பரமாச்சாரியார்

THE GURU WITHOUT A GURU
PART IV

VIDYALANKARA
DR.S.JAYABARATHI


        1957-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞபீடத்தில் ஏறினார். சகல சாஸ்திரங்களையும் கற்றவர்களே இந்த பீடத்தில் ஏறமுடியும். அவர் பட்டத்துக்கு வந்த பொன்விழாவும் கொண்டாடப் பட்டது.

           பாரத சம்பிரதாயத்தில் Knowledge Base என்றுசொல்லப்படும் ஒரு மாபெரும் அமைப்பு உண்டு. அதனை வித்யாஸ்தானம் என்று சொல்வார்கள்.
            ஏற்கனவே இருமுறை அகத்தியத்தில் இதைப்பற்றிப் பெசியாகி விட்டது.

            சுருக்கமாகச் சொல்லப்போனால் - நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், நான்கு உபவேதங்கள், நான்கு உபாங்கங்கள். இவற்றில் இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள், பதினெட்டு உபபுராணங்கள், தொண்ணூற்றாறு பிரபந்தங்கள், முப்பத்திரண்டு வித்தைகள், அறுபத்தினான்கு கலைகள், இருபத்தெட்டு ஆகமங்கள், யாமளங்கள், அறுபத்தினான்கு தந்திரங்கள், பாஞ்சராத்ரம், வைகானஸம் போன்ற ஆகமங்கள் போன்றவையும் அடங்கும். இவற்றையெல்லாம் அறிந்திருக்கவேண்டும்.

            ஆதிசங்கரர் மூன்றுமுறை சர்வக்ஞபீடத்தில் ஏறியிருக்கிறார்.

            அந்தக் காலகட்டத்தில் பெரியவர்கள் அளவுக்கு சகல சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள் வேறு யாருமில்லை என்று கொள்ளலாம். மேலும் அவர் ஜகத்குருவாக விளங்கியதால் அவர் அந்த பீடாரோகணம் செய்தது அந்தக் காலகட்டத்துக்குப் பொருத்தமாகவே இருந்திருக்கிறது.

            1967-இல் அவர் பீடாதிபத்யம் ஏற்றுக்கொண்ட வைர விழாவும் கொண்டாடப்பட்டது.

            எத்தனையொ ஊர்களுக்கு வருகை; எத்தனையோ கோடிக் கணக்கான மக்களைச் சந்தித்து அருளல்; எத்தனையோ ஆயிரக் கணக்கான பேருரைகள்; எத்தனையோ அரிய காரியங்களில் ஆலோசனைகள்; எத்தனையோ கோயில்களில் திருப்பணி; எத்தனையோ கருத்தரங்குகள், வித்வத் சதஸ்கள் என்றவண்ணம் அவருடைய அவதார் நோக்கம் நிறைவேறிக்கொண்டேயிருந்தது.

            இருபதாம் நூற்றாண்டில் வேத ஞானத்தை அழிய விடாமல் பாதுகாத்து, 'வேதநெறி தழைத்தோங்க'ச் செய்ததில் ஒரு மாபெரும் வெற்றியை அந்த நடமாடும் தெய்வம் அடைந்தது.

            அவருடைய அருளுரைகள் ரா.கணபதியின் 'தெய்வத்தின் குரல்' போன்ற எத்தனையோ நூல்கள் வடிவில்வந்துவிட்டன. சோதனையும் அபாயமும் மிகுந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டம்வரை நம்மையெல்லாம் பாதுகாத்து உடனிருந்து கூட்டிவந்துவிட்டார் நம் பெரியவர்கள்.

            அதுவரைக்கும், அவர்வரைக்கும் ஸ்ரீசங்கர பரம்பரை பெருமையுடன் பீடுநடை போட்டது.

            ஜெய ஜெய சங்கர
            ஹர ஹர சங்கர



Some more

            ஆதிசங்கரர் காலத்துக்குமுன்னர், இன்று பிரபலமாக விளங்கும் பல கோயில்களில் இப்போதுள்ள வழிபாடுகளோ நடைமுறைகளோ இல்லை. அங்கிருக்கும் தெய்வங்களுக்கும் இன்றுள்ள பெயர்கள் இல்லை.
அவற்றிற்குரிய பூஜாவிதானங்கள், ஆகமங்கள், தந்திரங்கள், யாமளங்கள் முதலியவை இப்போது கிடையாது.
இன்று சௌம்யமாக விளங்கும் பல தெய்வங்கள் ஒரு காலகட்டத்தில் உக்கிர கலையைக்கொண்டிருந்தன.
திருவானைக்காவின் அகிலாண்டேஸ்வரியை 'தண்டநாதா' என்றும் 'மஹாவாராஹி' என்றும் சொல்வார்கள். ராஜராஜேஸ்வரியாகிய ஸ்ரீலலிதாவின் சேனாதிபதி சக்தி அவள். அவளுக்குரிய வழிபாட்டு முறைகளின் காரணமாக அவள் உக்கிரகலையைக் கொண்டிருந்தாள். அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
            ஆதி சங்கரர் அங்கு சென்றிருந்தபோது, அவளுடைய உக்கிர கலையை தாடங்கங்களில் அடக்கி அவற்றை அவளுக்கே அணிவித்தார். அந்தத் தாடங்கங்களில் ஸ்ரீசக்ரம் வரையப்பட்டிருந்தது. அவற்றில்தான்
அந்த சக்தி உள்ளடக்கப்பட்டது.
            அம்பிகையின் தாடங்கங்கள் தோடுபோல் இருக்கும். ஆனால் அளவில் பெரிதானவை.
            அம்பிகையின் தாடங்கங்களின் மகிமையாலேயே சிவன் ஆலஹால விஷத்தை குடித்தும் அபாயமேற்படாமல் அப்படியே இருக்கிறார் என்று ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லஹரியில்
கூறியிருக்கிறார்.
            'தாடங்க யுகளீபூத தபநோடுப மண்டலா'என்பது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்.
            'சூரியனும் சந்திரனும் தாடங்கங்களாக அமைந்திருக்கின்றன' என்று கூறுகிறது.
            தாடங்கங்களில் உக்கிரகலையை அடக்கியதோடல்லாமல் சக்தி வெளியீட்டை வாங்கிக்கொள்வதற்காக அகிலாண்டேஸ்வரியின் பார்வை படும் இடத்தில் அவளுக்கு நேர்முன்பாக ஒரு விநாயகரை அமரச் செய்துவிட்டார்.
            அத்துடன் அகிலாண்டேஸ்வரியின் பின்புறமாக முருகனுடைய சிலையை ஸ்தாபனம் செய்துவைத்தார்.
            ஆதிசங்கரர் செய்துவைத்த தாடங்கம் பழையதாகிவிட்டதால் அதனைப் புதிதாகச்செய்து பெரியவர்கள் அணிவித்தார்.
            அவர் செய்த முக்கியமான பல காரியங்களில் முதலாவதாகச் செய்தது இந்தத் திருப்பணி.

GO TO PART V

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



RETURN TO MAIN MENU