வாழ்வியல் உண்மைகள்-#1
நிலை பெயர்தல்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
வாழ்வியல் இயல்புகளையும், இயற்கையையும், யதார்த்தங்களையும்,
உண்மைகளையும், நியதிகளையும், நீதிகளையும் எடுத்துச்சொல்லும் நூல்கள் பலவற்றை
நம்மவர்கள் இயற்றியுள்ளார்கள். ஆதிகாலத்து ஒரிஜினல் பதினென்கீழ்க்கணக்கு முதற்கொண்டு
கடந்த இருநூற்றாண்டு வரைக்கும் அத்தகைய நூல்கள் நிறைய இருந்துவந்திருக்கின்றன.
இப்போது அகப்படுவன ஏராளம். இதேபோன்றவை எத்தனை எத்தனை அழிந்தனவோ?
யார் அறிவார்?
காக்க முடிந்த அளவுக்குக் காத்ததாலேயே இத்தனை நூல்களாவது இன்னும் இருக்கின்றன.
இந்த யதார்த்தத்தையும் உணரவேண்டும்.
ஓர் அரிய நூலில் உள்ள சில பாடல்கள் கிடைத்தன.
எவ்வளவு தூரம் வாழ்வியலை நுணுகிக் கண்டறிந்திருக்கின்றனர்?
அந்தப் பாடல்களைப் படித்தோ கேட்டோ அறியும்போது, மனதில் வாழ்வியல் கோட்பாடுகளின்மீது
நம்பிக்கை ஏற்படுகின்றது என்பது ஒரு பக்காம்.
கையறுநிலையிலும் அவை படிக்கப்படும்போது ஒருவகை - அதை என்னவென்று சொல்வது
- நெகிழ்ச்சியா...அது ஏற்படுகிறது.
"ஓஹோ! இது இப்படித்தான் இருக்கும் போலும். என்ன செய்வது? இதுவே உலக
வாழ்க்கையின் தன்மை", என்றபெருமூச்சுத் தோன்றும்.
இத்தகைய நூல்கள் நிச்சயம் மக்களுக்கு ஒரு பேராறுதலாக விளங்கியிருக்கும். இத்தனை
ஆண்டுகளில் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் மிகவும் துன்பவாழ்க்கையையே
வாழ்ந்திருக்கின்றனர். போர்கள், பஞ்சங்கள், இயற்கைப் பேரிடர்கள், கொடுங்கோலர்கள்,
கொள்ளைக்கூட்டத்தினர்..... இப்படி எவ்வளவோ!
அதிலும் ஒரு சைக்காலஜி அடங்கித்தான் இருக்கிறது. ஆகவே இத்தகைய நூல்கள் ஒரு
பெரிய தேவையாகத்தான் இருந்திருக்கின்றன.
ஆகவேதான் அத்தனை நூல்கள்.
ஒரு பாடலை பார்ப்போம்:
கேசமும் உகிரும் பல்லும், கிளத்திய வேந்தும்
தத்தம்
வாசமே இகந்து பின்பு, மறுத்துமோர் இடத்துச் செல்லின்
நேசமே இன்றி யாரும் நிந்தைசொல்லிடுவர் போலப்
பேசிய மாந்தர் தங்கள் நிலைவிடின் பெருமை போகும்.
மயிர், நகம், பல், அரசன் ஆகிய இவை/இவர் தம்முடைய தக்க இருப்பிடத்தைவிட்டு பெயர்ந்துபோய்விட்டால்,
அவற்றுக்கு மரியாதை கிடையாது. நிந்திப்பார்கள். அதுபோலவே
மாந்தர் தம் நிலை பெயர்ந்து விட்டால், பெருமையெல்லாம் போய்விடும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU