மகவோட்டம்
3


A STUDY IN ANCIENT TAMIL CLIMATOLOGY AND SOCIO-ECONOMICS

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

மகவோட்டம்:



                    மக நட்சத்திரத்துடன் பூரணச் சந்திரன் கூடியிருக்கும் போது - மாசி மகத்தன்று -  அது அந்த நட்சத்திரத்துடன் கொள்ளும் தொடர்பை வைத்து மகவோட்டத்தைக் கணித்தார்கள்.

                    மக நட்சத்திரக் கூட்டத்தில் ஜந்து நட்சத்திரங்கள் வடக்கு தெற்காக அமைந்துள்ளன.
                    பௌர்ணமிச் சந்திரன் அந்த நட்சத்திரங்களுக்கு முற்றிலும் தெற்கில் இருந்தால் மிகவும் நல்லது.

                    ஆனால், நட்சத்திரங்கள் சந்திரனுக்குத் தெற்கில் காணப்படலாகாது. கெடுதல். உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

                    இந்த நட்சத்திரங்களில் எத்தனை நட்சத்திரங்கள் சந்திரனுக்குத் தெற்கில் தள்ளி நிற்கின்றனவோ, அந்த அளவிற்கு இந்தப் பஞ்சம் அதிகரிக்கும்.    
                    மகநட்சத்திரத்தின் தெற்குக்கோடியில் உள்ள நட்சத்திரத்தை சேர்ந்து சந்திரன் இருந்தால் வளம் மிகுதியாக இருக்கும்.
                    ஒரு நட்சத்திரம் சந்திரனுக்குத் தெற்கில் தள்ளி நின்றால் முக்கால்பங்கு வளம்.
                    மூன்று நட்சத்திரங்கள் தெற்கில் தள்ளியிருந்தனவென்றால் பாதிப் பங்கு வளம்.

                    தெற்கில் நான்கு நட்சத்திரங்கள் தள்ளிப்போய் அதனால் சந்திரன் வடக்கில் உள்ள நட்சத்திரத்துடன்
சேர நேரிட்டால் உணவுப் பஞ்சம் மிகுதியாக இருக்கும் என்று கணக்கிட்டார்கள்.


                    பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால் பண்டைக் காலத்தில் உணவுப் பொருள்களை வைத்தே அக்காலத்து இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் விளங்கியது.
                    ஆகவே, உணவுப் பொருள்களின் விளைச்சல் அல்லது இறக்குமதிதாம் சமுதாயத்தின் அமைப்பை நிர்ணயிக்கக் கூடியதாக விளங்கின. உணவுப் பொருள்களின் மிகுதியைப் பொருத்துத்தான் படைகளும் படையெடுப்புகளும் ஏற்பட்டன.
                    ஆகவே, அரசியலையும் அரிசியல் மிகவும் பாதித்தது. உணவுப் பொருள்களின் விளைச்சல் செலாவணி முதலியவற்றிற்கு ஏற்ப சேமிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி முதலியவற்றை முன்கூட்டியே நிதானிக்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் அக்காலத்தில் இருந்தது.
                    இதற்கு மகவோட்டம் மிகவும் பயன்பட்டது.

                    மகவோட்டத்தைப் பற்றிய பழம் பாடல் ஒன்று உண்டு.

காணு மாசிக்கலை மதியைக்
    கருது மக மீனான்கதனில்
பேணுந்தென்பான் மீன் சேரிற்
    பெரிதாம் அ·கம் தானென்
பூணிலிரண்டு முக்காலாம்
    பொருந்து மூன்றிற் பாதியதாம்
சேணிற் வடபான் மீன் சேரிற்
    செகத்தி லன்னம் சிறிதாமே!


                    இந்த ஆண்டு மகவோட்டம் எப்படி இருக்கும்?


====================================



                    "இந்தா அந்தா" என்று ஒருவழியாக 'மகவோட்டம்" கட்டுரையை சாப்ஜாடா செய்தாச்சு.
    அந்தப் பாடலை ஏதோ ஒரு பஞ்சாங்கத்திலோ அல்லது சோதிட நூலிலோ பார்த்தேன்.
                    பார்த்து இருபதாண்டுகளுக்கு மேல் ஆகிறது.
                    அந்தப் பாடல் மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது.

காணு மாசிக்கலை மதியைக்
    கருது மக மீனான்கதனில்
பேணுந்தென்பான் மீன் சேரிற்
    பெரிதாம் அ·கம் தானென்
பூணிலிரண்டு முக்காலாம்
    பொருந்து மூன்றிற் பாதியதாம்
சேணிற் வடபான் மீன் சேரிற்
    செகத்தி லன்னம் சிறிதாமே!

                    நான் காடு மலைப் பிரதேசங்களில் தனியாக என் குடும்பத்தோடு இருந்தேன் என்று அவ்வப்போது சொல்லிவந்திருக்கிறேன்.    
                    1974 ·பெப்ருவரியிலிருந்து 1977 நவெம்பர்வரை அந்தத் தனிமை நீடித்தது.
                    அந்தக் காட்டுமலைப் பிரதேசங்கள் இன்னோர் உலகத்தைச் சேர்ந்தவை.
                    அங்கு Black Magic என்பது Order of the Day.
                    அங்கு லெகெண்டா Legenda, சரித்தா ஸாமான் டூலு Cheritha Zaman Dulu போன்ற பழைய வழக்குகள், கதைகள், மரபுவழிச் செய்திகள் முதலியவை நிறைய உண்டு.
                    இவற்றையெல்லாம் ஆராயும் வழக்கம் எனக்கு எப்போதுமே உண்டு.
                    இதற்கும் மூல காரணம் ஒன்று உண்டு.
                    இல்லை. இரண்டு மூன்று காரணங்கள் உண்டு.
                    அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு சொல்கிறேன்.
                    தமிழ்நாட்டில் நான் மருத்துவம் படித்த காலத்தில் எங்கள் பூர்வீக வட்டாரத்தில் சில Legends எனப்படும் கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு.
                    அவற்றில் 'அரிகுரிப் பட்டினம்' என்ற பட்டினத்தைப் பற்றிய கதை ஒன்று.
                    'ஓஹோ'வென்று இருந்து, பின்னர் மறைந்த நகரம்.
                    கல்வெட்டுக்களைப் படிக்க ஆரம்பித்தபோது அடிக்கடி 'அருவியூர் குலசேகரன்பட்டினம்', 'நானாதேசி பெருந்தெருவான அருவியூர் குலசேகரன்பட்டினம்' என்ற பெயர் காணப்பட்டது.
                    அதை ஆராய ஆரம்பித்து, சில ஆண்டுகளில் அந்த மாதிரி பட்டினம் உண்மையிலே இருந்து, பின்னர் மறைந்துபோய், அதன் குடியினர் மூன்று பிரிவாகச் சிதறிப்போனது ஆகிய விபரங்களையெல்லாம் கண்டுபிடித்து வெளியிட்டேன்.

                    (அடுத்த வாரம் அருவியூராரின் குலதெய்வமாகிய தேசிவிநாயகர் ஒருவருக்கு சிங்கம்புணரியில் மகா சங்கடஹர சதுர்த்தியை அன்னதானத்துடன் கொண்டாடவிருக்கின்றனர்.
                    யார்?
                    அந்த சிதறிப்போன குடியினராகிய அருவியூரார்களின் பரம்பரையினர்.)

                    ஆகவேதான்......
                    இந்த லெஜெண்டுகள், அத்தைபாட்டிக் கதைகளை நான் சும்மா Brush Off, Shrug Off செய்துவிடுவதில்லை.

                    அந்தப் பழக்கதோஷத்தினால்தான் இந்தப் பாடலையும் உற்றுப் படித்து, அதன் பின்னணியில் சில ஆய்வுகளைச் செய்து பார்த்தேன்.

                    1978-இலிருந்து நான் கோத்தாபரு என்னும் நகரில் இருந்தபோது - அதுவும் ஒதுக்குப்புறமான இடம்தான் - இந்திய வான சாஸ்திரம், கால ஆராய்ச்சி ஆகியவற்றை இன்னும் வேறு சில ஆராய்ச்சிகளுடன் செய்துகொண்டிருந்தேன். 1984 கடைசியில் நான் கங்கார் என்னும் ஊருக்கு மாற்றலாகி வந்தேன். அங்கிருந்தபோதுதான் மிகவும் புகழ் வாய்ந்த ஹாலி வால்நட்சத்திரம் வந்தது.
                    அதை முன்னிட்டு இன்னும் மிக மும்முரமான ஆராய்ச்சி.
                    'வால் நட்சத்திரம்' என்ற தலைப்பில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன்.

                    அப்போதெல்லாம் என்னுடைய கட்டுரைகள் தாராளமாகப் பத்திரிக்கைகளில் வெளிவந்தன.

                    வால்நட்சத்திரம் கட்டுரையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 'காலவட்டம்', 'கிரகணம்' முதலியவையும் வந்தன.

                    அந்தக் காலகட்டத்தில் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டது.
                    ஆகையால் அதைப் பற்றிய ஆய்வு செய்தேன்.

                    அப்படிப் பிறந்ததுதான் 'மகவோட்டம்' கட்டுரை.

                    அதை 29-02-1989-இல் மலேசியாவின் தினமணி பத்திரிக்கையில் மாசி மகத்தை முன்னிட்டு எழுதினேன்.

                    அந்தப் பேப்பர் கட்டிங் எங்கோ மறைந்துபோனது.
                    சில நாட்களுக்கு முன்னர் கைக்குக் கிடைத்தது.

                    அதை டைப் அடித்து வைத்துக்கொண்டு, அதில் இன்னும் அதிக விபரங்களையும் சேர்த்து, புதிதாக வரைபடங்களையும் வரைந்து அகத்தியரில் வெளியிட்டேன்.
                    பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருகிறது.
                    ஆனால் இப்போது ஒரு சர்வதேச மின்வெளி தமிழரங்கத்தில்.

                    அந்த ஸ்கெட்சுகள் ரொம்பவும் உபயோகமானவை.
                    உள்ளங்கை நெல்லிக்கனி போல விஷயங்களை விளக்குபவை. 
                    இந்த நட்சத்திரங்கள், ராசிகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு; அஸ்வினி பரணி போன்ற நட்சத்திரங்கள் எல்லாம் வேறொரு கணக்கைச் சேர்ந்தவை; அந்த நட்சத்திரங்களுக்கும் தனி உருவங்களைக் கொடுத்திருந்தார்கள்; அவை பன்னிரு ராசியுடன் ஐக்கியமாகின.....

                    இவையெல்லாமே உங்களுக்குப் புதிய விஷயங்கள்தாம். 

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



PREVIOUS

RETURN TO MAIN MENU