கதாசரித் சாகரம்
வித்யாலங்கார
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கதையும் வரலாறுமாக விளங்கும் கடல்.
இதை எழுதியவரின் பெயர் சோமதேவபட்டர். இந்த
நூலை ஆங்கிலத்திலும்கூட மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதில் கண்டுள்ள கதைகள்
எத்தனையோ காலமாக இந்தியாவில் நன்கு பரிச்சயமாகி நிலவி வருபவைதாம். பல கதைகள்
வெளிநாட்டிலும் காணப்படுகின்றன.
ஆனாலும் கதாசரித் சாகரத்துக்கும் மூலநூல்
ஒன்று உண்டு.
அதன் பெயர் பிருஹத் கதா மஞ்சரி.
பெருங்கதை மலர்க் கொத்து.
அது படிப்பதற்குக் கடினமாக இருந்ததால் காஷ்மீரத்து
அரசியாகிய சூரியவதிக்கு அதனை எளிதான நடையில் மாற்றி சாதாரண மக்களுக்கும் புரியும்படி
எழுதவேண்டும் என்ற எண்ணமேற்பட்டது.
ஆகவே அவளுடைய ஆஸ்தான பண்டிதராகிய சோமதேவபட்டரிடம்
சொன்னாள்.
அவர் மேற்படி கதையை 'கதா சரித் சாகரம்' என்னும்
பெயரில் எழுதிவைத்தார்.
கதாசரித்சாகரத்தின் மூலநூல் 'பிருஹத்கதாமஞ்சரி'
என்று சொன்னேனல்லவா?
அதற்குப் பாட்டனாகிய நூலும் ஒன்று இருக்கிறது.
அதன் பெயர் 'பிருஹத் கதா'. அதை எழுதியவர்
குணாட்யர் எனப்படும் பெருங்கவிஞர்.
ஆனால் ஒன்று. இதை அவர் சமஸ்கிருதத்திலோ பிராகிருதத்திலோ
எழுதவில்லை.
பைசாச்சி என்னும் மொழியில் எழுதினார். அவர்
முதன்முதலில் எழுதிய நூலில் ஏழு லட்சம் சுலோகங்கள் இருந்தன.
மூலநூலின் பெரும்பகுதி காணாமற் போயிற்று.
ஆனால் பல நூல்களுக்கும் நாடகங்களுக்கும் அது
ஒரு பெரிய ஊற்றுக்காலாக இருந்திருக்கிறது.
பண்டைய பாரதத்தின் பெருமன்னர்கள் சிலர். மௌரியர்கள்,
குப்தர்கள் முதலியோரைத் தொடர்ந்து வந்த பெருமன்னர் ஹர்ஷவர்த்தனர். அவர் ஒரு
பெரிய புலவர். மூன்று நாடக நூல்கள் எழுதியுள்ளார். அந்த நாடகங்களுக்கு
ஏற்ற கதைகளை அவர் குணாட்யரின் நூலிலிருந்துதான் எடுத்துக்கொண்டார்.
தமிழிலும் பெருங்கதை என்ற பெயரில் அதன் பகுதிகள்
வழங்குகின்றன.
பிருஹத்கதையில் வரும் பல கதைகளில் ஸ்வர்ணத்வீபம்
என்னும் இடத்துக்கு இந்திய வர்த்தகர்கள் கப்பல்களில் சென்று வாணிபம் பண்ணுவதாய்
வரும். ஸ்வர்ணத்வீபம் என்பது இன்றைய மலாயா தீபகற்பம். இந்த
இடம் அவர்களுக்கு அக்காலத்தில் நன்கு பரிச்சயமானதாக இருந்திருக்கிறது.
இந்த நூலை அவர் எழுதியது பற்றி ஒரு பெரிய
கதை உண்டு.
அதை ஏற்கனவே அகத்தியரில் எழுதியிருக்கிறேன்.
அதையும் இங்கே படித்துக்கொள்ளுங்கள்.
அப்போதுதான் காண்ட்டின்யூட்டீ இருக்கும்.
ஒருநாள் மோதகத்துக்குப் பூர்ணத்தை மனைவியார்
வேக வைத்துக் கொண்டிருக்கும்போது 'மோதகம்' சம்பந்தமான ஒரு வரலாற்றுக்கதை நினைவுக்கு
வந்தது. அன்று சங்கடஹர சதுர்த்தி. அதை முன்னிட்டு சுங்கைப் பட்டாணி சித்திவிநாயகர்
கோயிலில் வினியோகம் செய்வதற்காக மோதகம் செய்வதுண்டு.
நீண்ட காலத்துக்கு முன்னர் படித்த கதை.
'மோதகம்' என்னும் சொல் வளர்ச்சியற்றதொரு மொழியில்
ஒரு பெரும்காப்பியம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.
மௌரியர்களுக்குப் பின்னர் பாரதத்தின் பெரும்பகுதியில்
நிலையற்ற ஆட்சி ஏற்பட்டது.
அக்காலகட்டத்தில் வெளிநாட்டினர் ஏராளமாக பாரதத்துக்குள்
நுழைந்துவிட்டனர். அலெக்ஸாந்தரைத் தொடர்ந்து வந்த கிரேக்கர், பாரசீகர், பார்த்தியர்,
சகர், ஹ¤ணர், குஷாணர், பாணர், பஹ்லவர் என்று பலதரப்பட்டவர்கள்
வந்து சேர்ந்தனர்.
ஒவ்வொருவரும் அவரவருக்குத் தக்கபடி தனித்
தனி நாடுகளைப் பிடித்துக் கொண்டு ஆண்டுவந்தனர்.
அவர்களில் சக(Saka) வம்சத்தினர் வலுவானவர்கள்.
அவர்கள் மத்திய ஆசியாவில் வாழ்ந்திருந்தபோதே பயங்கரத்தன்மைக்குப் பேர் போனவர்கள்.
சிறந்த வில்லாளிகள். லாகவமான குதிரை ஓட்டப்பயிற்சி உடையவர்கள்.
அவர்களுடைய போர்முறைகள், வில்வித்தை, குதிரையேற்றம்,
பயங்கரவாதம் ஆகியவற்றின் கலவை, அக்காலத்தில் அவர்களை முன்னணியில் கொண்டுவந்துவிட்டது.
ஆகவே சகர்கள் தங்களுக்கென்று ஒரு பேரரசை உருவாக்கிக்கொண்டனர்.
சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 'குப்த வம்சத்தினர்'
தோன்றினர்.
அவர்களில் சந்திரகுப்தன் என்னும் மன்னன்,
சகர்களை அடக்கி, குப்த பேரரசை நிறுவினான்.
ஒரு பழைய அரசவம்சத்தைச் சேர்ந்த மிக அழகிய
அரசகுமாரி ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவள் ஒரு சமஸ்கிருதப் பண்டிதை.
ஒருமுறை நீச்சல் குளத்தில் 'ஜலக்கிரீடை' என்னும்
நீர்விளையாட்டில் சந்திரகுப்தனும் ராணியும் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீரை எடுத்து
ராணியின்மீது அடித்தான்.
ராணி, "மோதக! மோதக" என்று உரக்கக் கூவினாள்.
உடனே சந்திரகுப்தன் கையைத் தட்டி, சேடிமாரை
அழைத்து, "யாரங்கே? உடனே சமயலறைக்குச் சென்று ஒரு தங்கத் தாம்பாளத்தில் மோதகம்
எடுத்து வா!" என்றான்.
சிறிது நேரத்தில் தட்டு நிறைய மோதகம் வந்துசேர்ந்தது.
அதனை எடுத்து ராணியிடம் கொடுத்தான்.
ராணி திகைத்தாள்.
"ஏன் மோதகத்தை இந்த நேரத்தில் நீருக்கு நடுவில்
நின்று கொண்டு கொடுக்கிறீர்கள்?"
"நீதானே மோதகம் கேட்டாய்?"
"நான் எங்கே கேட்டேன்?"
"இல்லையே. நீதானே சற்று முன்னம் "மோதக, மோதக"
என்று கேட்டாய்"
உடனே ராணி பக்கென்று சிரித்துக்கொண்டு தலையில்
அடித்துக் கொண்டே,
"ஐயே! இதுதானா உம்ம லெட்சணம்? நல்லாருக்கு!
'மோதக மோதக' என்றது பலகாரத்தைக் குறித்துச் சொன்னது இல்லை. 'மா உதக' என்பது.
அதாவது "(தண்ணீரை) உதறாதே" என்று சொன்னேன். புணர்ச்சி விதியின்படி 'மா உதக'
என்பது 'மோதக' என்று புணரும்", சொல்லிவிட்டு ஒரு மாதிரியாக அவனைப் பார்த்தாள்.
அருகில் இருந்த சேடிமார்கள் ஒரு தினுசாகப்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
சந்திரகுப்தன் அப்படியே வெட்கிச் சிவந்து
போனான்.
உடனே......
உடை அணிந்துகொண்டு சந்திரகுப்தன் அவைக்குச்
சென்றான். தன்னுடைய அவைக்களப் புலவர்களை அழைத்தான்.
"எனக்கு உடனடியாக சம்ஸ்கிருதம் பயின்றாகவேண்டும்.
நான் அதில் புலமை பெற்றவனாக மாறிடல் வேண்டும். எத்தனை நாட்களில் சொல்லித் தருவீர்கள்?"
ஒவ்வொருவரும் வருடக்கணக்கில் சொன்னார்கள்.
குணாட்டியர் என்னும் பண்டிதர் ஓராண்டில் கற்றுக்
கொடுப்பதாகச் சொன்னார்.
"போதாது. இன்னும் விரைவாகக் கற்றுக்கொடுக்கவேண்டும்"
அப்போது பாணினி என்னும் புலவர் எழுந்து,
"மகாராஜா! நான் உங்களுக்கு ஆறே மாதங்களில்
சொல்லித் தருகிறேன்", என்றார்.
குணாட்டியர்: ஏனய்யா? உனக்கென்ன புத்திகித்தி பேதலித்துவிட்டதா,
என்ன? சமஸ்கிருதத்தை ஆறு மாதத்தில் சொல்லிக் கொடுப்பதாவது?
பாணினி: முடிந்ததைத்தானே சொன்னேன்? உமக்கு முடியவில்லையென்றால்
நான் என்ன செய்வது? என்னால் முடியும்.
குணாட்டியர்: மனிதனாகப் பிறந்த யாராலுமே ஆறு மாதத்தில் சம்ஸ்கிருதத்தைச்
சொல்லித்தரமுடியாது.
பாணினி: நான் செய்துகாட்டுகிறேன்.
குணாட்டியர்: அப்படியானால் சரி. நீர் மட்டும் ஆறே மாதங்களில்
மன்னனை ஒரு சமஸ்கிருதப் பண்டிதனாக ஆக்கிவிட்டாயானால், நான் சமஸ்கிருதத்தில்
இனிமேல் பேசுவதையும் எழுதுவதையும் படிப்பதையும் அறவே வ்¢ட்டு விடுகிறேன்.
பாணினி: Deal!
ஆறு மாதங்கள் ஆயின.
அவைக்களப் புலவரவை கூட்டப்பட்டது.
சந்திரகுப்தனுக்கு சம்ஸ்கிருதத்தில் பல பரிசோதனைகள்
வைக்கப்பட்டன.
அதன் முடிவில் அவன் புலவன் என்ற தகுதியைப்
பெற்றான்.
(பாவம். அப்போதெல்லாம் அந்த் புஸ்திமீசை சம்பந்த
நூறு டாலர் டாக்டரேட் ஏதும்
இல்லாமற ்போய்விட்டது. இருந்திருந்தால் பாணினியும் சந்திரகுப்தனும் அப்படியெல்லாம்
அந்த ஆறு மாதங்கள் அல்லாடி யிருக்கவேண்டாம்.)
பாணினி வெற்றி மதர்ப்பில் தலையை உயர்த்திச்
சற்றுப் பக்கவாட்டில் சாய்த்து, நுனி மூக்கின் வழியாக, ஓரக்கண் பார்வையை
குணாட்டியரின்மீது லேசாகச் செலுத்தினார். (கண்ணாடியை வைத்துக்கொண்டு செய்து
பாருங்கள். கொஞ்சம் பயிற்சி தேவை. ரொம்பவும் பயன்படும்.)
குணாட்டிர் எழுந்தார். தம்முடைய ஆசனத்தின்
மீது தம்முடைய கையில் வைத்திருந்த நூல் கட்டுக்களை அப்படியே கடாசினார்.
தலை குனிந்தவாறு அவையை விட்டு வெளியேறினார்.
அரண்மையை விட்டு, நகரை விட்டு, நாட்டை விட்டு
கால் போன போக்கில் சென்றார்.
RETURN TO MAIN MENU