விருப்பண்ணா கட்டிய கோயில்

கடாரத் தமிழ் அறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee




வீரண்ணா விருப்பண்ணா சகோதரர்கள்

                மதுரையிலுள்ள புதுமண்டபத்தினுள்ள திருமலை நாயக்கரின் பட்டமகிஷியின் சிலையைப் பற்றிய கதையன்று இருக்கிறது. ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணம் என்ற தலைப்பில் அதைப் பற்றி
எழுதியிருக்கிறேன்.
                அந்தக் கதையில் திருமலை நாயக்கரின் அமைச்சராகிய நீலகண்ட தீட்சிதரின் கண்களைக் குத்திவிடுமாறு நாயக்கர் உத்தரவிட்டார். பூஜையிலிருந்த தீட்சிதர் தம்முடைய கண்களைத் தாமாகவே மீனாட்சியம்மனுக்குக் காட்டிய ஆராதனை தீபத்தால் பொசுக்கிக்கொண்டார். பின்னால் அவர் பாடிய 'ஆனந்த சாகரஸ்த்வம்' என்னும் பாடல்களுக்கு இரங்கி அவருடைய கண்களை மீனாட்சியம்மன் மீண்டும் ஒளிபெறச்செய்தாள்.
   
                லேபாக்ஷ¢ என்றொரு ஊர். இது ஆந்திராவில் உள்ள ஊர்.
                தற்சமயம் அது ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
                ஆந்திராவின் கலைச்சிறப்புப்பெற்ற இடங்களில் இதுவும் ஒன்று.
                ஒரு காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஊர்களில் ஒன்றாக இருந்தது.
                விஜயநகரப் பேரரசை ஆண்டவர்களில் மிகச் சிறப்புப்பெற்றவர் கிருஷ்ணதேவராயர்.
                அவருடைய மகளின் கணவர் அலியா ராமராஜா என்பவர். தமிழில் ராமராயர் என்று அழைப்பார்கள். மிகவும் திறமை வாய்ந்தவர்.

                கிருஷ்ணதேவராயருடைய மகனுக்கு யாரோ விஷம்வைத்துவிட்டார்கள். ஆகவே அவருக்குப் பின்னால் அவருடைய தம்பியாகிய அச்சுததேவராயர் பட்டத்துக்கு வந்தார். அவருக்குப் பின்னால் இன்னொரு தம்பியின் மகனாகிய சதாசிவராயர் பட்டத்துக்கு வந்தார்.

                ஆனால் அவரை ஒரு கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு ராமராயர் விஜயநகரத்தின் ஆட்சியைத் தம் இரு தம்பியருடன் நடத்திவந்தார். அவருடைய காலத்தில் விஜயநகரம் பலமிகுந்து செல்வச்சிறப்புடன் விளங்கியது.

                அவருடைய தனாதிகாரியாக விருப்பண்ணா என்பவர் இருந்தார்.

                அவர் ஒருமுறை பெண்ணாற்றங்கரைக்குச்சென்றபோது அங்கு ஆமைவடிவிலிருந்த ஒரு கற்குன்றைக்கண்டார். முழுமையும் அருமையான கருங்கல்லால் ஆகிய குன்று அது. கூர்மசைலம் என்பது அதன் பெயர்.

                அவருடைய மனதில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

                அந்தக் காலகட்டத்தில் விளங்கிய சிற்பக்கலையின் உச்சகட்டமாக விளங்கக்கூடியதோர் ஆலயத்தைக் கட்ட விழைந்தார்.  விஜயநகரத்தின்பாணியில் அதே மாதிரியான கலையம்சங்களைக் கொண்டதாக அதனைக் கட்ட ஆரம்பித்தார். சிற்பக்கலையுடன் மட்டுமல்லாது ஓவியக்கலைக்கும் இடம் கொடுத்தார். அற்புதமான ஓவியங்களையும் அங்கு வரையச்செய்தார்.
                கோயிலின் விதானத்தின் அருமையான கருங்கல்லில் Fresco என்னும் பாணியில் ஆன ஓவியங்களை வரையச்செய்தார்.   
                அவற்றின் நுணுக்கம்தான் வியக்கவைக்கும். பெண் கட்டியிருக்கும் சேலையையும் அத டிஸைனையும், பார்டரையும் அத்தனை நுணுக்கமாக வரைந்திருப்பார்கள்.



                அதன் பின்னர் சில நூற்றாண்டுகளுக்கு லேபாக்ஷ¢ சேலைகள் என்ற பெயரில் அந்த ஓவியங்களில் உள்ள சேலைகளைப்போலவே நெய்தார்கள்.

                தம்முடைய அன்புக்கும் பக்திக்கும் உரிய சிவனை வீரபத்திரராகக் கொண்டு அவருக்கு மிகச்சிறந்த கோயிலைக் கட்டினார். விநாயகருடைய சிற்பத்தின்மூலம் கைங்கரியத்தை ஆரம்பித்துவைத்தார்.



உமா மஹேஸ்வரர்


                சிவனுடைய அறுபத்துநான்கு மூர்த்தங்களில் பதினான்கு மூர்த்தங்களுக்கு அவர் அங்கு சன்னிதி அமைத்தார். கொடி மண்டபம் என்பது ஒரு சிற்பக்கலை அற்புதம்.




                கோயிலிலிருந்து அரை கீலோமீட்டர் தூரத்தில் ஒரு பெரிய நந்தி இருக்கிறது. எட்டேகால் மீட்டர் நீளமும் நாலேமுக்கால் மீட்டர் உயரமும் கொண்டது.   ஒரே கல்லால் ஆன நந்தி.
                இந்த உலகிலேயே மிகப்பெரிய நந்தி அதுதான்.

                பணத்துக்கு ஏது குறைவு?

                விஜயநகரப்பேரரசின் பொக்கிஷம் அப்போது அள்ள அள்ளக் குறையாதபடிக்கு விளங்கியது. அதிலிருந்து தாராளமாக எடுத்துக் கலைக்கோயிலாகவும் திருக்கோயிலாகவும் அதனைக் கட்டினார்.
                அவர்தானே தனாதிகாரி?

                அவரின்மேல் பொறாமைகொண்ட எதிரிகள் ராமராயரிடம் வத்திவைத்தனர்.
                'ராமராயரையும் விஞ்சியவிதத்தில் பேரும்புகழும் வாங்கவேண்டும் என்பதற்காக தமக்கென்று ஒரு மிகச்சிறந்த கோயிலைத் தாமாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்; ராமராயரின் அனுமதியையும் வாங்காமல் தன்மூப்பாகச் செய்கிறார். அவருக்கே தெரியாமலும் செய்கிறார். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பணத்தை எடுத்துத் தம் சொந்தக்கோயிலைக் கட்டுகிறார்'. இவ்வாறு சொல்லிக்கொடுத்தனர்.

                விருப்பண்ணாவின் கண்களைத் தோண்டிவிடுமாறு ராமராயர் உத்தரவிட்டார்.

                சிற்பக்கலை, கட்டடக்கலையின் உச்சகட்டத்தைத் தம்முடைய வீரபத்திரர் ஆலயத்தின்மூலம் தொட்டுவிட்டதாக விருப்பண்ணா எண்ணினார். அங்கு இருக்கும் நந்திதான் இருப்பனவற்றிலேயே மிகப்பெரியது. இதுபோல இன்னும் பல சிறப்புகள். இனி இதில் யாரும் சாதிக்கக்கூடியது ஒன்றுமில்லை என்றும் எண்ணினார். தாம் செய்ததைத் தவறாகவும் அவர் கருதவில்லை. அரசனுடைய தண்டனைக்கு ஆளாகாமல் தாமே தம்முடைய கண்களை அவித்துக்கொண்டார்.

                வீரபத்திரரின் திருப்பாதங்களின் அடியில் நித்திய சதா சேவையாக விருப்பண்ணா வழிபட்டுக ்கொண்டிருக்கிறார். அந்தக் காட்சிதான் ஆலயத்திற்குள் நுழையும்போது தென்படும்.

அன்புடன்

ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU