இன்னொருவகை சீட்டுக்கவியை கவிதையை இங்கு முன்வைக்கிறேன்.
நான் வர்ணித்திருக்கும் அளவிற்கு உள்ள சீட்டுக்கவியிலிருந்து சற்று வேறுபட்டது
இது. ஆனால் நோக்கத்தில் ஒன்றுதான்.
திருவிளையாடற் புராணத்தில், 'இசைவாது வென்ற படலம்' என்பதனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஹேமநாதன் என்னும் வடதிசைப் பெரும்பாடகன் ஒருவனை பாணபத்திரன் என்னும் தன்
அடியாருக்காக, மதுரைச் சொக்கநாதன் இசையில் வென்ற படலம் அது. திருவிளையாடல்
படத்தில் பார்த்திருப்பீர்களே?
அந்த பாணபத்திரன் தன்னுடைய வறுமையைத் தீர்க்குமாறு சொக்கநாதரிடம் கேட்டிருக்கிறார்.
சொக்கநாதரோ தன்னுடைய இன்னொரு அடியாராகிய சேரமன்னனுக்கு திருமுக ஓலை
ஒன்றை எழுதிக்கொடுத்தார். அந்த ஓலையை பாணபத்திரர் எடுத்துக்கொண்டு சென்று
சேரமன்னனிடம் காட்டி பொருள் வாங்கிக் கொண்டார். இதுவும்கூட திருவிளையாடற்
புராணத்தில் இருக்கிறது. கூடல் காண்டத்தில் காணப்படும். புராணத்தின் நாற்பத்து
இரண்டாவது படலமாகிய 'திருமுகம் கொடுத்த படலம்'.
கோமகனினைய செய்தி யறியுமேற் "கோசங் காப்போர்க்
காமுறு தண்ட, நின்போல் அன்பகத்தெம்மை வைத்த
தேமரு போந்தின் கண்ணிச் சேரமான் தனக்கிப் போது
நாமொரு முடங்கல் தீட்டி நல்குவம்; போதி", யென்னா
மறைக்குரை செய்த வாக்கான், 'மதிமலி புரிசை' என்னும்
சிறப்பியல் சீர்சால் செய்யுள் பாசுரம் செப்பித் தீட்டி
பிறைசடை பெருமான் நல்கி மறைந்தனன்; பெரும்பாண் செல்வன்
உறக்க நீத்தாடிப் பாடி உவகை மாகடலில் ஆழ்ந்தான்.............
மின்னவிருஞ் செபொன்மணி மாடக்கூடல்
மேயசிவன் யாம் எழுதி விடுக்குமாற்றம்
நன்னர் முகிலெனப் புலவர்க் குதவுஞ் சேர
நரபாலன் காண்க;தன்போல் நாம்பால் அன்பன்
இன்னிசை யாழ் பாணபத்திரன் தன் மாடே போந்தான்
இருநிதியம் கொடுத்து வர விடுப்பதென்னத்
தென்னர் பிரான் திருமுகத்தின் செய்தி நோக்கிச்
சேரர்பிரான் களிப்பெல்லை தெரியானாகி.........
...........தார்வேந்தன்
பின்னேழடியோ சேட்சென்று பெருமை சான்ற வரிசையினால்
தன்னேரிசையான் தனைவிடுத்து மீண்டாகத் தமிழ் மதுரை
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு வெயில் விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை புக்கான்
சேரமன்னன் பெருமளவில் பாணபத்திரர்க்கு மரியாதைகளும் வரிசைகளும் செய்து பொருளும்
கொடுத்து அனுப்பினார். பாணபத்திரை அனுப்பும்போது தானும் ஏழடி வைத்து பின்சென்று
அனுப்பிவைத்தார்.
குபேரனைப் போல பாணபத்திரர் மதுரைக்கு வந்து சேர்ந்தார்.
ஆலவாய்ச் சொக்கன் கொடுத்த திருமுகக்
கவிதான் இது.
அதனுடைய பொருளையும் காண்க......
மதிமலிபுரிசை மாடக்கூடற்
பதிமிசைநிலவும் பானிறவரிசிற(கு)
அன்னம் பயில் பொழில் ஆலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிந்திடும் மாற்றம்
பருவக்கொண்மூப் படியெனப்பாவலர்க்(கு)
ஒருமையின் உரிமை யின்உதவி அணிதிகழ்
குருமாமணி திகழ் குலவிய குடைக்கீழ்
செருமா உகைக்கும் சேரலன் காண்க!
பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பால்
காண்பதுகருதிப் போந்தனன்;
மாண்பொருள்கொடுத்து வரவிடுப்பதுவே!
சந்திரன் ஊர்ந்து செல்லும் மதிற்சுவரும், மாடங்களும் நிறைந்த கூடலாகிய
மதுரையம்பதி; அங்கு தங்குகின்ற பால்போன்ற வெள்ளை நிறமும் ரேகைகள் பதிந்த
சிறகுமுடைய அன்னங்கள்; அவை வதியும் சோலையுடைய திருவாலவாய்ப்பதியில் எப்போதும்
வீற்றிருக்கும் சிவன் நான் தெரிவிக்கும் செய்தியாவது.
மழைகாலத்து மேகத்தின் தன்மையைப்போல தன்பால் வரும் புலவர்களுக்கு ஒத்த மனத்தோடு
அவர்களுக்கு ஏற்றவகையில் பொருள்களை அளிக்கும் சேரமன்னனே! அழகாக விளங்கும்
நல்ல நிறமுடைய இரத்தினங்கள் ஒளிவீசுகின்ற விரிந்த கொற்றக்குடையின் கீழிருந்து
போரில் யானைகளை நடத்துகின்ற சேரமன்னனே, இதைப் பார்ப்பாயாக!
சிறந்த பண்ணமைந்த யாழினை வாசிக்கும் பாணபத்திரன், உன்னைப்போலவே என்பால் பக்தியுள்ளவன்.
உன்னைப் பார்க்க வருகின்றான். அவனுக்கு வளமான செல்வத்தைக்கொடுத்து இங்கே
வரும்படி அனுப்பவும்.
தனிப்பாடல்கள் என்று குறிப்பிடப்படும் பாடல்கள் லட்சக்கணக்கில் தமிழில்
இருக்கின்றன. அவற்றில் சில ஆயிரங்கள் அச்சில் வந்துள்ளன.
அவற்றில்கூட சில முக்கிய விபரங்கள் கிடைக்கின்றன.
மதுரையை விட்டுப் பாண்டியர்கள் விரட்டப்பட்ட பின்னர் அவர்கள் திருநெல்வேலியில்
இருந்து கொண்டனர். பின்னர் நாயக்கர்கள் அவர்களை அங்கிருந்தும் நெருக்கி
ஒதுக்கிவிட்டனர். கயத்தாறு,
கரிவலம்வந்த நல்லூர், தென்காசி முதலிய இடங்களில் இருந்துகொண்டு
ஆண்டனர்.
இவர்களைப் 'பிற்காலப் பாண்டியர்கள்' என்று குறிப்பிடுவதுண்டு.
இப்படிப்பட்ட பாண்டியர்களில் சிலர் தங்களால் இயன்ற அளவுக்குப் புலவர்களை
ஆதரித்திருக்கின்றனர்.
கீழ்க்கண்ட சீட்டுக்கவியை வேங்கடராயன் என்பாருடைய மகனாகிய புலவர் ஒருவர்
ஒரு பாண்டிய மன்னரைப் பார்த்துப் பாடியது.
தென்பாராளும் அறிவிற் குறுமுனி
தெக்கிண கைலையில் வாழ்
செங்குந்தக் குல வேங்கடராயன்
திருவாசற் புதல்வன்
என்பேர் வண்ணக்கட்சியதன்றி
யெதிர்த்தவர் மார்பாணி
இந்தத் தேசப்புலவர் மனத்துக்
கிடியென வந்தேன் காண்
உன்பால் யான்வர வாசற்காரர்க்
குத்தாரம்பண்ணி
யுள்ளுக்கென்னை யழைப்பித்தாசில்
உரைக்குங் கவிதைகள்கேட்
டென்பால் வரிசைகள் பரிசுகள் நல்கி
யிரட்சித்திடவேணும்
இராமா சீவிலி மாறா பாண்டிய
ராச வரோதயனே
சீவிலி மாறன் எனும் பாண்டிய மன்னனுடைய அவைக்கு வந்து அவரைச் சந்தித்து பாடல்களை
சொல்வதைக் கேட்டு உரிய மரியாதையும் பரிசும் பெற்றுச்செல்வதற்காக புலவர்
வந்திருக்கிறார். ஆனால்
வாயிற்காப்போன் அவரை உள்ளே விடவில்லை.
பாண்டிய மன்னனிடம் சென்று யாரோ தேடி வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறான்.
அதற்குப் பாண்டிய மன்னன் "ஆர்" என்று கேட்டிருக்கிறான்.
இதை வாயிற்காப்போன் புலவரிடம் சொல்லிக் கேட்டிருக்கிறான்
ஆகவே ஒரு சிறிய ஓலை நறுக்கை எடுத்து அதில் ஒரு சீட்டுக்கவியை பாண்டிய மன்னனுக்கு
எழுதி, தம்மை அரண்மனைக்குள் விடுமாறு வாயிற்காப்போனுக்கு உத்தரவிடுமாறு கேட்கிறார்.
"உன்பால் யான் வர வாசற்காரர்க்கு உத்தாரம் பண்ணி உள்ளுக்கு என்னை அழைப்பித்து,
ஆசு இல் உரைக்கும் கவிதைகள் கேட்டு, என்பால் வரிசைகள் பரிசுகள் நல்கி இரட்சித்திடவேணும்,
இராமா சீவிலி மாறா! பாண்டிய ராச வரோதயனே!"
என்ற கருத்தை எழுதி அனுப்பினார்.
"தென் திசையில் சிறந்து விளங்கும் அறிவில் அகத்தியன்; தென் கயிலாயமான திருக்குற்றாலத்தில்
செங்குந்த மரபின் தோன்றிய வேங்கடராயனுடைய மூத்த புதல்வன் யான். என்னை எதிர்த்தவர்கள்
மார்பில் அடிக்கப்படும் ஆணியாக விளங்குபவன். இந்தத் தேசத்திலுள்ள புலவர்களுக்கு
இடி போல நான் வந்துள்ளேன். ஆகவே நான் வருவதற்கு உன்னுடைய வாசல் காவல்காரர்களுக்கு
உத்தரவிட்டு உள்ளுக்கு என்னை வரவழைத்து நான் சொல்லும் குறைகளே இல்லாத கவிதைகளைக்
கேட்டு எனக்கு வரிசைகள் செய்து பரிசுகள் தந்து என்னை ரட்சிக்கவேண்டும். இராமா
சீவிலி மாறா பாண்டிய ராச வரோதயனே!"
இந்தத் தனிப்பாடலில் சீவிலி மாறன் என்னும் பாண்டிய மன்னர் பெயர்
காணப்படுகிறது.
இவர் ஒரு பிற்காலப் பாண்டியர். பதினேழு - பதினெட்டாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராக இருக்கலாம்.
பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய பெயர்களில் ஸ்ரீவல்லபன் என்பது ஒன்று.
அது பிற்காலத்தில் 'சீவல' என்று மருவியது. ஸ்ரீவல்லபப் பேரேரி என்ற பெரிய
ஏரியை ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியர் ஏற்படுத்தினார். அது பிற்காலத்தில் 'சீவலப்பேரி'
என்று மருவிவிட்டது.
இராமன் சீவிலி மாறன் என்பது 'ஸ்ரீவில்லி'யாகிய ராமன்.
இந்தச் சீட்டுக்கவியின் மூலம் 'இராம சீவிலி மாற பாண்டியன்' என்றொரு பிற்காலப்
பாண்டிய மன்னர் இருந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$