திரிபுர சம்மாரம்
பாகம் 2

சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



திரிபுர சம்மாரம்
                    அதன்பின் தேவர்கள் சிவபெருமான் கூறியபடி பாசுபத விரதத்தை மேற்கொண்டனர்.
                    அதைத் தொடர்ந்து சிவன் தம்முடைய நந்திதேவரை தேவர்களிடம் அனுப்பி தேர், வில், அஸ்திரங்கள் போன்ற யுத்தத்துக்குரிய அனைத்து ஆயுதங்கள் சன்னத்துக்கள் முதலியவற்றையெல்லாம் ஆயத்தப்படுத்தச் செய்தார்.

                    தேவர்கள் ஒரு யுத்த ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார்கள்.
                    மேரு மலையை வில்லாக்கினார்கள்; ஆதிசேஷனே வில்லின் நாண்; மகாவிஷ்ணுதான் அம்புமுனை; அம்பின் தண்டு சந்திரன்; அக்னிதேவன் அம்பின் பின்முனை, அம்பின் சிறகு வாயுதேவன். விந்தியமலை தேரின் அச்சு, கேசரகிரி என்னும் மலை அச்சின் குப்பி, தேரின் ஆசனம் பூமி; ஆகசமே தேரின் உட்புறம். சூரியனும் சந்திரனும் தேரின் சக்கரங்கள். நான்கு வேதங்களும் குதிரைகளாயின. ரிஷிகள் பல்லாண்டு கூறுபவர்கள். கின்னரர், கிம்புருடர், யக்ஷர், சித்தர் ஆகியோர் நல்வாக்குக்கூறுபவர்கள். கருடர், சாரணர், கந்தருவர் திருப்புகழ் பாடுவோர்.எடு மகாநாகங்கள், எட்டு குலபர்வதங்கள், சமுத்திரங்கள், மேகங்கள் முதலியவை தேரின் மேற்பகுதிகளும் கவசங்களுமாயின. மந்திரங்கள், அறுபத்துநான்கு சாஸ்திரங்கள், காமதேனு, திதி, யாகங்கள், கர்மங்கள், தர்மங்கள், யுகங்கள், வருடங்கள், நாட்கள், மாதங்கள், ருதுக்கள், மற்ற காலப்பகுப்புக்கள் முதலியவை தேரின் ஆணிகள் போன்ற மற்ற உதிரி பாகங்களாயின.

                    தேரின் பாகனாக பிரம்மா அமர்ந்தார். பிரணவத்தைச் சவுக்காக்கிப் பிடித்துக்கொண்டார். தேவர்களும் அவர்களின் தலைவர்களும் சேனைகளாயினர்.
                    இவையெல்லாம் தயாரானதும் நந்திதேவர் கையிலைக்குச்சென்று சிவனிடம் விபரம் கூறினார்.
                    சிவன் தன் கையில் வில்லையும் அம்பையும் ஏந்தியவாறு தேரின்மீது ஏறினார்.



திரிபுராந்தகர்

                    ஆனால் கனம் தாங்காமல் தேரின் அச்சு முறிந்தது. தேரும் பாதாளத்தில் அழுதியது. அப்போது சிவனின் அருளால் திருமால் ஒரு காளையின் வடிவம்கொண்டு தேரை அழுந்தாமல் தாங்கிக்கொண்டார்.
                    காரணத்தை அறிந்த சிவபெருமான் விக்னேஸ்வர பூஜையைச்செய்தார்.
   
                    அருணகிரிநாதர் திருப்புகழில் இதைப் பாடியுள்ளார்:

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!

                    பூஜை செய்தானதும் முருகனும் விநாயகரும் அவர்களின் வாகனங்களில் இருபுறமும் ஏறிவர தேர் புறப்பட்டது.

                    உரிய ஆசாரமற்ற நடவடிக்கைகளாலும் சமயநெறிகளைக் கைவிட்டதாலும், அசுரர்களின் அன்னைத்து செல்வங்களும் மறைந்துபோயின.
                    குறிப்பிட்ட நேரம் வந்தபோது முப்புரங்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடின.
                    கையில் அம்பின் முனையைப் பிடித்தவாறு சிவபெருமான் தம்முடைய மூன்று கண்களாலும் முப்புரங்களையும் விழித்துப்பார்த்தார்.
                    அவை அப்படியே பொசுங்கி சாம்பலாகிப் போயின.
                    ஆனாலும் அசுரர்கள் ஒரு காலத்தில் சிவனை வழிபட்டவர்களாதலால் அவர்கள் அனைவரு சிவகணங்களின் தலைவர்களாயினர்.
                    முப்புரங்கள் எரியும்போது தாரகாக்ஷன் சகோதரர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை. சேதமில்லாமல் சிவபெருமானைப் பார்க்கவந்தனர்.
                    சிவனை வழிபட்டனர். சிவன் அவர்களுக்கு வேண்டிய வரங்களைக்கேட்குமாறு சொன்னார். ஆனால் அவர்கள் சிவபெருமானுடைய அந்தரங்க இருப்பிடத்தின் துவாரபாலகர்களாக ஆகவேண்டி வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர். அவ்வாறெ சிவனருளல் ஆயினர்.



தஞ்சைப் பெரிய கோயில்
சோழர் கால சுவர் ஓவியம்

திரிபுர சம்மாரம்

                   இந்த நிகழ்ச்சியைத் திரிபுரசம்மாரம் என்று குறிப்பிடுவார்கள்.
                   சிவனுடைய அட்டவீரட்டம் என்னும் எட்டுவித வீரச்செயல்களில் இதையும் ஒன்றாக்ச் சொல்வார்கள். பிரம்மசிரச்சேதம், அந்தகாசுர வதம், காலசம்மாரம், காமதகனம், திரிபுர சம்மாரம் போன்ற செயல்களை அவ்வாறு அழைப்பார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் உரிய §க்ஷத்திரங்கள் இருக்கின்றன.

                    அட்டவீரட்ட தலங்கள்:

திருக்கண்டியூர்,
திருக்கடவூர்,
திருவதிகை,
திருவழுவூர்,
திருப்பறியலூர்,
திருக்கோவலூர்,
திருக்குறுக்கை,
 திருவிற்குடி

                    திருக்கடையூர் வீரட்டத்தில் சிவன் காலசம்மாரமூர்த்தியாக அன்னை அபிராமியுடன் இருக்கிறார்.

                    திருவிற்கோலம் என்னும் தலமொன்று இருக்கிறது. சிவபெருமான் வில்லேந்தி நிற்கும் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
                    அச்சிறுபாக்கம் என்னும் தலத்தில்தான் தேரின் அச்சு முறிந்து, சிவபெருமான் விக்னேஸ்வர பூஜை செய்தது. கூவம் என்னும் இடத்தில்தான் இவை நடந்தன. திருக்கூவம் என்பது தேவாரத்தலம். திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது.
                    இந்த ஆறு பெரிய சாக்கடையாக மாற்றப்படுமுன்பு வற்றாத ஜீவநதியாகவும் புனிதநதியாகவும் இருந்திருக்கிறது.

                   திரிபுரசம்மாரம் ஒரு தைப்பூச தினத்தன்று நடைபெற்றது. ஆகவே சைவ சமயிகள் அந்த நாளைப் புனிதநாளாகக் கருதினார்கள்.
                    சூரபதுமனை அழிக்க முருகவேள் தம் தாய் அம்பிகையிடமிருந்து சக்திவேலைப் பெற்றது தைப்பூச நாளில். ஆகவே கௌமாரர்கள் தைப்பூசத்தைப் புனிதமாக்க் கொண்டாடுகிறார்கள்.
                    புஷ்ய நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தை மாதத்தில் வருகிறது. இது சாக்த சமயத்தினருக்குப் புனிதமானது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU