Thoughts
on Pudhumaip Piththan
Based on a series of
postings made in
Agathiyar Yahoo Discussion Group.
DR.S.JAYABARATHI
அன்பர்களே,
புதுமைப் பித்தனுக்கும் ஏப்ரல், ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கும் பெரிதும் சம்பந்தமுண்டு. அது என்ன என்பதை உங்களில் சிலர் அறிவீர்கள். அறிந்தவர், தெரியாதவர்களுக்குச்சொல்லுங்கள். தெரியாதவர், அறிந்தவரிடம் கேட்டுக்
கொள்க.
அவரை ரேடியோவில் கவிதை இயற்றிப் பாடும்படி அழைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தச்சமயத்தில் ஏற்ற கவிதையைப் பாட வரவில்லையோ அல்லது விருப்பமில்லையோ போலும். ரொம்பவும் கடுப்பாக இருந்திருக்கிறார். ஆகவே
மிக மிக நையாண்டியாகச் சில வெண்பாக்களை இயற்றி வைத்தார்.
என்னதான் சிரமப்பட்டுப் பார்த்தும்கூட கவிதை வரமாட்டேன் என்குதே என்ற ஆதங்கம் அந்த கவிதைகளில் வெளிப்படுமாறு யாத்திருக்கிறார். வலுக்கட்டாயமாக முருகனை வருமாறு அழைத்துத் தமக்கு எப்படியேனும் கவிதையைத் தருமாறு இறைஞ்சுகிரார்; கெஞ்சுகிறார்; மிரட்டுகிறார்; வெருட்டுகிறார்.
இதோ அந்தப் பாடல்கள்:
எழில் எடுத்த மலர்க்கமல ஏந்திழையாள் சன்னதிக்கு
தொழில் அடுத்து நல்ல கவி சொல்லணுமாம் - அழல் அடுத்த
கண்ணுதலான் தன் மகனே! காய்சினத்து வேலுடையாய்!
வண்ணத் தமிழ் எனக்குத்தா.
கந்தா, கடம்பா, கதிர்வேலா கட்டழகா
சந்தார் தடந்தோளா சட்டுணுவா - இந்தவூர்
ரேடியோக் காரரெனை நெருக்குகிறார், லேட்டாச்சாம்
ஓடியா, ஓடியே வா.
வந்தாலும் போதாது; வாகைபுனை வேலவனே!
சொந்தமாய்க் கவியேதும் தோணுதிலை - செந்தமிழில்
பாட்டு ரெடிமேடாய்ப் பண்ணிவச்சால் கொண்டுவந்து
லேட்டேதும் பண்ணாமல் தா.
கும்பிடுவார், குழைவார்; கூத்தாடிப் பல்லிளிப்பார்;
வம்பிடுவார், பின்னால் வழக்கிடுவார் - அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாகப் பண்ணிவச்சேன்
என்னமோ காணாமல் போச்சு.
இதை முதலில் அசை போடுங்கள்.
அடுத்தவை தொடரும்........
அன்பர்களே,
புதுமைப் பித்தன்னின் 'தொழில்' திருச்சி ரேடியோ நிலையக்
கவியரங்கத்தின் மிச்ச சொச்சப் பாடல்கள்.
காப்பியடித்திட்டேன், கயிறு திரித்து வச்சேன்
எப்படியோ பாட்டென்று எழுதினேன் - அப்படியும்
வாகையடி முக்கிலது வந்து குடிபோட்டதடா!
தோகை மயில்ஏறி வா.
திருநெல்வேலியில் தேரோடும் வீதிகளில் முதல் வீதி- இரண்டாம் வீதியின் முக்குத்தான் 'வாகையடி முக்கு' என்பது. முதல் திருப்பத்திலேயே தேர் ஓடாமல் நின்று மக்கர் செய்து
விட்டதைத் தன் கவிதை ஓட்டத்திற்கு உவமித்துக்கூறுகிறார். Rescue mission ஒன்றை மேற்கொண்டு உடன் வருமாறு முருகனைக் கூப்பிடுகிறார்.
நாலே வினாடிதான்; நல்லதாய் ஒன்று சொல்லு
ஏலே முருகையா எத்தாதே! - வாலே!
வந்து இருந்திங்கே வக்கணையாய்ப் பாட்டெழுது
தெந்தனங்கள் பண்ணாதே வா.
துருப்பிடித்த வேலைத் தூரஎறி! இங்கே வா.
உருப்படியாய்ப் பாட்டொன்று சொல்லு! - விருப்புடனே
கவியரங்கம் கூட்டிக் கன்னித் தமிழ் வளர்ப்பார்
செவிக்கமுதமாய் ஒன்று சொல்லு.
வேலன் உரைக்கின்றான். "வேளூரா இன்னமும் நீ
காலம் கலி என்று அறியாயோ? - ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டிவந்து கேட்பவர் ஆர் சொல்?"
"பண்" என்பார்; "பாவம்" என்பார்; "பண்பு மரபு"என்றிடுவார்
கண்ணைச் சொருகிக் "கவி" என்பார் - அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?
உழைப்புக்குப் பாட்டென்றேன் ஓங்கும் சினம் எடுத்து
பிழைப்புக்கே ஆபத்தாய்ப் பண்ணிவிட்டான் - அழைத்த
நல்லவரே, தமிழின் நயங்கள் வளர்ப்பவரே
கொல்லாதீர் என்னை விடும்.
அந்தக் கடைசிப்பாட்டின் கடைசி வரி.........'கொல்லாதீர்
என்னை விடும்'......
பாவம், அந்த ரேடியோ ஆசாமிகள் முகத்தில் ஈயாடியிருக்குமா, அல்லது என்னவிதமான களை விளங்கியிருக்கும் என்பதனை அவரவர் தன்மைக்கேற்ப அனுமானித்துக் கொள்ளவேண்டியதுதான். தவக்களை? சவக்களை? சாண்டில்யன் சரித்திர நாவல்களில் வரும் arch-villainகள் அனந்தவர்ம சோடகங்கன், அட்சயமுனைத் தலைவன் பலவர்மன் போன்றோரின் முகத்தில் படர்ந்திருக்குமாமே பிரேதக்களை...அந்த மாதிரி ஏதாவது?
அ புதுமைப் பித்தன பல சந்தர்ப்பங்களில் ஏதாவது கவிதை எழுத எண்ணி, சின்னச் சின்னதாய் துண்டுக் காகிதங்களில் எழுதிவைப்பாராம். அப்படி ஒருநாள் சென்னை நகரில் அப்போது ஓடிய டிராம்(Tram Car) வண்டிக்காக டிரம் ஸ்டாப்பில் காத்திருந்த
போது பாரதிக்குப்பின் என்று எழுத ஆரம்பித்து அப்படியே விட்டுப்போன கவிதை.
பாரதிக்குப் பின்பிறந்தார்
பாடைகட்டி வச்சிவிட்டார்
ஆரதட்டிச் சொல்வார்
அவரிஷ்டம் - நாரதனே
வேளைக்கு வேளை
விருதாக்கவி சொல்லி
நாளும் பொழுதும்
களிஞ்சாச்சே - ஆளாக்குப்
பாலுக்கோ விதியில்லை;
பச்சரிசிகோ தாளம்
மேலுக் கேன் ஆசாரப்
பேச்சு?
புதுமைப் பித்தனின் மிக ரசிக்கத்தக்க கவிதைகளில் 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி ஆள்வார் வைபவம்' என்ற அங்கதப்பாடல்களும் அடங்கும்.
திருப்பதி வேங்கடவனை வழுத்திப்பாடிய ஆழ்வார் பாசுரத்தின் நடையில் இதனை புதுமைப் பித்தன் எழுதியுள்ளார்.
உற்றாரை யான்வேண்டேன், ஊர் வேண்டேன், பேர்வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தில் புன்செல்வம் யான்வேண்டேன்.
பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு சர்விஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ?
விந்தையுறு மானிடனோர் வேடிக்கைத் துணியதனால்
இந்தியராம் உன்னடியார் உனை மறக்கச் செய்தவனை
தந்தியைப் போல் பாயுமுனது அவசரச்சட்டமதனால்
சிந்தியே நிலைகுலையச் செய்தவினை மறவேனே!
வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்
மீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை
ஆளாக்கி வருத்தினும் அதனையும் யான் பரவுவனே!
ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக்கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்
வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயில் இட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ!
ஆங்கில அரசு தனது அடக்குமுறைச்சட்டதிட்டங்களால் தமது உற்றார் உறவினர் போன்றோரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினும் அதையும் புகழ்ந்து பாடுவாராம் அந்த ஆள்வார்.
qபுதுமைப் பித்தனின் மிக ரசிக்கத்தக்க கவிதைகளில் 'திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி ஆள்வார் வைபவம்' என்ற அங்கதப்பாடல்களும் அடங்கும்.
திருப்பதி வேங்கடவனை வழுத்திப்பாடிய ஆழ்வார் பாசுரத்தின் நடையில் இதனை புதுமைப் பித்தன் எழுதியுள்ளார்.
மிச்ச சொச்சப் பாடல்கள்:
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோர்க் கல்லால் அலராவால்;
எந்தமரே ஏமாற எப்பதவி சொல்லினும் நின்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகங்குழைய மாட்டேனே!
சூரியனைக் கண்டால் மட்டுமே அதற்காகத் தாமரை மலர் மலர்கிறதேயன்றி வெறும் நெருப்புக்கு அது மலர்ந்துவிடுவதில்லை. அதுபோலவே, என் இனத்தார் ஏமாந்துபோய் எனக்கு எப்படிப்பட்ட பதவியைத் தந்தாலும் அதற்கெல்லாம் நான் மகிழ்ந்து விட மாட்டேன். உன்னுடைய முடிவில்லா சிறப்புகளுக்கே நான் அகம் குழைவேன்.
வேலைக்குக் கூலி தந்து அப்புறமும் பாதிதந்த
சீலத்தைப் போற்றுதற்கு சிறுவாயும் போதுமோ?
ஞாலத்தை ஒரு குடை கீழ் நடத்தும் உன் சீலத்தை
காலைக் கதிரழகின் கற்பனை என்று ஓதுவனே!
மன்னியதண் சாரல் சிம்லாவில் உறைவான் தன்
பொன்னியலும் சேவடியில் அமர்வான் புரிந்திரைஞ்சும்
சென்னியன்சீர் தொண்டரடிப்பொடியான் சொல்வார்த்தைகளை
பன்னியநூல் தமிழ்வலார் பாங்காய பக்தர்களே!
This poetry is a satire. Pudhumaip Piththan has used that name ThoNdaradip podi in its direct literary sense. The name has been used to depict the humble servile attitude of that Anglophile about whom the oetry is about. He has drawn a parallel from the otal prabathi sentiment.
As you have correctly mentioned the poetic style is that of Kulasekaraalzhvaar.
'திருவேங்கடத் தொடர்பு வேண்டல்' என்னும்
பதிகப்பாடல்களின் சாயலை ஒத்தது.
சில பாடல்களின் சாயல் அப்படியே இருக்கும்.
உதாரணம்:
புதுமைப் பித்தனின் பாடல்:
ஊனேறு செல்வத்துடன் பிறவி யான் வேண்டேன்
தேனார் மொழிக்கிள்ளைத் தேவியரும் யான் வேண்டேன்
வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயில் இட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ!
குலசேகராழ்வார் பாடல்கள்:
1. ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத்திறமல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேறி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
2. ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே!
புதுமைப் பித்தன் பாடல்:
மன்னியதண் சாரல் சிம்லாவில் உறைவான் தன்
பொன்னியலும் சேவடியில் அமர்வான் புரிந்திரைஞ்சும்
சென்னியன்சீர் தொண்டரடிப்பொடியான் சொல்வார்த்தைகளை
பன்னியநூல் தமிழ்வலார் பாங்காய பக்தர்களே!
குலசேகராழ்வார் பாடல்:
மன்னியதண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திரைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே!
இந்த இடத்தில் 'சென்னியன் சீர் தொண்டர் அடி பொடியான்' என்பதனை தன்னிலை உணர்த்தும் நேரடிப்பெயராக அமைத்துள்ளார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$