நான் வேலை செய்த இடங்களில் கெலாந்த்தான் என்னும் ஸ்டேட்டும்
ஒன்று.
1977 கடைசியில் அங்கு
சென்றேன். அந்த ஸ்டேட்டின் தலைநகரம் கோத்தா பாரு எனப்படுவது.
1977-இல் தும்ப்பாட் என்னும்
இடத்திற்கு முதல் சுகாதார அதிகாரியாகச் சென்றேன். அங்கு பெரிய வீடுகள்
அப்போது கிடையாது. மிகவும்
பின் தங்கிப்போன இடம்.
'கம்ப்போங்' என்பது கிராமத்தைக் குறிக்கும் சொல். மலாய்க்காரர்கள்
வசிக்கும் கிராமங்களில் வீடுகள் பலகைகளால் ஆனவை. தரையில் மரத்தூண்கள்
ஊன்றப்பட்டு அதன்மேல் கட்டப்படிருக்கும். தரையிலிருந்து படிக்கட்டில் ஏறி
வீட்டுக்குள் செல்லவேண்டும். ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் வீடு இருக்கும்.
இந்த மாதிரி வீட்டில்தான் தும்ப்பாட்டில் வசித்தேன்.
அதுவும் ஆற்றங்கரையின் மேலுள்ள வீடு. கெலாந்த்தானின்
முக்கிய
பேராறு ஆகிய ஸ¤ஞ்ஞை கெலாந்த்தான். முதலைகள், ராட்சத உடும்புகள்,
பாம்புகள் போன்றவற்றிடமிருந்து பாதுகாப்புக்காக தரையிலிருந்து ஏழெட்டு
அடி உயரத்துக்கு மேலே வீடு இருந்தது.
கெலாந்த்தான் ஸ்டேட்டுக்குத் தென்மேற்கில் உள்ள இன்னொரு
ஸ்டேட்டின் பெயர் தரங்காணு. அங்குதான் கெலாந்த்தானுக்கு வருவதற்கு
முன்னர் நான் வேலைபார்த்தேன்.
அங்கு ஓர் அதிசயம் உண்டு.
பன்னிரண்டு அடி நீளமுள்ள கடலாமை ஒன்று தென்னமெரிக்காவில் வசிக்கும். அது
முட்டையிடும் பருவம் வரும்போது பஸி·பிக் மகாசமுத்திரத்தை
நீந்திக் கடந்து தரங்காணு கடற்கரைக்கு வரும். பன்னிரண்டாயிரம் கீலோமீட்டர்
தூரம்.
கரெக்டாக த்ரங்காணுவின் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பீச்சுக்குத்தான்
வரும். அந்த பீச்சின் நீளம் இருபது கீலோமீட்டர். கொஞ்சம்கூட அங்கு இங்கு
என்று இசகு பிசகாகக ்கூட போகாது. ஆணி அடித்து வைத்த மாதிரி - அந்த
இடமென்றால் அந்த இடம்தான். அதுவும் இரவில்தான் அந்த இடத்துக்கு வந்து
சேரும்.
கடல் விளிம்பிலிருந்து நூறு-இருநூறு மீட்டர் தலைவில் மணலில்
தவழ்ந்து சென்று பெரிய குழி பறிக்கும். அதற்குள் வரிசையாக
ஆயிரக்கணக்கில் முட்டையிடும். முட்டையிட்டு முடிந்ததும் குழியை மணல்
கொண்டு மூடி
விடும். அதன் பின்னர் கடலுக்குத் தவழ்ந்து சென்று கடலில் இறங்கி நீந்திச்
சென்றுவிடும்.
திரும்பிக்கூடப் பார்க்காது.
ரொம்ப நிசப்தம்.
கெலந்த்தான் ஸ்டேட்டில் தமிழர்கள் உண்டு.
அவர்களுக்கென வெகு சில கோயில்கள் இருந்தன. அவற்றில்
ஒன்று தும்ப்பாட்டில் இருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில்.
ஒரு காலத்தில் ட·ப் டிவலப்மெண்ட் கார்ப்பரேஷன்
என்னும்
நிறுவனம் கெலாந்த்தானிலுள்ள காடுகளை அழித்து அங்கு ஏராளமாக ரப்பர்
எஸ்டேட்டுகளை ஏற்படுத்தியது. அந்தக் கம்பெனிக்காகவே பிரத்தியேகமாக
ரயில்பாதை போட்டார்கள். அந்த ரயில்பாதையின் கடைசி ஸ்டேஷன்
தும்ப்பாட்தான். ஒரு காலத்தில் ரயில்வேயில் தமிழர்கள் ஏராளமானோர்
வேலை பார்த்தனர். ஆகவே தும்ப்பாட்டில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில்
இருந்தனர். அவர்கள் அந்த முத்துமாரியம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டனர்.
ஆனால் பின்னால் குடிபெயர்ந்து வெளியூர்களுக்குப் போய்விட்டனர். ஆறேழு
குடும்பங்கள். அவ்வளவுதான்.
கோத்தாபாரு ஆட்கள் அந்தக் கோயிலை நடத்திவந்தனர்.
அந்த நகரத்தில் அப்போதெல்லாம் கோயில் கிடையாது. ஆகவே
தும்பாட்டுக்குத்தான் அத்தனை பேரும் வருவார்கள்.
கோத்தாபாரு நகரத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து குடியேறிய தமிழர்கள். ஆகவே கோயில்
அப்போதெல்லாம் பெருமளவுக்கு அவர்களின் கட்டுப்பாட்டில்தான்
இருந்தது.
அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பதற்கு
சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களுக்கென்று பழமொழிகள், மொழிவழக்குகள்,
பேச்சுமுறை, உச்சரிப்பு.....இத்யாதி. அலாதியாக இருக்கும். சிகரெட்
பிடிப்பதைக்கூட அவர்கள் சுத்தத் தமிழில் சொல்வார்கள். வித்தியாசமாக
இருக்கும். "வெண்சுருட்டு" என்று சொல்லி என்னத்தையோ சொல்வார்கள்.
நவரெட்னம் (அதென்னவோ அவர்களெல்லாம் 'ரத்தினம்' என்பதை 'ரெட்னம்' என்றுதான்
உச்சரித்தார்கள்) என்பவர் நிறைய பழமொழிகள், கதைகள் சொல்வார்.
முப்பதாண்டுகளுக்கு முன்பே அவர் எழுபதை ஒட்டிய வயதுடையவராக இருந்தார்.
அவர் ஒருமுறை சிங்கம் என்பவரிடம் சொல்லிக் கொண்டிருந்த கதையை
அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
"இந்த ஆமெ இருக்கு கண்டியோஓ......அது ஆயிரம்
முட்டையளப் போட்டுப்போட்டு அதுபாட்டுக்கு மூச்சுப் பேச்சில்லாமெ
போய்க்கொண்டேயிருக்கும். இந்த கோஓஒ....ழி.... அது ஒட்ரே ஒட்ரு முட்டைய
போட்டுப் போட்டு ஊரெல்லாங் கூட்டி வச்சு கொக்கொக்கோ.... கொக்கொக்கோ' எண்டு
கூவி அழைக்குமாம்.... பாத்தியோஓ!"
ரொம்ப யதார்த்தம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$