இது ஒரு உண்மையில் நடந்த சம்பவம்.
தன்னுடைய நாட்டைவிட பன்ம்டங்கு பரப்பும் அதிக வலுவும் பெற்ற ஒரு மாபெரும் பேரரசை எதிர்த்து நின்று தன் சுயாட்சியைக் காத்துக்கொண்ட மாவீரரின் கதை.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே மிகவும் பிரபலமானவர் திருமை நாயக்கர்தான்.
அந்தப் பரம்பரையில் அடுத்த பிரபலமான பெயர் ராணி மங்கம்மா.
திருமலை நாயக்கர் ஒரு யதேச்சாதிகாரி.
விஜயநகரப் பேரரசு ஒரு காலகட்டத்தில் வடக்கே கிருஷ்ணாநதி, தெற்கே குமரி முனை, சில சமயங்களில் யாழ்ப்பாணம், கிழக்கிலும் மேற்கிலும் கடல் முதலிய எல்லைகளுக்குள் பரவியிருந்தது.
விஜயநகரப் பேரரசருக்குக் கீழ் நான்கு நாயக்கர்கள், நூற்றுக்கணக்கான அமரநாயக்கர்கள், பாளையக்காரர்கள் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர்.
தலைக்கோட்டைப் போருக்குப் பின்னர் அது சுருங்க ஆரம்பித்தது.
ஹம்பி என்னும் விஜயநகரத்தை விட்டுவிட்டு சந்திரகிரி, பின்னர் வேலூர் என்று தலைநகரம் மாறியது. விஜயநகரத்தை கோல்கொண்டா, பீஜாப்பூர் சுல்த்தான்கள் தாக்கி, அதன் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.
வேலூரிலும் சுற்ற்¢யுள்ள சிறிய பிரதேசத்திலும் விஜயநகரப் பேரரசின் அரசு இயங்கிக்கொண்டிருந்தது. அங்குதான் ராயர் மன்னர் இருந்தார். அவரைவிட பலமிகுந்தவர்கலாக அவருக்குக் கீழிருந்த நாயக்கர்கள் விளங்கினர்.
அந்த நாயக்கர் பரம்பரைகளில் ஒன்றுதான் மதுரை நாயக்கர் பரம்பரை. அதில் தோன்றிய திருமலை நாயக்கர் தன்னாட்சி நிறுவிக் கொள்ளவேண்டும் என்று எண்ணி அடிக்கடி பீஜாப்பூரையும் கோல்கொண்டாவையும் தூண்டி விட்டுக்கொண்டும் தாமும் தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தார்.
திருமலை நாயக்கர் இட்ட தீயில் விஜயநகரம் வேகமாக எரிந்து சாம்பலாகிவிட்டது. கடைசி ராயர்களில் ஒருவர் மைசூர்க் காடுகளில் பைத்தியம் பிடித்து அலைந்துகொண்டிருந்தார். அவருடன் போரிட்டு அவரைத் துரத்திவிட்ட ஸ்ரீரங்கராயன் சுயபலமில்லாமல் ஓடிப்போனான்.
மதுரை சுயாட்சியுடன் திகழ்ந்தது.
ஆனால் இப்போது வேறு மேலதிகார மிரட்டல்கள் ஏற்பட்டன.
கோல்கொண்டா பீஜாப்பூர் ஆகியவை தமிழகத்தை ஏற்கனவே விழுங்கிக்கொண்டிருந்தன.
மதுரையில் திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கன் செய்த பல தவறுகளாலும், அடாவடித்தனங்களாலும், புரிந்த பல போர்களாலும் மதுரை இன்னும் வலுவிழந்தது.
மதுரையிலிருந்து திருச்சிக்குத் தம் தலைநகரை மாற்றிக்
கொண்டதோடு மதுரையிலிருந்த திருமலை நாயக்கர் மகாலையும் இடித்து அதிலிருந்து பல பகுதிகளை எடுத்து திருச்சிக்குக் கொண்டுபோய் அங்கு பெரிய அரண்மனையை கட்டிக்கொண்டார்.
அவர் ஆட்சிக்காலத்திலேயே மதுரையின் பல பகுதிகளை
அவருடைய எதிரிகள் கைப்பற்றிக்கொண்டுவிட்டனர்.
போதாததற்கு அவருடைய தம்பி அழகிரி நாயக்கனும் நாட்டின் ஒரு பகுதியைக் கைக்கொண்டு சிரமங்களைக் கொடுத்தான்.
நடுவில் பதவிப் போராட்டங்கள்; உள்நாட்டுப் போர்.
அதற்குள் கோல்கொண்டாவையும் பீஜாப்பூரையும் முகலாயர்கள் பிடித்துக்கொண்டனர்.
சொக்கநாத நாயக்கரும் பைத்தியம் என்று பட்டம்கட்டப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டாலும் அவர் பெயரளவுக்குத்தான் மன்னர்.
அவருக்கு நீண்ட காலம் பிள்ளையில்லாமலிருந்து முதுமைப் பருவத்தில் பிள்ளை பிறந்தது.
விரைவில் சொக்கநாத நாயக்கர் இறந்துவிட்டார்.
அவருடைய பட்டத்தரசி ராணி மங்கம்மா.
அந்தக் கால வழக்கப்படி மங்காம்மாவைச் சொக்கநாத நாயக்கருடன் உடன்கட்டை ஏறச் செய்ய சிலர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். ஆனால் அரச பதவிக்கு உரிய ஆண் வாரிசை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று காரணம் காட்டி ராணி மங்கம்மா மறுத்துவிட்டார்.
அத்துடன் இளவரசனாகிய ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கரின் ராஜப் பிரதிநிதியாக
தாமே மதுரை நாட்டை ஆண்டுவந்தார்.
ராஜதந்திரத்துடனும் அவ்வப்போது படை பலத்தாலும் ராணி மங்கமா நாட்டைப் பாதுகாத்துவந்தார்.
உரிய காலம் வந்தபோது முத்துவீரப்ப நாயக்கருக்குப் பட்டம் கட்டி வைத்தார்.
முத்துவீரப்பர் மிகவும் இளைய வயதில் பட்டத்துக்கு வந்தவர்.
அப்போது மதுரை நாட்டின் பல பகுதிகளை மைசூர் ராயர், தஞ்சை எக்கோஜி, சேதுநாட்டுக் கிழவன் சேதுபதி ஆகியோர் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
மதுரை நகரமோ நாயக்கரின் எதிரிகள் வசம் இருந்தது.
எதிரிகளிடையே பூசல்கள் தோன்றின.
அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, முத்துவீரப்பர் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமக்குரிய பிரதேசங்களை மீட்டுக் கொண்டுவிட்டார்.
இவ்வாறு இருக்கும்போது.......
முகலாய ஔரங்கஸீப் தம்முடைய சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு டில்லியின் பாதுஷா ஆகினார்.
அவர் காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் பெரியதாக இருந்தது.
ஆனாலும் தக்காணம் என்று சொல்லப்பட்ட தென்னாடு அவர் கைக்குள் பூரணமாக அகப்படவில்லை.
மராத்தியர்கள் எழுச்சி பெற்றிருந்தனர். சிவாஜி ஒரு பேரரசை ஸ்தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தெற்கில் இருந்த பலநாடுகள் ஔரங்கசீபின் கண்களை உறுத்தின.
ஆகவே ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு, அவருடைய தர்பார், உடன்கூட்டம், அந்தப்புரம் ஆகிய அனைத்தையும் த்¢ரட்டிக் கொண்டு தென்னாட்டை நோக்கிப் புறப்பட்டார்.
அவருடைய பரிவாரம், சேனை, தர்பார், அந்தப்புரம் எல்லாமாகச் சேர்த்து ஐந்து லட்சம் பேர் கொண்ட கூட்டமாக விளங்கியது.
அந்தக் கூட்டத்தின் கூடாரங்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டன. நடுவில் பெரும் வீதிகள்; குறுக்குத் தெருக்கள்; கழிவு நீர்ப்போக்கு, ஆங்காங்கு சந்தைகளும் கடைகளும்; பாதுகாப்பு அரண்கள் என்று அமைக்கப்பட்டிருந்தது. அதுவே ஒரு பெரிய நகரம்போல் விளங்கியது.
அந்தக் கூட்டத்தையும் அவ்வப்போது நகர்த்திக்கொண்டே போய்க்கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் அஸ்வமேத யாகம் நிகழ்த்துவார்கள்.
ஒரு குதிரையை நன்கு அலங்கரித்து அவிழ்த்துவிடுவார்கள்.
கூடவே ஒரு படையும் செல்லும். அது எங்கெல்லாம் போகிறதோ அந்த நாடுகளையெல்லாம் அந்தப் படைகள் போரிட்டுக் கைப்பற்றும் அந்த நாட்டு மன்னர் அடிபணிந்து கப்பம் கட்டுவார்.
கடைசியில் அந்தக் குதிரையை வெட்டிப் பகுதி பகுதியாக ஆக்கி யாகத்தில் போட்டுவிடுவார்கள்.
ஔரங்கஸீபும் அதே மாதிரி செய்தார்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.
ஒருயானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து அதன் மீது ஒரு தங்கத்தாம்பாளம்.
அந்தத் தாம்பாளத்தின் மீது ஔரங்கஸீபின் செருப்பு ஒன்று இருந்தது.
யானையை அவிழ்த்துவிட்டுவிடவில்லை.
படைத்தலைவரே பாதுஷாவின் ஆணைப்படி யானையையும் படையையும் நடத்திச்சென்றார்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லையை வந்தடையப்போகும்போது அந்த நாட்டின் மன்னனுக்குத் தகவல் அனுப்புவார்கள். அந்த மன்னன் தன் பரிவாரங்களுடன் வந்து யானைக்குமுன் கீழே விழுந்து பணிந்து வணங்கி, அந்த யானையையும் முகலாயப் படைத்தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரையும் ஊர்வலமாக நாட்டுத் தலைநகரத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும்.
அரசவைக்கு வந்ததும் செருப்புடன் கூடிய தாம்பாளத்தை வாங்கித் தலைமீது சுமந்துகொண்டுபோய் தன்னுடைய சிம்மாசனத்தின்மீது வைத்துவிட்டு, கீழே விழுந்து பணிந்து, கப்பம் செலுத்திவிட்டு, ஒவ்வோர் ஆண்டும் கப்பம் கட்டுவதாக சாசனம் எழுதிக்கொடுக்கவேண்டும்.
இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லைக்கு வந்து சேர்ந்தது.
எல்லையில் இருந்தவாறு தகவல் அனுப்பினர்.
முத்துவீரப்பர் தமக்கு உடல் சௌகரியமில்லை என்று காரணம் காட்டி வராமல் இருந்துவிட்டார்.
சமயவரத்தில் காவிரிக்கரையில் ஔரங்கஸீபின் பிரதிநிதிகளைச் சந்திப்பதாகச் சொல்லியனுப்பினார்.
முகலாயர்கள் திருச்சியின் அருகே வந்தபின்னரும் கூட அவர் வந்து சந்திக்கவில்லை.
Barbarians At The Gate!!!
மக்கள் பயந்தனர். முகலாயப்படையும் குழம்பியது.
பிரநிதிதிகளும் தூதுவர்களும் கோபமடைந்தனர்.
இருப்பினும் ரொம்பவும் மமதையுடன் திருச்சி கோட்டைக்குள் நுழைந்தனர்.
அரண்மனையை அடைந்தனர்.
அங்கும் முத்துவீரப்பர் எதிர்கொண்டழைக்கவில்லை.
கோபமடைந்த முகலாயர், தாங்களே செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்குள் சென்று அரசவையை அடைந்தார்கள்.
அங்கு அவர்கள் கண்டது......
வழக்கமான சிம்மாசனத்தைவிட பன்மடங்கு உயர்ந்த சிம்மாசனத்தின்மீது முத்துவீரப்பர் அமர்ந்திருந்தார்.
முகலாயருக்கு எந்தவித முகமனும் கூறவில்லை.
கடுங்கோபமுற்ற முகலாயர் சிம்மாசனத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்று தாம்பாளத்தை முத்துவீரப்பரை நோக்கி நீட்டினர்.
இதனால் மிகவும் அவமானம் அடைந்த முத்துவீரப ்பர் தம்முடைய காலடியில் செருப்புத்தாம்பாளத்தை வைக்குமாறு உத்தரவிட்டார்.
முகலாயர்களின் கழுத்தில் ஊர்ந்துகொண்டிருந்த ஈட்டிமுனைகள் அவர்களை உந்திவிட்டன.
ஆகவே மெதுவாகத் தாம்பாளத்தை முத்துவீரப்பரின் காலடியில் வைத்தனர்.
முத்துவீரப்பர் தன்னுடைய ஒரு பாதத்தை அந்தச் செருப்பிற்குள் நுழைத்துக்கொண்டு, அந்தத் தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எற்றிவிட்டார். பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு அது எங்கோ போய் விழுந்தது.
"ஏமண்டி முகலாய தொங்கா! உங்கள் டில்லி பாச்சாவுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறதா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்கிறானே? இன்னொரு கால் செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?"
முகலாயப் பிரதிநிதிகளுக்கு ரத்தம் கொதித்தது.
அவர்களைக் கோட்டையைவிட்டு விரட்டி விடும்படி முத்துவீரப்பர் சொன்னார்.
அவர்கள் கோட்டையை விட்டுச்சென்று படையுடன் சேர்ந்து கொண்டு தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யலாயினர்.
ஆனால் அதற்கு முன்னதாக முத்துவீரப்பர் தம்முடைய தேர்ந்த வீரர்கள் அடங்கிய படையுடன் வேகுவேகமாக வந்து அவர்களின் மீது பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார்.
தப்பியவர்கள் ஔரங்கஸீபைச் சென்றடைந்து விபரத்தைச் சொன்னார்கள்.
ஔரங்கஸீபுக்கு இது ரொம்பவும் அவமானமாக இருந்தது.
இப்படியும் நடக்கக்கூடும் என்று அன்று உணர்ந்துகொண்டார்.
அன்று ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரிடம் கற்றுக்கொண்ட பாடத்துக்குப் பின் பாத்ஷா ஔரங்கஸீப் செருப்பை ஊர்வலமாக அனுப்பும் வழக்கத்தைக் கைவிட்டார்.
ஏற்கனவே எழுதப்பட்ட விஷயங்கள் தமிழில் இருந்தபடியால் இந்த இழையைத் தமிழிலேயே தொடர்வோம்.
DrArun Kumar wrote:
Dear Jaybee:
It is a terrific story. No one would have thought of a young upstart to
sow the seed of dismantling of a great Mogul empire. I had always wondered why Aurengezeb didn't go beyond certain point in the south!!
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி அந்த அளவோடு ஔரங்கஸீப் தன்னுடைய பேரரசின் விரிவாக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
இன்னும் கொஞ்சம் அனலைஸ் செய்வோமே.......
ஔரங்கஸீப் தம்முடைய தந்தையின் நான்காம் மகன். பட்டத்துக்கு உரியவர் அல்லர். தம்முடைய தந்தையைச் சிறைப்படுத்தி விட்டு, சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு பதவிக்கு வந்தவர்.
1658-இல் இரண்டாம் முறையாக முடிசூட்டிக்கொண்டார்.
அவருடைய ஆட்சியின் முற்பகுதியில் சீக்கியர், ரஜபுத்திரர், மராத்திய சிவாஜி ஆகியோருடன் போரிட்டுக்கொண்டிருந்தார்.
1680-ஆம் ஆண்டில் சிவாஜி இறந்துபோனார்.
தக்காணம் என்று குறிப்பிடப்படும் - இன்றைய மத்தியப்பிரதேஷ், தென் குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகியவற்றில் குழப்பநிலை இருந்தது.
மராத்தியர், கோல்கொண்டா, பீஜாப்பூர், தமிழக நாயக்க மன்னர்களும் மைசூர் மன்னனும் சுதந்திரமாக இருந்தனர்.
தானே நேரில் சென்று எல்லாரையும் அடக்கி, தக்காணத்தைக் கைப்பற்றி, ஆ·ப்கானிஸ்தானிலிருந்து அஸ்ஸாம், காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை எந்தக் காலத்திலும் யாரும் சாதிக்காத அளவுக்கு இந்தியாவின் பேரரசனாக விளங்கவேண்டும் என்று ஔரங்கஸீப் நினைத்தார்.
அப்போது அவர் ரஜபுத்திரர்களுடன் போரிட்டுக்கொண்டிருந்தார். அவர்களுடன் அவசரமாக சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்.
1681-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தக்காணத்துக்குப் புறப்பட்டார்.
(1682-இல் முத்துவீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்தார்).
ஆங்காங்கு அவருடைய பரிவாரங்களுடன் தங்கி அங்கு தேவையான போர்களைப் புரிந்தவாறு 1685-இல் ஷோலாப்பூரில் பாடியிறங்கினார்.
பாடியிறங்குதல் என்பது தங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு இன்னோர் இடத்தில் போர் புரியச்செல்லும்போது வழியில் தங்கும் செயலைக் குறிக்கும்.
ஓரிடத்தைத் தாக்குவதற்காக குறிப்பிட்டதோர் இடத்தில் வந்து தங்குவதையும் பாடியிறக்குதல் என்பார்கள்.
ஏதோ தோளில் தாங்கிய ஈட்டியைக் கீழே வைத்துவிட்டு, 'அக்கடா' என்று உட்கார்ந்து இளைப்பாறுவது போன்ற எளிய செய்கையல்ல.
சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
அது தண்ணீர் வசதியுடன் பாதுகாப்பான சமதளமாக இருக்கவேண்டும். அங்கு இடத்தைச் செப்பனிட்டு, நடுவில் அவர்களுடைய உணவுப்பொருள்கள், தளவாடங்கள், பொக்கிஷம் ஆகியவற்றைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, அந்தப் படையின் தலைவனாக இருக்கும் அரசன்/இளவரசன்/தண்டநாயகனின் கூடாரமும் அதைச்சுற்றி மற்றவர்கள் கூடாரங்களும் அமைத்து கடைகண்ணி, சந்தைகள் போன்றவுடன் விளங்கவேண்டும்.
சுற்றிலும் மரத்தால் ஆன சுவர்களை எழுப்பியிருப்பார்கள். அவற்றின் வெளியே அகழிகளை வெட்டிவைப்பார்கள்.
அந்தப்புரம், நடனமாதர் போன்றவர்களும் மந்திரி பிரதானிகளும் இருக்க, தூதுவர்கள், ஒற்றர்கள் போன்றோருடன் விளங்கும், அந்தப் பாடி.
ஐந்து லட்சம் பேர் கொண்ட ஔரங்கஸீபின் உடன்கூட்டமும் பரிவாரமும் தங்கும் இடங்கள் பெரும் நகரங்கள் போல் விளங்கின.
ஷோலாப்பூரிலிருந்துகொண்டு மராத்தியரை அடக்கமுயன்றும் அதில் வெற்றி கிடைக்கவில்லை.
கோல்க்கொண்டாவும் பீஜாப்பூரும் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பாமனிப் பேரரசு அழியும்போது உடைந்து சிதறிய ஐந்து நாடுகளில் இரண்டு.
அவை சுதந்திரமாக இருந்துகொண்டு விஜயநகரப் பேரரசின் பல பகுதிகளைப் பிடித்துக்கொண்டு பெரிதாக விளங்கின.
கோல்கொண்டா செஞ்சிவரைக்கும் பிடித்துக்கொண்டது. பீஜாப்பூரின் சார்பில் அதன் தளபதி எக்கோஜி தஞ்சையைப் பிடித்திருந்தான்.
மைசூர் நாடும் தமிழகத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.
ஔரங்கஸீபின் கவனம் கோல்கொண்டா, பீஜாப்பூர் மீது திரும்பியது.
1686-இல் பீஜாப்பூரைக் கைப்பற்றி அதன் சுல்த்தானை ஆயுள்கைதியாக ஒரு கோட்டையில் சிறைவைத்தார்.
பீஜாப்பூர் ஓர் அழகிய நகரம். அங்கிருந்த சுல்த்தான்கள் பெரும் கலாரசிகர்கள். ஓவியங்களும் சிற்பங்களுமாகச் சேகரித்து வைத்திருந்தனர்.
இவற்றையெல்லாம் வெறுத்த ஔரங்கஸீப் பீஜாப்பூரை அழித்தார்.
அடுத்து கோல்க்கொண்டா.
அந்த நாடு ஔரங்கஸீபின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தது. ஆகவே ஔரங்கஸீப் அங்கிருந்த கோட்டைத் தளபதி ஒருவனுக்கு லஞ்சம் கொடுத்தார். அவன் கோட்டையின் முக்கிய வாயிலைத் திறந்துவிட்டான்.
கோல்க்கொண்டாவும் விழுந்தது.
அத்துடன் கோல்க்கொண்டா, பீஜாப்பூர் ஆகியவற்றின் பிரதேசங்களும் ஔரங்கஸீபின் கைக்குள் வந்தன.
அதன் பின்னர் 1686-க்கும் 1689-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஔரங்கஸீபின் செருப்பு ஊர்வலம் திருச்சிக்கு வந்திருக்கும்.
ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தது 1882-இல். அப்போது அவருக்கு வயது 15.
நான்கு ஆண்டுகளில் அவர் தமது ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
அவர் இறந்தது 1689-இல்.
ஏழாண்டுகளே ஆட்சியில் இருந்தார்.
1686-ஆம் ஆண்டில் அவர் பல நிர்மாணவேலைகளைத் தம் நாட்டில் செய்துகொண்டிருந்தார்.
அவருடைய ஆட்சிக்காலத்துக்குள் 1686-இலிருந்து 1689-க்குள் ஔரங்கஸீப் வர்ஸஸ் ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் confrontation நடைபெற்றிருக்கிறது.
ஔரங்கஸீபின் மிலிட்டரி நடவடிக்கைகளின் கால நிரலும் முத்துவீரப்ப நாயக்கரின் ஆட்சிக் கால நிரலும் ஒத்துவருகின்றன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$