உடும்புப் பிடி-2
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


                மலேசியாவில் திரங்காணு என்னும் மாநிலம் ஒன்று இருக்கிறது.     மலாயாத் தீபகற்பத்தின் கிழக்கு ஓரப் பிரதேசம். காடுகளும் மலைகளும் நிறைந்த இடம். Virgin jungle என்று சொல்வார்களே. அப்படியாப்பட்ட இடம். உண்மையிலேயே அப்படித்தான். அந்த அடர்ந்த காட்டுக்குள் தனியாக நுழைந்துவிட்டால் வெளிவரமுடியாது. மதிமயக்கம் ஏற்பட்டு, வழிதவறி விடுவார்கள். மோகினிகள் கூட்டிச் சென்றுவிடுவதாகச் சொல்வார்கள். அந்த மோகினிகள் virginகளா என்பது தெரியவில்லை.
                இதெல்லாம் 'கண்டவர் விண்டிலர்' சமாசாரம்.

                அந்த மாநிலத்தில், நடுக்காடுகளுக்கு நடுவில் ஓர் ஊர். குவாலா       ப்ராங்க்(Kuala Brang) என்று பெயர். ஒரே ஒரு ரோடு.

                அங்கு 1974-ஆம் ஆண்டு போய்ச்சேர்ந்தேன்.
       
                அந்த ஊர், மூன்று ஆறுகளின் சங்கமத்தில் இருக்கிறது. ஜப்பானியர் 1942-இல் போட்ட மரப்பாலங்கள். திரங்காணு ஆறே பெரியது.
                நான் வேலை பார்த்த மருத்துவமனைக்குச்சொந்தமான படகு ஒன்று இருந்தது. அவ்வப்போது எங்கள் செலவில் பெட்ரோல் போட்டுக்கொண்டு ஆற்றின் வழியே மலைகளை நோக்கிச் செல்வதுண்டு. காடுகளின் ஊடே செல்வோம்.

                சில சமயங்களில் நண்பர்களும் உடன் வருவர்.
                அப்படி ஒரு சமயம், நண்பர்களுடன் சென்றபோது, ஆறுமுகம்        என்ற நண்பரும் உடன்வந்தார். அவர் மாநிலத் தலைநகரின் பெரிய  மருத்துவமனையில் மருந்தகத்தின் பொறுப்பாளராக இருந்தார். மிகவும் பெரிய புள்ளி. பல இடங்களில் ரூட் போட்டுவைத்திருப்பார். மாநில இயக்குனருக்கே இல்லாத பல சலுகைகள் இவருக்குண்டு. திரெங்காணுவின் 'முடிசூடா   மன்னர்' அல்லது 'முடியில்லா மன்னர்' என்று அழைப்பதுண்டு. வழுக்கை.
                ஒருமுறை ஆற்றில் எந்த அளவு தூரம் செல்லமுடியுமோ அந்த அளவு தூரத்துக்குச் சென்று திரும்புவதாக முடிவு செய்து மதியம் உணவுகளையும்
எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.
           
                மானும் மயிலும் ஆடிடும் காடு
                மாலை நல்நேரம் மாநதி மீது
                படகில் சென்றோமே.....
                உல்லாசப் படகில் சென்றோமே

என்று பானுமதி மாதிரி பாடவில்லை. சும்மா அரட்டையடித்தவாறு சென்றோம்.
                அப்போது ஏதோ ஒன்று ஆற்றின் குறுக்காக வேகமாக நீந்திச் சென்றது.
                முதலையோ என்று முதலில் நினைத்தோம். ஆனால் தலையைத் தண்ணீருக்கு  மேல் தூக்கியவாறு அது நீந்தியது.
                அது ஒரு ராட்சத உடும்பு. Monitor Lizard என்று சொல்லப்படும் இனத்தில் ஒரு சாதி. Biawak என்று மலாய்மொழியில் சொல்வார்கள்.
                ஆறுமுகத்துக்கு உடனே வாய் ஊறிவிட்டது.
                எத்தாந்தண்டி உடும்பு; படகத் திருப்புங்க. போய்ப்பிடிப்போம்', என்று  கேட்டார்.
                படகும் கரையை நோக்கித் திரும்பியது.
                அந்தப் பாழாய்ப் போன உடும்பு, கரையின்மீது சற்றுத் தொலைவில்  நின்றுகொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது.

                ஆறுமுகம் படகைவிட்டுக் குதித்து கரையில் ஏறிச்சென்றார்.

                சற்று உயரத்தில் ஓரிடத்தில் காலைவைத்தார். 'பசக்' கென்று உள்ளே கால் சென்றது. சரியான சகதி. 'உழடு' என்று கிராமங்களில் சொல்வார்கள்.
                களிமண்ணுடன் சதுப்பு நில மண்ணும் சேர்ந்து பல காலமாகக் காய்ந்தே போக வாய்ப்பில்லாமல் ஊறிப்போய் இருக்கும்.
                காலை வெளியில் எடுப்பதற்காக இன்னொரு காலை நன்றாக  ஊன்றினார். இப்போது 'விலுக்'கென்று அதுவும் உள்ளே சென்றுவிட்டது.
                தடுமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக வலதுகையைத் தரையில் ஊன்றினார்.
                அதுவும் உள்ளே சென்றுவிட்டது.

                 Free-ஆக இருந்த இடது கையை.........
                உள்ளேவிடவில்லை.
                மேலே தூக்கி விசிறிக்கொண்டு அபயக்குரல் கொடுத்தார்.
                அந்தப் பழிகார உடும்பு, தானிருந்த இடத்திலிருந்துகொண்டு, சாவகாசமாகத் திரும்பி ஆறுமுகத்தைப் பார்த்தது.
                    அதன் வாய் ஒருமாதிரியாக நீண்டு கீழிறங்கித் தோன்றியது.
                    இளக்காரமாய்ச் சிரித்ததா என்பது தெரியாது. கிட்டத்தில் இருந்து பார்த்தவர் ஆறுமுகம்தானே?
                அவருக்குத்தான் தெரியும்.
                எங்களில் இருவர் படகின் நீண்ட கோலை அவரிடம் நீட்டினோம்.
                இடக்கையால் பிடித்துக்கொண்டார். இழுக்கமுடியவில்லை. ஏதோ அந்தப் பக்கமாய் பிடித்துக ்கொண்டு இழுப்பதுபோல் தோன்றியது.
               சகதிதான் அப்படியிழுத்தது. இழுக்கும்போது ஏற்படும் Vacuum விளைவினால் அது.
                முடிவில் ஐந்துபேர் ஆறுமுகத்தை இழுத்துப் படகில் ஏற்றினோம்.
                 "உடும்பு பிடித்தது போதும்", என்று சொல்லிவிட்டு படகைத் திருப்பச் சொன்னேன்.
                ஆனால் சிரித்துக் கொம்மாளமிட்டுக் கேலி செய்து கொண்டிருந்தாலும்கூட மனதில் இருந்த உற்சாகம் போய்விட்டது.

                அந்த உழடில் ஆறுமுக சிக்கித் தவித்த அந்த சில கணங்கள்.......
    
                படகு மிக எழிலோடு ஒரு யூ-டர்ன் அடித்துத் திரும்பியது.
                அந்த உடும்பு அங்கேயே நின்றுகொண்டு படகையே பார்த்துக் கொண்டிருந்தது.

                 இதுவும் ஒரு வகையில் உடும்பு பிடி தானே?

GO TO PART I

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU