"நானும் அறியேன்;
அவளும் பொய் சொல்லாள்"

கதை 1


வித்யாலங்கார

டாக்டர் எஸ்.ஜெயபாரதி




    அகத்தியத்தில் ஓடிய ஒரு பரிமாற்றத்திலிருந்து எடுத்துத்
    தொகுத்தது இது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    இராமாயணத்தை எழுதுவதாகக் குலோத்துங்க சோழனிடம் ஒத்துக் கொண்டார் கம்பர்.
ஆனால் ஒப்புக்கொண்ட பின்னரும் அவர் காவியத்தைப் பாட ஆரம்பிக்காமல் சும்மாவே
 இருந்தார். ஆறுமாதங்கள் கழிந்தன.

    ஒட்டக்கூத்தருக்குக் கம்பர் காவியத்தைப் பாடாமல் இருப்பது தெரியும். ஆகவே அதனைச் சோழனிடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
    ஆகவே அடுத்தநாள் சோழன் கம்பரைப் பார்த்து, "என்ன கம்பரே, காவியமெல்லாம் எப்படி?",
என்று கேட்டான்.

    "ஓ! ரொம்ப நல்லாப் போகுதே!"
    "அப்படியா? இப்போ எந்த இடம்வரைக்கும் வந்துவிட்டீர்?"
    கம்பர் அசரவில்லை.
    "வானரப்படை, கடலுக்கு அணை போடுவதுவரைக்கும் வந்தாயிற்று.".
    "ஓஹோ! அந்த இடத்திலிருந்து ஒரு பாடலைச் சொல்லும் பார்ப்போம்."
    கவியோகியார் பாணியில் "ஓஹோ பேஷாய்! அதற்கென்ன!

குமுதனிட்ட குலவரைக் கூத்தரின்
திமிதமிட்டுத் திரியும் திரைக்கடல்
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழுமெனும் ஆசையால்

    குமுதன் என்னும் வானரத்தலைவன் ஒருவன் பெரும் மலையைப் பிடுங்கி
விளையாட்டாகக் கொண்டுவந்து கடலில் போட்டான். அப்போது நுரையும்
திரையுமாக கொந்தளித்தெழுந்த கடலின் நீர்த்துளிகள் விண்ணுக்கும் சென்று
அங்கிருந்த விண்ணவர் உலகையும் எட்டியது. அதைக் கண்ட விண்ணவர்,
'மீண்டும் கடல் கடையப்பட்டு அமுதம்தான் மீண்டும் பிறக்கிறதோ;
அருந்தலாமே', என்ற மகிழ்ச்சியால் துள்ளினார்கள்.

    அதனைக் கேட்ட ஒட்டக்கூத்தர், 'மாட்டிக்கினியா நய்னா!' என்று  எண்ணிக்கொண்டு, "அது சரி கம்பரே. துளியைத் துமி என்றீரே, அது எப்படி  எந்த டிக்ஷனரியில் இருக்கு? காட்டுவீரா?",
என்றார்.

    கம்பர், "அது எந்த நரியிலும் இல்லை. சொல்வழக்கு".
    "சரிதான். அப்படியானால் அந்த சொல்வழக்கையாவது காட்டும்."

    'நானும் அறியேன்; அவளும் பொய்சொல்லாள். நாம் பாடுவது எல்லாமே அவள் வாக்குதான்.
அது பொய்க்காது', என்று எண்ணிக்கொண்டு, கம்பர் வீட்டுக்குச் சென்று சரஸ்வதியை
அழைத்தார்.

    அவர் நினைக்கும்போது சரஸ்வதி அவருக்குப் பிரசன்னமாவதுண்டு.
    கலைவாணி தோன்றியதும் அவளிடம்,

"என்னம்மா இது! 'நானும் அறியேன்; அவளும் பொய்சொல்லாள்',

என்ற வண்ணம், நான்பாட்டுக்கு 'துமி' என்ற சொல்லைச் சொல்லிவிட்டேன். இப்போது ஒட்டக்கூத்தன் பிடித்துக்கொண்டு உலுப்புகிறானே? என்ன செய்வது?"
    கலைவாணி, "நாளை இரவு, ஊருக்கு வெளியில் இன்ன இடத்திற்கு மன்னனையும்
கூத்தனையும் கூட்டி வா." என்றாள்.


    அவ்வாறே அடுத்த நாள், கம்பன் அவ்வருவரையும் கூட்டிக்கொண்டு கலைவாணி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றான்.

    அந்த இடத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் ஒரு யாதவப்பெண் தயிர் கடைந்துகொண்டிருந்தார். அருகில் நான்கு குழந்தைகள். அவர்களிடம் அந்தப்பெண், "பிள்ளைகளே! உங்கள்மேல்
மோர்த் துமி தெறிக்கப்போகிறது
எட்ட நின்று விளையாடுங்கள்," என்றாள்.

    ஒட்டக்கூத்தர் அயர்ந்துபோனார்.

    ஏனெனில் அந்த இடத்தில் அதுவரைக்கும் ஏதும் வீடு இருந்ததில்லை.     ஒரு கணம் கண்மூடி, கலைவாணியைத் தியானம் செய்துகொண்டு கண்களைத் திறந்துபார்த்தார். அவர் கண்களுக்குக் கலைவாணி தெரிந்தாள். அருகில் நான்கு வேதங்களும் குழந்தைகளாக விளையாடிக்கொண்டிருந்தன.

    ஒட்டக்கூத்தரும் கலைவாணியின் பேரருளைப் பெற்றவர்தாம். 'ஈட்டியெழுபது' என்னும்
நூலை சிர சிம்மாதனத்தின்மீது அமர்ந்தவாறு கலைவாணியின் மீது பாடியவராயிற்றே! தக்கயாகப்பரணி பாடும்போது
வெளிச்சத்திற்காக திருவொற்றியூர் காளியே வந்து பந்தம் பிடித்திருக்கிறாளே!

    வாக்தேவியாகிய கலைவாணியே 'துமி' என்ற சொல்லைச் சொன்னதால் அதுவும் ஒரு
சொல்தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.


    ஏனெனில், 'நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்'.

அடுத்த சம்பவம்....

RETURN TO MAIN MENU