ஓர் உண்மைச் சம்பவத்தினை இங்கு கூறுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் - 1995-இல் நடந்தது.
சுங்கை பட்டாணியின் பொது மருத்துவமனையில் நடந்தது.
மலேசியாவின் வடகிழக்கேயுள்ள கெடா மாநிலத்தின் முக்கிய நகரம்
சுங்கைப் பட்டாணி. இந்த வட்டாரத்தில் கடந்த நூறாண்டுகளாகத்
தமிழர்களும் தெலுங்கர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில்
பெரும்பாலானோர் ரப்பர் எஸ்ட்டேட்டுகளில் தொழிலாளர்களாக
வாழ்ந்துவருபவர்கள்.
இந்நாட்டில் SOCSO என்றொரு அமைப்பு உண்டு. தனியார்
நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக ஒரு நிதி ஒதிக்கீடு
இருக்கிறது. அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலையின்போது
ஏதும் காயமேற்பட்டாலோ அல்லது வேலைபார்க்க இயலாதவகையில்
நோயேற்பட்டாலோ அவர்களுக்கு மருத்துவ உதவிக்காகவும்
நஷ்டஈடாகவும் பென்ஷனாகவும் பயன்படுவதற்காக உள்ள நிதி அது.
அதற்காக எம்ப்லாயர்கள் தரப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையும்
ஊழியர்கள் தரப்பில் ஒரு தொகையும் மாதந்தோறும் அந்த நிதிக்காகச்
செலுத்தப்படும். ஊழியர்களின் பங்குத்தொகை அவர்களின்
சம்பளத்திலிருந்து செலுத்தப்படும். ஸோக்ஸோ உதவி கோரிப் பலர்
மனுச்செய்வார்கள். அதனைப் பரிசீலனை செய்வதற்காக ஸோக்ஸோ
மீட்டிங்குகள் மருத்துமனையில் நடைபெறும். எந்த மருத்துவப்பிரிவு
என்பதைப் பொறுத்து ஸோக்ஸோ கமிட்டியின் உறுப்பினர் அமைவர்.
அந்தக் கமிட்டியில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். மருத்துவ
மனையின் தலைவரே கமிட்டியின் தலைவர். குறிப்பிட்ட மருத்துவப்பிரிவின்
தலைமை ஸ்பெஷலிஸ்ட், ஸோக்ஸோ நிறுவனத்தின் அதிகாரி ஆகியோர்
மற்ற இருவர்.
ஒருமுறை பொதுமருத்துவப் பிரிவின் ஸோக்ஸோ மீட்டிங்
நடந்தது. ·பிஸிஷியன், ஸோக்ஸோ ஆபிஸர், நான் ஆகிய மூவரும்
ஒவ்வொரு கேஸாக நேரடியாகப் பார்த்துப் பரிசீலனை செய்து
கொண்டிருந்தோம்.
அப்போது 'லீ ஸ்வீ லியான'் என்ற சீனப்பெயர் கொண்ட கேஸ் ·பைல்
வந்தது. அதனைப் புரட்டிப்பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணை அழைக்கச்
சொன்னோம். நர்ஸ் அந்தப் பெயரைக் கூப்பிட்டாள்.
உள்ளே வந்தார் ஒரு பெண். அழகாக சேலை கட்டியிருந்தார்.
நெற்றியில் பொட்டு. கைகளில் வளையல். முகமோ சீனத்தன்மை
படைத்திருந்தது.
"நீங்க இல்லெம்மா. ஒங்களக் கூப்புடும்போது வாங்க"
என்றேன்.
மீண்டும் நர்ஸ் கூப்பிட்டாள். மீண்டும் அந்தப் பெண்ணே உள்ளே
வந்தார்.
"என்னம்மாயிது மறுபடியும் வர்ரீங்க. அடுத்தாப்புல கூப்புடுவாங்க.
அப்ப வந்தாப்போதுமே."
"என்னத்தானுங்க கூப்டது"
"அப்டியா? பேரு என்ன...வேற பேரு சீனப்பேராயிருக்கே?"
"நானு தமிளுதானுங்க"
ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.
என் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டார்,
அந்தப்பெண்.
இங்குள்ள தமிழர்களிடையே ஒரு வழக்கம் உண்டு.
சீனக்குழந்தைகளை அவை பிறந்ததுமே சொல்லிவைத்துத் தத்து
எடுத்துக்கொள்வார்கள். பெண்குழந்தைகள்தாம் அவ்வாறு
தத்தெடுக்கப்படும். ஆண்குழந்தைகள் மிகவும் அரிது. தமிழர்
குழந்தைகளாகவே அவை வளர்க்கப்படும். ஆரம்பத்திலேயே
பெயர்களைத் தமிழ்ப்பெயர்களாக சூட்டிவிடுவார்கள். விபரம்
தெரிந்ததும்கூட அந்த சீனத்தமிழர்கள் தமிழராகவே நடந்து
கொள்வார்களேயழிய பழைய குடும்பத்தைத் தேடியோ அல்லது
சீனசமூகத்திலேயோ சேர்ந்துகொள்ளமாட்டார்கள்.
அந்தப்பெண்மணி தொடர்ந்து பேசினார்கள்.
"சின்னாப்போ நானு நம்ம வீட்டுக்கு வந்துட்டேனுங்க.
ஆனா நம்ம வீட்டுல தமிள்ல பேர மாத்தலங்க. எஸ்டேட்டுங்க.
அப்பல்லாம் இதெல்லாம் தெரியாதுங்க".
"சாதாரணமா பிள்ளைய தத்தெடுக்கவும் பேர மாத்துறதுதான
பழக்கம்.", நான் சொன்னேன்.
"அதானுங்க. ஆனா நம்ம வீட்டுல செய்யலீங்க. அப்டியே
வுட்டுட்டாங்க. நானும் பேசாம இருந்துட்டேங்க. வீட்டுல தமிள்லதானுங்க
பேசுறது. என் வீட்டுக்காரரு நம்மாளுங்க. நம்மாளத்தான் கட்டிக்கிட்டேன்.
பிள்ளைங்களு எல்லாமே தமிளு ஸ்கூலுலதானுங்க படிக்குதுங்க"
"எங்க இருக்கிறீங்க".
"பீடோங் பக்கலில எஸ்டேட்டுலங்க".
இப்போது சொல்லுங்கள்.
யார் தமிழர்?
தமிழ்த்துவம் என்பது எது?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$