விட்டிலன் உலகை அஞ்சி

தமிழடியார் சீர்பரவுவார்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



    கம்பராமாயணத்தில் நயமான கட்டங்கள் பல இருக்கின்றன. கம்பநாடர் தம் பாடல்களின்மூலம் அத்தகைய கட்டங்களை உச்சநிலைக்குக்  கொண்டுசென்றுவிடுவார். சம்பவங்களின் தன்மைகளையும், பாத்திரங்களின்  தன்மைகளையும் சில வரிகளின் மூலமோ, அல்லது சில சொற்களின் மூலமோ, படிப்பவரின் மனத்தின் ஆழத்தில் ஊடுருவிப் பதித்துப் புதைத்துவிடுவார்.

    அவ்வாறு அமைந்துள்ள பாடல்களில் ஒன்று. ஏனோ தெரியவில்லை; இந்தப்பாடல் அதிகம் பிரபலமாகவில்லை.
    யுத்தகாண்டத்தில் உள்ளது இப்பாடல்.
    அதன் பின்னணி,

    ராமலட்சுமணர்களை எப்படியேனும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்திரஜித், நிகும்பலை என்னும் இடத்தில் யாகத்தைச ்செய்ய  முயன்றான். அந்த யாகத்தை வெற்றிகரமாகச் செய்துவிட்டால் இந்திரஜித்தை பின்,  யாராலும் வெல்லவே முடியாது. நிகும்பலையில் தன்னுடைய வேள்விச்சாலையைக்  காத்து நிற்பதற்கு அரக்கர் சேனையை வட்டவடிவமாக நிறுத்தியிருந்தான். அந்த இடத்திற்கு இலக்குவன் விரைந்து சென்று, அரக்கர் படையை அழித்து, அவர்களின்  உடல்கள், இரத்தம் போன்றவை யாக குண்டத்தில் விழுமாறு செய்துவிட்டான்.

    அதனால் அந்த யாகம் சிதைந்துவிடுகிறது.

    'இருபத்தைந்து வெள்ளமாக இருந்த அரக்கர் சேனை, பத்தே  அக்குரோணியாகக் குறைந்துவிட்டது; இதுவும் சற்று நேரத்தில் அழிந்துதான்விடும். இனி வேள்வியையும் செய்து பூர்த்தி செய்வது என்பது ஆகாத காரியம்.  இனிமேல் வெற்றி என்பது இல்லை. நம்முடைய பராக்கிரமம் நம்முடன்தான் இருக்கிறது.  அதை வைத்துப்போராடுவோம்', என்று முடிவுசெய்து மூர்க்கமான போரில்  இந்திரஜித் ஈடுபட்டான்.

    வானரசேனைக்குப் பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டான். அந்நிலையில்இந்திரஜித்தைக்  கொல்வதற்காகவே வந்த இலக்குவன், தானே நேரடியாக இந்திரஜித்துடன் போரிட வந்தான்.
    இருவரும் விடுத்த கணைகளால் பெரும் அழிவு ஏற்பட்டது. கடல்களெல்லாம் வற்றின; மலைகளெல்லாம் பிளவுபட்டன; கனலால் பற்றப்பட்டு சூரியனேகூட பற்றி எரிந்தது.விண்மீன்கள் உதிர்ந்தன.உலகம் திக்கின்றி சுழன்றது.இருவருடைய  கணைகளும் திக்கெங்கும் சிதறிச்சென்றன.

    அதன்பின்னர் இந்திரஜித் பல தெய்வீக கணைகளைத் தொடுத்துவிட்டான்.

    அவற்றையும் விட ஆற்றல்மிக்க கணைகளை விடுக்கமுடிந்தும்கூட இலக்குவன்  இந்திரஜித்தின் கணைகளைத் தடுக்கக்கூடிய அளவே ஆற்றலைக் கட்டுப்படுத்தித் தன் கணைகளை விடுத்தான்.

    இந்திரஜித் பிரமாஸ்திரத்தை விடுத்தான். இலக்குவன் பதிலுக்கு ஒரு பிரம்மாஸ்திரத்தை எடுத்து அதன் ஆற்றலை அடக்குவித்து, விடுத்து இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தைக்  கட்டுப்படுத்தி விட்டான்.

    நாராயணாஸ்திரத்தை இந்திரஜித் விடுத்தான். ஆயுதங்களைப் போட்டுவிட்டு அந்தக்கணையை வணங்கிப் பணிந்து நின்றால் அது ஒன்றும் செய்யாது. ஆகவே எல்லாரும் தத்தமது ஆயுதங்களைப் போட்டுவிட்டு வணங்கி நின்றார்கள். ஆனால் இலக்குவனோ தாமே அந்த அஸ்திரத்தின் அதிதேவன் என்ற நினப்புடன் எதிர் நோக்கி நின்றான். நாராயணாஸ்திரம் இலக்குவனை வலம்வந்து வணங்கிச ்சென்றது.

    அடுத்து, பாசுபதாஸ்திரத்தை எடுத்துச்செலுத்தினான். அதற்குப் பதிலாக இலக்குவன் சிரித்துக்கொண்டே தானும் ஒரு பாசுபதாஸ்திரத்தை எடுத்தான்.

    இரண்டு கணைகளும் தம் முழுவீரியத்துடன் பிரயோகம் ஆனால் உலகனைத்தும் நிச்சயமாக  அழிந்தே போய்விடும்.

    அந்நிலையில் இலக்குவன் பாசுபதாஸ்திரத்தை எடுத்து, அதற்கு சாப விமோசனத்தைத் தந்து, மந்திர உச்சாரணை செய்து, பாசுபதாஸ்திரத்திடம், 'ந,£ அதோ எதிர்த்து வருகிற பாசுபாதஸ்திரத்தை மட்டுமே அழிப்பதைத் தவிர வேறு எத்தகைய தீமையையும் செய்யக்கூடாது', என்று ஆணையை உட்செலுத்தி, கணையை விடுத்தார்.

    அது இந்திரஜித்தின் கணையை உள்வாங்கிவிட்டது.

    பின்னர் வேறுபல வகைகளாலும் போர் புரிந்துவிட்டு, இந்திரஜித் மாயமாக  விண்ணில் மறைந்து, அப்படியே இலங்கை சென்று இராவணனைக் கண்டான்.

    இந்திரஜித்தைக் கண்ட இராவணன், 'நீ தொடங்கிய வேள்வி  முடிவுறவில்லை என்பதை உன் தோள்களில் பதிந்துள்ள அம்புகளே தெரிவிக்கின்றன.  நீ மிகவும் தளர்ச்சியுற்றுள்ளாய். நிகழ்ந்தது என்ன? தெரிப்பாயாக!', என்றான்.

    இந்திரஜித், 'நான் செய்த மாயச்செயல்களையெல்லாம் உன் தம்பி போக்கடித்துவிட்டான். இலக்குவன் வானரப்படையுடன் வேள்வியை அழித்துவிட்டான். பிரம்மாஸ்திரத்தை விடுத்தால் அதனைத்  தடுத்துவிட்டான்.  நாராயணாஸ்திரமோ அவனை வணங்கிச் சென்றுவிட்டது. இனிமேல் இவற்றையும்விட சிறந்த கணைகள் எவைதாம் உள? நீ மிகவும் கொடிய பகையைத் தேடிக ்கொண்டிருக்கிறாய்.
     இலக்குவன் ஒருவனே மூவுலகையெல்லாம் அழித்துவிடுவான்.
    அந்த இலக்குவன் மும்மூர்த்திகளின் படைக்கலங்களாகிய பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம் ஆகியவற்றை வைத்திருந்தும்கூட, அவற்றை முழு ஆற்றலுடன் விடுத்தால் உலகங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று அஞ்சி என்மீது விடுக்காமல் விட்டான். நான் விடுத்த பிரம்மாஸ்திரம் அவனை நெருங்கியபோதும்கூட தன்னை அவன் பாதுகாத்துக்கொள்ளமட்டுமே செய்தான்......
    ஆகவே நான் வென்றுமீண்டேன்.....',என்றான்
   
    தன்னிடம் ஆற்றலுள்ள ஆயுதங்கள் இருந்துகூட உலகம் அழிந்துவிடுமே என்று அஞ்சி அவற்றை விடுக்காமல் தன்னை மட்டும் பாதுகாத்து எதிரியைத் தப்பவிட்டான், இலக்குவன்.
   
    அந்தப்பாடல்:

முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன் உலகை அஞ்சி; ஆதலால் வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்

    அருமையான பாடல் இல்லையா! என்ன கருத்துச்செரிவு!!

    கீழே அந்த கட்டத்திற்குரிய அனைத்துப் பாடல்களையும் காணலாம்.

அன்புடன்

ஜெயபாரதி

விண்ணிடைக் கரந்தான் என்பார், வஞ்சனை விளைக்கும் என்பார்
கண்ணிடைக் கலக்க நோக்கி, ஐயுறவு உழக்கும் காலை
புண்ணிடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணுடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான்.

தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில், நின்தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கழுலன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி என்றான்

சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த்தொழில் தொடங்கி யார்க்கும்
தாழ்வுஇ லாப்படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்துவிட்டான்

நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால்படை, நின்றானை
வலம் செய்து போயிற்று என்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக்கொண்டாய்
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே

முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன் உலகை அஞ்சி; ஆதலால் வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்

ஆதலால் 'அஞ்சினேன்' என்று அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதி ஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்' என்றான் உலகு எல்லாம் கலக்கி வென்றான்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU