சாத்தே புராணம்
பாகம் 2

டாக்டர் ஜெயபாரதி
JayBee
கடாரம்
மலேசியா


 தமிழர் சம்பந்தம்
The Tamil Connection

                சாத்தே என்னும் பதார்த்தம் தமிழர்களுக்குப் புதிதல்ல.

                எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப்படும் பதினெட்டு நூல்கள் அடங்கியது சங்க இலக்கியம். அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

                பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களில் ஒன்று பொருநராற்றுப்படை. 'ஆற்றுப்படை' என்பது ஓர் இலக்கியவகை.
                ஒரு வள்ளல் அல்லது அரசனிடம் வறுமையில் உழன்று கொண்டிருந்த பாணன் என்னும் கலைஞன் சென்று, நன்கு விருந்துண்டுவிட்டு, போதுமென்ற அளவுக்கும் மேலே பரிசில்களைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரும்பி வரும்போது, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இன்னொரு தன்னைப் போன்ற கலைஞனிடம் தாம் பெற்று வந்த பொருள்களையும் பரிசில்களையும் காட்டி அந்த வள்ளலிடம் சென்று தன்னைப் போலவே பரிசில் பெற்று வருமாறு சொல்லி, அந்த வள்ளலைப் புகழ்ச்சியாகச் சிறப்பித்துப் பாடுவதை 'ஆற்றுப்படுத்துவது' என்பார்கள்.

                பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழமன்னர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
                இளமையில் தம்முடைய அரசைத் தம் தாயாதிகளிடம் பறிகொடுத்துவிட்டு, பின்னர் அவர்களை வென்று தம் அரசை மீட்டுக் கொண்டவர்.
                கொலை முயற்சியிலிருந்து தப்பிச்செல்லும்போது நெருப்பால் கால் கருகியதால் 'கரிகால் சோழன்' என்ற பெயரைப் பெற்றார். இது காரணப்பெயர். இயற்பெயர் பெருவளத்தான். திருமாவளவன் என்னும் பெயரும் உண்டு.

                அவருடைய தாய்மாமனாகிய இரும்பிடர்த்தலையாரின் பாதுகாப்பில் வளர்ந்தவர்.

                தாயாதிகளிடமிருந்து தம் நாட்டை மீட்டுக்கொண்ட கரிகாலர், தம் பகைவர்களாகிய சேரபாண்டிய மன்னர்களும் பதினோரு வேளிர்களும் அமைத்திருந்த கூட்டணியை வென்றவர். வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் இந்தப் பெரும்போர் நடந்தது.

                இத்தனை பெரிய கூட்டணியை வென்றிருக்கிறார் என்றால் நல்ல அங்கங்கள் உடைய, நன்கு பயிற்சி பெற்ற, ஆயுதங்கள் போர்க்கருவிகள் கொண்ட, வேகமாக நகர்த்தப்படக்கூடிய, வீராவேசம் மிக்க படைகளை உடையவராக இருந்திருக்கவேண்டும். அத்துடன் War Strategy என்னும் போர்த் தந்திரங்கள், வியூகங்கள், மின்னல் தாக்குதல்கள் போன்றவற்றையும் கையாண்டவராக இருந்திருத்தல் வேண்டும்.

                ஈழத்தின்மீது படையெடுத்து பன்னீராயிரம் போர்வீரர்களை அடிமைகளாக்கிக் கொண்டுவந்து, அவர்களைக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியவர்.
                வடநாட்டிலுள்ள வச்சிரநாடு, மகதம், அவந்தி ஆகிய  நாடுகளின்மீது படையெடுத்துச் சென்று வென்றவர்.
                அந்த நாட்டு மன்னர்களிடமிருந்து முத்துப்பந்தர், வித்யாதர மண்டபம், தோரண வாயில் ஆகியவற்றைக் கைப்பற்றிக்கொண்டு வந்தார். இந்த மூன்று நாடுகளும் இன்றைய பிஹார், வங்காளம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியில் இருக்கின்றன.
                Foot-hills of Himalayas - இமயமலையின் அடிவாரப் பகுதியின் மலைகள் அமைந்திருக்கின்றன. அந்த மூன்று நாடுகளையும் வென்ற பிறகு தம் வெற்றியைக் குறிக்க இமயத்தில் கொடி/இலச்சினை நாட்டியதாகச் சொல்லப்படுகிறது.

                தமிழகம் தவிர வேற்று நாடுகளிலும் அவருடைய வாரிசுகள்/வம்சத்தினர் அரசு புரிந்திருக்கின்றனர்.
                ஆந்திர நாட்டின் தென்பகுதியை - தொண்டைநாட்டை தெலுகு சோடர்கள் பல காலம் ஆண்டனர். அவர்கள் தங்களைக் கரிகால் சோழனின் வம்சத்தினர் என்று கூறிக்கொண்டனர். கொங்கு நாட்டைக் கொங்கு சோழர்கள் ஆண்டிருக்கின்றனர்.

                பொருநராற்றுப்படையைப் பாடியவர் முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர். அந்த ஆற்றுபடை நூலில் அவர் காவியாற்றின் பெருமையை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கிறார். காவிரி நாட்டு வயல ்வளத்தையும் சிறப்பிக்கிறார்.

 'மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் -
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறை தோறும், பொறை உயிர்த்து ஒழுகி,
நுரைத் தலைக் குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும்
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய - '

    அத்துடன் சோழவளநாட்டின் சிறப்பையும் பாடுகிறார்.

'கூனி, குயத்தின் வாய்நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக்குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம்கெடக்கிடக்கும்,
சாலி நெல்லின், சிறை கொள்வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கு நாடு கிழவோனே!'

                பொருநர் என்போர் யாழ்களை மீட்டு பாடி, ஆடி, நடிப்பும் செய்பவர்கள். இவர்களின் மூன்று வகையினர் உண்டு. ஏர்க்களம் பாடுவோர், அமர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் ஆகியோர். இன்னொரு சமயம் இதை விவரிக்கிறேன்.
                ஒரு பொருநன் வறுமையில் வாடித் திரிகிறான்.
                அவனைப் போன்றே வறுமையில் வாடிய இன்னொரு பொருநன் கரிகால் சோழரைப் பார்த்து அவர் ஆதரவில் தங்கியிருந்தபின்னர் ஏராளமாகப் பரிசில்கள் பெற்றுத் திரும்பிக்கொண்டிருக்கிறான். அவன் அந்த இன்னொரு பொருநனைப் பார்த்து கரிகாலரிடம் சென்றால் தன்னைப்போலவே சிறப்பான பரிசில்களைப் பெறலாம் என்று யோசனை கூறுவான்.
                இதில் ஓரிடத்தில் கரிகால் சோழரின் அரண்மனையில் தான் உண்ட உணவுகளைப் பற்றிச் சொல்வான் -


'துராய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட க்கொழ் ஊன் கொழுங்குறை
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி......'

கோழ்: கொழுமை. கரிகாற்பெருவளத்தான் செம்மறிக் கிடாயின் அழகிய புழுக்காகிய மேற்றொடையின் வெந்த இறைச்சியினையும் இரும்புக்கம்பியில் கோத்துச் சுடப்பட்ட கோழ் - கொழுமையுடைய ஊன் துண்டங்களையும் பொருநர்க்கு அளவின்றிக் கொடுத்தான் (பொரு. 103 - 106).

நூலின் இந்தப் பாடல் பகுதியின் பொருள் கீழ்க்கண்ட நூலில் இருக்கிறது -
சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் தொகுதி-2 (க -கௌ). தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். 1986.

Pre-Pallavan Index என்னும் இன்னொரு நூலிலும் காணலாம்.

            இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், அந்த செம்மறி ஆடு அருகல் புல்லினால் திரிக்கப்பட்ட பழுதைச் சாப்பிட்டது. 'புழுக்கு' என்பது வெந்த உணவைக் குறிக்கும். அதன் செழுமையான முன் தொடைக் கறியினால் ஆக்கப்பட்ட உணவு. அத்துடன் கொழுப்புடைய இறைச்சித் துண்டங்களை இரும்புக் கம்பிகளில் கோத்து அவற்றைச் சுட்டு அளவின்றி கொடுத்திருக்கிறார்கள்.
    
                சங்க காலத்திலேயே கரிகால் சோழரின் அரண்மனையில் சாத்தே அளவின்றி பரிமாறப்பட்டிருக்கிறது.
                ஆகவேதான் சொன்னேன்:
                "சாத்தே தமிழர்களுக்குப் புதிதல்ல"
                சாத்தேயைத் தமிழர்கள் புகுத்தியிருப்பதற்கு அந்தப் பெயரே சான்று.
                சதை என்பதே சாத்தே என்று மருவியிருக்கிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



PREVIOUS

RETURN TO MAIN MENU