டூரியான் மாஹாத்மியம்
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ். ஜெயபாரதி
JayBee
டொரியான் என்பது ஒரு பழம். தென் கிழக்காசியாவின்
சில பகுதிகளிம் மட்டுமே காணப்படும்.
"டூரி" என்ற மலாய்மொழிச்சொல் முள்ளைக்
குறிப்பதாகும்.
அந்தப் பழம் கடினமான ஒட்டால் போர்த்தப்பட்டது. ஓட்டில் கூரிய,
கடினமான முட்கள் நெருக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும். பழக்கமில்லாதவர்கள் பழத்தைத்
தூக்கிவிட முடியாது.
முள்ளால் மூடப்பட்ட பழமாகையால் இது "டூரியன்"
என்று பெயர் பெற்றது. தமிழர்கள் அதனை டொரியான் அல்லது டொரியாம்பழம் என்று சொல்வார்கள்.
ஓட்டைப் பிளப்பதுவும் கஷ்டம். தெரிந்தவர்கள்
மட்டுமே செய்யமுடியும். ஒரு சில மர்மஸ்தானங்கள் பழத்தில் உண்டு. அங்கு கீறி,
கூரிய கட்டையால் வகுந்து, நெம்பவேண்டும். இதையெல்லாம் செய்யும்போது தடித்த துணியை
பலவாக மடித்து, பழத்தைப் பிடிக்கவேண்டும்.
பழத்தைப் பிளக்க வேண்டும்.
உள்ளே கூடுகளாய் அமைந்திருக்கும். அந்த கூடுகளில் மூன்று
சுளைகள் வீதம் இருக்கும். கனமான கொட்டையுண்டு. சதையை மட்டுமே உண்ணவேண்டும்.
பழத்தை உடைத்தவுடன் சுளையைச் சாப்பிடுவதே நல்லது. கொஞ்சம் நேரமானாலும்
நசுநசுத்துவிடும்.
இந்த உலகிலேயே வேறெதற்குமே ஒப்பிட முடியாதமாதிரி வாசம்(சிலருக்கு வீச்சம்; சிலருக்கோ
நாற்றம்) அந்தச் சுளைகளுக்கு உண்டு. அதது அவரவர் டேஸ்ட்டைப் பொறுத்தது. சில வெள்ளைக்காரிகள்
மயக்கம் போட்டு விழுவதும் உண்டு.
சதை இனிப்பாகவும் ஒரு குறிப்பிட்ட flavourஉடனும் விளங்கும். இதுவும் ஒப்புக்கோ
உவமைக்கோ அப்பாற்பட்டது.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் - நிருபமா. 'நிர் உபமா' - உவமைக்கு
அப்பாற்பட்டவள்.
அதுபோல.
'வெள்ளைப் புலுட்' என்னும் என்னும் வெள்ளைக் கவுணி அரிசியை சீனியுடன்
தேங்காய்ப்பாலில் வேகவைத்து டுரியான் சதையுடன் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இது ஒரு ரிஸிப்பி.
இன்னொரு ரிஸிப்பியில் டுரியான் சதை, புலுட் அரிசி, சீனி, ஆகியவற்றைத் தேங்காய்ப்பாலில்
வேகவைத்தும் சாப்பிடுவார்கள்.
"பூலுட் அரிசி" என்னும் "கவுணி அரிசி"யில் கறுப்பு, வெள்ளை ஆகிய வகைகள்
உண்டு. அவற்றில் வெள்ளைப் பூலுட்டை மாவாக்கி , தேங்காய்ப்பால், சர்க்கரை, போன்றவை
சேர்த்து, பெரிய வாணலியில் போட்டு நீண்டநேரம் கிண்டி, கிளறிச் செய்யும் தின்பண்டம்
"டோடோல்" என்பது.
அது அல்வாவைப் போலவேயிருக்கும்.
ஆனால் விரைவில் திகட்டாது.
இத ில் டூரியான் பழச்சதையையும் சேர்த்துப் பக்குவமாகக் கிளறி
எடுப்பதே டூரியான் டோடோல்.
இது மலாய் மிட்டாய்தான். சீனர்கள் வேறுவிதத்தில் செய்வார்கள்.
டூரியனைப் பற்றி மேலும் சில செய்திகள் உள்ளன.
Durian என்பதை டூரியன் என்றே உச்சரிக்கவேண்டும்.
மலாய்மொழியில் 'D' என்னும் எழுத்து 'da'
என்றே உச்சரிக்கப்படவேண்டும்.
'T' என்னும் எழுத்து 'tha' என்று
மட்டுமே உச்சரிக்கப்படும். 'Tidak' என்னும் சொல் 'திடா'
என்றுதான் உச்சரிக்கப்படும். Duri என்பது முள். ஆகவே முள் படர்ந்த பழம் -
Durian'. வழக்கில் டுரியான், டொரியான் என்றெல்லாம் அழைக்கப்படும்.
டூரியனைச் சாப்பிட்டபிறகு ரொம்ப நேரம் எதுக்களித்துக் கொண்டிருக்கும். ஏப்பம்
வந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறை ஏப்பம் விடும்போதும் பொத்திக்கொண்டு ஏப்பம்
விடவேண்டும்.
டூரியனின்
மலர்கள் விரியும்போது மிகவும் இனிமையான தேன் சொட்டும். அந்தத்
தேனை ஒரு வகையான வௌவால் நக்கி உறுஞ்சி அருந்தும். மகரந்தச்சேர்க்கை அந்த வௌவால்களாலேயே
நிகழ்த்தப்படுகிறது
டூரியனின்
வீச்சத்துக்குக் காரணம் அதிலுள்ள Organo-Sulphur சமாச்சாரங்கள்,
Aldehyde,Ketone ஆகியவற்றின் விநோதக்கூட்டுறவு.
உடல் சூடாக இருப்பதுபோல் தோன்றும்.
சூட்டைத் தணிவிப்பதற்காக இளநீர் போன்றவற்றை அருந்துவதும் உண்டு.
மங்கூஸ்த்தான் என்னும் பழத்தையும் சாப்பிடுவது உண்டு.
டூரியன் பழத்தை உண்டபின்னர் மதுபானம் சாப்பிடக்கூடாது. வயிற்றுக்குள்
விஷத்தன்மை தோன்றிவிடும். இயற்கையிலேயே அந்தப் பழத்தில் Formaldehyde
என்னும் பொருள் உண்டு.
டூரியன் மரம் மிகவும் உயரமாக இருக்கும். வெகு உயரத்தில் பழங்கள் காய்த்திருக்கும்.
பழங்களைத் துரட்டி பறிப்பதோ பிடுங்குவதோ செய்வதில்லை.
மரத்தின் கீழே நான்கடி உயத்துக்கு வலை விரித்துக் கட்டிவைத்திருப்பார்கள். பழம்
முற்றியவுடம் காம்பு காய்ந்து பழம் விழுந்துவிடும்.
த்ரயம்பக மந்திரத்தில் 'ஊர்வாருகம் இவ பந்தனான்' என்று வெள்ளரிப்பழக் காம்பு
முற்றி இற்று பற்று அற்று கொடியிலிருந்து வெள்ளரிப்பழம் பிரிந்து கிடப்பதுபோல
டூரியனும் மரத்தின் 'பந்தனான்' அற்றுக் கீழே விழும்.
பழங்கள் காய்த்து முற்றிய நிலையில் இருக்கும் மரத்தடிக்குச் செல்லக்கூடாது.
பழம் தலையில் விழுந்தால் தலைவிதியும் தலையெழுத்தும் சரியில்லை என்று அர்த்தம்.
டூரியனில் சில வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மலாயா தீபகற்பத்தின்
கிழக்குப் பகுதியின் மாநிலமான திரெங்காணுவின் உள்புறத்து மாவட்டமான ஊலு திரெங்கணுவில்
மட்டுமே இருக்கும். இந்த மாவட்டத்தில் அடர்ந்த காடுகள் இன்றும் உண்டு. நான் சொல்வது
1974-ஆம் ஆண்டில் உள்ள நிலைமை. அப்போது இன்னும் நிறைய காடுகள்.
பல இடங்களுக்கு லேண்ட் ரோவரில்தான் செல்வோம். இன்னும் பல இடங்களுக்கு படகில்
செல்வோம். அதைப் பற்றி தனியாகச் சொல்கிறேன். "Exploits of JayBee"
என்று ஒரு புத்தகமே எழுதலாம்.
அந்தக் காடுகளின் சில பகுதிகளில் மட்டும் ஒருவகை டூரியன்
இருக்கிறது. சாதாரணமாக டூரியன் ஒரு மனிதனின் தலையளவுக்குச் சற்றுப் பெரிதாயிருக்கும்.
சயாம் டூரியன் என்னும் தாய்லந்து நாட்டு டூரியன் இன்னும் பெரியது.
ஆனால் இதுவோ ஆறு ஏழு அங்குல அகலமேயிருக்கும்.
மற்ற மலேசியத் தமிழர்கள் இதைப் பார்த்திருக்கமாட்டார்கள். அரிதான பழம் இது. அவர்கள்
ஊலு திரெங்கணுப் பக்கமும் போகமாட்டார்கள்.
புலி பசித்தாலும் புல் தின்னாது. அது srictly
non-vege. ஆனாலும் புலியே விரும்பி சாப்பிடும் ஒரே பழம் இதுதான்.
நகத்தால் பழத்தைப் பிளந்து சுளையைத் தின்னும்.
இந்தப் பழத்தை மூன்றாண்டுகளில் பத்துப் பதினைந்து தடவைகள்தான்
சாப்பிட்டிருப்பேன். ஆயிரம் சதுரமைல்கள், தொண்ணூற்றாறு "காம்ப்பொங்" எனப்படும்
கிராமங்கள்- அவையும் காட்டிலும் மேட்டிலும் ஆற்றிலும் சிதறிக் கிடப்பவை; அங்குள்ள
ஆயிரக்கணக்கானவர்களுக்கு இருந்த ஒரே ஏகபோக டாக்டர் நானே நான் மட்டும்தான். இருபத்துநாலு
மணிநேரமும் call-இல் இருப்பவன். அங்கேயே தைரியமாகக் குடும்பத்துடன்
தனித்தமிழனாக வசித்து, அவர்களோடு ஒன்றிவாழ்ந்தவன். (மகனைக் கைத்தூக்கலாகத் தூக்கியபடி,
மூன்றுமைல்கள் காட்டில், புலியிடமிருந்து ஓடிவந்த கதை வேறு சமயம் சொல்கிறேன்.
அப்போதெல்லாம் எல்லாமே adventureதான்.).
எனக்குக்கிடைக்காமல் வேறு யாருக்குக் கிடைக்கும் அந்த டூரியன்?
இந்தப் பழம் வேறெந்த டூரியன் மாதிரியும் இருந்ததில்லை.
இப்போது சாதாரண டூரியனுக்கு வருவோம்.
டூரியனின் அந்த பிரத்யேக மணத்துக்குக் காரணம் - சில ketoneகளும்
aldehydeகளும்தாம்.
டூரியான் சாப்பிட்டவுடன் மது அருந்தக்கூடாது. அவ்வாறு செய்பவர்களுக்கு - கொடுத்து
வைத்தவர்களானால் gastritis வரும்; சுமாராகக் கொடுத்து
வைத்தவர்களுக்கு gastric ulcer வரும்; பிறருக்கு பலவித
சிக்கல்கள் வரும். (ஏதோ பத்திரிக்கையின் கிரகப்பெயர்ச்சி பலன் போல இருக்கிறதோ?)
பரிசோதனைகள் formaldehyde உண்டாவதைக் காட்டுகின்றன.
மறக்கமுடியாத டூரியன் சம்பவம் ஒன்றும் உண்டு.
மலாயாவின் வடகோடியில் இருக்கும் பெர்லிஸ் மாநில மருத்துவ
மனையின் இயக்குனராக இருந்த சமயத்தில், ஒரு பழைய pick-up van என்னுடைய காரில்
மோதிவிட்டது. சிறிது சேதம். வேன் ஓட்டி ஒரு மலாய்க்காரன். வேனைப்போலவே ஆளும்
இருந்தான். ரொம்ப லேடுபாடான வேன். எப்படி ஓடியதோ, எப்படி ஓட்டினானோ தெரியவில்லை.
"எப்படி ஓட்டினரோ? அடியார் அப்படி ஓட்ட நான் ஆசைப்படவில்லை சகியே!" என்று வசந்தகோகிலம்
மாதிரி பாடவேண்டியதில்லை.
சாதாரணமாக இருபத்துநான்கு மணிநேரத்துள்ளாக போலீஸ்
ரிப்போர்ட்செய்யவேண்டும். அந்த மாதிரி லாச்சார் பிடித்த வேலைகளை யெல்லாம் செய்யாமல்
பெரும்பாலும் சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுப்பார்கள்.
ஆனால் அந்த வேன் ஓட்டி, சொன்னான் -" துவான்,
நான் மிகவும் ஏழை . பெரிய குடும்பம். இந்த வேனை வைத்துத்தான் "ச்சாரி மாக்கான்"(உணவு
தேடல்) செய்கிறேன். அதற்குக்கூட போதவில்லை. துவானுக்கு(ஐயா) பெரிய சம்பளம்.
"துஹான்"(கடவுள்) நிறைய கொடுக்கிறார். இன்னும் கொடுப்பார். என்னால் ஏதும் காடி(வண்டி)
ரிப்பேருக்காக ஏதும் "காந்த்தி ரூகி" (நஷ்ட ஈடு) கொடுக்கமுடியாது. துவான்தான்
பெரிய மனது செய்து என்மேல் இரக்கம்காட்டவேண்டும்".
அவனுடைய கிழிந்த சட்டை, அழுக்கடைந்த பழைய டிரவுசர் ஆகியவற்றையும்
அந்த ஓட்டை லாட்டு வேனையும் பார்த்தேன்.
அவனுக்கே ஏதாவது கொடுத்து அனுப்பலாம் போலிருந்தது. அப்படிச்
செய்தால் பார்ப்பவர்கள் கேலிசெய்வார்களே.
ஆகையால், "தாப்ப-லா! தாக் பாயா பாயார். ரீலேக். ஓக்கே?
(பரவாயில்லை. பேய்மெண்ட் கொடுக்க வேண்டியதில்லை.
Relax. O.K.?)" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் சொன்னேன். "எவ்வளவோ தர்மமாகச்
செய்கிறீர்கள். இதுவும் அதில் ஒன்றாக இருக்கட்டுமே",என்று அந்த புண்ணியவதி சொல்லிவிட்டார்கள்.
அடுத்தநாள் ஏதோ "தடதட"வென்று சத்தம். வீட்டில் இருந்த அத்தனை
நாய்களும் "வுல்·ப்" தலைமையில் குலைக்க ஆரம்பித்தன.
வாசலில் அந்தப் பழைய பிக்கப் வேன். ஒட்டியும் அவனுடையநண்பனும் வந்து,
"துவான்! ஏதாவது உங்களுக்கு நான் செய்யவேண்டும்.என்னால் முடிந்தது.
என்னிடம் சில சயாம் டூரியன் மரங்கள் உண்டு.அவை நிறைய காய்த்திருந்தன. நல்ல விலைக்குப்
போகும். ஆனாலும் என்னிடம் இவ்வளவு அன்பும் இரக்கமும் என் னத்தார்களேகூட
காட்டமாட்டார்கள். இதுவே ஒரு சீனனின் காடியாக இருந்தால் கோர்ட்டுக்கே போயிருப்பான்.
துவான், ஏதோ நான் தருவதை ஏற்றுக்கொள்ளவேண்டும். " என்றான்.
"பரவாயில்லை. நீயே கஷ்டப்படுவதாகச் சொல்கிறாய். விற்றாலும்
ஏதாவது கிடைக்கும். அப்படியே செய்துகொள்", என்றேன்.
("பாவமுங்க. பொயிட்டுப்போறான். போயி வித்துக்கட்டும்" -பின்னணியில் குரல்).
"இல்லை, துவான். இதை நான் "காந்த்தி ரூகி"யாகக் கொடுக்க
வில்லை. "ஹடியா"(அன்பளிப்பு)".
பிறகு வாங்கிக்கொண்டேன். காப்பியும் ஏதோ பலகாரங்களும் சாப்பிட்டுவிட்டுப்
போனான்.
ஆனால் அந்த பிக்கப்பில் வந்த டூரியன் ஐம்பதுக்குமேல் இருந்தன.
அவற்றை அங்கிருந்து பினங்கு, கெடா, போன்ற இடங்களில் உள்ள
பல நண்பர்களுக்கு அனுப்பிவைத்து அவற்றை இருநாட்களில் காலியாக்கினேன்.
இதுபோன்ற அனுபவங்கள் எனக்கு மேலும் பல ஏற்பட்டிருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்.
எங்களில் அதிக தாராளமானவர் யார்?
பெரியமனது யாருக்கு?
(விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்காத கேள்வி).
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU