TAMILIAN SAGAS
   
    மொட்டைத்தலை ராசா கதை

    கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
   
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




    இந்தியாவைக் கிட்டத்தட்ட முழுமையாக கிழக்கிந்தியக் கம்பெனியும் அதன்
பின்னர் நேரடியாக பிரிட்டிஷ் அரச வம்சமும் ஆட்சி புரிந்த அந்த காலகட்டத்தில்
நான்காம் வில்லியம், விக்டோரியா ராணி, ஏழாம் எட்வர்டு, ஐந்தாம் ஜார்ஜ், எட்டாம்
எட்வர்டு, ஆறாம் ஜார்ஜ் ஆகிய அரசி அரசர்கள் பதவியில் இருந்தனர். இவர்களில்
விக்டோரியா ராணி காலத்தில்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா சாம்ராஜ்யமாக
நிறுவப்பட்டது. 1872-ஆம் ஆண்டிலிருந்து கிரீடம் வைத்த விக்டோரியா ராணியை
Empress of India என்று குறிப்பிட்டார்கள்.

    அந்த அரசிக்குப் பிறகு அவருடைய மகனாகிய ஏழாம் எட்வர்டு பதவிக்கு
வந்தார்.
    இங்கிலீஷ் அரசர்களிலேயே அவர்தான் மிகவும் பிரபலமானவர்.
    அவரைத்தான் தமிழர்கள் செல்லமாக 'மொட்டைத்தலை ராசா' என்று
அழைத்தார்கள்.
    அவருடைய தலை ஒரு சல்லியிலிருந்து ஒரு ரூபாய் வரைக்கும் அனைத்து
நாணயங்களிலும் அச்சிடப்பட்டிருந்தது. சவரனும் இருந்தது. 
    சல்லி, அரைத்துட்டு, காலணா, அரையணா ஆகியவை செம்பில் அடிக்கப்
பட்டவை.  ஓரணா, இரண்டனா நிக்கல் செம்பு கலவை. ஒரு பணம், கால்ரூபாய்,
அரை
ரூபாய், ஒரு ரூபாய் ஆகியவை வெள்ளி நாணயங்கள். ஒரு சவரன்
தங்கக் காசு.


    பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மற்ற நாட்டு நாணயங்களிலெல்லாம் அவருடைய
கிரீடம் வைத்த தலையைக் காணலாம்.

    ஆனா இந்தியாவில் வெளியாகிய நாணயங்களில் அவருடைய முடியில்லா
தலையைப் போட்டிருப்பார்கள்.

    'முடியில்லா' என்பது இங்கு இரண்டு விஷயங்களைக் குறிக்கும்.

1. தலையில் மயிர் இல்லை. வழுக்கை.

2. தலையில் கிரீடம் இல்லை.

    அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களில் ஐந்தாம் ஜார்ஜ், ஆறால் ஜார்ஜ்
ஆகிய இருவரும் கிரீடத்துடன் காணப்படுவார்கள். அவருக்கு முன் ஆண்ட
விக்டோரியா ராணியும் 1872-க்குப் பிறகு கிரீடத்துடன் காணப்படுவார்.

    ஏழாம் எட்வர்டு மற்ற நாட்டுக் காசுகளில் கிரீடத்துடன் காட்சியளிப்பார்.
    இந்திய நாணயத்தில்மட்டும்தான் மொட்டைக் கோலம்.
    இதற்கு ஒரு விந்தையான கதையைக் காரணமாகச் சொல்வார்கள்.
    தமிழர்களிடையே இந்தக் கதை பிரபலமாக இருந்திருக்கிறது.

    எனக்கு ஏழு வயதாகும்போது அந்தக் கதையை எங்கள் டியூஷன் ஆசிரியராகிய
மதுரை பொன்னுவையங்கார் எலிமெண்டரி ஸ்கூல் சுப்பிரமணிய சாஸ்திரியார்
சொல்லக்  கேட்டிருக்கிறேன்.

    அந்தக் கதை அது சொல்லப்பட்டிருக்கும்படியே நடந்திருக்குமா என்பது
சந்தேகமாக உள்ளது.
    ஆனால் இந்த வெள்ளைக்காரப்பசங்களோட விவகாரமே வேறு.
 
    இந்திய சுதந்திரத்துக்கு முன்னுள்ள காலகட்டத்தைப் பற்றி ஒரு accepted
version-ஐ உலவவிட்டிருக்கிறார்கள். அதையேதான் பிரிட்டிஷ், காங்கிரஸ் ஆட்சியில்
அதிகாரபூர்வமான வரலாறாக உலாவிவந்தது.

    ஆனால்......

    பிரிட்டிஷ் இண்டெல்லிஜென்ஸ் என்னும் உளவு நிறுவனம் இந்தியாவில் ஒரு
பிரம்மாண்டமான் வலையைப் பின்னிவைத்திருந்தது.
    அதனுடைய அறிக்கைகள், ரகசியக்குறிப்புகள் ஆகியவை 1947-இல்
பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன.
    அவை பெரும் பெரும் பெட்டிகளில் வைத்திருக்கப்பட்டு, அவற்றில் சில
பெட்டிகள் திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள ரிப்போர்ட்டுகள் 1976-க்குப் பின்னர்
பார்வைக்கு அனுமதிக்கப்பட்டன. முப்பதாண்டுகளுக்கு மேலாக அவை
இருப்பதுகூட
தெரியாமல் இருந்தது. இன்னும் பல விஷயங்கள்
வெளியாகவில்லை என்றும்
கூறப்படுகிறது.
    அவற்றையும் இணைத்து எழுதப்படும் இந்திய வரலாறு முற்றிலும்
வேறாகத்தான்
இருக்கும்.

    இன்னொரு விஷயமும் உண்டு.
    இந்தியாவில் 562 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றின் விவகாரங்களைக்  
கவனிக்க தனியாக ஒரு துறை இருந்தது. அதில் மஹாராஜாக்களைப் பற்றிய
Whoppers
எல்லாம் இருந்தன.

    சுதந்திரம் அடையப்போகும் சமயத்தில் அந்த துறையின் தலைவர் அந்தத்
துறையின் ஆவணத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். சுதேசி
மன்னர்களின் ட்ரஸ்ட்டுக்குத் துரோகம் பண்ணியதாக ஆகிவிடும் என்று சொல்லிவிட்டார்.

    ஆகவே அனைத்து ஆவணங்களையும் எரித்து அழித்துவிட்டார்.
    ஆகவேதான் சொன்னேன்.....
    பிரிட்டிஷ்காரன் சமாச்சாரம் ரொம்பவும் புகைசலானது.

    ஆனால் ஏதோ விஷயம் இருக்கிறது.
    இதைச் சொல்லவேண்டுமென்றால் பின்னணிகளையும் கொடுக்கவேண்டும்.

     சாமுத்ரிகா லட்சணத்தின்படி ஒரு சக்கரவர்த்திக்கு என்ன அம்சமெல்லாம்
இருக்கவேண்டுமோ அத்தனை அம்சங்களும் பொருந்தியவர் ஏழாம் எட்வர்ட்.
சுற்றிலும் ரேகை படர்ந்த முன்புறம் துருத்திக்கொண்டிருக்கும் அந்த ஆழமான
கண்கள், எடுப்பான நாசி என்று அவருக்கு அமைந்திருக்கும்.
    அவருக்கு இருக்கும் மொட்டை உண்மையிலேயே மொட்டை அல்ல.
    வழுக்கை.
    அவருக்கு இருக்கும் வழுக்கையின் வகையை 'ராஜ வழுக்கை' என்று
அழைப்பார்கள்.
    நரையிலும்கூட ராஜநரை உண்டு.
    பைபிலில் இந்த ராஜநரையைப்பற்றிய உயர்வான குறிப்பு ஒன்று உண்டு.

            இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் இங்கிலீஷ் ரத்தத்தைவிட ஜெர்மன் ரத்தமே
ஜாஸ்தி.
    முதலாம் ஜார்ஜ் ஒரு அசல் ஜெர்மன். அவர் 1714-இல் தமது 54-ஆம் வயதில்
பட்டத்துக்கு வந்தார். அறுபதேழு வயதில் இறந்தார்.
    அவருக்குப்பின்னர் அவருடைய மகன் இரண்டாம் ஜார்ஜ் 1727-இல் தமது
44-ஆவது வயதில் பட்டத்துக்கு வந்து முப்பத்தேழு ஆண்டுகள் ஆட்சிக்குப்பிறகு
தமது 77-ஆவது வயதில் 1760-இல் இறந்தார்.
    ஆனால் அவருடைய மகன்கள் அனவரும் அவருக்கு முன்னர் இறந்தனர்.
    ஆகவே அவருடைய பேரனாகிய மூன்றாம் ஜார்ஜ் தமது இருப்பத்திரண்டாவது
வயதில் 1760-இல் பட்டத்துக்கு வந்தார்.

    இவர் அறுபதாண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, தமது எண்பத்தொன்றாம் வயதில்
1820-இல் இறந்தார்.
    இவருக்குப் பின் இவருடைய மகன் நான்காம் ஜார்ஜ் தமது 57-ஆம் வயதில்
1820-இல் ஆட்சிக்கு வந்து தமது 67-ஆம் வயதில் 1830-ஆம் ஆண்டில் இறந்தார்.
    நாலாம் ஜார்ஜுக்குப் பிள்ளையில்லாததால் அவருடைய தம்பியாகிய நான்காம்
வில்லியம் தமது அறுபத்து நான்காம் வயதில் 1830-ஆட்சிக்கு வந்துவிட்டு
ஏழாண்டுகள் ஆட்சிக்குப் பின்னர் தமது 71-ஆவது வயதில் 1837-இல் இறந்தார்.
    இவருக்கும் பிள்ளையில்லை.
    அவருடைய தம்பி ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தார். அவர் வில்லியம்
உயிருடன் இருக்கும்போதே ஜெர்மனியில் அவர்களுடைய பூர்வீக நாடாகிய
ஹனோவருக்கு அரசராக முடிசூட்டப்பட்டு அங்கு சென்றுவிட்டார்.
    அவர்களுடைய சகோதரர்களில் ஒருவராகிய கெண்ட் கோமகனாருக்கு மட்டும்
ஒரே ஒரு பெண். அந்த ஒரே ஒரு பெண்வாரிசு மட்டுமே எஞ்சியது.
    விக்டோரியா.
    அவருடைய பதினெட்டாவது வயதில் 1837-ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தார்.
    அவருக்கு ஏழு பெண் இரண்டு ஆண் குழந்தைகள்.
    ஆண்களில் மூத்தவர் 'பெர்ட்டீ' என்று செல்லமாக அழைக்கப்பட்ட எட்வர்ட்.
    விக்டோரியாவும் அவருடைய கணவர் அல்பெர்ட்டும் எட்வர்டை மிகக்
கண்டிப்புடன் வளர்த்தனர். அவர் ஒரு Hopeless Case என்றும் அவரிடம் எந்த நல்ல
குணங்களோ தன்மைகளோ அறவே கிடையாது என்று முழுமையாக விக்டோரியா
நம்பினார்.
    எல்லாவிதமான கெட்ட பழக்கங்களும் அவரிடம் இருந்தன. ஆனால் குணத்தால்
மிக நல்லவர்.
    இருபத்திரண்டு வயதில் டென்மார்க் நாட்டின் இளவரசியாகிய  
அலெக்ஸாண்ட்ராவைத்  திருமணம் புரிந்த பெர்ட்டீயின் லோலாயத் தன்மைகளை
யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
    அலெக்ஸாண்ட்ராவும் கண்டும் காணாததுமாதிரி இருந்துவிட்டார்.

    ரொம்பவும் ஷோக்குப்பேர்வழி. பல அரண்மனைகளிலும் வீடுகளிலும் மாறி
மாறித தங்குவார்.
    குதிரைப் பந்தயத்துக்குத் தவறாமல் செல்வது. சீட்டாட்டம், மற்றவகையான
சூதாட்டம் எல்லாமே உண்டு.
   
    ஒரு மாதிரியான பெண்களுடன் பழக்கம் வைத்து அடிக்கடி பரபரப்பான
ஸ்கேண்டல்கள். சட்டவிரோதமான சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பிடிபட்டிருக்கிறார்.
    வேட்டையாடுதல், விளையாட்டுக்கள், பந்தயங்கள், கேளிக்கைகள்
முதலியவற்றில் அதிகமாக ஈடுபாடு காண்பித்தார்.
    ஏராளமான பெண்களுடன் தொடர்பும் சில பல வைப்பாட்டிகளும் உண்டு.
    அவர் ஒரு ஐரிஷ்காரியுடன் கொண்ட உறவினால் அரசகுடும்பத்தின் பெயர்
கெட்டுப்போய்விட்டது. அந்த இழிவு நடந்து சிலநாட்களில் விக்டோரியாவின்
கணவர்
அல்பெர்ட் இறந்து போனார். அவர் இறந்ததற்கு எட்வர்டுதான் காரணம்
என்று
விக்டோரியா குற்றம் சாட்டினார். அவரைக் கடைசிவரைக்கும் மன்னிக்கவேயில்லை.

    ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடுவார். ஒவ்வொன்றும் பத்து course சாப்பாடு.
மோடாக்குடியர். ஒரு நாளைக்குப் பத்து ஹவானா சீகார்களும் இருபது சிகரெட்டுக்களும்
புகைப்பார்.
    எல்லா இடங்களுக்கும் சர்வசாதாரணமாகப் போவார். தொழிலாளர்
வர்க்கத்தினரை அரண்மனைக்கு அழைத்து சகஜமாகப் பழகுவார்.
    ஒருமுறை ஒரு தொழிலாளர் தலைவரை சாப்பாட்டுக்கு வரவழைத்துவிட்டார்.
அவரிடம் அதற்குரிய உடை இல்லை. ஆகவே அவரை மட்டும் தம்முடைய
படுக்கையறையில் அதே விருந்துணவை உண்ணச்செய்தார்.

    இதெல்லாமே தாய் விக்டோரியாவுக்கு மிகவும் எரிச்சலையும் வருத்தத்தையும்
ஏற்படுத்தின.
    ஆகவே அவருக்கு எந்தப் பொறுப்பையும் கொடுக்காமல் மரியாதையில்லாமல்
நடத்தினார். எப்போதோ ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்வார்கள். ஒரு
வார்த்தைகூட பேசிக்கொள்ளாமல் அமர்ந்திப்பார்கள். பெரிய ஆளானபிறகுகூட
மூலையில் சுவற்றைப் பார்த்தார்ப்போல அவரை நிறுத்திவைத்துவிடுவாராம்.

    இதனாலெல்லாம் எட்வர்டு இன்னும் அதிகமாக கேளிக்கைகள் ஷோக்குகள்
முதலியவற்றில் ஈடுபடலாயினார்.
    "இந்த மாதிரி அரச பதவியில் இருப்போர் பொறுப்பற்ற தனமாக ஷோக்குப்
பேர்வழியாக இருந்தால் இந்நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினர் புதிய
கொள்கைகள்
முதலியவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடுவார்கள்", என்று சொல்லிக்கூட விக்டோரியா மகாராணியாரபயமுறுத்திப்பார்த்திருக்கிறார்.

    பட்டத்துக்கு வரவேண்டிய அடுத்த வாரிசாளரை இங்கிலாந்து அரசமரபில்
Prince of Wales என்று குறிப்பிடுவார்கள்.

    பிறந்து ஒரு மாதத்தில் அந்த பட்டம் கொடுக்கப்பட்ட எட்வர்ட் தமது
ஐம்பத்தொன்பதாவது வயதுவரைக்கும் அந்தப் பட்டத்தைத் தாங்கிவந்தார்.

    1901-ஆம் ஆண்டு விக்டோரியா ராணி 64-ஆண்டுகள் ஆட்சி புரிந்தபிறகு தமது
81-ஆம் வயதில் இறக்கும்வரை அவர் இளவரசராகவே இருந்தார்.
    அதன்பின்னர்தான் அவர் பட்டத்துக்கு வந்தார்.
    அவர் பட்டத்துக்கு வந்தபின்னர் அவரை இப்படி குறிப்பிடுவார்கள்:

 H.M. Edward VII, By the Grace of God, of the United Kingdom of
Great Britain and Ireland, and of the British Dominions beyond
the Seas, King, Defender of the Faith, Emperor of India.

    ஆனால் ஏதோ ஒரு காரணம் பற்றி இந்தியாவின் நாணயங்களிலோ
ஸ்டாம்புகளிலோ  அவருடைய தலையில் முடி சூட்டப்படாமல் வெறுந்
தலையராகப்
போட்டிருக்கிறார்கள். இந்தியாவின் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்தியாவின் நாணயம் ஸ்டாம்பு முதலியவற்றில்
இப்படி.   

    பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மற்ற சில பகுதிகளில் வெளியிடப்பட்டவற்றில்

எல்லாம் எட்வர்டின் முடிசூட்டப்பட்ட தலையைக் காணலாம்.

    இந்த மர்மம் இந்தியாவில் ஒரு கதையைத் தோற்றுவித்துவிட்டது.

    ஷோக்குப்பேர்வழியாக இருந்த எட்வர்டுக்குத் தாமே சக்கரவர்த்தியாக
ஆகவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகியதாம். அவருடய தாயாரின்
மேலிருந்த வெறுப்பும் அதிகரித்து வந்ததாம். தம்முடைய முன்னோர்களில் நீண்ட
ஆட்சிகளும் ஆயுளும் படைத்த இரண்டாம் ஜார்ஜ், மூன்றாம் ஜார்ஜ் ஆகியோரின்
காரணத்தால் அவர்களுடைய மகன்கள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. வந்தவர்களும்
குறைவான ஆண்டுகளே ஆட்சி புரியமுடிந்தது. அதுவும் கிழடுகள் ஆனபிறகு.
அரச போக வாழ்க்கையை அனுபவிக்கமுடியாமற் போனது.
    ஆகையால் ஒருநாள் விக்டோரியாவைக் கத்தியால் குத்தச் சென்று
விட்டாராம்.
    இந்த சம்பவம் பிரிட்டிஷ் வரலாற்றில் பெரிய இழுக்கை ஏற்படுத்தக்கூடும்;
சாம்ராஜ்யத்தையே அழித்துவிடும் என்று எண்ணி அந்தச் சம்பவத்தை
மூடிமறைத்தனராம்.

ஆனால் அதே சமயம் எட்வர்டுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கவேண்டும் என்பதால்
முடியில்லாமல் காசை வெளியிட்டார்கள் என்ற கதை இந்தியாவில் உலவலாயிற்று.

    ஏழாம் எட்வர்ட் ஒன்பதாண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துவிட்டு தமது 68-ஆம்
வயதில் 1910-ஆம் ஆண்டு இறந்துபோனார்.
   
    விக்டோரியா/ஏழாம் எட்வர்டைப் பற்றிய கதையை நான் 1948-1949-இல்
கேட்டிருக்கிறேன். அத்தனை ஆண்டுகள் அந்தக் கதை ஆழமாக இந்தியாவில் வேரூன்றி
நிலவியிருக்கிறது.

    இது உண்மையான கதையல்ல. ஏனெனில் எட்வர்டு மென்மையான நல்ல மனம்
படைத்தவர்.
    ஆனால் இதுதான் 'மொட்டைத்தலை ராசா' காசின் கதை.

    இது ஏதோ வதந்தியாக இருந்திருக்கலாம். அல்லது புனையப்பட்ட கதையாக
இருந்திருக்கலாம்.
    விக்டோரியாவுக்கு எட்வர்டின் மேலிருந்த அளவு கடந்த வெறுப்பு, இருவருக்கும்
இடையே இருந்த அன்பில்லாமை, எட்வர்டின் ஷோக்குப்போக்கு, பலகாலம்
காத்திருந்த நிர்ப்பந்தம் போன்றவை இந்த மாதிரிக் கதையை ஏற்படுத்தியிருக்கலாம்.
   இது தமிழர்களை ஆண்ட ஒரு வெள்ளைக்கார ராசா கதை. அவரைத் தமிழர்கள்
தங்களுடைய அரசராக ஏற்றுக்கொண்டு அவருக்குச் செல்லப்பெயரும் இட்டு
அழைத்தார்கள். அவர்கள் தங்கள் அரசரை பற்றி சொல்லிக்கொண்ட கதை.
ஆகவேதான் இந்தக் கதை TAMILIAN SAGAS-இல் இடம் பெறுகிறது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$

   
RETURN TO MAIN MENU