மலாய்நாட்டில் ஐந்து வகையான ராமாயணக்கதைகள் ஒரு காலத்தில் இருந்தன.
வாயாங் கூலிட் என்பது ஒருவகையான தோற்பாவைக் கூத்து. அதில் ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான், ராவணன் முதலியவர்களின் உருவங்களைத் தோலில் செய்து மூங்கில் குச்சிகளால் இயக்கி, பிரகாசமான விளக்கை வைத்துக்கொண்டு, அதற்கும் வெண்மையான திரைச்சீலைக்கும் நடுவில் பாவைகளைப் பிடித்துக் கொண்டு நிழலாட்டமும் கலந்த காட்சி அது. அதற்கென்று ஒரு ராமாயணக் கதை இருக்கிறது. பெண்கள் அனைத்து வேடங்களையும் போட்டுக்கொண்டு நாட்டிய நாடகமாக நடிப்பதற்குரிய இன்னொரு ராமாயணக் கதையும் இருந்தது. மெனோரா என்னும் மறைந்துபோன கலைக்குரிய ராமாயணமும் இருந்தது. கெமிலாங் ராமாயணம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்னர் மறைந்துவிட்டது.
இவைதவிர செரித்தெரா ஸெரி ராமா, ஹிக்காயத் ஸெரி ராமா என்னும் கதைகளும் இருந்தன. இவற்றுடன் கர்ணபரம்பரைக் கதைகளாக மயில்ராவணன் கதையும் இன்னொரு செவிவழி ராமாயணமும் இருந்தன.
மராமரத்தைத் துளைக்குமாறு அம்பெய்த காட்சி ஒன்று ஒரு குறிப்பிட்ட ராமாயணத்தில் இருக்கிறது.
நான் சொல்லக்கூடிய அந்த கர்ணபரம்பரைக் கதையை செ ஆவாங் என்னும் மலாய்க்காரர் என்னிடம் சொன்னார். நான் முதன்முதலில் குவாலா பிராங் என்னும் காட்டுக்கு நடுவில் உள்ள ஊரில் வேலை செய்தபோது என்னுடைய மேற்பார்வையில் இருந்த ஆஜில் என்னும் சிற்றூரில் உள்ள சுகாதார மையத்தில் அவர் மெடிக்கல் அஸிஸ்டெண்டாக இருந்தார். அப்போதே அவருக்கு ஐம்பதுக்கு மேலாகி விட்டிருந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் ஆங்கிலம் கற்று, முதுகில் மருந்துபெட்டியுடன் கால்நடையாகவும் சைக்கிளிலும் படகிலும் கிராமங்களுக்கெல்லாம் சென்ரு வைத்தியம் செய்த ட்ரெஸர் என்னும் பதவியில் தம்முடைய தொழிலை ஆரம்பித்தவர்.
நான் பார்க்கும்போது ஒருஎ பெரிய மெர்ஸிடெஸ் பன்ஸ் கார் வைத்திருந்தார். இரண்டு பெரிய வீடுகளில் இரண்டு மனைவியர்.
இந்தச் செவிவழி ராமாயணத்தை அவருடைய சித்தப்பா 1942-ஆம் ஆண்டில் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் கிடைத்த காகிதங்களில் எழுதிவைத்ததாகச் சொன்னார்.
அந்த ராமாயணத்தின்படி ஸெரி ராமா என்னும் ராமரின் மகன் ஹார்னுமான் என்னும் ஹனுமான். லாக்ஸாமாணா என்னும் லட்சுமணன்தான் பூமியைத் தாங்கிக ்கொண்டிருக்கும் பாம்பு. ராமனின் தம்பியாக இருக்கிறது. கிஷ்கிந்தையில் ராம லட்சுமணர்கள் ஸ¤ர்கிவா என்னும் சுக்கிரீவனைச் சந்திக்கும்போது பெலிய ராஜா என்னும் வாலியைக் கொல்வதாக சபதம் செய்கிறார் ராமர்.
வானளாவ வளர்ந்திருக்கும் ஏழு மரங்களைத் துளைத்துக்கொண்டு செல்லுமாறு
ஒரே பாணத்தை விடவேண்டும். அப்படிப்பட்ட வீரனால்தான் பெலிய ராஜாவைக் கொல்லமுடியும். ராமரும் ஒப்புக்கொண்டு மரங்கள் இருக்கும் இடத்திற்குச ்சென்றார்கள்.
அங்கு போய்ப் பார்த்தால் அதிர்ச்சி.
ஏனெனில் அந்த மரங்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்துகொண்டே யிருந்தன.
அவை ஒரே நேர்க்கோட்டில் இருந்தாலல்லவா ஒரே பாணத்தை விட்டு அவற்றைத் துளைக்கமுடியும்.
அப்போது லட்சுமணருக்கு ஒரு காட்சி தோன்றியது.
அந்த ஏழு மரங்களும் பூமிக்கு அடியில் வெகு ஆழத்தில் இருந்த பெரிய பாம்பின் முதுகில் முளைத்திருந்தன. அந்தப் பாம்பு நெளிந்துகொண்டேயிருந்தது. ஆகவே மரங்கள் அசைந்தாடிக்கொண்டே இருந்தன.
ராமர் வில்லை எடுத்து அம்பைப் பூட்டினார்.
அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் மரங்கள் ஏழும் ஒரே நேராக வந்தன.
அந்த க்ஷண நேரத்தில் லட்சுமணர் தம்முடைய வலதுகால் பெருவிரலைப் பாம்பின் தலைக்கு நேராக வைத்துக்கொண்டு அழுத்தினார். பாம்பு அப்படியே அசைவற்று இருந்தது.
அந்தச் சமயம் பார்த்து ராமர் தம்முடைய ராம பாணத்தை விடுத்தார்.
ஏழுமரங்களையும் அது துளைத்துக்கொண்டு சென்றது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$