இலக்குமி
தோத்திரம்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா
இந்தக் கட்டுரையில்
காணப்படும் கருப்பக்கிளர் ராமசாமிப் புலவரின்
வாழ்க்கைக குறிப்பு அவரால் தொகுக்கப்பட்ட 'செல்வத்திறவுகோல்' என்னும்
நூலில் காணப்படும் குறிப்பைத் தழுவி எழுதப்பட்டதாகும்.
இலக்குமி தோத்திரம் அதே நூலில் காணப்படும் பதிப்பு.
பாடல்களின் உரையும் புலவரவர்கள் எழுதிய உரையைத் தழுவி எழுதப்பட்டது.
லோபாமுத்திரையைப் பற்றி
வழங்கப்படும் சில செய்திகளைத் தருகிறேன்.
அகத்தியர்களில் ஒருவர் சப்தரிஷிகளில் ஒருவராக
விளங்குகிறார்.
ரிஷிகளின் சுயதர்மம் என்பது பெரிதும் வேறுபாடு உடையது.
தமிழ்ப் படங்களில் தாடியை வைத்துக்கொண்டு, காவியை அணிந்துகொண்டு,
காடுகளில் வசிப்பதுபோல ரிஷிகள் காட்டப்படுவதால், ஒரு தினுசான
பாரடைம் ஒன்றை ரிஷிகளைப் பற்றி நாம் ஏற்படுத்திக்கொண்டுவிட்டோம்.
அது இன்னொரு விஷயம். நேரம் கிடைக்கும்போது 'இதயம்'
இதழுக்கு ரிஷிகளைப் பற்றி எழுதியனுப்பிய விளக்கத்தைத் தருகிறேன்.
தம்முடைய மூதாதையருக்கு 'புத்' என்னும் நரகம்
கிட்டாமல் இருப்பதற்காக அகத்தியர் மனைவாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது.
ஆகவே தமக்கு ஏற்றாற்போல, பல தெய்வீக சக்திகளின் அம்சங்களை எடுத்து, ஒரு
பெண்ணைச் சிருஷ்டித்தார். அவளைக் காசி அரசனிடம் ஒப்படைத்து, வளர்த்து
வருமாறு செய்தார்.
தக்க காலம் எய்தியதும், தமது திருமணத்தை நடத்திக்
கொள்ளத் திருவுள்ளம் கொண்டார்.
திருமணத்திற்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது. ஆகவே
அவர் ஆங்காங்குச் சென்று மூன்று மன்னர்களிடம் பொருள் கேட்டார்.
அவர்களுக்கு அப்போது முடையாக இருந்ததால் உதவ
இயலவில்லை.
அவர்களுக்கும் பொருள் தேவையாக இருந்ததால் அவர்களும்
அகத்தியருடன் பொருள் தேடிச்சென்றனர்.
கடைசியில் வாதாபி, இல்வலன் என்னும் இரண்டு அசுர
குல மன்னர்களிடம் சென்று பொருள்வேண்டினார்.
வாதாபி, இல்வலன் ஆகியோர் சூரபன்மனின் உறவினர்கள்.
அவனுடைய தங்கையாகிய அஜோமுகிக்கு தூர்வாச முனிவர் மூலம் பிறந்தவர்கள்.
வாதாபிக்கு நினைத்த வடிவம் எடுக்க முடியும்.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்ச்சீவினி மந்திரத்தை இல்வலன்
அறிவான்.
அவர்களிடம் வரும் விருந்தினருக்கு விருந்து
படைப்பதாகக் கூறி, வாதாபி ஆட்டு வடிவம் எடுத்துக்கொள்வான். அவனைக்
கொண்ரு சமைத்து விருந்தினருக்குப் படைப்பான் இல்வலன். உண்டு முடித்ததும்
இல்வலன் மிருதசஞ்சீவினி மந்திரத்தைப் பிரயோகித்து "வாதாபி" என்று
அழைப்பான்.
உயிருடன் வாதாபி விருந்தினரின் வயிற்றைக் கிழித்துக்
கொண்டு
வெளியில் வருவான். இவ்வாறு வஞ்சகமாக விருந்தினரைக் கொன்று தின்றார்கள்.
அகத்தியருக்கும் இதே போல் செய்தான் இல்வலன். அகத்தியர்
சாப்பிட்டவுடன் இல்வலன் வாதாபியை அழைத்தான். ஆனால் அகத்தியரோ
தம் வயிற்றைத் தடவி வாதாபியை ஜீரணம் செய்து, "வாதாபி ஜீரணாப்தி"
என்று சொல்லி அவனை அழித்தார்.
இல்வலன், அகத்தியருக்கு வேண்டுமளவும் பொருள் கொடுத்து
அனுப்பிவைத்தான். மற்ற மூன்று மன்னர்களும் பொருள் பெற்றுத்
திரும்பினர்.
பின்னர் அகத்தியர் லோபாமுத்திரையை மணந்து கொண்டார்.
ஸ்ரீவித்யா என்பது அம்பிகை வழிபாட்டின் உச்சகட்டமாகக்
கருதப
்படுவது. அது ஹயக்கிரீவ வடிவத்தில் இருக்கும் விஷ்ணுவிடமிருந்து
பரவியதாகச்சாத்திரம் கூறும். ஸ்ரீவித்யாவின் உச்சநிலைகளாகக் கருதப
்படுபவை சில மந்திரங்கள். அவற்றில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமமும்,
ஸ்ரீலலிதா திரிசதியும் விளங்கும்.
ஹயக்கிரீவரின் தலை மாணாக்கராக அகத்தியர் விளங்கினார்.
அவருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்து, அதன்
மறைபொருளையும் சொல்லிக்கொடுத்தார்.
அதனையும்விட ஏதோ ஒன்று விசேடமாக இருப்பதாக அகத்தியர்
உணர்ந்தார். ஆனால் அது தமக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லையே
என்ற ஆதங்கத்தோடு ஹயக்கிரீவரின பாதங்களில் தன் தலையை வைத்து
பதித்துக்கொண்டும் முட்டிக்கொண்டும் முறையிட்டார்.
அப்போதும் ஹயக்கிரீவர் வாளாவிருந்தார்.
அவ்வமயம் அம்பிகை ஹயக்கிரீவரிடம், 'இவன்
மிகச்சிறந்தவன்;
ஆழ்ந்த பக்தியுடையவன்; எல்லாவற்றையும்விட எனக்கு மிகவும் பிரியமானவளாகவும்
பக்தையாகவும் விளங்கும் லோபாமுத்திரையின்
கணவன். ஆகவே அவனுக்கு இருக்கும் தகுதியை உத்தேசித்து, அவனுக்கு
உபதேசம் செய்வாயாக', என்று கூறினாள்.
அதைக் காரணம்காட்டி அகத்தியருக்கு ஸ்ரீலலிதா திரிசதி
பெருமந்திரத்தை ஹயக்கிரீவர் உபதேசித்தார்.
ஸ்ரீவித்யா மார்க்கத்தில் பன்னிரண்டு மரபுவழிகள்
இருக்கின்றன.
அவற்றில் ஒன்று லோபாமுத்திரையுடையது. அம்பிகை
வழிபாட்டில் பெண்களுக்குக் குருபீடமும் தீட்சை கொடுக்கும் அதிகாரமும்
உண்டு.
அதற்கு முன்னோடியாக விளங்குபவர் லோபாமுத்திரை
அம்மையார்.
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில், 'லோபாமுத்ரார்ச்சிதா'
என்னும் திருப்
பெயர் ஆயிரத்தில் ஒன்றாக விளங்குகிறது.
லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப்
படுகிறவள் என்பதே அதன் பொருள்.
அகத்தியரும் லோபாமுத்திரையும் கொல்லாபுரம்
(கோலாப்பூர்) என்ற இடத்தில் செய்த திருமகள் வழிபாட்டின் ஓர் அங்கமாக
விளங்குவது ஒரு
தோத்திரம்.
அது 'இலக்குமி தோத்திரம்' என்று வழங்கப்படுகிறது.
அந்த தோத்திரத்தின் இறுதியில், அகத்தியர்
தம்பதியருக்குக்
காட்சியளித்த திருமகள், 'உன்னுடைய போற்றி பாடல்களுக்கு
மனமகிழ்ந்தேன். இப்பாடல்களைப் பாடினோர் எவரும் கெடுதற்கு
அரிய பெரிய இன்பங்களை நுகர்வார்கள். இப்பாடல்கள் எழுதப்பெற்ற
ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள்
(ஜேஷ்டாதேவி) அவ்வில்லத்தை அடையமாட்டாள்',
என்று திருவாய் மலர்ந்தருளினாள்.
இத்தோத்திரத்தைக் கருப்பக்கிளர் இராமசாமிப்புலவர்
என்பவர் வெளியிட்டுள்ளார். அந்ந்நூலில் அவர், தம்முடைய வாழ்வில் ஏற்பட்ட
மறுமலர்ச்சியைப் பற்றியும் எழுதி, இந்தப் பாடல் எவ்வளவிற்கு ஆற்றல்
படைத்தது என்பதற்கு சான்றும் கூறுகிறார்.
(இந்த மடல் தற்செயலாக எழுதப்பட்டது. இதை
எழுதிமுடித்தது ஒரு வெள்ளிக்கிழமை காலை நேரம், சுக்கிர ஹோரை. இலக்குமிக்கு
உரியது).
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU