலைகள், அவதானக்கலை, கவிதை யாத்தல், கல்வெட்டியல் முதலிய பலவற்றை நன்கு அறிந்து துறைபோகியவர்.
            Sakthi என்னும் ஆங்கில விளக்க நூலும் கவிராஜபண்டிதர் எழுதிய தமிழ் சௌந்தர்ய லஹரிக்கு உரையும் திருமுருகாற்றுப்படை முதலிய பலவற்றிற்கு நுணுக்க விளக்கமும் கொடுத்திருக்கிறார். இதற்காகவே அவர் சொந்தமாக உள்ளளி பதிப்பகம் என்ற பதிப்பகம் ஒன்றை வைத்திருந்தார். பல மாநாடுகளில் அவருடைய பேப்பர்கள் படிக்கப் பட்டுள்ளன. பல ஜர்னல்களிலும் வெளியாகியுள்ளன.

            மதுரை மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி முனங்குக்கு அருகில் தமிழக அரசு தகவல் துறைக் கட்டடம் இருந்தது.
            டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் அங்குதான் தகவல் துறை  அதிகாரியாக இருந்தார். அப்போது மதுரை கலெக்டராக இருந்த சேஷனுடைய ஏற்பாட்டில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தலைவராகிய தமிழவேள் பிடி ராஜனின் (பழனிவேல் ராஜனின் தந்தையார்) தலைமையில் கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் கலைக்கூடம் Temple Art Museum ஒன்றை நிறுவிக்கொண்டிருந்தார். ஆயிரக்கால் மண்டபம் அவருடைய உயிர் என்றுகூடச் சொல்லலாம்.

            அவருடைய அலுவலகம், பெரிய அறிஞர்கள், சித்தர்கள் போன்றோர் வரப்போக இருக்கும் இடமாக இருந்தது. தமிழாராய்ச்சித் துறையின் பெரிய பெரிய பெயர்களையெல்லாம் அங்கு சந்திக்கலாம். அருணாசலக் கவுண்டர், முத்துக்கோனார், விஜயவேணுகோபால், ராஜைய்யன், டாக்டர் சுப்பிரமணியம், கே.கே.பிள்ளை, பாலகிருஷ்ணன் நாயர், டாக்டர் சம்பகலட்சுமி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வெளிநாட்டு அறிஞர்களையும் எப்போதும் அங்கே பார்க்கலாம். பல வெளிநாட்டுக் காரர்களுக்கு ஆராய்ச்சியில் அவர் உதவியிருக்கிறார். ஒரு நல்ல நூலகத்தையும் நிறுவியிருந்தார். தமிழகப் புலவர் வரிசை மட்டுமே கிட்டத்தட்ட நூறு புத்தகங்களுக்குமேல் இருந்தது. என்னுடைய குருநாதரை நான் அவருடைய அலுவலகத்தில்தான் முதன்முதலில் சந்தித்தேன்.
            பிற்காலத்தில் அவர் கோலாலும்ப்பூரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். திருப்பதியில் Temple Art Museum ஒன்றை நிறுவினார். தஞ்சாவூரிலும் தகவல் துறை அதிகாரியாக இருந்தார். அப்போது அவர் சரஸ்வதி மஹால் நூலகத்தையும், மராத்தி, நாயக்கர் பாணி ஓவியங்களையும், தஞ்சைப் பெரிய கோயிலையும் ஆராய்ந்தார்.
            மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பீஎச்டீ பட்டமும் பெற்றார்.
            அப்போது அவருக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். அந்த ஆய்வை அந்தப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.
            தர்மபுர ஆதீனம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை நிறுவிய International Institute of SaivaSiddhanta- வின் முதல் இயக்குனராக இருந்து சர்வதேச சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார்.
            நான் படிப்பை முடித்துவிட்டுத் தமிழகத்தில் இருக்கும்போது மதுரைக்கு அடிக்கடி சென்று அவரைச் சந்திப்பேன். அவரிடம் கற்றுக்கொண்டவை அனேகம். என்னுடைய சிந்தனை,  ஆய்வியல், சமயத்துறை/
கலைகள் முதலியவற்றில் ஈடுபாடு போன்ற பல அம்சங்களை அவர் செம்மைப் படுத்தியிருக்கிறார். வழிகாட்டியாகவும் விளங்கியிருக்கிறார். பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

            ஒருநாள் மதுரையில் மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி சந்திப்பின் அருகிலிருக்கும் மதுரை ஹிக்கின்ஸ்பாதம்ஸ் புத்தகக் கடைக்குக் கூட்டிச் சென்றார்.
            ஸ்ரீதேவீ மாஹாத்ம்யம், கனகதார ஸ்தோத்திரம் போன்ற சில புத்தகங்களை வாங்கச்சொல்லி இட்டுச் சென்றார்.
            அப்போது திடீரென்று ஒரு பச்சை நிறப்புத்தகத்தை எடுத்து என் கையில் திணித்து, "அதெல்லாம் படிக்கறதுக்கு முன்னால மொதல்ல இதப் படிச்சுருங்கோ. This is a unique book, Bharathi. There is none like this", என்றார்.
            வாங்கிப்பார்த்தேன்.
        'Think and Grow Rich - by Napoleon Hill' என்ற தலைப்பு.
        "Boss! I don't want to get rich. You know that?" என்று  புரியாமல் கேட்டேன். ஏனெனில் ஆன்மீக விஷயங்களைப் பற்றியும் வரலாறு போன்றவற்றையும் அறிந்து, அந்தத் துறைகளில் ஆழமாகச் செல்லவேண்டும் என்ற நோக்கம் இருந்தது.  பணம், அந்த மாதிரியான தேடலுக்கும் பக்குவத்திற்கும் தடங்கலாக இருக்கும் என்று நம்பிவந்தேன். (அந்தக் கெட்ட பழக்கம் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறது.) 'வாழ்க்கைக்கு உரிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், ஆராய்ச்சிகள் செய்வதற்கு உரிய செலவுகளை ஈடுகட்டவும், பிணி தீர்க்கும் புனிதப் பணியை மேற்கொள்வற்காகவுமே மருத்துவத் தொழில்', என்ற உறுதி என்னுள் ஆழமாகப் பதிந்திருந்தது. மதுரைக்கு அருகிலிருந்த காந்தி கிராமம், சர்வோதயா இயக்கம் போன்றவற்றின் தாக்கமும் ஒரு பெரிய காரணம். இவற்றுடன் ஆன்மீக வேட்கையும் சேர்ந்துகொண்டது.

            டாக்டர் ஜெயச்சந்திரன் சொன்னார்:
            "பாரதி, நீங்க நினைக்கிறாப்போல இல்லை. இந்தப் புத்தகம் வேற தினுசு. நீங்க வாங்கிப் படியுங்கோ. அதுல ஒங்க ஆன்மீக ஜர்னிக்கு வேண்டிய விஷயமெல்லாமே நெறய இருக்கு. It just needs a different mode of application, Bharathi. You will understand all this, later."
            வாங்கி வைத்துக்கொண்டேன்.
            ஆனால் படிக்கவில்லை.
            அதற்குரிய வேளை வந்தது......
            பம்பாயைச்சேர்ந்த ஒரு சீக்கியர் உருவத்தில்.

Please read on -
பாகம் 2

$$$$$$$$$$$$$$$$$$$$$$
    

RETURN TO MAIN MENU