தொப்பாரம் கீழே மயிர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மலேசியா
JayBee





                சில ஆண்டுகளுக்கு முன்பு இடக்கரான பாடல் ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது.
                ஆனால் அந்தப் பாடல் அறைகுறையாகவே நினைவில் இருந்தது.
                அது,

    'குப்பாயமிட்டுக் குறுக்கே கவசமிட்டு
    .............
    .........
    தொப்பாரம் கீழே மயிர்.'

என்று இருக்கும். அடியும் முடியும் தெரிந்தன. இடையில் என்ன அடி இருந்தது என்பது மட்டும் ஞாபகத்தில் இல்லை.
                இதெல்லாம் இடக்கர் சம்பந்தமான பாட்டு.
                மேற்கண்ட இரண்டு அடிகளும் நினவுக்கு அடிக்கடி வந்தன. 'அடியும் முடியும் காணாத படலம்' என்பார்கள். ஆனால் இந்தப் பாட்டிற்கோ அடியும் இருந்தது; முடியும் இருந்தது. நடு மட்டுமே இல்லை.   
                என்ன முயன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை.
                ஒருநாள் அலோர் ஸ்டார் என்னும் ஊருக்குக் காரில் சென்றுகொண்டிருந்தேன். மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். பழந்தமிழ் வழக்கில் இதைத் 'தென்வடல் பெருவழி' என்று சொல்லியிருப்பார்கள்.
                இடது பக்கத்தில் குனோங் ஜெராய் மலை தெரிந்தது. அதன் வடிவத்தைப் பார்த்தவாறு சென்றுகொண்டிருந்தேன்.
                அப்போது இந்தப் பாடல் மனதில் ஓடியது.
               திடீரென்று நடு அடி மனதுக்கு வந்தது.
               முதலிலிருந்து சொல்லிப்பார்த்தேன்.

குப்பாய மிட்டுக் குறுக்கே கவசமிட்டு,
கைப்பாச மிட்டுவரும் கண்டியத்தேவா - உனது
தொப்பாரத் தின்கீழ் மயிர்.

                நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென்று பாடலின் காணாமற்போன அடி கிடைத்தது.
                கச்சிராயன் கண்டியத்தேவன் என்பவனைப் பற்றி யாரோ புலவர் பாடியது.
                ஏதோ வகையில் அவன் அந்தப் புலவரை அவமதித்திருக்கிறான். ஆகவே இப்படிப் பாடிவைத்திருக்கிறார்.
                புலவர்களை மட்டும் அவமதிக்கவே கூடாது.
                வசைக்கவி, வஞ்சகப் புகழ்ச்சிக் கவி, நையாண்டிக் கவி என்று என்னத்தையாவது பாடிவிடுவர்கள். அந்த மட்டோடு இருந்தால் பரவாயில்லை. அறம் பாடி விட்டால் ஆபத்தல்லவா?

                கச்சிராயன் கண்டியத்தேவன் ஒரு War-lord எனப்படும் ஆசாமி. நாட்டுத ்தலைமையுடன் படைத்    தலைமையும் பெற்றவன்.
                அவன் போருக்குச் செல்லும் சன்னத்துடன் இருக்கும் கோலத்தைப் பாடுவதுபோல் பாடலை அமைத்திருக்கிறார், புலவர்.

                'தொப்பாரம்' என்பது  போர்வீரர் தலையில் அணியும் கவசத் தொப்பி. Helmet என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

                'குப்பாயம்' என்பது முழுக்கை வைத்த நீண்ட சட்டை. அந்தச் சட்டையைப் போட்டு அதற்குக் குறுக்கே மார்பு/விலா/முதுகுக் கவசத்தை அணிந்திருக்கிறான்.
                'கைப் பாசம்' என்பதும் ஒரு வகையான கவசம்தான். Chain Mail என்ற வகையைச் சேர்ந்தது. சிறு சிறு வளையங்கள் ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்டு சல்லடைத் துணிபோல் காட்சியளிக்கும்.
                இதனால் சட்டை, கையுறை, காலுறை போன்றவற்றைச் செய்து அணிவார்கள்.
                சாதாரணமாக வெட்டுப் பட்டு விட மாட்டாது. பதமான  கனமான கத்தியால் வெட்டும் மிகவும் பலத்த வெட்டு மட்டுமே அதைச் சேதப்படுத்தும். சாதாரண கவசம் எத்தனை கனமானதாக இருந்தாலும் கதாயுதம் சுக்குமாத்தடி, சுழலும் முள்குண்டு, சுழல் சுத்தியல் போன்றவை நெளிவை ஏற்படுத்திவிடும். அதனால் கவசத்தின் மூட்டுகள் நெளிந்துபோய் கை காலை அசைக்கமுடியாமலும், பல சமயங்களில் கவசத்தைக் கழற்றமுடியாமலும் போய்விடும்.
                ஆனால் செயின் மெயில் அப்படியல்ல. வளைந்து நெளிந்து கொடுக்கும். சில சமயங்களில் மிக விசையாய்ப் பாயும் விசேஷமான அம்புகள் துளைக்கலாம்.
                சாதாரண கவசத்தைவிட இதன் சிறப்பு என்னவென்றால் ஓரளவுக்குக் காற்றோட்டம் இருக்கும். சாதாக் கவசத்தை விட எடை குறைவு.
                கைக் கவசத்தை Gauntlet என்று குறிப்பிடுவார்கள்.
                காண்ட்லெட்டைப் பற்றி ஏற்கனவே ஒரு மடலாடல்
அகத்தியத்தில் இருக்கிறது.
                கைக்கு மட்டும் உரைபோல போட்டுக் கொள்ளும் செயின் மெயிலை Chain Mail Gauntlet அல்லது Chainmaille Gauntlet  என்று அழைப்பார்கள்.
                இந்த செயின் மெயில் காண்ட்லெட்டைத்தான் 'கைப்பாசம்' என்று பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.
                ராஜஸ்தானத்தில் இருந்த ரஜபுத்திர வீரர்களின் கவசங்களில் தொப்பாரம், கைப்பாசம் முதலியவற்றைக் காணலாம்.



                பழந்தமிழ் வீரர்கள் கவசம் போன்றவற்றை அதிகம் அணிவதில்லை. ஹெல்மட்கூட போடமாட்டார்கள். நீண்ட கூந்தலை வைத்திருப்பார்கள். போருக்குப் போகும்போது அதை இறுக்கக்கட்டி முடிந்து கொண்டையாகப் போட்டிருப்பார்கள்.
                பல வீரக்கற்களில் உள்ள வீரர்களின் சிலைகளில் இந்த வடிவத்தைக் காணலாம்.
                யுத்தநீதி என்றொரு நீதி இருந்தது.
                அதில் உள்ள ஒரு க்ஷரத்து: "குடுமி அவிழ்ந்தவனுடனும் இடுப்புத்துணி அவிழ்ந்தவனுடனும் நிராயுதபாணியுடனும் போரிடக்கூடாது".
                சாதா வீரர்கள் குடுமியுடனும் இருப்பார்கள். கொஞ்சம் ஸிக்கி அத்தாஸாக இருப்பவர்கள் தலையில் ஹெல்மட்டுடனும் இருப்பதை காம்போடியா, ஜாவா ஆகிய சிற்பங்களில் காணலாம்.
                பாகவதர் கிராப்பு வைத்திருப்பவர்கள் குடுமி முடியவேண்டியதில்லை. பாகவதர் கிராப்பின் ஒரு versionஐக் 'காகபட்சம்'  என்று அலங்கார சாஸ்திரம் கூறும்.
                'காக்கையின் இறக்கைகள்' என்பது அர்த்தம். விரிக்கப்படாத இறக்கைகள் - Folded Wings.
                இந்த மாதிரியான தலை மயிருள்ளவர்கள் ஹெல்மட் அணிந்தால் பிரச்னை யிருக்காது.
                ஹெல்மட்டின் கீழே மயிர் இருக்கும். அதைத் 'தொப்பாரத்தின் கீழே மயிர்' என்கிறார் புலவர்.
                அதாவது அப்படிக் குறிப்பிடுவதாகக் தோன்றுகிறது.
                'தொப்பாரம்' என்றால் 'பாரம் மிகுந்த சரிந்த தொப்பை'.
                அதாவது இந்தக் கச்சிராயன் கண்டியத்தேவன் தொப்பையும் தொந்தியுமாக இருந்திருக்கிறான்.
                அவனுடைய தொப்பைக்குக் கீழேயுள்ள மயிரைப் புலவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இதனை மருத்துவம் பயின்றோர் Pubic Hair என்று குறிப்பிடுவார்கள்.
                இந்தப் பாடலைக் கச்சிராயனின் காதுபட புலவர் சொன்னாரா, அல்லது யாராவது கேட்டவர்கள் அவனிடம் போட்டுக் கொடுத்தனரா; அப்படியாயின் புலவரின் கதி என்னவாயிற்று என்பதெல்லாம் தெரியவில்லை.
                யார் பாடியது என்பதேகூட தெரியவில்லையே.
                திருமலை நாயக்கனை 'சந்தியிலே மாமியிட்ட சண்டையிலே வந்ததொரு தொந்தி வடுகன்' என்று சொன்ன சுப்ரதீபக் கவிராயரை நாயக்கரைய்யா கிளிக்கூண்டில் அடைத்துத் தொங்கவிட்டார்.
                இதைப் பற்றியும் இன்னொரு மடலில் சொல்கிறேன்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$