கன்னா பின்னா
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee
கம்பரைப் பற்றிய வரலாறுகளைத் தமிழ் நாவலர்
சரிதை, தமிழ் புலவர் வரிசை, அபிதான சிந்தாமணி, விநோதரசமஞ்சரி, தனிப்பாடல் குறிப்புகள்
போன்றவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவற்றில் கூறப்பட்ட வரலாற்றுச்செய்திகள் உண்மைதானா, ஒரே காலத்தில்
நடந்தவையா என்பதெல்லாம் ஐயப்பாட்டிற்கு உரியவை. கம்பர் உண்மையிலே யார் என்பதுகூட
மர்மம்தான்.
தந்தை பெயர் ஆதித்தன்.
உவச்ச பட்டர் குலத்தைச் சேர்ந்தவர்.
கம்பர் கம்பங்கொல்லையில் கண்டெடுக்கப்பட்டவர்.
பிறப்பில் ஏதோ பெரிய மர்மம் இருப்பது புலப்படும்.
கம்பர் பற்றிய பல கதைகள் மிகவும் ரசமானவையாக இருக்கும்.
அவற்றில் ஒன்று............
'கன்னா பின்னா'.
அந்த கம்பன் கதையில் சில வேறுபாடுகள் தென்படுகின்றன.
சுருக்கமாக.....
ஒரு நாட்டுக்கட்டை ஒருவன், கவிதை எழுதிப் பரிசில் பெற ஆசைப்பட்டான்.
அவனுடைய நண்பனிடம் யோசனை கேட்டான். அவன் இவனுடைய காலை வாரிவிட விரும்பினான்.
ஆகவே "கண்டதையும் கேட்பதையும் வச்சு எழுதுடா", என்று சொல்லிவிடுகிறான்.
நாட்டானும் கவிதை புனைவது சம்பந்தமாக ஆழ்ந்து சிந்தித்தவாறு
வெளியில் கிளம்பிச்சென்றான்.
வெளியில் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது
அவர்கள் அவ்விளையாட்டுக் குரிய பாட்டைச் சொல்லி விளையாடினர்.
சிறுவர் சிறுமியருக்கென்று சில விளையாட்டுகளுக்குரிய பாட்டுக்கள் இருக்கின்றன
அல்லவா - 'கொலை கொலையாம் முந்திரிக்கா, நரிய நரிய சுத்தி வா' என்ற பாட்டு சென்ற
தலைமுறைவரைக்கும் பிரபலமாக இருந்தது. "ஏன் இப்போது இல்லையா" என்று கேட்கலாம்.
சினிமாவிலும் சின்னத்திரையிலும் வருகிறது; வாஸ்தவம்தான். ஆனால் இந்தக் காலத்தில்
எநதச் சிறுவர்களும் இந்தப்பாட்டையெல்லாம் பாடிக்கொண்டு விளையாடுவதில்லை. விளையாட்டுகளும்
மாறிவிட்டன. விளையாடுவதற்கு அவர்களுக்கு நேரம்தான் ஏது?
அந்தப் பண்டைய காலச் சிறுவர்கள், "மண்ணுண்ணி மாப்பிள்ளையே
மண்ணுண்ணி மாப்பிள்ளையே" என்று பாடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே'...... அதைப் பிடித்துக்கொண்டான்.
அதனையே முதலடியாகக் கொண்டான்.
அப்போது காகம் ஒன்று 'காகா'வென்று கரைந்தது. உடனே 'காவிறைய'
என்்று எழுதிக ்கொண்டான்.
அடுத்தாற்போல குயில் ஒன்று கூவென்று கத்தியதைத் தொடர்ந்து
'கூவிறைய' என்றும் எழுதிக்கொண்டு போனான்.
அப்போது அவனுடைய இன்னொரு நண்பனைப் பார்த்து, தான் பாட்டெழுதுவதாகவும்,
'மண்ணுண்ணி மாப்பிள்ளையே, காவிறைய, கூவிறைய', என்றும் கூறினான்.
அதைக் கேட்ட அந்தா நண்பன், '"போடா போ, போக்கத்த பயலே! ஙொப்பன்
கோவில் பெருச்சாளி மாதிரி, கோவில் மண்டபத்திலயே திரிஞ்சு¢, அங்க கெடைக்கும்
உண்டக் கட்டியப் பொறக்கிச் சாப்பிட்டவன். நீ அவனவிட மோசமானவன்', என்று ஆசீர்வதித்துவிட்டுச்
சென்றான்.
'ஙொப்பன் கோயில் பெருச்சாளி'! "மூளைக்குள் ஆயிரம் வாட் பல்ப்
ஒன்று பளிச்சிட்டது", என்று சொல்லிவிடலாம். அதெல்லாம் அருமையான க்லிஷே. ஆனால்,
"அந்தக் காலத்துல எங்கங்க ஆயிரம் வாட் பலுப்பு?" என்று யாராவது சொல்லக்கூடும்.
ஆகவே 'ஆயிரம் மின்னல்கள் வெட்டின' என்று சொல்வோ.
'ஙொப்பன் கோயில் பெருச்சாளி'யையும் சேர்த்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்தவுடன் அந்தப் பாட்டை தன் மனைவிடம் சொல்லிக்
காட்டினான்.
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறைய கூவிறைய
ஙொப்பன் கோவில் பெருச்சாளி
அதற்கு அவள், 'சும்மா கன்னா பின்னா என்று எதையாவதை பிதற்றிக்கொண்டு
திரியாதீர்கள்', என்று கண்டித்தாள்.
அந்த இரு சொற்களும் அடுத்து சேர்ந்தன.
உண்டபின்னர் வெளியே வரும்போது தன்னுடைய பழைய நண்பனை இன்னொரு
நண்பனுடன் பார்த்தான்.
அவர்களிடம் தன் பாட்டைச்சொன்னான்.
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறைய கூவிறைய
ஙொப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா
நண்பன் சொன்னான்: "தோ... அந்தக் கடோசி அடி கொறையுது. அதுனால
'மன்னா தென்னா'ன்னும் சேத்துக்கோ. சரியாய்டும்', என்றான்.
அந்த இன்னொரு நண்பன், "தோ பாரு..... இந்தப் பாட்டை ராசாகிட்ட
சொல்றதுன்னா அவரைப் பத்தி எதுனாச்சும் சொல்லித்தான் முடிக்கோணும். அதுனால,
கடோசிக்கிக் கடோசில, ராசாவ மெச்சி, 'சோழரங்கப்பெருமாளே'ன்னுட்டும் சேத்துக்க',
என்றான்.
பாடல் பூர்த்தியாகிற்று
மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறைய கூவிறைய
ஙொப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழரங்கப்பெருமாளே!
இதற்குப் பொருள்- நான் கேட்டது - அடுத்து......
நான் கேட்ட பொருளையும் எழுதிவிடுகிறேன்.
நாட்டான் அரசவைக்குச் சென்று இப்பாடலைச் சொன்னதும்
அங்கிருப்பவர்கள் முதலில் திகைத்து, பின்னர் அவையதிரச் சிரித்தார்கள்.
அப்போது கம்பர் எழுந்தார். சொன்னார்:
"அந்தப்பாட்டில் நல்ல நயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல்
இவ்வாறு சிரிப்பது சிறப்பல்ல. இந்த அவையைப் பற்றி தவறாக நினைப்பார்கள். இந்த
அவைக்கு அவர் விருந்தினராக வந்தவர். அவரிடம்போய் பாடலுக்குப் பொருளையும் கேட்பது,
கற்றவர்கள் விழுமியிருக்கும் இவ்வவைக்குச் சிறப்பல்ல. ஆகவே நாம்தான் அந்தப் பாடலுக்குப்
பொருள் சொல்லவேண்டும். அதுவே நம் அவைக்கு மரியாதையும் கௌரவமும். ஆகவே நானே
பொருளைச் சொல்கிறேன்",
என்ற பீடிகையுடன் பொருளைச் சொன்னார்.
மண்ணுண்ணி = மண் + உண்ணி; மண்ணையுண்ட கண்ணனாகிய திருமாலே!
மன்னர்கள் திருமாலின் அம்சத்தில் உள்ளவர்கள் என்பது ஐதிகம். அதன்
அடிப்படையில் வந்ததுதான் தேவராஜ வழிபாடு எனப்படும் DevarRaja Cult.
இதனை நாம் க்மெர், தாய் நாகரிகங்களில் பார்க்கலாம்.
மாப்பிள்ளையே = மா + பிள்ளை; 'மா' ஆகிய ஸ்ரீலட்சுமிதேவியின் மகனாகிய
மன்மதனே
காவிறைய = தேவலோகத்துக் கற்பகத்தருவின் தலைவனாகிய இந்திரனே
கூவிறைய = விண்ணுலகம் மட்டுமல்லாது மண்ணுலகத்திற்கும் தலைவனே
ஙொப்பன் கோ = உன் தந்தையும் மன்னன்; மன்னர் பரம்பரையில் வந்தவனே
விற் பெருசு ஆளி = வில்வித்தையில் அவன் (யானையையும் விழுங்கிவிடக்
கூடிய) ஆளியைப் போன்ற மிகப் பெரியவன்.
கன்னா = கர்ணனைப் போன்ற கொடைவள்ளலே
பின்னா = கர்ணனுக்குப் பின்னால் அத்தகைய கொடைவள்ளல் இல்லையே என்ற
குறை தீர்க்க வந்தவனே
மன்னா = மன்னவனே
தென்னா = தென்னாடுடையவனே
சோழ அரங்கப் பெருமாளே = சோழ அரசவையின் தலைவனாக விளங்குபவனே!
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU