நம்பிக்கை வரிசை -#5
ஒரு புத்தகத்தின் கதை
பாகம் 2

NAPOLEON HILL'S
THINK AND GROW RICH

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

      மதுரை மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி முனங்குக்கு அருகில் தமிழக அரசு தகவல் துறைக் கட்டடம் இருந்தது.
        டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் அங்குதான் தகவல் துறை அதிகாரியாக இருந்தார். அப்போது
மதுரை கலெக்டராக இருந்த சேஷனுடைய ஏற்பாட்டில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தலைவராகிய
தமிழவேள் பிடி ராஜனின் (பழனிவேல் ராஜனின் தந்தையார்) தலைமையில்
கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் கலைக்கூடம் ஒன்றை நிறுவிக் கொண்டிருந்தார்.


        அவருடைய அலுவலகம், பெரிய அறிஞர்கள், சித்தர்கள் போன்றோர் வரப்போக இருக்கும் இடமாக இருந்தது. தமிழாராய்ச்சித் துறையின் பெரிய பெரிய பெயர்களையெல்லாம் அங்கு சந்திக்கலாம். அருணாசலக்கவுண்டர், முத்துக்கோனார், விஜயவேணுகோபால், ராஜைய்யன்,
டாக்டர் சுப்பிரமணியம், கே.கே.பிள்ளை, பாலகிருஷ்ணன் நாயர், டாக்டர் சம்பகலட்சுமி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வெளிநாட்டு அறிஞர்களையும் எப்போதும் அங்கே பார்க்கலாம்.
ஒரு நல்ல நூலகத்தையும் நிறுவியிருந்தார். தமிழகப் புலவர் வரிசை மட்டுமே கிட்டத்தட்ட
நூறு புத்தகங்களுக்குமேல் இருந்தது.

        அவ்வாறு வருபவர்களில் ஒருவர் பம்பாயிலிருந்து வருவார். அவர் ஒரு சீக்கியர். பெயர்
டாக்டர் ஜாலி. அவர் என்ன சிங் என்பது தெரியாது.

        கார் ஸ்பேர் பார்ட்கள் தயாரித்து/வரவழைத்துக்கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவ்வப்போது சென்னைக்கும் மதுரைக்கும் வருவார்.
        அவர் ஓர் அலாதியான பேர்வழி. கைரேகை, வாஸ்து நூல், எண்கணிதம், நவமணி நூல்
என்று  கண்ட தனமாகக் கற்று வைத்திருந்தார். நவமணிகளை வைத்துச் செய்யும் சிகிச்சை முறையன்றையும் கண்டு பிடித்திருந்தார். அதற்கென ஒரு கருவியையும் தயாரித்துவைத்திருந்தார். அது கொஞ்சம் நூதனமான கருவி. சில பரிசோதனைகள் அதன் மூலம் வெற்றி பெற்றிருக்கின்றன.



        முதன்முதலில் பம்பாய் டாக்டர் ஜாலியைச் சந்திக்கும்போது, அறிமுகப்படுத்தி வைத்த டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன், "Dr.Jolly....tell him about 'Think and Grow Rich'....Dr.Bharathi would
be soon readng it," என்றார்.

        "Oh yes! Yes! Yes! That book has shaped my life and I happen to be what I am, because of that book", என்றார்.

       இந்த மடலைத் தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டதால், ஜாலி சொன்னது வச்சது எல்லாவற்றையும் தமிழேயே சொல்லிவிடுகிறேன்.

        "பஞ்சாபில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன், நான். என் தந்தையார், மற்ற மூதாதையர் எல்லாருமே தற்சமயம் பாக்கீஸ்தானில் இருக்கும் மாண்ட்கோமரி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். இந்த உலகில் இருக்கும் நாற்பது சதவிகிதம் சீக்கியர்கள் மாண்ட்கோமரி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள், தெரியுமா? எங்களுக்கென்று நிலபுலனெல்லாம் நிறைய இருந்தது. ஆனால் பார்ட்டிஷன் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு நாங்கள் பஞ்சாபுக்குக் குடியேறிவிட்டோம். அப்போது பெப்ஸ¤(PEPSU) என்னும் 'பாட்டியாலா ஈஸ்ட் பஞ்சாப் ஸ்டேட்ஸ் யூனியனில்' எங்களுக்கு உறவினர் இருந்தபடியால் எப்படியோ அங்கேயே குடியேறி ஒப்பேறினோம்.
        எங்கள் கிராமத்தில் நான் சிறுவயது முதலே ஒரு பெண்ணைக்  காதலித்தேன். பத்து வயது இருக்கும்...அப்போதே. அவளும் என்னுடன் காதலாக இருந்தாள். Anyway..... it seemed so.....
    அந்தக் கிராமத்திலேயே அவள்தான் அழகி. அவள் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.
    நாங்களோ பரதேசி.....Beleive it or not, Doctor....That's what they called us.....'Pardeshi'. ஏனெனில் நாங்கள் பாக்கீஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் அல்லவா?
    நான் படித்து முடித்ததும் வேலையற்று ரொம்பநாள் கிராமத்தில் இருந்தேன். அப்போதெல்லாம் அகாலி தள் (Akhali Dhal - a Punjaabi religio-socio-political movement of post-independant India), காங்கிரஸ் கட்சியுடன் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருந்த சமயம். நானோ அகாலிதள் ஆதரவாளனாக இருந்தேன்?

    "இப்போ?", சமயாசந்தர்ப்பம் தெரியாமல் நான் கேட்டுவைத்தேன்.
    "......................."

    அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். 'என்னடாயிது? நாம் சீரியஸாக நம் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இவன் பாட்டுக்கு என்னத்தையோ கேட்டுக் குறுக்குச்சால் ஓட்டுகிறானே!' என்ற அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆகவே பதில் ஏதும் சொல்லவில்லை.

       தொடர்ந்தார்.

        "அகாலிதள் ஆதரவாளனாக இருந்ததால் வேலை ஏதும் கிடைக்கவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டு மேல்முயற்சிகளையும் ஒழுங்காகச் செய்யவில்லை. செய்யவும் தெரிய
வில்லை. யாரையும் தெரியாது.
தெரிந்தால் அல்லவா push and pull செய்யலாம்?"
   
        ஒருநாள், அந்தப் பெண்ணிடம் என்னை மணந்துகொள்ளுமாறு கேட்டேன். அவள் மிகக் கிண்டலாகச் சிரித்துக்கொண்டு என்னை ஏளனமாகப் பார்த்தாள்.
        "நான் இந்த கிராமத்திலேயே பெரிய பணக்காரரின் பெண். இந்த கிராமத்திலும் சுற்றுவட்டாரத்திலும் ஜனக்கட்டு மிகவும் உள்ளவள். பாட்டியாலா மகாராஜா எங்களுக்கு மானியம் விட்டிருக்கிறார். அவர்கள் குடும்பத்துடன் எங்கள் உறவினர்கள் மணத்தொடர்பு கொண்டவர்கள். நீயோ வந்தேறுங்குடி. பரதேசி. சொத்துப்பத்து ஒன்றுமில்லை. வேலையும் இல்லை. என்னை மணந்துகொண்டு உன்னால் குடும்பம் நடத்தமுடியுமா? .தூஉ..உ...உ....உ.....உ....... (அந்த 'உ'வைப் பார்த்தீர்களா? கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிக்கொண்டே போகிறது? மேற்கத்திய இசை மரபில் Decrescendo என்று சொல்வார்கள். அந்த மாதிரியில் சொல்லிப்பாருங்கள் <இதெல்லாம் ஜேய்பி மார்க் கொனஷ்டை-patented>).

        என்ன யோசிக்கிறீர்கள்? 'சீனியர், ஜூனியர்' மாதிரி கதை போகிறதோ?     மேலே தொடர்ந்து படியுங்கள்.

        கோபம், ரோஷம், வருத்தம் ஆகியவை தலைக்கேறியது. என்ன செய்கிறோம் என்றே உணராதவகையில் நான் அவளிடம் அப்போதே ஒரு சபதமிட்டேன்.

        "உன்னைவிடப் பணக்காரி; உன்னைவிடப் படித்தவள்; உன்னைவிட அழகியான நகரப்புறத்துப் பெண்ணை மணந்துகொண்டு, இதே கிராமத்துக்கு வந்து உன் முன் நடந்துகாட்டுகிறேன், பார்", என்றேன்.

        உடனேயே முதுகைத் திருப்பிக்கொண்டு வேகமாக வந்து, அரைமணி நேரத்தில் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினேன்.

        பஸ்ஸில் ஒரே அழுகையும் ஆத்திரமும்.

        டெல்லிக்குச் சென்றேன். அங்கும் தங்காமல் ரயிலேறி பம்பாய்க்குச் சென்றேன். அங்கே என் நண்பன் ஒருவன் இருந்தான்.
        அவனுடைய அறைக்குச் சென்றேன். மிகச்சிறிய அறை. அவனுக்கே போதாது. இருப்பினும் என்னைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டான்.
        உணவுக்குச் சிரமப்படவேண்டியிருந்தது. அவனுடைய உணவைப் பகிர்ந்துகொண்டேன்.

        அந்த அறையில் பல புத்தகங்கள் இருந்தன. நண்பன் படிப்பான்.
        அவற்றில் ஒன்று 'Think and Grow Rich'.
        அதனை எடுத்து என் கையில் கொடுத்து,
"எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டியது இந்தப் புத்தகம். நீயும் படி. ஆனால் ஒரு முறை மட்டுமே படிக்கக்கூடாது. பலமுறைகள் படிக்கவேண்டும். அப்போதுதான் வேலை செய்யும்", என்றான்.
        "என்னடாது! புத்தகம்.....வேலை செய்யுமா? அதெப்படி? நாமல்லவா வேலை செய்யவேண்டும்?"
        எனக்குப் புரியவில்லை.
        இருப்பினும் அதனை எடுத்துப் படித்தேன்.
        மறுமுறையும் படித்தேன்.
        மீண்டும் படித்தேன்.
        அடுத்தடுத்துப் படித்தேன்.
        படித்தேன். படித்துக்கொண்டேயிருந்தேன்.

        அடுத்தாற்போல இரண்டு மாதங்கள் விடாமற் படித்துக்கொண்டே யிருந்தேன்.
        அந்த இரண்டு மாதங்கள் கழித்து ஒரு வேலை கிடைத்தது.
        ஒரு வர்க் ஷாப்பில் எடுபிடி வேலை. அதுவரைக்கும் என்னுடைய படிப்புதான், நான் தேடிவந்த வேலைகளை நிர்ணயித்தது. ஒருவித மனத் தடையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்தத் தடையை இப்போது காணோம். வேலையை ஓர் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செய்தேன். அங்கிருந்த அத்தனை மாதிரியான வேலைகளையெல்லாம் பழகிக் கொண்டேன். ஸ்பேர் பார்ட்டுகளை எப்படி modify செய்வது என்ற வித்தையை நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய படிப்புக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை.
        அந்த ஆண்டு முடிவுக்குள் அந்த வர்க் ஷாப்பில் மேலாளனாக உயர்ந்துவிட்டேன். இந்தியாவிலுள்ள எல்லாவிதமான கார்களையும் ரிப்பேர் செய்யமுடிந்தது. அத்தனை வகையான ஸ்பேர் பார்ட்டுகள் எல்லாமே எனக்கு அத்துப்படி.
        அடுத்த இரண்டாண்டுகளில் எனக்கென்று ஒரு சொந்த வர்க் ஷாப் ஏற்பட்டது.
        பிறகு ஒரு ஸ்பேர் பார்ட் சப்லையரிடம் சேர்ந்தேன்.
        அடுத்த இரண்டாண்டுகளில் நானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டேன்.
        ஆனால் அந்தப் புத்தகத்தைமட்டும் விடாமல் திரும்பத் திரும்பப் படித்தேன்.
        மொத்தம் இருநூறு தடவைகளுக்கு மேல் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன். I have internalised the book.
       நல்ல வருமானம். ஒரு பெரிய இடத்துப்பெண்; அழகானவள்; படித்தவள்; பம்பாய்க்காரியைத் திருமணம் செய்துகொண்டேன்.
        திருமணமான அந்த மாதக்கடைசியில் என்னுடைய கிராமத்துக்குச் சென்றேன். ஐந்தாண்டுகள்கூட ஆகவில்லை.

If you beleive in Providence and coincidence, Doc..........
but I tell you.....it happened. It just happened that way.

        நான் என்னுடைய கிராமத்திற்குச் சென்றதும் அதன் பெரிய தெருவிற்குள் என் மனைவியுடன் நடந்து சென்றேன். வேண்டுமென்றே மிகவும் மெதுவாக நடந்துதான் சென்றேன்.

        அப்போது அந்தப் பெண்....கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்கொண்டு எதிர்ப்புறமாக வந்தாள். என்னைப் பார்த்ததும் தலையைக் குனிந்துகொண்டு சென்றாள். நான் அவளைக் கடந்து சென்றேன்."

        "பாருங்கள், Doc. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தவன்; ஏழை; வந்தேறுங்குடி; செல்வாக்குள்ளவர்கள் யாரையும் தெரியாதவன்;உலகநடப்புத் தெரியாதவன்; கைத்தொழில் இல்லாதவன்; வருமானமே இல்லாதவன்".

       "ஐந்தே ஆண்டுகளில் சொந்த நிறுவனம்; வேலைத்திறன்; பணக்காரன்; அழகிய, படித்த, பணக்கார பம்பாய்க்கார மனைவியின் கணவன்".

        எல்லாமே அந்தப் புத்தகத்தால்தான் ஏற்பட்டது.
        'Think and Grow Rich'.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU