கணனியா, கணினியா?

கடாரத் தமிழ்ப் பேரறிஞர
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

முன்னுரை

    இந்த மடலை நான் தமிழ் டாட் நெட்டில் 1997-இல் எழுதினேன்.
அந்தச் சமயத்தில் Computer என்பதை எப்படி அழைப்பது என்ற கேள்வி
எழுந்தது. கணி, கணனி, கணினி முதலிய சில சொற்கள் அப்போது பயன்படுத்தப்
பட்டுவந்தன.
    'கணினி' என்பதே சரி என்று நிறுவுவதற்காக இந்த மடல் எழுதப்
பட்டது. இப்போது பெரும்பாலோரால் கணினி என்றே எழுதப்பட்டு வருகிறது.
    'இணையத்தில் ஜேய்பி' என்னும் நூலிலும் இந்தக் கட்டுரை வந்தது.    

----------------------முற்படுத்தல்-------------

அன்புள்ள இணையத்தோரே!

கணினியா, கணனியா?

    இன்னும் இந்த சந்தேகம் ஓய்ந்தபாடில்லை. ஏனென்று
தெரியவில்லை. புதிய சொல்லைத் தோற்றுவிக்கும்போதும் சரி; 
இதுகாறும் அம்மொழியில் இல்லாத ஒரு பொருளுக்குரிய பிறமொழிச்
சொல்லை மொழி பெயர்க்கும்போதும் சரி; சில அணுகுமுறைகளை
அனுசரிக்க வேண்டியது முக்கியம்.

        தமிழில் "கணி" என்ற சொல்லுக்கும் "கணக்கு" என்ற சொல்லுக்கும் 
சற்று வேறுபாடு உண்டு.

        "கணி" என்றால் "Computation" என்றுதான் பொருள்படும்.

        அது எப்படி என்பதை சற்றுப் பார்ப்போமே? பழங்காலத்தில் "கணியன்"
அல்லது "கணி" என்னும் ஒரு குறிப்பிட்ட வகைத் தொழில் புரிவோர்
இருந்தனர். தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில், புறத்திணையியலில் 
ஓரிடத்தில், 

        "மறுவில் செய்தி மூவகைக்காலமும்
         நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்...."  77-78

என்று வருகிறது.

        இந்நூலுக்கு உரை எழுதியவர்களில் ஒருவரான இளம்பூரணர்
இவ்வாறு கூறுகிறார்....

        "அறிவன் என்பது கணியனை.
        மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும்
இடை விடாது ஆகாயத்தைப்பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும், மின்னும்,
ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோள்நிலையும்,மழைநிலையும்
பார்த்துப் பயன் கூறல்; ஆதலால் "மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய
அறிவன்" என்றார்".

இது இளம்பூரணர் கூற்று.

        சுருக்கமாகக் கூறினால், "அறிவன்" அல்லது "கணியன்" என்பவர்கள்
வானநூலை நன்கு அறிந்து இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
முதலியவற்றைக்  கணித்துக்கூறுபவர்கள்.மேற்கூறிய விஷயங்களை
யெல்லாம்(வில்,மின்,etc.)  நோக்கி observation, சேகரித்து collection
and input, தொகுத்து compilation, ஆய்ந்து analysis, கணித்தல் computation.
        இதுதான் கணியனின் வேலை.
        அதாவது கணித்தல் வேலை.

        "புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
        பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
        விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
        கண்ணி உரைப்பான் கணி"

என்று வேறொரு பாடலையும் இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார்.

    கணியர்கள் பலவகையான கருவிகள் கொண்டு வானவீதியில்
கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கைக் கணக்கிட்டும்
கூறியதோடல்லாமல், அன்றாடம் நடக்கும்  ஆண்டு, மாதம், கிழமை,
திதி,சாமம், நாழிகை முதலியவற்றையும் கணித்துக் கூறினர்.
    பஞ்சாங்கத்தையும் அவர்களே கணித்தனர்.

       இதற்காகப் பல வகையான கணிதமுறைகளையும் அவர்கள்
கற்றிருந்தனர்.

       சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"-புகழ்
கணியன் பூங்குன்றனார்,கணி மேதாவியார் என்றெல்லாம் புலவர்கள்
இருந்திருக்கின்றனர். பின்னவர் சற்றுப் பிற்பட்டவர்- காலத்தால்.
"ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது" ஆகியவற்றை எழுதியவர்.
ஆகவே சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர்.

        கணித நூலைக் கணியர்கள் கணிப்புக்குப் பயன்படுத்தினர்.

        இது எட்டு அங்கங்களைக் கொண்டது. சங்கலிதம்(கூட்டல்),
விபகலிதம்(கழித்தல்), குணனம்(பெருக்கல்), பாகாரம்(வகுத்தல்), வர்க்கம்,
வர்க்கமூலம், கனம்,கனமூலம் ஆகியவை அவை.
        கணக்கு என்பது சற்று வித்தியாசமானது.இதில் நான்கு
simple functions of Arithmetic ஆகிய கூட்டல், கழித்தல், பெருக்கல்,
வகுத்தல் ஆகியவற்றுடன் எண்ணுதலும் இடம் பெறும்.

        "Accounts" என்ற பொருளிலும் "கணக்கு" என்ற சொல் பயன்படும்.

        "கணக்கன்" என்ற சொல் கணக்கப்பிள்ளையாகிய Accountantஐக்
குறிக்கும்.

        கணக்கிட்டு அறிவோரையும் 'கணக்கர்' என்பர்.

        Logic என்னும் தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான சமயவாதிகள் -
"சமயக் கணக்கர்".

        ஆகவே, "கணித்தல்" என்பதுதான் "Computation" என்பதனை
நேரடியாகக் குறிப்பிடும் சொல்.

    தற்சமயம்,"ஜாதகம் கணித்தல்" என்பதனை "Computation of
Horoscope" என்றுதான் கூறுகிறோம். "பஞ்சாங்கம் கணித்தல்" என்பதை
"Computation of Ephemeris or Almanac" என்றும் கூறுகிறோம்.        

       ஆகவே, Computer என்னும் கருவியைக் "கணினி" என்பதே நேர்.

அன்புடன்

ஜெயபாரதி

>>>>>>>>>>>>>>

கேள்வி:

>ஐயா, மிக நன்றிக்குரியவனாவேன் இது கிடைத்ததற்கு (அல்லது///
உடன் உயிரை விட்டுக்கொண்டிருந்தேன்); ஆயினும், சிறிது சந்தேகம்
மிச்சமிருக்கிறது; கணினி இற்கும் கணிணி இற்கும் >இடையில். அதையும்
சுழி, சுற்று வாரியாகச் சொல்ல   வேண்டும்.

அன்புள்ள

**************

JayBee Writes:


    "ண"கர உயிர்மெய்யின் பின்னால் இன்னொரு "ண"கர உயிர்மெய்
வருவதேயில்லை."ன"கரம் தான் பெரும்பாலும் வருகிறது.

உதாரணம்:
                 கணனம்       கணனை

                 குணனம்       குணனீயம்

                 வாணினி       பணினம்

                 பாணினி        பேணுநர்

ஆகவே,

"கணினி" என்பதே சீர்.

அன்புடன்

ஜெயபாரதி

========================


RETURN TO MAIN MENU