சீட்டுக ்கவி
பாகம் 4
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
சீட்டுக்கவியின் மூலம் பொருள்தான் கேட்கவேண்டும் என்பதில்லை.
தமிழில் சிறுகதைகளில் ஒரு புதிய பாதையைப் போட்டு தனக்கென்று தனியிடம்
ஏற்படுத்திக்கொண்டவர் புதுமைப்பித்தன். திருநெல்வேலிக்காரர். திருநெல்வேலி
அதனுடைய அல்வாவுக்குப் பேர் போன ஊர்.
புதுமைப் பித்தன் சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டவர்.
இருப்பினும் அல்வா மணத்தையும் ருசியையும் அவரால் மணக்க இயலவில்லை.
திருநெல்வேலி அல்வாவும் மிகவும் சிறப்பு வாய்ந்த அல்வாதான்.
அதனைப் பற்றி புதுமைப்பித்தன் ஒரு அல்வாப் பாட்டே எழுதியிருக்கிறாரே!
அல்வா எனச்சொல்லி அங்கோடிவிட்டாலும்
செல்வா நீ தப்ப முடியாதே - அல்வா
விருதுநகர்க் கெடியில் உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன் நான்
ரகுநாதனுக்குப் புதுமைப் பித்தன் எழுதிய சீட்டுக்கவி இது. இதற்குப் பின்னணியாக
ஏதோ ஒரு நிகழ்ச்சி உண்டு. அது என்ன என்பது ஞாபகத்தில் இல்லை.
மதுரை மருத்துவக் கல்லூரியில் நான் படித்த நாட்கள். அப்போதெல்லாம்
அடிக்கடி அரிசிப்பஞ்சம் ஏற்படும். ஓரு குறிப்பிட்ட ஆண்டு, ஏதோ கிடைத்த அரிசியை
வாங்கிப்போட்டு எங்களின் வயிற்றை இட்டு நிரப்ப முனைந்தார்கள்.
அவ்வாறு கிடைத்த அரிசி 'ரப்பர் சம்பா' என்பது. உண்மையிலேயே அது பொருத்தமான
பெயர்தான். தோசை சுட்டால், அது ரப்பர் பாயைப் போல் இழுபடும். பிசுபிசுப்பு.
ஒருவகை நாற்றம். ஒரு தினுசாக விழுங்கிவைப்போம்.
வாரம் இரண்டு நாட்கள் கட்டாயம் கோழிக்கறி உண்டு. வியாழன் இரவு சப்பாத்தியுடன்
கோழிக் குருமா. ஞாயிறு மதியத்தில் கோழி பிரியாணி.
அதே ஆண்டில் கோழியை நிறுத்திவிட்டார்கள்
அப்போது பிரபல கண்டாக்டர்(காலிருக்கிறதா? நல்லவேளை. இல்லையென்றால் 'கண்டக்டர்'
என்று வாசித்துவிடுவீர்கள். 'கண்டக்டருக்குக் கால் முளைத்தால் கண்டாக்டர்'
என்று ஜோக் அடிக்கலாம்.) டாக்டர் வெங்கடசாமி நாயிடு அவர்கள் வைஸ் ப்ரின்சிப்பலாக
இருந்தார். கண் வைத்தியத்தை எங்களுக்குப் பாடமாகக் கல்லூரியிலும் மருத்துவமனை
கிலினிக்கிலும் வைத்து சொல்லிக்கொடுத்தவர். மாணவர் டிசிப்பிலின், சீனியர்
ஹாஸ்டல் மாஸ்டர் போன்ற இன்னோரன்ன பலான பொறுப்புகளையும் வகித்துவந்தார்.
மாணவர்களின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டும் கலையை அவர் நன்கு அறிந்துவைத்திருந்தவர்.
இதனாலும் அவர் ஏற்கனவே கண் வைத்திய வாத்தியாராக இருந்ததாலும் அவரைச் செல்லமாகக்
'கண்ணுச்சாமி' என்று மாணவர்கள் அழைத்தார்கள்.
அவர்தான் கோழியை நிறுத்தச் செய்தவர்.
ஆகவே மாணவர்குழு ஒன்று அவரைச் சென்று சந்தித்தது.
அவரோ ஒரேயடியாக மறுத்துவிட்டார். அப்போதுதான் அந்த famous and immortal சொற்கள்
அவர்தம் திருவாயினின்றும் உதிர்ந்தன.
'I am the Vice-Principal and Chief Ophthalmologist here.
நானேஏஏஏ...... கோழி சாப்பிடுவதில்லை. அப்புறம்
என்ன?'
அது ஒரு நையாண்டி நாடகத்திற்கு வித்திட்டுவிட்டது.
அந்தச் சமயத்தில் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், ஒரு வெண்பாப்
பாடினார்.
'நையாண்டி திலகம்' என்று பெயர் பெற்ற ஆசாமி.
ஏன் பாடமாட்டார்?
ஊத்தப்பம் இட்டிலியும் ஊசிவிட்ட தோசையுடன்
நாத்தம் கலந்துனக்கு நான் தருவேன் - சோத்துக்கே
காத்திருக்கும் எங்களையே காத்தருளும் மேலாளா!
வாத்தேனும் தந்தெம்மை வாழ்த்து.
"கோழிதான் கிடைக்கவில்லை; ar least வாத்தாவது தரக்கூடாதா?"
என்று ஆதங்கத்துடன் மெஸ்ஸில் ஒரு நாள் பாடியதோடல்லாமல் மெஸ் நோட்டிஸ் போர்டிலும்
எழுதி ஒட்டிவிட்டார்.
நான்தான் அந்த நையாண்டி திலகம்.
With all that I got away scot free!
:-)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU