பரமாச்சாரியார்

THE GURU WITHOUT A GURU
PART I



VIDYALANKARA
DR.SJAYABARATHI


            4-6-1993-இல் வெளியிடப்பட்ட மலேசிய 'மயில்' இலக்கியப் பத்திரிக்கையின் காஞ்சிப்பெரியவர் சிறப்பிதழுக்காக நான் எழுதிய நீள்கட்டுரை இது. அந்த இதழ் காஞ்சிப்பெரியவருடைய நூற்றாண்டு விழா மலராக வெளியிடப்பட்டது. அதன் கௌரவ ஆசிரியராக இருந்து அதை நான் தயாரித்தேன். அதற்கு ஒரு விசித்திரமான பின்னணி உண்டு. அதைச் சொல்லும் சந்தர்ப்பம் இப்போது இல்லை என்று தோன்றுகிறது. சிவசக்தியின் சித்தம் இருக்கும்போதுசொல்லப்படும்.
            இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் ஒன்றை மனதில் இறுக்கமாக இருத்திக்கொள்ளவேண்டும். இது மலேசியத் தமிழர்களுக்காக எழுதப்பட்டது. அவர்களுக்கேற்றபடி விளக்கங்களும் வியாக்கியானங்களும் கொடுக்கப்பட்டு மிகவும் எளிமையாக விளங்கும்.        

            துறவியாகவும் இருந்துகொண்டு பீடாதிபதியாகவும் இருந்துகொண்டு தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமலும் இருந்த வந்த அந்த ரிஷியைப் பற்றி இப்போது நினவுகூரவேண்டும்போல் தோன்றியது.

            இந்து சமயம் நலிவுற்றிருந்த காலங்களிலெல்லாம் உன்னத மனிதர்கள் அவதரித்து சமயத்தை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர். அவர்களில் சிறப்பிடம் வகிப்பவர் ஆதி சங்கரபகவத்பாதர்.
            பதினெட்டாம் நூற்றாண்டில் இந்து சமயம் மீண்டும் நலிவுற்றது. இந்த நலிவு பத்தொன்பதாம் நூற்றாண்டில்தொடர்ந்துகொண்டிருந்தது. இதே வேகத்தில் அது தொடர்ந்துகொண்டே போயிருந்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்து சமயம் மிகச்சிறுபான்மையினரிடம் பெயரளவிலேயே விளங்கி வரும்
ஒரு பத்தாம்பசலித்தனமான மூடநம்பிக்ககளின் ஒட்டு மொத்தமான சில்லறை மதமாக மாறியிருக்கும் அபாயமிருந்தது. இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தோராம்நூற்றாண்டிலும் மனித சமுதாயத்தில் ஏற்படக்கூடிய சிந்தனை மாற்றம், வரலாற்று மாற்றம், பகுத்தறிவுவாத விஞ்ஞான முன்னேற்றம், அரசியல் மாற்றம், அழிவுசாதன முன்னேற்றம், பொருளாதார நிலை, கல்வி வளர்ச்சி, ஆதிக்கப்போராட்டங்கள்,

போன்றவை எந்த அளவுக்கு இந்து சமயத்தையும் இந்து சமுதாயத்தையும் பாதிப்புறச்செய்யும் என்பதை நம்முடைய பண்டைக்கால ஞானிகள் அறிந்தேயிருந்தனர்.
            ஆகவே இச்சூழ்நிலைக்கு ஈடுகொடுத்து உயிர்ச்சக்தியுடனும் புத்துணர்ச்சியுடனும் உத்வேகத்துடனும் இந்து சமயம் நிலைத்து நிற்பதற்காகப் பல அவதார புருஷர்கள் இக்காலகட்டத்தில் தோன்றினர்.
            இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகாநந்தர், வள்ளலார், அரவிந்தர், காஞ்சிப் பெரியவர், பெரியார் ஈவெ ராமசாமி, இரமண மகரிஷி, சாயிபாபா, மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ ரஜ்னீஷ், ஸ்வாமி பிரபுபாதா,, ரிஷிகேஷ்
சிவாநந்தர் போன்ற பலர் இக்காரியத்தைச் செய்வதற்காகவே வந்தவர்கள். இன்னும் பலர் இந்த வரிசையில் அடங்குவர்.

            அவர்களில் முக்கியமாக் விளங்கும் சிலரில் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
ஆதிசங்கரரின் வழி வந்தவர். காஞ்சி பீடத்தின் 68-ஆவது ஆசாரிய சுவாமிகளாக விளங்கியவர்.
காஞ்சிப் பெரியவரைப் பற்றி கவியரசு கண்ணதாசன் கூறிய கருத்துக்களைப் பார்ப்போம்.......

            "மனிதாபிமானத்திலிருந்து மதாபிமானம்வ்ரை; விஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம்வரை; மனித மனோபாவத்திலிருந்து தெய்வ குணங்கள்வரை காஞ்சிப்பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை.

              அவர் விளக்கிச்சொன்னதுபோல் வேறு எந்த ஞானியும் மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை.

            அவரது தனிமை, கல்வி, அறிவு, நுண்மாண்நுழைபுலம், தீர்க்கதரிசனம், எந்தப் பொருளின்மீதும் ஒரு தெளிவு, தெளிவான பொருளில்கூட தன் அபிப்பிராயம் என்ற பணிவான முத்திரை - இவையெல்லாம் வேறு
எவரிடமும் காணமுடியாத அம்சங்களாகும்.

            பல இடங்களில், அனுபவப்பட்ட சம்சாரிகள்கூட காணமுடியாத கருத்துக்களை அப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார்.

            இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால், 'ஒரு முறை காஞ்சிபுரம் போய் வரலாமா?' என்று தோன்றுகிறது.

            நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.  யாருக்கும் இவ்வளவு தீட்சண்யமான கண்கள்இல்லை.

            எதிரிகளும் களங்கம் சுமத்தமுடியாதபடி துல்லியமான வாழ்க்கை வாழ்ந்துவர் .

            துரதிர்ஷ்டமாக அவர் பிராம்மண சாதியின் தலைவர் என்று பிராமணரல்லாதார் பலர் கருதிக
்கொண்டிருக்கிரார்கள்.

            இது பிராம்மணர்கள் செய்த தவறா, நாம் செய்த தவறா?

            இந்தத் தவறிலே இருவருக்குமே பங்கிருக்கிறது.

            பிற சாதியினர் விரும்பமுடியாதபடி பிராமணர்கள் நடந்துகொண்டார்கள்  என்பது உண்மை.

            அதுபோலவே நமக்குச் சம்பந்தமில்லாததுபோலவே நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.

            இந்த நிலையை இருவருமே மாற்றியாகவேண்டும்.

            உலகமே அறிந்துகொள்ளவேண்டிய ஒரு மேதையை, ஒரு சாதியினர் ஒரு சாதிக்குள் அடக்கிக ்கொள்வதன்மூலம், பக்திமார்க்கத்துக்கு  மட்டுமின்றி, தத்துவ மார்க்கத்துக்கும், உலகத்துக்கும் அவர்கள்
துரோகம் செய்திருக்கிறார்கள்.

            அவரைக் கண்டுகொள்ளாதிருப்பதன்மூலம் பிற சாதியினர், ஞானம் என்னும் பெரும்பொருளையே இழந்துவிடுகின்றனர்.

            ஜாதியைக் கடந்த ஒரு நியதியைச் சமமாகப் போதிக்கிறார்.

            இந்து சமயமும் இந்திய நாடும் அவருக்குக் கடமைப் பட்டிருக்கின்றன.

            ஒரு மாபெரும் மேதையின் கருத்துக்கள் வீணாகிவிடாமல், குறைந்தபட்சம் தமிழறிந்தோர் அனைவரின் மத்தியிலும் வைக்கப்படவேண்டும்.

            காஞ்சிப் பெரியவரைப் பற்றிக் கருத்துச்சொல்ல எனக்குப் பாண்டித்தியம் போதுமோ? ஆகவேதான் தன்னுடைய நாவில் சரஸ்வதியை நற்றுணையாகக் கொண்டிருந்த கவியரசு கண்ணதாசனின் வாக்கில்
தோன்றிய மணிகளை முன்வைத்தேன்.

பரமாச்சாரியார்-#3
Guru without guru -#3

            காஞ்சிப் பெரியவர்கள் ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி தமிழகத்தின் விழுப்புரத்தில் பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள், மகாலட்சுமி அம்மாள் தம்பதியருக்குத் திருமகனாக அவதரித்தார்.
தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் தம் குலதெய்வமாகிய சுவாமிமலை முருகனின் திருப்பெயரான சுவாமிநாதன் என்பதையே தன் மகனுக்கு இட்டார்.

            காஞ்சிப் பெரியவர்களின் மூதாதையர்அமைச்சர்களாகவும் வேதவிற்பன்னர்களாகவும் விளங்கியவர்கள்.

            பெரியவர்கள் தம்முடைய தாயிடமிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் இசையையும் கற்றுக்கொண்டார்.
            ஆரம்பக்கல்வியைத் தந்தையாரே போதித்தார். திண்டிவனம் அமெரிக்கன் மிஷன் பள்ளியில் மிகச்சிறந்த மாணவராகத் திகழ்ந்த பெரியவர்கள், 1906-ஆம் ஆண்டு, ஷேக்ஸ்பியர் நாடகமொன்றில் அழகாக ஆங்கில
வசனங்களைப் பேசி அருமையாக நடித்து முதற்பரிசைப் பெற்றார்.

            பெரியவர்களின் குடும்பத்துக்கும் காஞ்சி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. 1907-ஆம் ஆண்டில் காஞ்சி மடத்தின் அறுபத்தாறாவது பீடாதிபதியாகிய ஆறாம் சந்திரசேகரர், நம்முடைய பெரியவர்களைத் தந்திகொடுத்து வரவழைத்தார். ஒன்றும் புரியாமலேயே நம் பெரியவர்கள் கலவை என்னும் ஊருக்குச் சந்திப்புக்காகச் சென்றார்.

            அவர் அங்கு செல்லுமுன்னரே பீடாதிபதி சமாதியாகிவிட்டார். மகாதேவேந்திர சரஸ்வதி என்னும் பெயரில் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வந்தவரும் இரண்டே வாரங்களில் சமாதியடைந்துவிட்டார்.

             ஆனால் அதற்கு முன்னரே, தம்முடைய குருநாதரின் உள்ளக்கிடக்கையின்வண்ணம் 13-02-1907 அன்று நம் பெரியவர்களுக்குத் துறவறம் தரச்செய்து, தமக்கு அடுத்த வாரிசாக நியமித்துவிட்டார்.

            அவருக்குப் பின்னர் நம் பெரியவர்கள் ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகி ஏழாவது சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற தீட்சாநாமத்தையும் ஏற்றுக்கொண்டார்.

            திடீரென்று ஏற்பட்டுவிட்ட இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கண்ட பெற்றோர் கலங்கினர்.

            சின்னஞ்சிறு வயதில் துறவு பூண்டு, மிகக்கடுமையான தவம், தியானம், பூஜை, வைராக்கியம், ஆகார நியமம் முதலியவற்றைக் கற்று செய்வது சாதாரண விஷயமா?

            "நீங்கள் ஏன் தயங்கவேண்டும்? எனக்கோ குருநாதன் அருள் பரிபூரணமாக இருக்கிறது. நான் இதைக் காப்பாற்றுவேன். நீங்கள் எனக்கு முழுமனதுடன் அனுமதி கொடுங்கள்", என்று வணங்கிப் பணிவுடன் கேட்டுக்
கொண்டு பெற்றோரைத் தேற்றினார். அதன் பின்னர் அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

            பிற்காலத்தில் அவருடைய தாய் இறந்த செய்தி கேட்டுக்கூட அவர் கலங்கவேயில்லை.

GO TO PART II

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU