வலம்புரி
PART - 2
வலம்புரி விநாயகர்


கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                        சாதாரணமாக எங்கும் காணப்படும் விநாயகர் வடிவங்கள் நான்கு கரங்களுடன் காணப்படும். கீழ் வலக்கையில் தம்முடைய தந்தத்தை வைத்திருப்பார். இடக்கையில் மோதகம் இருக்கும். அந்த மோதகத்தின்மீது அதைச் சற்று கௌவியவாறு துதிக்கையின் நுனி இருக்கும். மேல் கைகளில் அங்குசமும் பாசமும் இருக்கும்.
                        வலம்புரி விநாயகர் வடிவங்கள் நான்கு கரங்களுடன் காணப்படும்.  துதிக்கை வலப்புறமாகத் திரும்பியிருக்கும். அல்லது சுழற்றப்பட்டிருக்கும்.
                        விநாயகருக்கு 32 மூர்த்தி பேதங்கள் உண்டு. அவற்றில் பதினாறு முக்கியமானவை.
அந்த முப்பத்திரண்டில் உள்ள சில மூர்த்தங்கள் வலம்புரியாக விளங்கும்.
                        மஹாகணபதி என்னும் மூர்த்தம் ஒன்று இருக்கிறது. இது பத்துக்கரங்களுடையது. கரும்பு, கருங்குவளை, தாமரை, நெற்கதிர், சக்கராயுதம், கதாயுதம், பாசம், மாதுளம்பழம், தம்முடைய தந்தம், முதலியவற்றை ஏந்திய கரங்களுடன் தம்முடைய சக்தியாகிய வல்லபையை அணைத்தவாறு ஒருகை இருக்கும். மூஷிகவாகனத்தின் மீது அமர்ந்துள்ள மகா கணபதி தம்முடைய இடது தொடையின்மீது வல்லபையை அமரச்செய்திருப்பார். வல்லபாதேவி தம்முடைய கையில் தாமரை மலரை ஏந்தியிருப்பார். 
                        மஹாகணபதியின் துதிக்கை வலப்புறமாகச் சுழித்திருக்கும். அதில் ரத்தின கலசம் ஒன்று இருக்கும். அதில் அமுதம் இருக்கும்.
                        இதே மாதிரியான வேறு சில வலம்புரிகளும் உண்டு.
                        மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள அம்மன் சன்னிதிக்குள் நுழைந்ததும் அங்கு அஷ்டசக்தி மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தைக் கடந்து உட்செல்லப்போகும் வாயிலின் இடப்புறத்தில் மஹாகணபதியின் பெரிய சிலையைக் காணலாம். ஏதோ காரணத்தால் அந்தச் சிலையை பின்னப ்படுத்தி யிருக்கிறார்கள்.



மதுரை மீனாட்சியம்மன் கோயில்
அஷ்டசக்தி மண்டபத்து
ஸ்ரீவல்லபா சமேத மஹாகணபதி

                        அதே மாதிரி இன்னொரு சிலையை ஆயிரக்கால் மண்டபத்தின் வாசலில் காணலாம். சாதரணமாக அந்த அற்புதச்சிலை பார்வையில் படமாட்டாது. ஐந்தே நா¡ட்களில் இருபது கோயில்களுக்குப் போகும் பெக்கேஜ் டூர் அடிப்பவர்கள் கண்களுக்கு நிச்சயம் படவே மாட்டாது. உள்ளூர்க்காரர்கள் கவனித்தேயிருக்கமாட்டார்கள்.
                        ஆனால் அற்புதமான சிலை.
                        அஷ்டசக்தி மண்டபத்தில் இருக்கும் மகாகணபதியை ஓவியர் மணியம் வண்ண ஓவியமாக வரைந்திருக்கிறார்.
                       
                        தற்சமயம் பிரபலமாக விளங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஒரு வலம்புரி விநாயகர்.   தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழைய விநாயகர் வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வலஞ்சுழிப் பிள்ளையார்களைக் காணலாம்.
                        தமிழகப் பிள்ளையார்களில் பழமையானர் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்.

 

ட்டி கற்பகவிநாயகர் பிள்ளையார்பஎன்னும் தேசிவிநாயகர்
                       
                        செட்டிநாட்டில் இன்னும் சில இடங்களில் பழைமையான வலம்புரி பிள்ளையார்கள் உண்டு. அவை அனைத்துமே இடைக்காலப் பாண்டியர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.



செவல்பட்டி் வலம்புரி விநாயகர்

                        செவல்பட்டியில் இருக்கும் வலம்புரி விநாயகரை மேலேயுள்ள படத்தில் காணலாம்.
மகிபாலன்பட்டி என்னும் ஊரில் குடைவரைக்கோயில் ஒன்றில் நான்கு கரங்கள் உடைய விநாயகர் உள்ளார். அவர் வலம்புரியா என்பதைப் பார்க்கவேண்டும். கைகளில் ஒன்றில் நெற்கதிர்களை வைத்திருப்பார்.
                        செல்வச்சிறப்பு மிக்க பெரும் கோயில்களில் மட்டுமே வலம்புரி விநாயகரை வைக்க வேண்டும். அந்தக் கோயிலுக்குப் பெரும் சொத்துக்கள் இருக்கவேண்டும். சங்கநிதி பதுமநிதி இருக்கவேண்டும். அந்தக் கோயில்களில் மிகச்சிறப்புமிக்க அளவில் தவறாமல் உரிய பூஜைகள் வழிபாடுகள் நிகழவேண்டும். நியமங்கள் தவறக்கூடாது. அபிஷேகங்கள் பெருமளவில் இருக்க வேண்டும். தினமும் விழா எடுக்கப்படவேண்டும்.
                        பழங்காலத்தில் இத்தகைய கோயில்கள் இருந்தன.
                        அவற்றில் வலம்புரி விநாயகருடன் சங்கநிதி பதுமநிதி ஆகியவற்றின் பிம்பங்களையும் வைத்திருப்பார்கள்.

பிரான்மலை என்னும் பறம்புமலை

                        பாரி வள்லலின் நாடாகிய பறம்புநாட்டின் தலைநகரமாக விளங்கியது பறம்புமலை. அது இப்போது பிரான்மலை என்ற பெயரில் இருக்கிறது. மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் கிழக்கில் சிறிது தூரத்தில் இது இருக்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற ஸ்தலம். பிற்காலத்தில் அது திருக்கொடுங்குன்றம் என்ற பெயரைப் பெற்றது.
                        இங்கு ஓர் அபூர்வமான பெருங்கோயில் இருக்கிறது. திருக்கொடுங்குன்றீஸ்வரர், மங்கைபாகர் என்னும் இரு மூர்த்திகள் உறையும் கோயில். தமிழர்களின் ஆலயநிர்மாணக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம், ஆகியவற்றுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்து இந்தக் கோயில். மலைச்சரிவில் விளங்கும் திரிசூல வடிவமாக விளங்கும் குன்றில் குடைவரையாகக் குடையப்பட்ட கருவறையில் மங்கைபாகரும் பாகம்பிரியாளும் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் குன்றைச்சுற்றிலும் அதனை உஉள்ளக்கியும் குடைந்தும் வெட்டியும் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்.
                        பாதுகாப்பான கோட்டையாகவும் விளங்குகிறது. ஒன்றன்மேல் ஒன்றாக ஐந்து அடுக்குகளும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடங்கிய கோட்டைகளுமாக அது விளங்குகிறது. நேரில் பார்த்தால்தான் அதன் சிறப்பும் பிரம்மாணடமும் அழகும் தெய்வீகத்தன்மையும் புரியும்.
பல அதிசயங்கள் நிறைந்தது.
                        இக்கோயிலில் வலம்புரி விநாயகருடன் சங்கநிதி பத்மநிதி ஆகிய சிலைகள் இருக்கின்றன. மஹாலட்சுமிக்கென பிரத்தியேகமான லட்சுமி மண்டபமும் உண்டு. அங்கு லட்சுமியின் சன்னிதியும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் மைல் கணக்கில் வெகுதூரத்துக்கு ரந்து விரிந்த இயற்கைக் காட்சிகளைக் காணலாம்.

 

வலம்புரி விநாயகர்

   

                                சங்கநிதி                                                                                    பதுமநிதி

                        இக்கோயிலில் பல நிலவறைகள் மிகவும் மறைவாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான செல்வம் இருந்ததாகக் கூறுவார்கள். இன்னமும்கூட மறைந்திருப்பதாகச்சொல்வார்கள். இந்தக் கோயிலின் திரிசூலக் குன்றின் உச்சியில் கருவறை இருக்கும் இடத்துக்கெமேல் 'பெயர் சொல்ல மரம்' என்றொரு மரம் இருக்கிறது. அதன் பெயரைச் சொல்பவர்களுக்கே அந்தக் கோயிலின் சங்கநிதியும் பதுமநிதியும் சொந்தமாகும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இன்னும் சில நிலவறைகள் இருக்குமிடம் தெரியவில்லை. யார்யாரோ தேடிவிட்டனர்.

அருவியூர்                  
                        அருவியூர் என்னும் பட்டினம் தனவைசியர்கள் குடியேறியிருந்ததொரு பேரூர். நானாதேசிகள் எனப்படும் சமூகத்தினருக்கு உரியது. திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் தலைமையகமாக இருந்தது.
                        மர்மமான முறையில் அது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோனது.
                        அந்த வட்டாரத்தில் உள்ள முக்கியமான கோயிலாக உள்ள பிரான்மலைக் கோயில் அருவியூர் தனவைசியர்களுக்குப் பாத்தியப்பட்ட கோயிலாக இருந்தது.
                        அருவியூரின் சிதைவுகளில் பல சிலைகள் துண்டு துண்டாகக் கிடப்பதைக் காணலாம்.
                        பல விநாயகர் சிலைகளும் உண்டு. அவை தற்சமயம் காணப்படும் விநாயகர் சிலைகளைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். இவற்றில் பல சிலைகள் இடைக்காலப் பாண்டியர் காலத்தவை.
                        அருவியூர்ச் சிதைவுகளில் சில வலம்புரி விநாயகர் சிலைகளைக் கண்டுபிடித்தேன்.
அவை எந்தக் கோயிலில் இருந்தவை என்பது தெரியாது. இப்போது காடாகவும் பொட்டலாகவும் உள்ள இடங்களில் மண்ணில் புதைந்தும் புதையாமலும் இருக்கின்றன.,

 

மறைந்துபோன அருவியூரின் சிதைவுகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட வலம்புரி விநாயகர் சிலைகள்.

                        அருவியூருக்கு அருகில் நிருபசேகரசதுர்வேத மங்கலம் என்னும் பிரம்மதேசம் உண்டு. இப்போது அதைச் சிவபுரி என்று அழைப்பார்கள். அங்கு உள்ள திருத்தான் தோன்றீஸ்வரர் கோயிலிலும் அதனைச் சுற்றிலும் பல பழைய கற்சிலைகள் உண்டு. அந்தக் கோயில் ஒரு காலத்தில் பெரியதாக இருந்திருக்கிறது. அந்தச் சிலைகள் அங்கிருந்தவையாக இருக்கலாம். அல்லது அக்கம்பக்கத்தில் இருந்து, பின்னர் அழிந்துபோன கோயில்களைச்சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிவபுரியில் ஒரு பெரிய முக்குருணி விநாயகர் உண்டு. அந்த விநாயகருக்கு இருமருங்கிலும் இரு சிலகள். அவற்றில் ஒன்று வலம்புரி விநாயகர். சிவபுரியைச ்செர்ந்ததாகவும் இருக்கலாம். வலம்புரி இடம்புரி ஆகியவற்றை ஜோடியாக இங்கு காணமுடிகிறது. ஆனால் அவை ஒரே ஸெட்டைச்செர்ந்தவைதானா என்பது தெரியவில்லை.



சிவபுரியில் உள்ள வலம்புரி விநாயகர்
   
                        தமிழகத்தில் திருவலஞ்சுழி என்னும் தலத்தில் காவிரியாறு வலப்புறமாக ச் சுழித்துக்கொண்டு ஓடும். அங்குள்ள சிவபெருமானுக்கு வலஞ்சுழி நாதர் என்று பெயர். அங்கு சுவேத விக்னேஸ்வரர் என்னும் வலஞ்சுழிப் பிள்ளையாராகிய வெள்ளைப்பிள்ளையார் சுவேதவாரணராக இருக்கிறார்.
                        பாற்கடலில் லட்சுமியுடன் தோன்றிய அமிர்தத்திலிருந்து இந்திரன் செய்துவைத்த பிள்ளையார் என்று புராணம் கூறும்.

GO TO SWASTIKA
$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU