வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


                    புராணங்களில் 'அஸ்திரங்கள்' என்ற சொல்லை அடிக்கடி காணலாம். 'விடுபடை' என்னும் ஆயுதவகையைச் சேர்ந்தவையாக அவை கூறப்படுகின்றன.
                    ஆனால் அவற்றைப் பற்றிச் சற்றுக்கூர்ந்து நோக்கும்போது அவற்றைப் பற்றிய பல மர்மங்கள் இருப்பது புலப்படும்.
                    தமிழ் சினிமா படங்களில் அஸ்திரம் என்பது வில்லிலிருந்து விடப்படும் அம்புபோல காட்டப்படுகின்றன. பழைய புராண நாடகங்கள் தெருக்கூத்துகள் போன்றவற்றிலிருந்து இந்த
மாதிரி உருவகம் ஏற்பட்டிருக்கவேண்டும்.

                    அஸ்திரங்கள் எப்போதும் அம்பு ரூபத்தில் இருப்பதில்லை. இராமாயணத்தில் வரும் காகாசூரனை நோக்கி இராமர் ஒரு புல்லைக் கிள்ளி ஏவிவிட்டார். அது ஓர் அஸ்திரமாகச்சென்று அவனை சராசரங்கள் எங்கெங்கும் விரட்டி விரட்டிச்சென்றது.
                    மகாபாரதத்தின் பதினேழாம் பர்வாவாகிய சௌப்திக பர்வத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமாவை பீமன் விரட்டிக்கொண்டு வந்தான். அவன் பின்னால் மற்ற பாண்டவர்களும் கிருஷ்ணனும் வந்தார்கள்.
                   பாகீரதி நதிக்கரையில் அஸ்வத்தாமா புழுதிபடிந்த மேனியுடன் இருந்தார். அவருக்குப் பக்கத்தில் வேதவியாசர்  இருந்தார்.
                    அம்புகளையும் வில்லையும் எடுத்துக்கொண்டு 'நில்! நில்!' என்று சொல்லி அஸ்வத்தாமாவை எதிர்க்க பீமன் விரைந்தான். கிருஷ்ணனும் பீமனும் யுதிஷ்டிரரும் தேரில் வருவதைக் கண்ட அஸ்வத்தாமா தமக்கு அந்திமகாலம் நெருங்கிவிட்டதோ என்றெண்ணி
விட்டார். ஆனால் அவர் ஒரு சிரஞ்சீவி. அப்போது அவருக்குத் தம் தந்தையாராகிய துரோணர் தமக்குக் கற்றுக்கொடுத்த 'பிரம்ம சிரஸ்' என்னும் அஸ்திரம் நினைவுக்கு வந்தது.

                    ஒரு புல்லை உடனே எடுத்தார். அதனை மந்திரித்தார். 'பாண்டவர்களை அழிக்கட்டும்'
என்று சொல்லி அந்த அஸ்திரத்தை ஏவிவிட்டார். மூன்று உலகங்களையும் எரிக்கப் புறப்படுவதுபோல், அந்த அஸ்திரம் நெருப்பைக் கக்கிக்கொண்டு சென்றது.

                    இதைக் கவனித்த வாசுதேவர், "அர்ச்சுனா! இந்த அஸ்திரப் பிரயோகத்தைத் தடுப்பதற்கு உரிய பதில் அஸ்திரத்தைப் பிரயோகம் செய். உன் சகோதரனைக் காப்பாற்று", என்று சொன்னார்.
                    உடனே அர்ச்சுனன், வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு தேரைவிட்டிறங்கி, பெரியவர்களை வாழ்த்தி வழிபட்டுவிட்டு, பதில் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தான்.
                    அதனால் உலகமே கிடுகிடுத்து நடுங்கியது. ஆயிரக்கணக்கான இடிகள் விழுந்தன.
இதைக் கண்ட நாரதரும் வியாசரும் அஸ்திரங்களின் வேகத்தைத் தணிப்பதற்காக இரண்டு அஸ்திரங்களுக்கும் நடுவே நின்றுகொண்டார்கள்.

                    "வீரர்களே! இந்த அஸ்திரத்தை மனிதர்கள்மீது பிரயோகம் செய்யக்கூடாதே? பெருத்த அழிவைச் செய்யும்!" என்று எச்சரித்தார்கள்.
                    அர்ச்சுனன் தன் அஸ்திரத்தைத் திரும்பவாங்கிக்கொண்டான்.
                    ஆனால் அஸ்வத்தாமாவால் பிரம்ம சிரஸைத் திருப்பி அழைக்கமுடியவில்லை.
                    "என் உயிரைக் காத்துக்கொள்வதற்காகவே இந்த அஸ்திரத்தை ஏவிவிட்டேன். இதைத் திருப்பி அழைக்கும் ஆற்றல் எனக்கில்லை. இது பாண்டவர்களை அழிக்காமல் விடாது." என்றார் அஸ்வதாமா.
                    வியாசர், "இந்தக் கணையை நீ அழைத்துக்கொள்ளவில்லையானால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு அறவே மழையே பெய்யாது. உயிரினங்கள் வாடித்துன்புறும்" என்று சொன்னார்.
                    முடிவில் அஸ்வத்தாமா பிரம்ம சிரஸைப் பாண்டவர்களின் கர்ப்பத்தின்மீது ஏவிப் பிரயோகித்து விட்டார். மற்றவர்களை விட்டுவிட்டார். அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மனைவியாகிய உத்தரையின் கர்ப்பத்தையும் அது தாக்கிற்று. கிருஷ்ணர் அந்தக் கருவைப் பிழைக்கவைத்துவிட்டார். அந்தக் கருவே பரிட்சித்து மன்னனாகப் பிறந்தது.
                    இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் புல்லையே அபிமந்திரித்து ஏவினார்கள். அவை அஸ்திரமாகச் சென்று தாக்கின.
                    'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி அப்படி ஏற்பட்டதுதான்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU