ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு பாட்டு மிகவும் பிரபலமாக இருந்த்து. வசந்தகோகிலம்
என்னும் புகழ் பெற்ற பாடகி பாடியது.
தந்தைதாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோய்யா.
கல்லால் ஒருவன் அடிக்க....
....காலால் ஒருவன் ...உதைக்க....
வில்லால் ஒருவன் அடிக்க - காண்டீபமென்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
........
கூசாமல் ஒருவன் 'பித்தா...,பேயா.....
என்றுரைக்க
....மதுரைமாறன்....பிரம்பால் அடிக்க
.........
வஞ்சப்புகழ்ச்சியிலேயே இது ஒரு தனி அலாதியானது. சிவன்மேல் பரிதாபம்கொண்டு
பாடுவதுபோல் அமைந்துள்ளது.வரிகளில் உள்ள சொற்கள் சரியாக நினைவில்லை.
கல்லால் ஒருவன் அடிக்க - சாக்கிய நாயனார்
அடுத்து வரும் அடி சரியாக நினைவில்லை. அது, கண்ணப்பநாயனார்
செருப்புக்காலால் உதைத்தது பற்றியது.
காண்டீபம் என்னும் வில்லால் ஒருவன் அடிக்க -
அர்ஜுனன்
பாசுபதாஸ்திரம் பெற்ற படலத்தைக்குறிக்கும்.
'பித்தா, பேயா', என்று அழைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.
அடுத்து உள்ள வரி - பிட்டுக்கு மண்சுமந்து, அரிமர்த்தன பாண்டியனிடம்
பிரம்பால் அடிபட்டது.
இடையிடையில் புள்ளிவைத்துள்ள இடங்களில் உள்ள சொற்கள் மறந்துபோய்விட்டன. ரொமபநாளாகிப்
போச்சே.
அற்புதமான பொருள்கொண்டது. பிறப்பிலியாகிய சிவனுக்குத்
தந்தையோ தாயோ இல்லை. கேட்பதற்கு நாதியில்லாததால்தானே ஒருத்தொருத்தன் இஷ்டத்துக்கு
வந்து அடிப்பது உதைப்பதுமாய் ஆகிவிட்டது?
காளமேகப்புலவர்தம் பங்குக்குப் பாடிவைத்திருக்கிறார், பாருங்கள்.
தாண்டியருத்தி தலையின்மேல் ஏறாளோ,
பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ? - மீண்டொருவன்
வையானோ, வில்முறிய மாட்டானோ, தென்புலியூர்
ஐயா, நீ ஏழையானால்?
தலைமேல் ஏறியவள் கங்கை.
பூண்டசெருப்பால் போட்டவர் கண்ணப்பநாயனார்.
வைதவர் சுந்தரர்.
வில்முறிந்தவன் அர்ஜுனன்.
சிவனின்
பிட்சாடனக் கோலத்தைப் பாடியது.
இதே
கருத்தை உள்ளடக்கிய இன்னொரு பாட்டும் இருக்கிறது.
'காரணம் கேட்டு வாடி -
காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத
காரணம் கேட்டு வாடி.'
என்ற பாட்டு.
அதில்,
கல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ
கண்ணப்பன் செய்ததைக் கனவிலும் செய்தேனோ
'செல்லாமனைக்குத் தூது சென்று வா', என்றேனோ
'செய்யாத காரியம் செய்யவும்', என்றேனோ
என்று வரும். நல்ல பாட்டு. வெளிவந்து ஐம்பதாண்டுகளுக்கு மேல்
இருக்கும்.
வில்லால் ஏன் அர்ஜுனன் அடித்தான்?
'பாசுபதம்' என்பது ஓர் அஸ்திரம். அதைப் பெறுவதற்காகத்தான் அர்ஜுனன் ஒற்றைக்
காலில் நின்று தபம் செய்தான்.
நீண்டநாட்கள் கழித்து வேடனாக(கிராதன்) சிவனும் வேடுவச்சியாக அம்பிகையும்
வந்தார்கள். அப்போது ஒரு பன்றி அந்தப் பக்கத்தில் ஓடியது. ஒரே சமயத்தில்
அர்ஜுனனும் கிராதனும் அம்பு விட்டார்கள். இரண்டுமே தைத்துவிட்டது. அந்தப்
பன்றியை உண்மையிலேயே கொன்றது யார் என்றும் பன்றி யாருக்குச் சொந்தம் என்பதிலும்
சண்டையேற்பட்டது.
அர்ஜுனனும் கிராதனும் துவந்த யுத்தம் புரிந்தார்கள்.
அப்போது தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லால் அர்ஜுனன் கிராதனை அடித்துவிட்டான்.
பின்னர் சிவனும் அம்பிகையும் தம்முடைய சுயரூபத்தில் தோன்றி அர்ஜுனனுக்குப்
பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்தார்.
இந்தச் சம்பவம் சிற்பக்கலையில் 'கிராதார்ஜுனீயம்' என்று அழைக்கப்படுகிறது.
சிவனுடைய திருக்கோலங்களாக தட்சிணாமூர்த்தி, பிக்ஷ¡டனர், திரிபுராந்தகர்,
கஜசம்மாரமூர்த்தி போன்றவை விளங்குகின்றன. அவற்றுடன் கிராதார்ஜுன மூர்த்தியும்
ஒன்று.
சிவபுரி என்னும் சிற்றூர் ஒரு காலத்தில் நிருபசேகர சதுர்வேத மங்கலம், சோழமார்த்தாண்ட
சதுர்வேத மங்கலம் என்ற பெயர்களில் மூன்று பகுதிகளும் மூன்று பெருங்கோயில்களும்
கொண பேரூராக விளங்கியது.
அங்கு இருக்கும் சிவன் 'தான்தோன்றியீசர்'.
ஆக்கூர் என்னும் ஊர் ஒரு பாடல்பெற்ற தலம்.
அங்கும் ஒரு தான்தோன்றியீசர் இருக்கிறார்.
தம்முடைய திருஆக்கூர்த் தான்தோன்றி மாடத்துத் திருத்தாண்டகத்தில் தான்தோன்றியப்பனாரை
அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
கண்ணார்ந்த நெற்றியுடையார் போலும்
காமனையும் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்சமுண்டார் போலும்
ஊழித்தீயன்ன ஒளியார் போலும்
எண்ணாயிரங் கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான் தோன்றியப்பனாரே
- திருநாவுக்கரசர்
- திருஆக்கூர்த் திருப்பதிகம்
இந்தத் திருப்பதிகத்தின் எட்டாவது
பாடல் இது.
நெற்றிக்கண்ணுடையவர்;
மன்மதனை நெற்றிக்கண்ணின் அழலால் காய்ந்தவர்;
பால்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால
விஷத்தை எடுத்து உண்டு, அம்பிகையின் செயலால் கண்டத்தில்
அடக்கிக்கொண்டவர்;
ஊழித்தீயைப் போன்ற ஒளியுடையவர்;
எண்ணாயிரம் கோடிப் பெயர்கள் உடையவர்;
நந்தி வாகனமுடையவர்;
திருவண்ணாமலையிலும் திருவாரூரிலும் இருப்பவர்;
ஆக்கூரில் இருக்கும் தான்தோன்றியப்பர்.
இந்தப் பாடலில் கவர்ந்த வரி, 'எண்ணாயிரம் கோடிப் பேரார்'
என்பது.
இறைவனுக்கு உரிய ஆயிரம் நாமங்களை 'சகஸ்ரநாமம்' என்று
குறிப்பிடுகிறோம். ஆயிரம் கோடி நாமங்கள் இருப்பதாகவும் காணப்படும்.
அநாமதேயமும் அனந்தகோடி நாமதேயமும் உடையவர்.
அநந்தகோடி என்பது எண்ணிக்கையற்ற கோடியைக் குறிக்கும்.
அப்பர் பெருமானார் இந்தப் பாடலில் 'எண்ணாயிரம் கோடி பெயர்கள் உடையவர்' என்று
கூறுகிறார்.
எண்ணாயிரம் கோடிப் பெயர்கள் என்னும்போது இருபதாண்டுகளுக்கு
முன்னர் படித்த Science Fiction கதையன்று நினைவுக்கு
வருகிறது.
'Nine Billion Names of God'
என்ற தலைப்பு.
Arthur C Clarke என்பவர் மிகச் சிறந்த, மிகவும்
புகழ் வாய்ந்த Science Fiction எழுத்தாளர். Satellites
பறக்கவிடமுடியும் என்று யாரும் கனவுகூடக் காணாத காலத்தில் அவர் Communication
Satellites பற்றி Science Fiction எழுதினார்.
ஆனால் அவர்களெல்லாம் எழுதும் ஸயன்ஸ் ·பிக்ஷனில் விஞ்ஞான தத்துவார்த்தம்,
சித்தாந்தமெல்லாம் இருக்கும். அவையெல்லாம் இல்லாத காலத்தில்கூட அவற்றைப்பற்றி
அவர்களுடைய தீர்க்கமான சிந்தனையின் மூலம் அவர்களாகவே எழுதுவார்கள். கருவிகளால்
அளக்கப்படமுடியாத, கண்டறிய முடியாதனபற்றியெல்லாம் எழுதுவார்கள்.
நம்ம ஆட்கள் போல ஸையன்ஸ் ·பிக்ஷன் என்னும் பெயரால் இஷ்டத்துக்குக்
கரடி விட்டு, சரடு விட்டு, கயிறு திரிப்பவர்கள் அல்லர். 'படிக்கிறவனெல்லாம்
கேணப்பயல்' என்ற மதர் மதர்ப்பில் நம்ம ஆட்கள் அவ்வாறு Mediocre-ஆக
எழுதிப் புகழ் பெற்றுக்கொள்வார்கள்.
ஆர்தர் ஸீ க்லார்க் அப்படிப்பட்டவரல்லர்.
அந்தக் கதை ஒரு சிறுகதைதான்.
ஆனால் விஷயம் மிகவும் கனமானது.
அடுத்தாற்போல அதைச் சொல்கிறேன்......
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$