டயரி ஆனந்தரங்கம் பிள்ளை

வித்யாலங்கார டாக்டர் எஸ்.ஜெயபாரதி

    ஒளிவு மறைவு இல்லாத டயரிகளில் மிகப் பிரபலமாக இருப்பது காஸனோவாவின் டயரிதான். ஆனால் அதையெல்லாம் இங்கு எழுதப்படாது. <கை அரிக்கிறது>.

    வேறு சில டயரிகள் இருக்கின்றன. அவற்றில் விலாவாரியாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
    அவற்றில் பிரபலமானது ஒன்று பீப்ஸ் டயரி (Pepys Diary). (பெப்பீஸ் அல்ல). பிரித்தானிய வரலாற்று முக்கியத்துவம் கொண்டது இந்த டயரி. இதைப் பற்றி பின்னால் கொஞ்சம் சொல்கிறேன்.

    தமிழர்களிடையே பெருமையும் புகழும்வாய்ந்த டயரி, "ஆனந்தரங்கம் பிள்ளை டயரி" என்று பெயர் பெற்றதாகும்.
.
    இவர் 1709 இலிருந்து 1761 வரை வாழ்ந்தவர்.சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் பிறந்தவர். அப்போது அது சென்னைக்கு அடுத்து விளங்கியதொரு தனியூராகவே திகழ்ந்தது.
  நல்ல கல்வியை அங்கு கற்ற ஆனந்தரங்கம்பிள்ளை, தன் தந்தையாருடன் புதுச்சேரிக்குச் சென்று குடியேறினார். அங்கிருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் வர்த்தகம் செய்ததில் பெரும் செல்வம் சேர்ந்தது.
    பிரெஞ்சுக்காரர்களுடன் இருந்த உறவும்செல்வாக்கும் அவரை கவர்னர் துரையின் மொழிபெயர்ப்பாளராக்கின. அப்போது கவர்னராக இருந்தவர்தான் மிக்க புகழ்வாய்ந்த தூப்லேய். அந்தக் காலத்தில் பிரதம துபாஷ் என்னும் பதவி, பிரதமஅமைச்சருக்கு சமமானதொன்றாக விளங்கியது.

    ஆனந்தரங்கம் பிள்ளையும் கவர்னருக்கு மிகவும் வேண்டியவராக விளங்கலானார். தன்னுடைய கூர்மதியாலும் செல்வாக்காலும் தூப்லேய்க்கு பெரும் பெருமையை இந்தியர்களிடையே ஏற்படுத்திக்கொடுத்தார். (பிரெஞ்சு மொழியில் ஏதாவது கெட்டவார்த்தையில் திட்டினாலும்கூட, அதை அப்படியே தமிழில் நயமாக மொழிபெயர்த்து, புகழ்ச்சிச் சொற்களாகவும் ஆக்கமுடியுமல்லவா?)

    தூப்லேய் பதவியைவிட்டுவிட்டு பிரான்ஸ் திரும்பிய பின்னரும் பிள்ளையவர்கள் துபாஷாகவே இருந்தார். ஆனால் ஏதோ சில பிரச்னைகளால்  அவரை வேலையைவிட்டு 1756 இல் நீக்கிவிட்டார்கள். மனமுடைந்துபோன பிள்ளையவர்கள் அதன்பின்னர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உயிருடனிருந்தார்.

    அவர் 1736ஆம் ஆண்டிலிருந்து நாட்குறிப்புகளை ஒரு புத்தகத்தில் எழுதிவந்தார். அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பழக்கவழக்கங்கள், வாழ்ந்த விதம், அரசியல் நிலைமைகள், சமயமரபுகள், முக்கிய நடப்புகள், நிகழ்ச்சிகள் அனைத்தையுமே எழுதியிருக்கிறார். அரசாங்க நடவடிக்கைகளைப் பற்றியும்கூட அவருடைய சொந்த டயரியிலேயே எழுதியுள்ளார். அவர் இறக்கும் நாள்வரை அந்த டயரிதொடர்ந்து எழுதப்பட்டது. எளிமையான நடையில் அக்காலத் தமிழில் எழுதியிருக்கிறார். 
    இந்த டயரிகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாக விளங்குகின்றன.    அனைத்துமே பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

         ஆனந்தரங்கம் பிள்ளை அவரே ஒரு புலவராக விளங்கியவர்.
    அவர் பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்துள்ளார். அவரைப்பற்றி பல பாடல்களைக் காணலாம். முக்கியமாக சவ்வாதுப்புலவர், நமச்சிவாயப்புலவர், மதுரகவிராயர், இராமகவிராயர் ஆகியோர். அவரைப் பற்றிய அருமையானதொரு நிகழ்ச்சி இருக்கிறது.

அதைப் பற்றியும் சொல்லலாம்தான்......

    அடுத்து சொல்கிறேனே.....
    ஏன் அதற்குள் இப்படி பறக்கிறீர்கள்?:-)

    தில்லையாடியில் பிறந்த அருணாசலக்கவிராயர் கம்பராமாயணத்தை அடியட்டி இராமநாடகக்கீர்த்தனைகளைத் தம் அறுபதாம் வயதில் இஇயற்றினார்.
    ஸ்ரீரங்கத்தில் அதனை அரங்கேற்றம் செய்தபோதுதான் அந்த மிகப் பிரபல
கீர்த்தனையாகிய 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? - ஸ்ரீரங்கநாதா, ஏன் பள்ளிகொண்டீர் ஐயா'வைப் பாடினார்.
    இந்தக் கீர்த்தனையில் ஒரு விசேடம். இராமாயண முழுக்கதையும் அந்த கீர்த்தனையில் அடங்கியுள்ளது. இராமாயணத்தையே பாடம் செய்த ஒரு பூரணத்துவம் அதனால் ஏற்படுகிறது.
    'பாவயாமி ரகுராமம்' என்ற பாடலிலும் முழு இராமாயணம் வந்துவிடுகிறது. எம்.எஸ். பாடிப் பிரபலமாகிய பாட்டல்லவா இஅது?   
   
    18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தில் கர்நாடகப்போர் நடந்தது. உலகெங்கும்
    பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஆதிக்கப்போட்டியின் ஓர் அங்கம்தான் இஅப்போர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், உலகெங்கும் உள்ள கடல்களிலும் நடந்த பெரும்போட்டி. அது. இந்தியாவில் போட்டி நவாபுகள், பாளையக்காரர்கள், தஞ்சை அரசு, மைசூர் போன்ற லோக்கல் சக்திகளைப் பயன்படுத்திக்கொண்டு இருவருமே லேசாக மோதிக்கொண்டனர். ஐரோப்பாவிலோ ஏழாண்டுகள் தொடர்ந்து ரஷ்யா, போலந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ப்ரஷ்யாவின் மன்னர் மகா ·பிரெடரிக்கை மோதச் செய்து ஒரு ப்ராக்ஸி யுத்தத்தை பிரிட்டிஷார் நடத்தினர். அமெரிக்காவில்மட்டுமே செவ்விந்தியர்களுடன் கூட்டுச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களுடன் பிரிட்டிஷார் நேரடியாக மோதினர்.

கர்நாடகப் போரில் தஞ்சை மராட்டிய அரசு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது.
    பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆளுனராக தூப்ளேய் துரை விளங்கினார்.

    அவருடைய மொழிபெயர்ப்பாளராக ஆனந்தரங்கம் பிள்ளை விளங்கினார்.

    ('ஆனந்தரங்கம் பிள்ளை டயரி'யைப் பற்றிய பழைய இழைகளை அகத்தியப் பேழையில் காண்க.)
    அவர் ஒரு பெரிய ராஜதந்திரி; ஆன்மீகநாட்டமும் பக்தியும் மிகுந்த புலவர்; கலாரசிகர்.
அவரைப் பார்க்க அருணாசலக்கவி ஒருமுறை வந்து, சீட்டுக்கவி ஒன்றை எழுதியனுப்பி வைத்துவிட்டு, காத்திருந்தார். ஏனெனில் தஞ்சையிலிருந்து துளஜா மன்னரின் தூதுக்குழு ஒன்றும் வந்திருந்தது. மந்திராலோசனை நடந்துகொண்டிருந்தது.

    தஞ்சைக்கோட்டையை ஆற்காட்டு நவாபின் படைகள் முற்றுகையிட்டிருந்தன.
தஞ்சைப்படையினர் தைரியத்தையும் ஊக்கத்தையும் முற்றிலும் இழந்த நிலையில் இஇருந்தனர். போரிடும் நாட்டம் அவர்களுக்கு அறவே இல்லாமற்போயிற்று. அத்தருணத்தில் தஞ்சைமன்னர் படை உதவி கோரியிருந்தார்.
பிரெஞ்சுத் துருப்புகளும் ஆள்பலமில்லாதிருந்த நிலை. பிரான்ஸிலிருந்து ஏதும் கப்பல்களோ உதவியோ வராதிருந்த சமயம்.
    சற்றுநேரத்தில் ஆனந்தரங்கம்பிள்ளை, கவியை வரவழைத்தார். இராமாயணக்
கீர்த்தனைகளைப் பற்றிய பேச்சு வந்தது. பக்தி, சோகம், போன்ற உணர்ச்சிகளைத் தூண்டவல்லவை அந்தக் கீர்த்தனைகள் என்று இருவரும் உணர்ந்தனர். திடீரென்று ஆனந்தரங்கம்பிள்ளைக்கு ஒரு பொறி தட்டியது.

    "உங்கள் பாட்டு சிப்பாய்களுக்கு வீராவேசத்தை ஏற்படுத்தக்கூடுமா?" என்று கேட்டார்.
    "என் உபாசனாமூர்த்தியாகிய ஆஞ்சநேயப்பெருமானின் கீர்த்தியைக் கேட்டமாத்திரத்தில் அலிக்கும் ஆண்மையுண்டாகும்', என்றார் கவி.
    "அப்படியானால், இதோ இந்த சிப்பாய்க்கு ஆவேசம் உண்டாகும்படி ஒரு பாட்டைப் பாடுங்கள்", என்றார் பிள்ளை.
    'பாய்ந்தானே அனுமான்' என்னும் கீர்த்தனையை நாதநாமக்கிரியாவில் பாடினார். மிகவும் உணர்ச்சிமயமாகப் பாடினார்.
    அதனைக் கேட்டுக்கொண்டிருந்த சிப்பாய் வீராவேசம் ஏற்பட்டு எகிரிக் குதித்தான்.
    அருணாசலக் கவிக்குப் பரிசில்கள் தந்து, தஞ்சைக்கு அனுப்பப்பட்ட தன்னுடைய படைப் பிரிவுடன்  அவரையும் அங்கு அனுப்பிவைத்தார்.

    தஞ்சையில் போராளிகள் கூடியிருந்த இடத்தில் அருணாசலக் கவிராயர் 'அனுமன் விஜயம்'  என்ற தலைப்பில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொற்பெருக்காற்றினார். பல வடமொழிப் பாடல்களையும் சொன்னார். அதனூடே 'பாய்ந்தானே அனுமான்' என்ற பாட்டையும் பாடினார்.
    'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது.
   
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இஇடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'

என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனர்.

    '"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்றான்'

என்று மோகனராகத்தில் பாடியபோது அனேகவீரர்கள் வீரஉணர்ச்சியில் மூழ்கிப்போயினர்.
   
    பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே யுத்தகோஷமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றனர்.

தொடர்கிறேன்..........

    ஆனந்தரங்கம் பிள்ளை அக்காலத்தில் புலவர்களை ஆதரிக்கும் வள்ளலாகவும் திகழ்ந்தார்.
    அவர் வாழ்ந்த காலம், தமிழகம் ஓர் இருண்ட காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததோர் அஸ்தமன காலம்.
    அக்காலக்கட்டத்தில் தமிழ்ப் புலவர்களை ஆதரிப்போர் அதிகம் இல்லை. ரசனையெல்லாம் மங்கிப்போய் கெட்டுப்போய் கந்தரகோலமாகிப்போன காலம். ஏதோ காலவித்தியாசத்தாலோ, விதிவசத்தாலோ, அல்லது வேறொன்றும் செய்யத்தெரியாததாலோ, அல்லது தெரியாத்தனமாகத் தமிழ் கற்றுவைத்ததாலோ புலவர்கள் அங்குமிங்குமாக இருந்தனர்.

    பெரிய காப்பியம் அது இது என்று எதையும் அப்போதெல்லாம் எழுதமுடிந்ததில்லை.

    'சாரமில்லாச் சரக்கு, காரமில்லாச் சரக்கு, கடைக்குதவாச் சரக்கு, கவைக்குதவாச் சரக்கு' என்று ஒதுக்கித்தள்ளிய காலம்.
    யாரையாவது சிறப்பித்துப் பாடினால் ஏதோ ஒரு சிலர் போனால் போகட்டும் என்று ஏதாவது கொடுப்பார்கள். இல்லையென்றால் பட்டினிதான்.
    இதையெல்லாம் நானே எடுத்துக்கட்டிச் சொல்லவில்லை.
    அக்காலத்துப் புலவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி அவர்கள் பாடிய தனிப்பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன.

    பல புலவர்கள் வறுமையில் உழன்றனர். அப்போது இருந்த செல்வந்தர்கள், பெருநிலக்கிழார்கள், அதிகாரிகள், குறுநில மன்னர்கள், பெருநிலமன்னர்கள் முதலியோர்களில் பெரும்பாலோர் அன்னியமொழிக்காரர்களாக இருந்தனர்.
    மேலும் அப்போது ராணுவத்தனமே மேலோங்கியிருந்தது.
    எப்போதும் இருந்ததைவிட சிற்றின்பம், கேளிக்கைகள், தமாஷா, கழைக்கூத்தாட்டம், வித்தை, போன்ற ரசனைகள் மிகுதியாக இருந்தன.
    பெரும் காப்பியங்களை அறிந்துகொள்ளவோ, ஆதரிக்கவோ ஆட்கள் குறைவாக இருந்தனர்.அந்தக் காலகட்டத்தில் பெரும்காப்பியங்கள் அதிகம் தோன்றவில்லை. சிறு சிறு காப்பியங்கள், காதல், தூது போன்றவையே செல்லுபடியாகின. ஆகவே அவற்றையே அதிகம் இயற்றினார்கள்.
    யாராவது ஒரு பெருஞ்செல்வரைப் பாட்டுடைத்தலைவராக வைத்துப் பாடினார்கள்.
    வில்லிப்புத்தூரார், அருணகிரிநாதர், சிவஞானமுனிவர், பராக்கிரம பாண்டியர், அதிவீரராமபாண்டியர் போன்ற வெகு சிலர் விதிவிலக்காக இருந்தனர்
    தூது, காதல் போன்ற இலக்கியங்கள் இப்போதும் பெருமளவில் கிடைக்கின்றன. அப்படியானால் அழிந்துபோனவற்றையும் சேர்த்தால் எத்தனை இருந்திருக்கக்கூடும்?
    இப்படிப்பட்ட இழிநிலையை எண்ணி எண்ணி, பல புலவர்கள் மனம் கொதித்துக் குமுறியிருக்கின்றனர். கையாலாகாத தன்மை, கையறுநிலை, தன்னிரங்கல் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கி நின்றன.
    எவ்வளவோ தமிழ் படித்துவிட்டு எத்தனையோ படிகள் தம்மையே கீழிறக்கம் செய்துகொண்டுவிட்ட நிலைகள்.

    ராமச்சந்திர கவிராயர் பாடியது கீழ்க்கண்ட பாடல்.
    சிறப்பான பாடலைப் பாடிக்கொண்டு தாம் பார்க்கப்போகும் செல்வந்தர்களின் குணங்களைப் பற்றி பாடியிருக்கிறார்.

வணக்கம் வரும் சில நேரம்; குமரகண்ட
வலிப்பு வரும் சில நேரம்; வலியச்செய்ய
கணக்கு வரும் சில நேரம்; வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சில நேரம்; கயவர்க்கெல்லாம்
இணக்கவரும் படித்த தமிழைப் பாடிப்பாடி
எத்தனை நாள் திரிந்து உழல்வேனையா?
குணக்கடலே! அருட்கடலே! அசுரரான
குரைகடலை வென்ற பரங்குறுளானே!

கல்வியும் இல்லாமல் சாதாரணமானவர்கள் அக்கால நிலையால்
திடீர் செல்வந்தர்களாவோ பாளையக்காரர்களாகவோ மாறிவிடுவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் கல்வியை எங்கே மதிக்கப்போகிறார்கள்? இந்த
மாதிரி மடையர்களைப் பாடவோ என்றுபொதிய மலைச்சாரலில்
இருக்கும் அம்பிகையை நினைத்துப் பாடுகிறார்.

புல்லுக்கட்டும் விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப் புண்ய வசத்தினால்
நெல்லுக்கட்டும் பணக்கட்டும் கண்ட பின்
நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்.
சொல்லுக்கட்டும் புலவரைக் கண்டக்கால்
தூறிப்பாய்ந்து கதவை அடைத்து எதிர்
மல்லுக்கட்டும் மடையரைப் பாடவோ,
மலையச்சாரலில் வாழும் பெரியம்மையே!

தகுதியற்ற பலரைப் பாடிய அவலநிலையையும் அதனால்
ஏற்பட்ட அவமானங்களையும், ஏதும் செய்ய இயலாத நிலையையும்
பாடுகிறார்.

கல்லாத ஒருவனைக் 'கற்றாய்' என்றேன்;
காடெறியும் மறவனை ;நாடாள்வாய்' என்றேன்
பொல்லாத ஒருவனை நான் 'நல்லாய்' என்றேன்
போர்முகத்தை அறியானைப் 'புலியேறு' என்றேன்
'மல்லாறும் புயன்' என்றேன், சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் 'வள்ளல்' என்றேன்:
இல்லாது சொன்னேனுக்கு "இல்லை" என்றான்
யானும் என் குற்றத்தால் ஏகின்றேனே!

- ராமச்சந்திரக்கவிராயர்

    சீர்காழி அருணாசலக் கவிராயர் என்றொரு புலவர் பெருமகனார். அவர் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றவர்.
    அக்காலத்தில் எதிரிகளை வெல்லும் மனவலிமை கொடுப்பதற்காக உணர்ச்சிமிக்க பாடல்களாக இந்த ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடியதாக ஆனந்தரங்கம் பிள்ளை தம்முடைய டயரியில் குறிப்பிட்டுள்ளார்.
    நல்ல புகழ் பெற்றவர்தாம். ஆனாலும் அவர்வாழ்க்கையிலும் எத்தனை அல்லல்? வியாகூலம், ஆதங்கம், ஏக்கம்?

    தாமாகவே வலியச் சென்று பாடியும் ஒன்றும் பரிசில் பெறாத பரிதாப நிலை¨ப் பாடுகிறார்.

கால்மேல் வீழ்ந்து நம்மைப்பாடச் சொன்னானோ
மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் - நூலறிந்து
தந்தக்கால் தந்தான்; தராக்கால் நமது மனம்
நொந்தக்கால் என்னாகுமோ?   

'நம்முடைய கால்களின்மேல் விழுந்து, 'ஐயா கவிராயரே! என்னைத் தயவு செய்து பெரிய மனது வைத்துப்பாடும்', என்று கெஞ்சினானா?  மேலேவிழுந்து வலிந்து நாமேதானே பாடலைச் சொன்னோம்?  நூலின் தன்மையையும் பெருமையையும் உணர்ந்து பொருள் கொடுப்பதானால் கொடுப்பான். அப்படிக் கொடுக்கவில்லையென்றால் நமது மனம் நொந்துபோவதால் என்ன காரியத்துக்கு ஆகமுடியும்?'

    பசியின் கொடுமையால் தாம் சிவபெருமானை வணங்கி வந்ததையும் சந்தேகப்படுகிறார்.

மிகப்பட்ட பசியால் வெம்பருந்தின் வாயில்
அகப்பட்ட கோழிப் பார்ப்பானேன் - நகப்பட்ட
கல்லையோ கை தொழுதேன், காகம் அணுகா மலையில்
இல்லையோ ரத்ன கிரியே?

    தமக்கு மிகவும் தேவைப்பட்ட பத்து ரூபாய்க்காக பாப்பைய வேள் என்பவரிடம் அவர் கெஞ்சும் பாடல்:

பத்து ரூபாயனை நேர் பாப்பையவேளே உனக்குப்
பத்து ரூபாயென்ன பஞ்சமோ? - முத்தநகை
வீழிவாய்ப் பாலுண்ட வேந்தன் பிறந்த சீ
காழி அருணாசலன்யான் காண்!

'பத்து ரூபாயனை நேர் - பத்து உரு உபாயனை நேர் -
பத்து உரு உபாயன் - பத்து அவதாரங்கள் எடுத்த மகாவிஷ்ணு.
பத்து ரூபாய்க்காகப் பாப்பைய வேளை மகாவிஷ்ணுவுக்கு
நிகராக்கிவிட்டார்.
மகாவிஷ்ணுவை நிகர்த்த பாப்பையவேளே! உனக்குப் பத்து ரூபாய் என்ன பஞ்சமோ? அம்பிகையிடம் பாலுண்ட
திருஞானசம்பந்தர் தோன்றிய ஊராகிய சீர்காழியின் அருணாசலன் நான்'.

    அவர் இராம நாடகக்கீர்த்தனைகள் எழுதிய சமயத்தில் அவற்றை அரங்கேற்றம் செய்வதற்காக ஆதரவுகேட்டு, மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பிய சீட்டுக்கவி:


சித்திதருகிற வல்லி, புத்தி தருகிற வல்லி,
    தேவர்கள் வணங்கு வல்லி,
தில்லை நாயக வல்லி, சிவகாமவல்லி, இரு
    திருவிழிக் கருணையாலே
சத்தியவாசகனென்று பூமண்டலாதிபர்கள்
    தாம் எங்கணும் துதிக்கும்
சகல பரிபாஷா நிபுண மணலி முத்துக்கிருஷ்ண
    சதிர நீ வாழி கண்டாய்!
நத்து மலர் குவளை நான், மதிய நீ; செஞ்சாலி
    நான், கருவி மழை மேகம் நீ;
நளின நான், பரிதி நீ; பிள்ளைநான், அன்னை நீ;
    நான் கவிஞன், வழுதி நீ காண்!
சுத்தமுள ராமாயணம்தனைக் கொண்டுனது
    சுமுகமது பெற வருகிறேன்.
சொற்பொருள் அறிந்து அளவு சொல்லுவேன்; கேட்கவே
    துணையாக வேணும் நீயே!

- சீர்காழி அருணாசல கவிராயர்

    எந்த அளவுக்கு அவர்களெல்லாம் நொந்துபோயிருந்தார்கள் என்பதற்குப் பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடிய பாடல் சான்று கூறுகிறது.

அட கெடுவாய், பலதொழிலும் இருக்கக் கல்வி
    அதிகமென்றே கற்றுவிட்டோம், அறிவில்லாமல்.
திடமுளமோ கனமாக் கழைக்கூத்தாட?
    செப்பிடுவித்தைகள் ஆடத் தெரிந்தோமில்லை;
தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லை;
    சனியான தமிழைவிட்டுத் தையலார் தம்
இடமிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை!
    என்ன சென்மம் எடுத்து உலகில் இரக்கின்றோமே!

- பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான்

    இப்படியிருந்தது நிலை.

    அப்படிப்பட்ட காலத்தில் மதுரகவிராயர் என்பவர் வாழ்ந்துவந்தார்.

    அவர் வறுமையால் வாடி, தம்முடைய மனைவியின் வற்புறுத்தலால் புதுச்சேரிக்குப்போய் ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்து ஏதாவது உதவி பெறலாம் என்று எண்ணினார்.
    ஆகவே மிகவும் சிரமப்பட்டு புதுச்சேரி போய்ச் சேர்ந்தார்.
    அவர் சென்றடைந்த நேரம் காலை நேரம்.
    ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தம்முடைய வயலுக்குச் சென்று விட்டதாகச் சொன்னார்கள்.
    ஆகவே அங்கே சென்றார்.
    ஆனந்தரங்கம் பிள்ளையைத் தேடினார்.
    அங்குள்ளவர்கள் வயலுக்குள் கையைக் காட்டினர். வயலில் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    வயலில் கதிரறுத்துவிட்டார்கள்.
    ஆனந்தரங்கம் பிள்ளை ஆளோடு ஆளாக அங்கே ஏதோ செய்துகொண்டிருந்தார். புலவர் அருகே சென்று பார்த்தார்.
    அதிர்ச்சி.
    ஆனானப்பட்ட ஆனந்தரங்கம் பிள்ளை குனிந்து வயலில் உதிர்ந்து கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தார்.

    புலவர் தாம் வந்த காரியத்தை சொல்லலானார்.
    ஆனந்தரங்கம் பிள்ளை, "சற்றுப் பொறும்" என்றார்.
    தொடர்ந்து நெல்மணிகளைப் பொறுக்கிக்கொண்டே போனார்.
    நேரம் ஆகியது. புலவருக்குப் பசி.
    மீண்டும் அவருக்கு ஞாபகமூட்டினார்.
    மீண்டும் "சற்றுப் பொறுமையா".
    உச்சிவேளையும் தாண்டிவிட்டது. காலையிலும் உணவு ஏதும் சாப்பிடாத புலவருக்குப் பசி கண்களை இருட்டிவிட்டது.

    அடுத்தடுத்துப் புலவர் நினைவுறுத்தினார்.

    "ஏனையா பறக்கிறீர்?" ஆனந்தரங்கம்பிள்ளையிடமிருந்து எரிச்சலுடன் வந்தன வார்த்தைகள்.
    அவ்வளவுதான்.
    புலவர் வாயிலிருந்து வெடித்துக்கொண்டுபுறப்பட்டன சொற்கள்.

"கொக்குப் பறக்கும், புறாப் பறக்கும், குருவி பறக்கும், குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்; நானேன் பறப்பேன்?"

    ஆனந்தரங்கம் பிள்ளை மெதுவாக நிமிர்ந்தார். புலவரைச் சற்று உற்றுப்பார்த்தார்.

    "சரி.வாரும் வீட்டுக்கு", என்று சொல்லி விரைவாக வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
    கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு சாப்பிட வருமாறு சொன்னார்.
    புலவர் அவ்வாறே செய்துகொண்டு சாப்பிடும் இடத்திற்கு வந்தார். மனைப்பலகை போடப்பட்டிருந்தது. தலைவாழை இலையும் போடப்பட்டிருந்தது.

    புலவர் உட்கார்ந்தார்.

    ஆனந்தரங்கம் பிள்ளை உள்ளே சென்று ஒரு தங்கத்தாம்பாளத்தை எடுத்துவந்தார்.
    தாம்பாளத்தை அப்படியே இலையில் கவிழ்த்தார்.
    அத்தனையும் பொற்காசுகள்.
   
    "உம்..... சாப்பிடும். சாப்பிடும்", என்றார்.

    புலவர் விதிர்விதிர்த்துப்போய் பார்த்தார்.

    "எப்படிச் சாப்பிடுவது? சோறு போட்டாலல்லவா சாப்பிடலாம்".

    "அப்படி வாரும் வழிக்கு. பசிக்குச் சோறுதானே முக்கியம்? இல்லை தங்கக்காசா? தங்கக்காசை சாப்பிடவா முடியும்? சோற்றுக்கு எங்கே போவது? நெல்தானே ஆதாரம்? அறுத்துக்கொட்டியது மட்டுமல்லாமல் உதிர்ந்த நெல்மணிகளும் மதிப்பு மிக்கவையல்லவா? உதிர்ந்தவை என்பதால் அவை பசியைத் தணிக்கமாட்டாவா? உதிர்ந்த நெல்மணிகள் உம்முடைய பசியைப் போக்குமல்லவா? எத்தனை செல்வமிருந்தாலும் நெல்லுக்கு ஏதும் ஈடாகாது. அந்த மதிப்பை உணர்ந்ததால்தான் நானே நெல்மணிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தேன். இனிமேல் உதிர்ந்த நெல்லை அற்பமானதாக எண்ணாதீர்".

    அந்த இலையை அப்படியே ஒதுக்கிவிட்டு, வேறு இலை போடச்செய்து அருமையான உணவு படைக்கச்செய்தார், ஆனந்தரங்கம் பிள்ளை.

    வயிறாற உண்டபின்னர் புலவருக்கு அந்த இலையில் இருந்த பொற்காசுகளையெல்லாம் அந்தத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பட்டாடையெல்லாம் வைத்து புலவரிடம் கொடுத்து, "இனிமேல் பறக்காதீர்", என்றார்.

    அப்போது புலவர், ஏற்கனவே தாம் பாடியதைப் பாடி, அத்துடன் மேலும் இருவரிகளைப் பாடி அப்பாடலை முடித்தார்.    

கொக்குப் பறக்கும், புறாப் பறக்கும், குருவி பறக்கும், குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்; நானேன் பறப்பேன் நராதிபனே?
திக்குவிஜயம் செலுத்தி உயர் செங்கோல் நடாத்தும் அரங்கா, நின்
பக்கமிருக்க ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேனே!

"அரங்கா! நீ எனக்குப் பக்கபலமாக இருக்கும்போது நான் ஏன் பறக்கப்போகிறேன்?"   

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU