வைராக்கியம்

கடாரப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவர் பத்மபாதர்.

அவர் ஒரு நரசிம்ம உபாசகர். ஒரு சமயம் அவர் காட்டுக்குச் சென்று,
நரசிம்மர்
தமக்குக் காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக தவம் செய்யலானார்.
இதனை அக்காட்டிலுள்ளதோர் வேடன் கவனித்தான். அவரிடம்  வந்து
அவர்
என்ன செய்கிறார்  என்று கேட்டான்.

அவரோ தாம் நரசிம்மத்தைத் தோன்றச் செய்வதற்காகத் தவம் இருப்பதாகச்
சொன்னார்.

"நரசிம்மம்? அப்படியென்றால் என்ன?" வேடன் கேட்டான்.

பத்மபாதர் நரசிம்மத்தின் தோற்றத்தை விவரித்தார். சிங்கமுகம், மனித உடல்;
நீண்ட நகங்கள், எட்டுக்கைகள்; சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தியிருக்கும்.

"நான் இந்தக்காட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறேன். இதுநாள்வரைக்கும் இம்மாதிரியான மிருகத்தைப் பார்த்ததேயில்லை. எப்படி இருப்பினும் சரி.  இக்காட்டின் தலைமை வேடன் நான். என் கையில் சிக்காத மிருகமே இல்லை.  நீர் சொல்லும் அந்த மிருகத்தை நானே பிடித்துக்கொண்டு வருகிறேன். அதுவும் இன்னும் இரண்டே நாட்களில் கொண்டு வருகிறேன்".

வலை, சுருக்குக்கயிறு, போன்ற தேவையான சாதனங்களையெல்லாம் எடுத்துக ்கொண்டு அன்ன ஆகாரமின்றி அக்காட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் தேடினான்.

அதற்குமுன்னர் அவன்  அப்படிப்பட்டதொரு மிருகத்தைப் பார்த்தேயிராதவ னல்லவா?

ஆகவே அதன் உருவத்தை மனத்தில் நன்கு ஏற்றிக்கொண்டான். அதனை எப்போதும ்நினைத்துக்கொண்டேயிருந்தான். ஒரு கணமேனும் அந்த மிருகத்தின் உருவத்தை அவன் மறக்கவேயில்லை. மனமோ "நரசிம்மம் நரசிம்மம் நரசிம்மம்" என்று இடைவிடாது அதன் பெயரைச் சொல்லியவாறு இருந்தது.

அந்த இரண்டு நாட்களில் அவன் மனம் சிந்தை புத்தி ஆகிய     அனைத்தையுமே   அந்த நரசிம்மம் வியாபகமாய் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. வேறு எந்த எண்ணமும் அவனுக்குத் தோன்றவேயில்லை.

இரண்டாம் நாள் முடியப்போகிறது. அந்த மிருகம் அகப்படவேயில்லை.

அந்த மிருகத்தைப் பிடித்து வருவதாக வாக்களித்திருந்த வேடனுக்குத் தன்னுடைய வாக்கினின்றும் வழுவ வேண்டி வந்துவிட்டதே என்ற ஆதங்கம் மேலிட்டது.
ஆகவே அவன் ஒரு மரக்கிளையில் வில்லின் நாண் கயிற்றைக் கட்டி
தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றான்.

கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டிவிட்டான். தொங்கப்போனான். அப்போது
ஒரு கர்ஜனை.
அவனுக்கு முன்னால் நரசிம்மம் தோன்றிவிட்டது.

பார்த்தான்.

பத்மபாதர் வர்ணித்த அதே வடிவம்.
.
சுருக்குகயிற்றை வீசினான் அந்த மிருகம் மாட்டிக்கொண்டது.

அதனை அப்படியே இழுத்து வந்தான். அதுவும் முரண்டு செய்யாமல்
இழுத்த இழுவைக்கு வந்தது.

பத்ம பாதர் இருந்த இடத்துக்கு வந்தான்.

"இதோ பாரும், நீர் கேட்ட அந்த ஜந்து. பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன்".

பத்மபாதர் பார்த்தார்.

கயிற்றின் ஒரு நுனி வேடனின் கையில் இருந்தது. மறு நுனி மேல் நோக்கிச்
சென்று  சற்று உயரத்தில் சுருக்குடன் மிதந்துகொண்டிருந்தது. ஆனால்
அங்கு ஒன்றுமே இல்லை.

"என்னது? ஒன்றுமே இல்லையே. வெறுங்கயிற்றைக் காட்டுகிறாயே?"
என்றார் பத்மபாதர்.

வேடன் சிரித்து, "உமக்கென்ன பித்தமா, அல்லது உன்மத்தமா?
இதோ இருக்கிறது பார், நீர் கேட்ட அந்த நரசிம்மம். ஏதும் போதையா?"

அப்போது நரசிம்மம் உறுமியது. அந்த உறுமல் சப்தம் மட்டுமே
பத்மபாதருக்குக் கேட்டது.

ஆனால் உருவம் தெரியவில்லை.

"தேடியவன் நான். ஆனால் காட்சி கொடுத்ததும் அகப்பட்டதும் வேடனுக்கு.
இது என்ன நியாயம்?", பத்மபாதர் நரசிம்மம் இருந்த திக்கை நோக்கிக்
கேட்டார்.

"நீயோ உன்னுடைய நியம நிஷ்டை பூஜை புனஸ்காரம், நித்திய
அனுஷ்டானங்களின் இடையே என்னை நோக்கித் தவம் இருக்கமுயன்றாய்.
அவனோ என்னை மட்டுமே அவனுடைய மனதிலும் சிந்தையிலும்
புத்தியிலும் முழுமையாக ஏற்றிக்கொண்டு என்னை எப்படியும் இரண்டே
நாட்கள்¢ல் பிடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏகாக்கிர சித்தத்துடன் அன்ன ஆகாரமின்றி உறக்கமின்றி தேடிக்கொண்டே இருந்தான்.
ஆகவே அவனுக்குத் தோன்றவேண்டியதாயிற்று. நீ செய்த அந்த
தியான ஜப தபங்களுக்கு ஏற்ற வகையில் என்னுடைய உறுமலையும்
குரலையும் நீ கேட்கிறாய்".


$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU