கண்டசுத்தி -#4

அம்பிகாபதி


"மூங்கில் இலைமேலே......"

"குறைக்குமாம் கூன்கத்தி கொண்டு".

கடாரத் தமிழ்ப்பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


         கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி. அம்பிகாபதிக்கும் கவிதை பாடும் ஆற்றல் இருந்தது.
அது மட்டுமல்லாமல் அந்த இள வயதிலேயே சில அபூர்வ ஆற்றல்களும் இருந்தன.

        தான் காணாத காட்சியை எப்படியோ அறிந்து அதனைப் பாடலாகப் பாடும் அரிய ஆற்றல் அம்பிகாபதிக்கு இருந்தது.


மூங்கில் இலைமேலே......

        ஒருநாள் கம்பர் ஓர் ஊரிலிருந்து தம் வீட்டிற்குக் காலாற நடந்து வந்து கொண்டிருந்தார்.
    வழியில் நன்செய் விவசாய நிலங்கள் இருந்தன. அங்கோர் இடத்தில் கிணறு ஒன்று இருந்தது.                    
    அந்தக் காலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கென்று சில உபகரணங்களை வைத்திருந்தார்கள். இறைவாய்ப்பெட்டி, சால், ஏற்றம் முதலியவை அத்தகையவை.
        இந்த குறிப்பிட்ட கிணற்றில் ஒருவன் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான்.
        அக்காலத்தில் ஏற்றம் இறைப்பதற்கு, ஓடம் செலுத்துவதற்கு, பாரம் இழுப்பதற்கு,
பல்லக்குத் தூக்குவதற்கு எல்லாம் அவ்வவற்றிற்குரிய பாட்டுக்கள் வைத்திருந்தார்கள்.
அவற்றைப் பாடிக்கொண்டே அந்தந்த வேலைகளைச் செய்வார்கள். சிரமம் தெரியாது.

        இந்தக் கிணற்றில் ஏற்றம் இறைத்தவனும் ஒரு பாட்டைப் பாடினான்.....

                மூங்கில் இலைமேலே
                 தூங்கும் பனி நீரே.....
   
        அத்துடன் நிறுத்திவிட்டு வெற்றிலையை எடுத்து மடித்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். அடுத்த அடியைப் பாடும் வரைக்கும் கம்பர் காத்திருக்கவில்லை.

        அடுத்த அடிகள் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு வீட்டுக்கு வந்துவிட்டார்.
        வீட்டிலும் அவருக்கு அந்த அறுந்துபோன அரைப்பாட்டைப் பற்றியே சிந்தனையாகவே இருந்தது.
        அவராகவே சிந்தித்தார். அடுத்த அடி என்னவாக இருந்திருக்கும்?
        முதல் அடியைப் பாடினார்.

                "மூங்கில் இலைமேலே
                தூங்கும் பனிநீரே......."

    டக்கென்று பக்கத்து அறையிலிருந்து இன்னொரு குரல் பாடியது.........

                "தூங்கும் பனி நீரை
                வாங்கும் கதிரோனே"

    அறையிலிருந்து அம்பிகாபதி வெளியே வந்தார். வந்தவர் கம்பரைப் பார்த்து மெல்லச்சிரித்தார்.
    ஆம்.
    அதுதான் அந்தப் பாட்டின் அடுத்த அடி.

    விடிவதற்கு முன்னர் மூங்கில் இலையின் நுனியில் பனி நீர் பளிங்கு முத்துப்போல திரண்டு நிற்கிறது.
    விடிந்ததும் சூரிய ஒளியின் வெப்பம் பட்டு அந்தப் பனி நீர் நீராவியாக மாறி உலர்ந்துபோய் விடுகிறது. அதை வாங்கியது சூரியனின் வெப்பமல்லவா. அதனால்தான் வாங்கும் கதிரோனே" என்று பாடிமுடித்தார்.


குறைக்குமாம் கூன்கத்தி கொண்டு".
        இன்னொரு கதையும் உண்டு.

        கதையும் கவிதையும் இதோ:

        ஒருமுறை குலோத்துங்க சோழன், கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோர்  இரவில  மாறுவேடத்தில் நகர்வலம் வந்துகொண்டிருந்தனர்.

        அது ஒரு பழங்கால மரபு.
        அவ்வாறு சென்றபோது, காவிரியாற்றையும் தாண்டிச் சென்று,  சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தனர்.

        காவிரியின் வடகரையில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு ஒரு பழைய காளி கோயில்.
        அங்கே ஏதோ ஆளரவம் தென்பட்டது. அமானுஷ்யமான குரல்கள் ஓசைகள போல  ஏதேதோ ஒலித்தன. கூக்குரல்கள்.            
        நடுநிசியையும் தாண்டிவிட்டது.
        வியப்பு மேலிட்ட மன்னனும் புலவர்களும் அருகே சென்று மறைந்திருந்து பார்த்தனர்.
        அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இரத்தத்தை அப்படியே உறையச் செய்துவிட்டது.
        அந்தக் காளிகோயிலின் முன் மண்டபத்தில் மனித உடல்கள் தொங்கிக் கொண்டிருந்தன.   சில பேய்கள்அங்கும் இங்குமாய் ஏதேதோ செய்து கொண்டிருந்தன. ஏதேதோ பூஜைத்திரவியங்கள், பாத்திரங்களில் இரத்தம், தூபத்தில் புகை போன்றவை அங்கு தென்பட்டன.  காளிக்கு ஏதோ பூஜை  போட தயார் செய்துகொண்டிருந்தன.
        அங்கு ஒரு பெரிய சந்தனம் அரைக்கும் கல்.    
        ஒரு பேய் அதில் மனித உடல்களை வைத்து, இரத்தத்தை விட்டு சாந்தாக அரைத்துக ்கொண்டிருந்தது. அந்தச் சாந்தைக் காளியின் மார்பில் பூசுவதற்காக அரைத்துக்கொண்டிருந்தது.     

        அருகில் இன்னொரு பேய் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தது. மனித உடல். இரத்தம் விட்டு விழுதாக அரைக்கப்படுவதைப் பார்த்ததும் அதன் நாவில் நீர் சொட்டியது. சாந்து அரைக்கும் பேய் பார்க்காத சமயத்தில் அந்த சாந்தை வழித்து எடுத்தது.

        ஆனால் இதனை அந்த சாந்தரைக்கும் பேய் பார்த்துவிட்டது.
        ஆகவே சாந்து வழித்த பேயை எச்சரிக்கை செய்தது.
        அதுவோ பொசகெட்ட பேய்.
        மறுமுறையும் சாந்தை வழித்தது.

        '   கப்'பென்று சாந்தரைக்கும் பேய் அதன் கையைப் பிடித்துக்கொண்டது. அடுத்து ஒரு கூரிய வாளை எடுத்து சாந்து வழித்த பேயின் கையை வெட்டிவிட்டது.

        இந்தக் காட்சியைப் பார்த்த மன்னனும் புலவர்களும் வந்த வழியே திரும்பி வந்துவிட்டனர்.

        அடுத்தநாள் மூவரும் ஓரிடத்தில் இருக்கும்போது, தாம் கண்ட காட்சியைக் கம்பர் வெண்பாவாக அமைத்துப் பாடலானார்.

"கரைக்கு வடக்கிருக்கும் காளிகாளம்மைக்கு
அரைத்து வழி சாந்தைத் தொட்டப்பேய்"

என்று பாட ஆரம்பித்தார்.

        அப்போது அந்தப் பக்கமாக வந்த கம்பர் மகன் அம்பிகாபதி  உடனே தொடர்ந்து பாடினான்.

    ........................................................................- "உரைத்தும்
    மறைக்க அறியாத வன்பேயின்கையைக்
    குறைக்குமாம் கூன்கத்தி கொண்டு".

என்று பாடினான்.

        குலோத்துங்கன், ஒட்டக்கூத்தர், கம்பர் ஆகிய மூவருக்கும்   அதிர்ச்சி. தாம் மட்டுமே பார்த்த காட்சி; வேறு ஒருவருக்கும் தெரியாத காட்சி; தம்மால் யாரிடமும் கூறப்படாத காட்சி.
   
        எப்படி அம்பிகாபதிக்குத் தெரிந்தது?

        இதுதான் 'கண்டசுத்தி'.

        முழுவெண்பா:

"கரைக்கு வடக்கிருக்கும் காளிகாளம்மைக்கு
அரைத்து வழி சாந்தைத் தொட்டப்பேய் - உரைத்தும்
மறைக்க அறியாத வன்பேயின்கையைக்
குறைக்குமாம் கூன்கத்தி கொண்டு".

அன்புடன்
ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU