திருக்குறளும் ஜப்பானியப் பேரரசும்
WHY THE JAPANESE LOST THE WAR

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




BATTLE OF MIDWAY
IMPERIAL JAPAN vs U.S.


                    இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்ப காலம்.
                    ஜப்பானியர்கள் கொரியா, ·பார்மோஸா எனப்படும் தைவான், மஞ்சூரியா, ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டபின்னர் சீனாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர்.
                     அவர்களின் நோக்கு தென்கிழக்காசியாவின் வளமான நாடுகள். அத்துடன் அதற்கப்பாலும் டாய் நிப்பனின் உதய சூரியக் கதிர் வீச்சு. குறிப்பாக பாரதம், ஆஸ்திரேலியா. முடிந்தால் கலி·போர்னியாவும் அதிலிருந்து ராக்கி மலைகளுக்கு மேல்திசையில் உள்ள பிரதேசங்களும்.
                    ஆனால் முதற்கட்டத்தையே குலைப்பதாக அமைந்தது, ·பிலிப்பைன்ஸில்
உள்ள அமெரிக்கப்படைகள்.  அவற்றிற்குப் பெருந்துணையாக குவாம், குவாடல்கானல், மிட்வேய்,  பெர்ல் ஹார்பர் ஆகிய இடங்களிலிருந்த அமெரிக்கப்படைத்தளங்கள்.

                    ஜப்பான் போர் நடவடிக்ககளுக்குரிய பயிற்சிகளைச்செய்து வந்தது.
    நடுவில் கண்துடைப்பு.
                    இந்தோசீனாவின்மீது படையெடுப்பு என்ற போர்வையில் வேறு பல ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர்.
                    1941-ஆம் ஆண்டு டிசெம்பர் 7-ஆம் தேதி ஒரே சமயத்தில் ஹாங்காங், குவாம், குவாடல்கானல், மிட்வேய், ·பில்லிப்பைன்ஸ், மலாயா ஆகியவற்றின்மீது பாய்ந்ததோடு. மிக மிக ரகசியமாக ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்த பெர்ல் ஹார்பரையும் தாக்கினர். இந்தத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தா அட்மிரல் யாமமோட்டோ. போரை தலைமை யேற்று நடத்தியவர், அட்மிரல் நகுமோ(சிரித்தமுகம்). ஆறு முக்கிய விமானந்தாங்கிக் கப்பல்களுடன் வேறு பலரகக் கப்பல்களும் சென்றிருந்தன. முன்னூற்று அறுபதுக்கும் மேற்பட்ட விமானங்கள்.
                    மிக வெற்றிகரமாக மூன்று அலைகளாகத் தாக்குதல்கள் நடந்தன.
                    பெர்ல் ஹார்பரில் பேரழிவு ஏற்பட்டது.
                    ஆனால் விமாத்தாக்குதல்களை நடத்திய கமாண்டர் ·புச்சிடாவுக்கு ஒரே கேள்விதான் மேலெழுந்தது.
                    எங்கே அந்த நான்கு பலம்வாய்ந்த அமெரிக்க விமானந்தாங்கிகளும் அவற்றின் துணைக்கப்பல்களும்?
                    அவற்றைத் தேடி உடனடியாக அழித்துவிடவேண்டும்.
                    துடிப்போடு ஜப்பானியர் அந்நடவடிக்கையில் ஈடுபட முனைந்தன.
                    ஆனால் நகுமோ மறுத்துவிட்டார்.
                    "இப்போது யுத்தத்தின் ஆரம்பகட்டத்த்தில்தான் இருக்கிறோம். இன்னும் பல பெரும்போர்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த விமானந்தாங்கிகள் மிக முக்கியம். நம்மிடம் தேடுவதற்குரிய போதிய எரிபொருள் இல்லை. இன்னும் முக்கியமான விஷயம்; நம்மிடம் இருந்துவந்த element of surprise  இப்போது நம்மிடம் அறவே இல்லை. இந்தக் கப்பல்களைப் பத்திரமாகக் ஜப்பானுக்குக் கொண்டு சேர்ப்பது என்னுடைய தலையாய கடமை. நாம் உடனே திரும்புகிறோம்", என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.
                    நகுமோவின் இந்த முடிவு, இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் தோல்வியடைவதற்கு முக்கிய காரணங்கள்¢ல் ஒன்றாகிவிட்டது.
                    ஆழமில்லாத துறைமுகத்தில் பல அமெரிக்கக் கப்பல்கள் சேதமாகிக் கிடந்தன. Dry-Dock எனப்படும் கப்பல் செப்பனிடும் துறைகளை ஜப்பானியர் அழிக்கவில்லை.
                    ஆகவே பல கப்பல்களை உடனடியாக செப்பனிட்டுவிட்டனர்.
                    கிழக்கு யூஎஸ்ஸிலிருந்து பசி·பிக் மாக்கடலுக்கு வரும் குறுக்குப் பாதையாகிய பனாமாக் கால்வாயையும் ஜப்பானியர் அழிக்கவில்லை. பனாமா இல்லையென்றால், அமெரிக்கக் கப்பல்கள் தென்னமெரிக்காவைச் சுற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இருபதாயிரம் மைல்கள் கூடுதலாகப் பயணம் செய்யவேண்டியிருக்கும்.
                    விரைவாகக் கப்பல்களும் ஆயுதத் தளவாடங்களும் பசி·பிக் மாக்கடலுக்கு வந்து சேர்ந்துவிட்டன.
                    அந்த நான்கு விமானந்தாங்கிகளும், அவற்றின் நானூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களும், அவற்றின் தரமான விமானமோட்டிகளும், மிட்வேய் (Battle of Midway) கடற்போரின்போது ஜப்பானிய விமானந்தாங்க்¢கள் அனைத்தையும் மூழ்கடித்தனர்.



ஜப்பானின் முக்கியமான யுத்தக்கப்பலும் விமானந்தாங்கிக் கப்பலும் மூழ்குவதைக் காட்டும் படங்கள்.

                    அத்துடன் ஜப்பானிய கடற்படை வலிவிழந்தது. ஆயிரக்கணக்கான தீவுகள் அடங்கிய ஜப்பானியப் பேரரரசு, விமானந்தாங்கிகளும் மற்ற பலமிகுந்த போர்க்கப்பல்களும் இல்லாமல் தோல்விக்கு மேல் தோல்வியடைந்தது.

              Killer instinct இருந்தும்கூட இத்தகைய பெருந்தவறை ஜப்பானியர் செய்தனர்.

    வள்ளுவர் சொன்னதாவது:

    வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.

                   செய்யத் தொடங்கிய தொழில், ஒழிக்கவேண்டிய பகை ஆகிய இரண்டிலும் மிச்சம் வைத்தால் அவை மிச்சமாக விடப்பட்ட நெருப்பு வளர்ந்துவிடுவதைப்போல வளர்ந்து கெடுக்கும்.
   
                    ஆசாரக்கோவை சொல்வதாவது, "நெருப்பு, பகை, கடன் ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால் அவை பெரிதாக வளர்ந்து அடக்கமுடியாத அளவுக்குப் போய்விடும்".

    தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

                    இந்த செயல்பாட்டுமுறைகளையெல்லாம் நாம் அறிந்துதானிருக்கிறோம். மற்றவர்களும் அறிந்துதான் இருக்கின்றனர். இருப்பினும் செய்யாமல் தவறவிடுவது எல்லாருக்குமே சகஜம்தான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU