இலக்குமி தோத்திரம்
பாகம் 2



டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா

                கருப்பக்கிளர் ராமசாமிப்புலவர் என்பார் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பணியாற்றிய புலவர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பல பழந்தமிழ்நூல்களுக்கு உரையெழுதி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திற்காக வெளியிட்டுள்ளார். அந்த கழகத்தின் சிறப்புமிக்க வெளியீடாகிய 'தமிழ்ப்புலவர் வரலாறு' என்னும் முப்பது நூல்களுக்குமேல் அடங்கிய தொகுதி அவரால் எழுதித் தயாரிக்கப்பட்டதுதான். அவர் இளவயதில் ஆண்டியாக இருந்தவர். ஆனாலும் வாழ்க்கையில் மேல்நிலைக்கு வந்து
விட்டவர். அந்த வாய்ப்பை இலக்குமி தோத்திரமே ஏற்படுத்தித் தந்ததாக
உறுதியாக நம்பினார்.


                கருப்பக்கிளர் ராமசாமிப் புலவர் 1907-ஆம் ஆண்டில் பிறந்தார்.
                1915-1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விநாயக கவசம், சிவகவசம், சக்தி கவசம், சகலகலாவல்லி மாலை, இலக்குமி தோத்திரம், ஆகியவை அடங்கிய
'விநாயக கவசம்' என்னும் நூலைப் படித்தார். அதன் இறுதியில் இருந்த
இலக்குமி தோத்திரத்தைப் படித்தபோது,


            'என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
            இருநிலத்தில் இறைஞ்சலோடும்,
            'நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்!
            இத்துதியை நவின்றோர் யாரும்
            பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
            ஈங்கிதனைப் பொறித்த ஏடு
            மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
            தவ்வையவண் மருவல் செய்யாள்'

என்னும் இறுதிப்பாட்டிலே அவருடைய உள்ளம் சென்றது.
                "இந்நூல் வீட்டில் இருந்தாலே, வறுமை உண்டாக மாட்டாதாமே;
இந்நூலை நாம் பாதுகாத்து வைத்திருந்து பலனைப் பார்க்கவேண்டும்" என்று முடிவு செய்தார்.

                பாடல்கள் ஏழையும் மனப்பாடம் செய்தார். சமயம் நேர்ந்த
பொழுதெல்லாம் பாடிக்கொண்டிருந்தார்.    
                கோவிலுக்குச் செல்லும்போது திருமகளின் திருவுருவத்தின் முன் நின்று இப்பாடல்களை மனத்திற்குள்ளேயே பாடினார்.
                அப்பொழுது அவருக்கு வயது இருபது இருக்கலாம்.
                அதாவது 1927-ஆம் ஆண்டு.
                அவர் தம் வீட்டை விட்டு வெளியேறி, வெள்ளை வேட்டிச் சாமியாராக மடங்களிலும் பிற இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தார்.
                சாமியார்களில் சன்னியாச தீட்சை எடுக்காமலும் காவி கட்டாமலும் இருக்கக்கூடியவர்களை 'வெள்ளை வேட்டிச் சாமியார்' என்று குறிப்பிடுவார்கள்.
                புலவருக்கென்று உரிமையாக ஒரு செல்லாக் காசும் இல்லை.
அவருடைய முன்னோர்களின் பொருள்களில் அவர் கருத்துச் செலுத்தவோ, அடையவோ முயற்சி செய்யவில்லை. முன்னோர்கள் தேடிய பொருள்
சிறிதுதான் இருந்தது. அதுவும் போனவகை தெரியாமலேயே போய்விட்டது.         
                "இந்நிலையில் மேற்படி பாட்டு எவ்வாறு பயனளிக்கப் போகிறது? பார்க்கலாம்," என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
                இலக்குமி தோத்திரத்தைப் படிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை.
                இதன் பிறகு கல்வியில் அவருடைய கருத்து மிகுதியாகச் செல்ல ஆரம்பித்தது. இலக்கண இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். முப்பது வயதாகும்போதெல்லாம் கல்வியறிவு ஒருவாறு ஓர் அளவை எட்டியது.
                இந்த வேளையில் வெள்ளை வேட்டிச் சாமியார்கள் சிலர் அவர் தங்கி
யிருந்த இடங்களில் அவரிடம் பாடம் கேட்கலாயினர். பாடம் கேட்டவர்களில்
சிலர், புலவர் புகுமுக வகுப்பில் தேறிப் புலவர் தேர்வுக்குப் படிக்கவும்
சென்றனர். படித்துப் புலவர்களும் ஆயினர்.
                செட்டிநாட்டில் பலவான்குடி என்னும் ஊரில் திருவாசகப் பள்ளியில்
அவர் தங்கியிருந்தார். அப்போது, திரு. மே. வே. வேலப்ப செட்டியார் என்னும் பெயருடைய நகரத்தார் அன்பர் ஒருவர் அவரிடம் கல்வி கற்கத் தொடங்கினார்.
                பதினைந்தே நாட்களில் வெண்பாவைத் தாமே இயற்றும் திறம் பெற்றார்.
                காலஞ்சென்ற அண்ணாமலை செட்டியார் மீது 'அண்ணாமலை
அணியறுபது' என்னும் நூலையும் வெண்பாவில் வேலப்ப செட்டியார்
இயற்றி, பாராட்டும் பெற்றார்.
                இந்நாளில் ராமசாமிப் புலவர் நூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டார்.
                முதலில் 'புலமை வித்தக போதினி' என்னும் பெயரோடு ஐந்திலக்கண
சுருக்க நூல் ஒன்றை எழுதி முடித்தார். அது அச்சேறி வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 'தமிழும் தமிழரும்', 'கல்லாட உரை நடை' என்னும் நூல்களை
எழுதினார்.
                இவையும் ஒவ்வொன்றாக வெளிவரலாயின.
                1940-ஆம் ஆண்டில் சென்னையில் தங்கியிருந்தபோது, ஒருநாள்
தங்கசாலைத் தெருவில் சென்றுகொண்டிருந்தார்.     அப்போது ஆனந்தபோதினி உரிமையாளரும் புலவருடைய நண்பருமாகிய திரு. நா. முனுசாமி முதலியார் அவர்கள் புலவரைக் கண்டு ஆனந்தபோதினி அலுவலகத்தில் வேலை
பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
                புலவரும் அதற்கு இணங்கி ஆனந்தபோதினி அலுவலகத்தில் வேலை பார்க்கலாயினார். அப்போது அவருக்கு முப்பத்து மூன்று.

                இந்நிலையில் புலவருக்கு முன்னரே அறிமுகமாகவும் பழக்கமாகவும் இருந்த உயர்திரு வ. சுப்பையா பிள்ளையவர்கள் தமது ஆட்சி பொறுப்பின்கீழ்
நன்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் அச்சுப்பிழை திருத்தும் வேலையிலும் ஈடுபடுத்தினார். அந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் இலக்கியச் சிறுகதைகள், தமிழ்ப் புலவர்களின்
வரலாறு முதலிய நூல்களைப் பிள்ளையவர்கள் புலவரை எழுதச் செய்தார்.
பிறகு ஆனந்தபோதினி வேலையைவிட்டு முழுநேரமும் கழகத்திற்கு நூல்கள் எழுதும் பணியில் புலவர் ஈடுபட்டுவிட்டார்.
              முன்னால் சொல்லப்பட்ட பலவழிகளாலும் புலவருக்குப் பொருள்
வருவாய் ஓர் அளவாக வரத் தொடங்கியது. பொருள்நிலை அவருடைய
மனத்திற்கு நிறைவான நிலையிலேயே வந்து கொண்டிருந்தது.
                பின்னர் புலவருக்குத் திருமணம் நடந்து மக்கட்செல்வமும்
உண்டாயிற்று.
                இலக்குமி தோத்திரத்தின் இறுதிப்பாடல் இவ்வாறு உண்மையாகவே அவருக்குப் பலித்துவிட்டது.
                புலவரவர்கள் கொடுத்திருக்கும் கால விவரணப்படி பார்த்தால்,
இருபது வயதில் அவர் ஆண்டியாக அலைந்து கொண்டிருந்திருக்கிறார்.
அதாவது, 1927-ஆம் ஆண்டுவாக்கில்.        
                பிறகு தம்முடைய முப்பதாவது வயதிலே (1937 ஆம் ஆண்டு)
கல்வியறிவு நிறைவாகப் பெற்றார். பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
நூல்களும் எழுதி வெளியிட்டிருக்கிறார். 1940-ஆம் ஆண்டில் தம்முடைய 
முப்பத்து மூன்றாம் வயதில் ஆனந்தபோதினி அலுவலகத்தில் சேர்ந்தார்.
அப்போது நிலையான வருமானம் அவருக்கு ஏற்பட ஆரம்பித்து விட்டது.
                மொத்தம் பதின்மூன்று ஆண்டுகள். பதின்மூன்றே ஆண்டுகள்.
                ஒரு வியாழவட்டம் + ஓராண்டு. அதற்குள்ளாகவே அவர் zero minus
நிலையிலிருந்து எழுந்து, மேலே மேலே மேலே போய்விட்டார். அவரால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் பெரும் ஆதாயம். பலநூல்களை அவர் எழுதியிருக்கிறார். பழைய கையெழுத்திப் பிரதிகளிலிருந்து திருத்தமான பிரதிகளை எழுதி அவற்றையும் வெளியிட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். பல பழைய நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். பலன் தரும், ஆற்றல் மிகுந்த அரிய தோத்திரங்களைத் தொகுத்து 'செல்வத் திறவுகோல்', 'சகலவித யோகமிகு பெருவாழ்வு' போன்ற பயனுள்ள நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவரால் பயனடைந்த தமிழ் மக்கள் லட்சக்கணக்கானவர்.

                இதனை அவருக்குச் சாத்தியமாக்கிய அரிய பொக்கிஷம்  'இலக்குமி தோத்திரம்'.

                இலக்குமி தோத்திரம்

                அகத்திய முனிவர் தம்முடைய மனைவி லோபாமுத்திரையோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு திருமகள் திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள்மீது இப்பாடல்களைப் பாடிப்போற்றினார்.
                அப்போது திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, "உன்னுடைய 'போற்றி' பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றினார் யாவரும் கெடுதற்கு அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள். இப்பாடல்களை
எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக்
கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடையமாட்டாள்", என்று
திருவாய் மலர்ந்தருளினாள்.
                இப்பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை
அடைந்து அச்செல்வத்தை நுகர்வர்.
                அச்செல்வத்தால் ஆகும் பயனையும் நுகர்வர்.
                இந்நூலானது வீட்டிலே இருக்குமானால் செல்வநலம் சிறந்தோங்கும்.
                இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை.
                ஆகவே அன்பர்கள் இந்நூலைப் பொன்னெனப் போற்றி பாதுகாக்கக்
கடவர்.
                இப்பாடல்கள் அதிவீரராமபாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்ட காசி காண்டத்தில் அவரால் மொழிபெயர்த்துப் பாடப்பட்டவை.


   
                                                                                                                                        இலக்குமி தோத்திரம்                                                                                                                                         நூலும் உரையும.......்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

PREVIOUS NEXT

RETURN TO MAIN MENU