தேங்காய் பறிக்கும் குரங்கு

படைப்பு:
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கெடா
மலேசியா

JayBee

   

                மலேசியாவில் கிராமங்களைக் காம்ப்பொங்க்(kampong) என்று  அழைப்பார்கள். தமிழில் 'கம்பம்' என்று சொல்வோம். மலேசியாவில் பதிமூன்று மாநிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பதினொன்று தீபகற்ப மலேசியா என்னும் மலாயாப் பகுதியில் இருக்கின்றன. அவற்றில் வடமேற்கில் உள்ளது கெடா மாநிலம். பழைய கலத்துக் கடாரம்.கெடா மநிலத்தில் நெல்வயல்கள் அதிகம். விரித்துவிட்டப் பசுங்கம்பளங்களைப்போல பரந்து விரிந்து கிடக்கும். அவற்றின் நடுநடுவே களத்து மேடு போன்ற இடங்கள்.  தென்னை, கமுகு, வாழை, பலா போன்ற மரங்களுக்கு நடுவில் சில  வீடுகள், கிணறு. வீடுகள் பெரும்பாலும் பலகையால் ஆனவை. அடிப்பாகம் சிமெண்டாலும் மேலே பலகையாலும் னவையும் உண்டு. பழங்காலத்து  வீடுகள் மரத்தூண்களின்மீது காட்டப்பட்டிருக்கும்.                  
                 இவற்றைத்தான் வெள்ளையர்கள்  தவறாக tree-houses என்று சொல்வதுண்டு. (நாற்பதாண்டுகளுக்கு  முன்னர் ஆசிரியப்பயிற்சி பெறுவதற்காக என் அண்ணன் இங்கிலாந்து சென்றபோது  அவரிடம் சில வெள்ளைக்காரர்கள் கேட்ட கேள்வி, "Is it true that  you folks live on tree-tops?" அக்காலத்தில் 'அத்தாப்பு'(atap) என்னும்  மரத்தின் தோகையை இணைத்துப் பின்னி கூரை போட்டிருப்பார்கள்.

                மருத நிலத்துக்கம்பம் இப்படி இருக்கும். கடலோரத்தில் இருக்கும்  கம்பங்கள் வேறுவகையாக விளங்கும். சிறிய ரப்பர் தோட்டங்கள்,  பழத்தோட்டங்களைச் சார்ந்த கம்பங்கள் இன்னொரு வகை. பல கம்பங்கள்  ஆற்றங்கரைகளில் இருக்கும்.
                அந்த மருத நிலத்துக் கம்பங்களைப் பார்க்கும்போது, "காணி  நிலம் வேண்டும், பராசக்தி", என்று பாடவேண்டும் போலத் தோன்றும்.  ஒரு வகையான ஏக்கம் ஏற்படும். ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள  வேண்டியதுதான். ஏனெனில் மலேசியாவின் சட்டங்களின்படி  மலாய்க்காரர்களைத்தவிர வேறு யாரும் Malay reserve lands வாங்கமுடியாது. நெல்வயல்கள் அனைத்துமே அந்த வகையைச் சேர்ந்தவைதாம்.

                இந்த அழகிய கிராமங்களில் ஒரு காட்சியைப் பார்க்கலாம்.  ஒரு சைக்கிளை ஒரு மலாய்க்காரர் ஓட்டிகொண்டு செல்வார். அந்த  சைக்கிளின் handle bar-இன் மீது ஒரு குரங்கு குத்தவைத்துக்கொண்டு ரொம்பவும் போர் அடித்த பார்வையோடு உட்கார்ந்திருக்கும்.  கழுத்தில் அலங்காரமான பட்டையன்று இருக்கும். அதனுடன்  பிணைக்கப்பட்ட கயிறு ஒன்றும் இருக்கும்
                அந்தக் குரங்கு Pig-tailed Macaque' அல்லது Bonnet Monkey என்னும் வகையைச் சேர்ந்ததாக  இருக்கும்.
                முதன்முதலில் இந்த pig-tailed Macaque என்னும் பெயரைக் கேட்டதும் மனதில் ஓடியது, அதன் பெயர்க் காரணம். மனதில் ஒரு காட்சி  விரிந்தது. இங்கெல்லாம் சடையைத்தான் 'Pig-tail' என்று சொல்வோம். ஆகவே மனதில் சடைப்பின்னிய குரங்கு ஒன்றுதான் தோன்றியது. அது அப்போது விபரீதமாகத் தோன்றவுமில்லை. ஏனெனில் குரங்குகள்தாம்  பெரும்பாலும் ஒன்றுக்கொன்று பேன் பார்த்துக்கொண்டும் மயிரை நீவிவிட்டுக்கொண்டும் இருக்கின்றனவே. பின்னர்தான் அந்தக் குரங்கின் வால்,  பன்றியின் வாலை ஒத்து இருக்கும் என்று மனதில் பட்டது.



                மனது...பாருங்கள் எப்படியெல்லாம் விளையாடிவிடுகிறது!
   
                அந்தக் குரங்கு சாதாரணக ்குரங்கல்ல.
                தென்னைமரமேறித் தேங்காய்களைப் பறித்துப்போடும் தொழிலில்  ஈடுபட்டிருக்கும் உழைப்பாளிக் குரங்கு. Economical value உள்ள குரங்கு.
                மலேசியாவில் இந்தத்தொழிலில் நூற்றுக்கணக்கான குரங்குகள்  ஈடுபட்டிருக்கின்றன.

                குரங்குகள் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும்; குறைவான  அடிப்படை உணவு கொடுத்தாலேயே போதும். யூனியனில் சேராது.
                தேங்காய் பறிப்பதற்கு உரிய பயிற்சியை அந்தக் குரங்கு முறையாகப்  பெற்றிருக்கும்.
                ஏறத்தாழ இரண்டு வயது நிரம்பிய குரங்குகள்தான் பயிற்சிக்கு  சரியாக வரும்.
                ஒரு குரங்குக்குப் பயிற்சியளிக்க 6 மாதங்கள்வரை பிடிக்கும்.
                குரங்கை முதலில் ஒரு குறிப்பிட்ட தென்னை மரத்தில் ஏறச்செய்வார்கள். அதற்கென்று சங்கேத மொழியை வைத்திருக்கிறார்கள்.அல்லது ஏதோ ஒரு வகை ஓசையிடுவார்கள். அதைக்கேட்டவுடன் குரங்கு அந்த மரத்தில் ஏறிவிடும். சில சமயங்களில் மேலே பாதி ஏறிவிட்டு உடனேயே இறங்கப் பார்க்கும். முதலாளியின் ஏவலால் மீண்டும் ஏறும். இப்படியெல்லாம்கூட குரங்கு போக்குக்காட்டும். ஏறிய மரத்திலிருக்கும் இளநீர்களை ஆராயும். மரத்தில் பக்குவமாக முற்றிய இளநீரை மட்டுமே பறிக்கும். அதை முதலில் பார்க்கிறது. அதன்பின்னர் முகர்ந்து பார்க்கிறது. அதன் பின்னர்  திருகி, மரத்துக்கு நேர்கீழே விழுமாறு போடுகிறது. பறிக்கத் தகுந்த தேங்காய்களைப் பறித்தபின்னர், குரங்கு தானாகவே மரத்தைவிட்டு இஇறங்கி,  இஇன்னொரு மரத்தின்மீது ஏறிப் பறிக்கும்.                
                நன்கு பயிற்சியுடைய, பலமிகுந்த குரங்கு நாளன்றுக்கு ஆயிரம்  தேங்காய்கள் வரைக்கும் பறிக்கும்.
                குரங்கு பறிக்கும் ஒவ்வொரு தேங்காய்க்கும் குரங்குக்காரருக்கு  ஐந்து காசு வீதம் கொடுப்பார்கள். ஒரு குரங்கைப் பராமரிக்க இரண்டு  வெள்ளிக்கும் குறைவாகவே ஆகும்.
                நல்ல பயிற்சியுள்ள குரங்கின் விலை மூவாயிரம் வெள்ளிவரைக்கும்  போகும்.
                குரங்கின் உரிமையாளர் தன்னுடைய குரங்கை அடிப்பதோ  துன்புறுத்துவதோ கிடையாது. செய்தால் சண்டித்தனம் செய்யும்.
                சில ஆண்டுகளுக்கு முன்னர், கெலாந்த்தான் மாநிலத்தில் ஒரு குரங்கு, தன் சொந்தக்காரனின் தலையின்மீது முற்றிய இளநீர் ஒன்றைப்  போட்டுவிட்டது. அங்கேயே அந்த ஆள் இறந்துபோனான்.   

                மனிதன் ஒருவனால் ஒரே நாளில் ஆயிரம் தேங்காய் பறிக்கமுடியாது.  குரங்கால்தான் முடியும். ஆகவேதான் Planet of the Apes போதிக்கும்  நீதியைப்போல,  'மனிதனும் குரங்கும் ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும்'.  "You have opened up a whole world of business with humans",  என்று அந்த மானிடஅடிமை வர்த்தகக் குரங்கு சொல்வதுபோல.

                குரங்கின் கழுத்தில் ஒரு அடையாளப்பட்டை கட்டியிருப்பார்கள்.  அதில் ஒரு கயிற்றை இணைத்துப் பிடித்திருப்பார்கள். அந்தக் கயிற்றின்மூலமும்  கைச்சைகைகளின் மூலமும் வாய் ஒலிக்குறிகளின் மூலமும் குரங்குடன் சொந்தக்காரன் தொடர்புகொள்வான்.

                தேங்காய் பறிக்கும் குரங்கைப் படம் எடுக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே எனக்குத் தெரிந்த பலசரக்குக்கடை மலாய்க்காரர் ஒருவரிடம் சொல்லிவைத்திருந்தேன்.
திடீரென்று ஒருநாள் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு குரங்குகளுடன் ஒரு மலாய்க்காரர் வந்தார். தம்முடைய குரங்குகள் இண்ட்டர்நெட் வலைக்காகப் படம் எடுக்கப்படப்போகின்றன என்றதும் அவருக்கு அத்தனை ஆர்வம்.
                கீழேயுள்ள இரண்டு படங்களிலும் காணலாம். குரங்குகள் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருக்கும் லாகவத்தைக் காணவும்.



                குரங்குகளுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கித்தந்தேன். குரங்கின் உரிமையாளர் பணம்வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

                இந்தக் குரங்கைப் பிடிப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள்.

                ஒரு தேங்காயில் ஓட்டை போட்டு விடுகிறார்கள். அந்தத் தேங்காயை  ஒரு நீண்ட கயிற்றால் இறுகப் பிணைத்து ஏதாவது ஒரு மரத்தில்  கட்டிவிடுகிறார்கள்.
                அந்த ஓட்டையின் வழியாகத் தேங்காய்க்குள் 'குவே' என்னும்  பலகாரம் ஒன்றைத் திணித்து விடுவார்கள். சற்றுக் கடினமான பணியாரம்  போலிருக்கும் அது.
                குரங்குகள் இருக்கும் இடமாகப்பார்த்து, அவற்றின் முழுப்பார்வையில்  படுமாறு இஅத்தனையையும் செய்வார்கள்.
                கொஞ்சநேரம் கழித்து ஏதாவது ஒரு குரங்கு இறங்கிவரும்.
                தேங்காயின் அருகில் வந்து சர்வ ஜாக்கிரதையுடன் இங்கும்  அங்குமாக குரங்கு பார்ப்பதைப்போல பார்த்துவிட்டுப் பக்கத்தில் அமரும்.  பின்னர் அந்த தேங்காயை முகர்ந்து பார்க்கும். அதன்பின்னர் தன் கையைத்  தேங்காய்க்குள் விடும். அந்த குவேயைப் பிடித்துக்கொள்ளும். கையை வெளியே  இழுக்கும். ஆனால் முஷ்டி பிடித்து குவேயை இறுகப் பற்றிய கை அந்த  ஓட்டையின் வழியாக வெளியில் வரமுடியாது. தேங்காய்க்குள் மாட்டிக்கொண்டு விடும்.  அந்த ஓட்டை அந்த அளவுக்குக் கச்சிதமாக இருக்கும். ஆகவே குரங்கு இழுத்து இழுத்துப் பார்க்கும். ஆனால் பிடியை மட்டும் விடாது.  அந்தச் சமயத்தில், ஆசாமி மெதுவாக வந்து குரங்கின் தலையின்மீது ஒரு சிறிய  சாக்கைப்போட்டு மூடி, அந்தக் குரங்கைக் கட்டித் தூக்கி எடுத்துச்சென்று  கூண்டில் அடைத்து வைத்துக்கொள்வான்.
                'குரங்குப் பிடி' என்பார்கள். அந்தக் 'குரங்குப் பிடி'யைப் பயன்படுத்திக்கொண்டு குரங்கைப் பிடித்துவிடுவார்கள்.

                பார்த்தீர்களா.

                அந்தக் குரங்கு, தன் கையில் பற்றியிருந்த குவே பணியாரத்தின்மீது  வைத்திருந்த பிடிப்பை அது விட்டிருந்தால் அந்தக் குரங்கு பிடிபட்டிருக்காது.  தேங்காய் பறித்துப்போடவேண்டிய அவலமான அடிமைப் பிழைப்பும் அதற்கு ஏற்பட்டிருக்காது.

                அதனால்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்:

                                                                    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
                                                                    பற்றி விடாஅ தவர்க்கு.

                ('பற்றை இறுகப் பற்றிக்கொண்டு விடாதவரை, துன்பங்களும் இறுகப்பற்றிக்கொண்டு விடுவதில்லை').

           Must know when to let go.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU