நையாண்டிக் கவிதைகள்
ஒரு பார்வை
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
தனிப்பாடல்களே ஓர் அலாதிதான்.
அவற்றில்தான் எத்தனை வகைகள்! எத்தனை சுவைகள்!
நகைச்சுவை, நையாண்டி, இழிவு, வஞ்சப்புகழ்ச்சி,
வஞ்சகப் புகழ்ச்சி,
வசைக்கவி, அறம், மறம்.......
இது ஒரு நையாண்டிக் கவிதை.
பாடியவர் யாரென்று தெரியவில்லை.
முத்துசாமி மன்னர் என்பவர் ஒரு ஜமீன்தாராகவோ
பெருநிலக்கிழாராகவோ இருந்திருக்கவேண்டும். அவர்மேல் பாடப்பட்ட
சில பாடல்களைத் தனிப்பாடல் திரட்டுக்களில் காணலாம்.
'எரு வரட்டி' என்பதைத் தமிழ்நாட்டில் கிராமப்பக்கங்களில்
இருப்பவர்கள்.
அறிவார்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் அறியமாட்டார்கள்.
மலேசியா சிங்கப்பூர் தமிழர்களும் அறியமாட்டார்கள்.
ஆகவே அது என்ன என்று சொல்லிவிடுவதுதான்
நல்லது.
மாட்டுச்சாணத்தைத் தவிட்டுடன் சேர்த்து
நன்றாகப் பிசைந்து, உருட்டி,
அந்த உருண்டையை வெய்யில் படக்கூடிய சுவற்றில் 'சப்'பென்று அடித்து,
அது சுவற்றில் ஒட்டிக்கொண்டவுடன் சுவற்றின் மேலேயே வைத்து
'சப்' சப்' 'சப்' என்று அதை அப்படியே உள்ளங்கையால் தட்டுவார்கள்.
பரட்டா ரொட்டிபோன்ற சைஸ¤க்கு அது
ஆனவுடன் அடுத்த எரு
உருண்டையை உருட்டித் தாட்டுவார்கள்.
இது அப்படியே வெய்யிலில் காய்ந்துகொண்டிருக்கும்.
நன்றாகக்
காய்ந்தவுடன் சுவற்றிலிருந்து உலர்ந்து உதிர்ந்து விழும்.
அதை எரி அடுப்பில் வைத்து எரிப்பார்கள்.
இந்த எரு ரொட்டியை 'எருவராட்டி' அல்லது
'எரு வரட்டி' என்பார்கள்.
இது ஒரு காலத்தில் தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில்
முக்கியமான
Fuel Material எரி பொருளாக விளங்கியது.
முத்துசாமி மன்னருக்கு வேண்டப்பட்ட மிருதங்க
வித்வான் ஒருவன்
தன்னுடைய மிருதங்கத்தை வாசிக்க ஆரம்பித்தான்.
அந்தச் சப்தத்தைக் கேட்ட பெண்கள், "எங்கோ
எருவரட்டி தட்டுகிறார்கள்;
வாங்கிக்கொண்டு போவோம்" என்று கூடைகளைத் தூக்கிக்கொண்டு வந்து
விட்டனராம்.
எங்கள் முத்துசாமி மன்னா! இங்கே ஒருவன்மிரு
தங்கமதை ஓயாமற் தட்டினான் - அங்கங்கே
கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக் கூடையெடுத்
தோடிவந்தார் நீ பார்த்தா யோ?
அதான் சங்கதி.
இதே போன்ற தீமில் வேறு சில பாடல்களும் இருக்கின்றன......
வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - நேற்றுக்
கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேணென்று
பழுதையெடுத்து ஓடிவந்தான் பார்.
நாகைப்பட்டினத்தின் இருந்த தேவடியாள் ஒருத்தி
தன்னுடைய பழுதான
குரலை வைத்துக்கொண்டு பாடினாள். அதற்கு முந்தின நாள் ஒரு
வண்ணானுடைய கழுதையன்று காணாமற் போய்விட்டிருந்தது.
அவன் அதைத் தேடிக்கொண்டிருந்தான்.
தேவடியாள் குரலைக் கேட்டதும் அவனுடைய கழுதைதான்
எங்கோ
இருக்கிறது என்று நினைத்து, "கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்து
விட்டேன்!" என்று கூவிக்கொண்டு ஓடிவந்தான். கழுதையைக் கட்டிப்போட்டு
அல்லவா இழுத்துச் செல்லவேண்டும். அதற்காக வைக்கோலை அள்ளிக்
கொண்டு, ஓடிக்கொண்டிருக்கும்போதே அதைக் கைகளில் வைத்து
முறுக்கி வைக்கோலால் ஆன பிரிக் கயிறாக ஆக்கிக்கொண்டு சென்றானாம்.
இன்னுமொரு பாடல்கூட இருக்கிறது.......
RETURN TO MAIN MENU