காப்பாக் கெச்சில்-கண்ட்ரகோடாலி

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
    டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



                    மேற்கு மலேசியா என்று குறிப்பிடப்படும் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி ஒரு காலத்தில் மிகவும் ஒதுக்குப்புறமான பிரதேசமாகக் கருதப்பட்டது. அதிலும் மிகவும் ஒதுப்புறம் திரெங்காணு என்னும் மாநிலம். அங்குள்ள இரண்டு மாவட்டங்களில் நான் சுகாதார அதிகாரியாக இருந்தேன். முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அங்கு தமிழர்கள் மிகக் குறைவு. ஆசிரியர்கள், டாக்டர்கள் போன்ற வேலைகளில் சிலர் இருப்பார்கள்.  
                    பெஸ¤ட் (BESUT) என்னும் மாவட்டத்தில் 1976-ஆம் ஆண்டில் இருந்தேன். அங்குள்ள மலாய்க்காரர்கள் ரொம்பவும் வித்தியாசமானவர்கள். அவர்களில் பலர் உயரமாக, சிவப்பு நிறமாக இருப்பார்கள். தங்களை ஓராங் லாவுட் என்று அழைத்துக்கொள்வார்கள். எங்கிருந்தோ கடலிலிருந்து வந்ததாகச் சொல்வார்கள். ஜாவாவிலிருந்து சில கூட்டத்தினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருக்கின்றனர். அதற்கும் முன்னர் இன்னொரு கூட்டம் கம்போடியாவிலிருந்து வந்திருக்கிறது.
                    அந்த வட்டாரத்தில் பெஸ¤ட் காரர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் கலாச்சாரமும் தனி மாதிரியானதுதான். அவர்கள் ஒரு தனித்தன்மை பொருந்திய ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள். அதற்குப் பெயர் காப்பாக் கெச்சில் (Kapak Kechil).
                    அது ஒரு சிறிய கைக்கோடரி(கோடாலி).
                    சாதாரணமானக் காப்பாக் கெச்சில் இரண்டிலிருந்து மூன்றங்குலம்  கொண்ட தலைப்பகுதியையும், ஏழெட்டு அங்குல நீளக் கைப்பிடியையும் கொண்டது. கைப்பிடி மரத்தாலும், தலை இரும்பாலும் ஆனது. garrrrr....
என்று சாணை பிடித்துத் தீட்டி வைத்திருப்பார்கள். சைடுப் பாக்கெட்டில் அடக்கம்.
                    ஒரு மாதிரியாகக் கையில் அதனைப் பிடித்துகொண்டு மணிக்கட்டிலிருந்து சொடுக்கி வெட்ட வேண்டும். அவ்வாறு சொடுக்கும்போது, மிக வேகமாகக் கோடரி பாய்ந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் கொத்திவிடும்.
                    பெரும்பாலும் தலையில்தான் வெட்டு விழச்செய்வார்கள்.
                    வெட்டு வாங்கியவர்கள் சாகமாட்டார்கள். Scalp கிழிந்து போகும். அல்லது கபாலம் உடையும்.
                    இன்னும் ஆழமாக விழுந்தால் மூளையின் இயக்கம் ஏதாவது பாதிப்புறும்.
                    அப்படியே செத்துப்போனால், அவன் தலைவிதி சரியில்லை என்று அர்த்தம். அந்த மாதிரி fragile-ஆன தலைவிதி உள்ளவன் எப்படியானாலும் ஏதாவது ஒரு வகையில் இறந்துவிடுவான் அல்லவா? Remote possibilities என்று சொல்வார்களே அந்த மாதிரி காரணங்கள். ரயிலே வராதபோது தண்டவாளத்தில் விழுந்து இறப்பதைப் போன்றது. எப்படி என்று கேட்கிறீர்களா? தண்டவாளம் பிரியும் இடத்தில் குப்புற விழுந்து, அப்போது பார்த்து பாயிண்ட் போட்டு, அந்த இடுக்கில் ஏதாவது மர்மஸ்தானம்     அகப்பட்டு.....<தலைக்குலுக்கல்>..  <சே, என்ன விபரீதமாகக் கற்பனைத் தறிகெட்டு ஓடுகிறது!>
                    ஒரு ஞாபகத்திற்காக, ஒரு எச்சரிக்கைக்காக இப்படி வெட்டுவார்கள். கொல்வது குறிக்கோளல்ல. "இதனால் யாபேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றாஆஆஆல்.....!" அந்த மாதிரி.
                    பெரும்பாலும் அவர்களுடைய பெண்கள் விஷயத்தில் ஏடாகூடமாக நடந்துகொள்பவர்களுக்கு இந்த அடையாள வெட்டு கிடைக்கும்.
                    இதைப் பிரயோகிப்பதில்கூட ஒரு innovation செய்திருந்தார்கள். ஒருவகைக் கனமான பிரம்பு இருக்கிறது. சாதாரணமாகக் கனமான பிரம்பு வளைய மாட்டாது. ஆனால் இந்த வகைப் பிரம்பு வளைந்துகொடுக்கும்.
                இரண்டடி நீளமுள்ள பிரம்பின் ஒரு கோடியில் காப்பாக் கெச்சிலின் கைப்பிடியை இறுகக் கட்டிவிடுவார்கள். இன்னொரு முனையை இடது கையில் பிடித்துக்கொண்டு அடிபடவேண்டிய ஆசாமியிடம் செல்வார்கள். இடது கையால் பிடித்துக்கொண்டு வலதுகையால் கோடரியின் தலையைப் பிடித்து இழுத்து விடுவார்கள். அது விசையாகச் சென்று ஆசாமியின் தலையில் பாய்ந்துவிட்டுத் திரும்பிவிடும்.
                    பல சமயங்களில் கையாள் ஒருவன் ஓட்டும் சைக்கில் வண்டியின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டு, அடிபடவேண்டிய ஆசாமியைப் பின்பற்றிச் சென்று பின்னாலிருந்து வெட்டிவிட்டு வேகமாகச் சென்றுவிடுவார்கள்.
                    ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் இதே மாதிரியான சிறிய கைக்கோடரி சிவகங்கைச் சீமையில் பயன்படுத்தப்பட்டது. அதை அங்கு  'கண்ட்ரகோடாலி' என்று குறிப்பிடுவார்கள்.
                    பெஸ¤ட்டின் காப்பாக் கெச்சில் கோடரியும் சிவகங்கைக் கண்ட்ரகோடாலியும் ஒரே மாதிரியாக இருக்கும்.
                    சிவபெருமானுடைய உற்சவர் சிலையில் வலது மேற்கையில் இரண்டு விரல்களில் ஒரு சிறிய கோடரியைப் பிடித்திருப்பார்.

                    கீழ்க்கண்ட இலக்கில் ஒரு காப்பாக் கெச்சில் கோடரியைக் காணலாம்.
                    அருகில் இருக்கும் கையைக் கொண்டு அது எத்தனை பெரிது என்று அளவிட்டுக்கொள்ளலாம்.
                    இது இரும்பால் ஆனது அல்ல. ஒருவகையான பித்தளை.
                    அலங்காரமாகச் செய்யப்பட்டிருக்கிறது.
                    ஆனாலும் வெட்டும். நல்லா பதமாவேயிருக்கு. ஒரு டத்தோ எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொருள். இதுவும் க்ரிஸ்(kris) என்னும் குறுவாளும்.

அன்புடன்

ஜெயபாரதி



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU