'கல்லாடம் கற்றவனுடன் சொல்லாடாதே!'
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
'கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழியின் தொடர்பாக 'கல்லாடத்தைப் பற்றி சில செய்திகள். இந்தப் பழமொழியைப் பற்றி
சிந்தித்தபோது ் அந்நூலை எடுத்து மீண்டும் ஒரு பார்வை பார்த்துவைத்தேன். அந்நூலுக்கு வித்வான் நாராயணபிள்ளை என்பவர் உரை எழுதியுள்ளார்.
இருப்பினும் கல்லாடம் நன்கு கற்ற ஒருவரையும் கேட்பது நல்லதல்லவா?
அப்படிப்பட்டவர் ஒருவரை எனக்கு நன்கு தெரியும். என்னுடைய மூத்த சகோதரர்,
பிள்ளைத்தமிழ்க்கவிஞர், புலவர் அன்பானந்தம். அவரிடமும் விபரங்கள் கேட்டேன்.
அவர் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் மதுரையில் படித்துக்கொண்டிருந்த
சமயத்தில் கல்லாடத்தை முதன்முதலில் கற்றதாகக் கூறினார். ஒரு பழைய
புத்தகக்கடையில் கல்லாடத்தை வாங்கினாராம். தன்னுடைய சிரியர் சுப்பிரமணிய
சாஸ்திரியார் என்னும் தமிழறிஞரின் வீட்டுக்குக் காலையில் சென்று, அவர் பள்ளிக்குப்
புறப்படும் முன்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லாடத்தை அவரிடம் பாடம் கேட்டதை
நினைவுகூர்ந்தார்.
'நீங்கள் பிற்காலத்தில் கவிதை இயற்றுவதற்குக் கல்லாடம் எவ்வகையில்
உதவியது?, என்று கேட்டேன்.
'அந்த நூல் மட்டுமில்லை. பன்னிருபாட்டியல், சிதம்பரப் பாட்டியல்,
வச்சநந்திமாலை என்று வேறு சில நூல்களும் பெரிதும் உதவின. கல்லாடத்தைக்
கற்பதற்கு சிரமப்பட்டது. அதைக் கற்றபின்னர், இம்மாதிரி நூல்களைப் படிப்பதில்
தேர்ச்சி ஏற்பட்டது. அதன்பின் மற்றநூல்களைக் கற்பது கடினமாகத்தோன்றவில்லை.
நீயும் அந்த நூலை எடுத்துவைத்துக்கொண்டு கொஞ்சமாக முடிந்தமட்டுக்கும் மறுபடியும் படி. இம்மாதிரி நூல்களை மறையவிட்டுவிடக்கூடாது. உடனடியாகப் புரியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் படிக்கும்போது புரிந்துவிடும். இம்மாதிரி நூல்களைப் படிப்பதற்குப் பூர்வபுண்ணியம் இருக்கவேண்டும். அது இருந்தால்தான் இவற்றைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம்கூட தோன்றமுடியும்', என்றார்.
இதனை இயற்றிய சிரியரின்பெயர் 'கல்லாடனார்', அல்லது 'கல்லாடர்'.
தமிழ் இலக்கிய உலகில் வெவ்வேறு கல்லாடர்கள் இருந்திருக்கிறார்கள்.
சங்க காலத்தில் கல்லாடர் என்னும் புலவர் இயற்றிய பாடல்கள் பதினான்கு
இருக்கின்றன. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின்
சமகாலத்தவர்.
இன்னொருவர் திருவள்ளுவமாலையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
தொல்காப்பியத்துக்கு ஏதோ ஒரு கல்லாடர் உரை எழுதியுள்ளார்.
திருமுறைகளிலும் ஒரு கல்லாட நாயனார் விளங்குகிறார். 'திருகண்ணப்ப
தேவர் திருமறம்' என்னும் பாடலின் சிரியர், அவர்.
இவர்களிலிருந்து காலத்தால் வேறு பட்டவர்தாம் கல்லாடத்தை இயற்றிய
கல்லாடர்.
'கல்லாடம்' என்ற சைவத் திருத்தலம் ஒன்று பாண்டியநாட்டில் இருந்தது.
திருவாசகத்தில் குறிப்பிடப்படுகிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் இந்நூல்
ஏற்பட்டிருக்கலாம் என்று அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.
சங்க நூல்களின் அடிச்சுவட்டில் எழுந்த இடைக்கால நூல் என்று
அறிஞர்களால் கருதப்படுவது.
சிந்தனைவளம், தெய்வ பக்தி, தர்மம், நற்கதி கியவைதாம் இந்நூலின்
அடைப்படை நோக்கம். மதுரையையும் திருப்பரங்குன்றத்தையும் ஒருங்கே சிறப்பிக்கிறார். அவ்வகையில் சிவனையும் முருகனையும் இணைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்.
இது ஒரு மைக்ரோ என்சைக்லோப்பீடியா எனலாம். இந்த நூல் சிறியதாக
இருந்தாலும் கூட ராமாயணம், பாரதம், புராணங்கள், திருவிளையாடற்புராணம் முதலியவற்றிலிருந்து கதைகள், திருத்தொண்டர் வரலாறு, இசைக்கலை, நாட்டியக்கலை, வாட்போர் முறை, நவரத்தினப்பரீட்சை என்று பலவிஷயங்கள் சுருக்கமாக விளக்கம் பெற்றுள்ளன.
வாழ்வியல், லௌகீகம், நடைமுறைவழக்குகள் போன்றவற்றைப் பற்றிய
செய்திகள் நேரடியாகவும் உவமைகளாகவும் கூறப்பட்டுள்ளன.
கல்லாடத்தில் வரும் பாடல்கள், யாப்பமைதியிலும், அணி அமைப்பிலும்
தனிச்சிறப்பைப் பெற்றவை. சிரியப்பாவுக்குரிய சிறப்புக்களையெல்லாம்
தன்னகத்தே கொண்டு விளங்குவதாக அறிஞர்கள் சொல்வர். சொல்ல விரும்புவதைப்
பல்வேறு நிலைகளில் கற்பித்துச் சொல்வார். வழக்கில் இல்லாத சொற்கள்,
அதிகம் வழங்காத சொற்கள், சுருங்கக்கூறி நிறைய உரைக்கும் இயல்பு போன்ற
சில பண்புகளால் இந்நூலைப் பயில்வது கஷ்டம் என்று கருதப்படுகிறது. மிகவும்
வலிய நடையில் இது அமைந்துள்ளது. அதிகமுயற்சிக்குப் பின்னரே பொருள்
கொள்ளமுடியும். திருப்பித்திருப்பிப் படித்தாலேயே அதன் அருமை பெருமையை
நன்குணரமுடியுமாம்.
பன்னெடுங்காலமாக இந்நூல் தமிழ்ப்புலமைக்கு இன்றியமையாததாகக்
கருதப்பட்டுவந்தது. தமிழ்ப்புலமையில் நாட்டம் கொண்டோர் இந்நூலைக்
கற்பது ஒரு பெரிய பெருமையாகக் கருதினர். ஒருவருடைய புலமைக்கு
அளவுகோலாக இந்நூல் கருதப்படும் அளவுக்கு இத் பெருஞ்செல்வாக்கும்
சிறப்பும் பெற்றிருக்கிறது.
ஆகவேதான் 'கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழி
ஏற்பட்டது.
பாயிரமும் உட்பட நூற்றிரண்டு சிரியப்பாக்கள் இந்நூலில் உள்ளன.
மொத்தம் 3408 அடிகள். விநாயாக்ர், முருகன் அகிய இரு தெய்வங்களையும்
வழுத்தும் இரு பாடல்கள் பாயிரத்தில் இருக்கின்றன.
மாணிக்க வாசகரின் நூலாகிய திருக்கோவையாரைச் சிறப்பித்து உலகில்
புகழ்பெறச்செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிலிருந்து நூறு
துறைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் சிரியப்பா இயற்றியுள்ளார்.
விநாயகர் வணக்கத்தில், சிவனிடமிருந்து மாங்கனி பெற்றசெய்தியை,
கருமிடற்றுக் கடவுளை செங்கனி வேண்டி
இடம் கொள் ஞாலத்து வலம்கொளும் பதத்த...
என்ற வரிகளில் காணலாம்.
திருவிளையாடற்புராணத்தில் 'தருமிக்குப் பொற்கிழி அளித்த படலச்செய்தியை
பின்வரும் வரிகளில் அறியலாம்.
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறி
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
என் உளம்குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள் அவிழ் குழல்சேர் கருணை எம் பெருமான்
மலர்ப்பதம் நீங்கா உளப்பெருஞ்சிலம்ப!
கல்லாடத்தைச் சிறப்பிக்கும் வெண்பா ஒன்று தனியனாகக் காணப்படுகிறது.
கல்லாடர் செய்பனுவல் கல்லாடநூறு நூல்
வல்லார் சங்கத்தில் வந்தருளிச் - சொல்லாயும்
மாமதுரையீசர் மனமுவந்து கேட்டு முடி
தாம்அசைத்தார் நூறுதரம்!
மதுரை சுந்தரேசர் முன்னிலையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இந்நூல்
அரங்கேற்றம் கண்டதாம். அப்போது அதனை ரசித்துப்பாராட்டி நூறு தடவைகள்
தலை அசைத்தாராம். இந்நூலில் நூறு துறைகளுக்கு உரிய நூறு பாடல்கள்
இருப்பதால் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு முறை வீதம் அங்கீகாரம் செய்யும்வண்ணம்
நூறுதடவைகள் தலையசைத்திருக்கிறார். நூறு பாடல்களை முன்னிட்டே 'கல்லாடநூறு' என்று வெண்பாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் பாடல்களின் எண்ணிக்கையை வைத்தும் நூல்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனவே. புறநானூறு, ஐங்குறுநூறு, இன்னா நாற்பது, திணைமாலை நூற்றைம்பது, போகர் ஏழாயிரம், மூலன் மூவாயிரம், இத்யாதி.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$