வேளம் ஏற்றுதல்

கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



                    நம்ம ராசாக்கள் எப்போதுமே தர்மயுத்தம் செய்தவர்கள் என்ற கருத்தைப் நம்ம ஆட்களில் பலர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.   
                   கற்பனைகள் அதிகமாகப் பொதிந்த நாவல்களைப் படிப்பதாலும்  அவற்றை அப்படி அப்படியே நம்பிவிடுவதாலும் இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.   
                    வேற்றுநாட்டில் படையெடுக்கும்போது வெற்றியடைந்தால் ஏதோ கப்பம் மட்டுமே வசூலித்துக்கொண்டு வந்ததுபோல ஒரு மௌடீகமான மயக்கம் பலருக்கு ஏற்படும்.
                    ஆனால் அந்த மாதிரியாகவா உண்மைநிலை இருந்தது?   
                    கீழே இரண்டாம் ராஜேந்திர சோழரின் கல்வெட்டுக்களில் கண்ட பகுதிகளைப் பெயர்த்தெடுத்துப் போட்டிருக்கிறேன்.   

                    ராஜராஜசோழரின் மகன் முதலாம் ராஜேந்திர சோழர்.
   
                    அவருடைய மகன்களில் பட்டத்துக்கு வந்தவர்கள் மூவர்.    
                    ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன்.
   
                    சோழர்களின் குலவைரியாகிய மேலைச் சாளுக்கியச் சக்கரவர்த்தி ஆகவமல்ல சோமேஸ்வரனுடன் போர் புரியும்போது ராஜாதிராஜர் கொல்லப்பட்டுவிட்டார்.    
                    சோழர் படைகள் தோல்வியடையும்போல் இருந்த சமயத்தில் இரண்டாம் ராஜேந்திரர் போர்க்களத்திலேயே முடிசூட்டிக்கொண்டு போரைத் தொடர்ந்து நடத்தினார்.   
                    வெறித்தனமான போர் நடைபெற்றது.    
                    வெற்றி சோழர்களுக்கே.
   
                    இப்போது கல்வெட்டுப் பகுதியைப் பார்ப்போம்.......

கல்வெட்டு #1

'பேராற்றங்கரைக் கொப்பத்து
ஆகவமல்லனை அஞ்சுவித்தவன்
ஆனையும் குதிரையும் *பெண்டிர் பண்டாரமும்  
அடங்கக்கொண்டு
விஜயாபிஷேகம் பண்ணி....'

கல்வெட்டு #2

'பேராற்றங் கொப்பத்து வந்தெதிர் பொருத
ஆகவமல்லன் தன் அடல்சேனை எல்லாம்
பாரது நிகழப் பசும்பிணம் ஆக்கி
ஆகவமல்லன் புறக்கிட்டோட அவன்
ஆனையும் குதிரையும் ஒட்டக நிரைகளும்
*பெண்டிர் பண்டாரமும் அகப்படப் பிடித்து.....'


கல்வெட்டு #3

'பேராற்றங்கரைக் கொப்பத்து வந்து
எதிரமர் பொருத ஆகவமல்லன்
தன்பெருஞ்சேனை எலாம்படப் பொருது
பாரது நிகழப் பசும்பிணமாக்கி
ஆங்கவன் அஞ்சிப் புறக்கிட்டோட
மற்றவன் ஆனையும் குதிரையும்.......
ஒட்டகத்தோடு *பெண்டிற் பண்டாரமும்
கைக்கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி......'

கல்வெட்டு #4

'வெஞ்சின வரைசரோடஞ்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து
முன்னுற நெளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பறிந்தோடி மேல்கடல்பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத்தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதி பகட்டரை சனேகமும்
எட்டுநடைப் பரிகளும் ஒட்டகநிரைகளும்
வராகவெல்கொடி முதல் இராசபரிச்சின்னமும்
*ஒப்பில் சத்தியவ்வை சாங்கப்பை என்றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்*
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு
விசையாபிஷேகம் செய்து........'

கல்வெட்டு #5

'கரபத்திர முதல் பொருகளிறு அநேகமும்
பரியின் தொகுதியும் *உரிய தேவியரையும்*
வராகவெல்கொடிமுதல் இராசபரிச்சந்தமும்
இனையன பிறவும் முனைவயிற்கொண்டு....'  

                    யானை, குதிரை, ஒட்டகங்களுடன் அரசனுடைய மனைவிமார்,  அவர்களுடைய உடன்கூட்டத்தினர் அனைவரையும் கைப்பற்றிக்கொண்டனர்.
   
                    கைப்பற்றி என்ன செய்தார்கள் என்பது கேள்வி?
   
                    'அரச மரியாதையோடு பிணையாக வைத்துக் காசு கேட்டிருப்பார்கள்' என்று மிதவாதிகள், Apolologistகள் சொல்லக்கூடும். 
    
                    மற்றவர்களை Naive என்று எண்ணுவதையே காலங்காலமாகச் செய்து வந்து சொக்குக் கண்டவர்கள்.  அப்படிதான் சொல்வார்கள்.

                    கீழ்க்கண்ட மடலில் கொடுக்கப்பட்ட கல்வெட்டுப் பகுதிகளில் காணப்பட்ட சொற்கள்.....

1)
ஆனையும் குதிரையும் *பெண்டிர் பண்டாரமும் அடங்கக்கொண்டு

2)
*பெண்டிர் பண்டாரமும் அகப்படப் பிடித்து.....'

3)
மற்றவன் ஆனையும் குதிரையும்.......
ஒட்டகத்தோடு *பெண்டிற் பண்டாரமும் கைக்கொண்டு


4)
வராகவெல்கொடி முதல் இராச பரிச்சின்னமும்

*ஒப்பில் சத்தியவ்வை சாங்கப்பை என் றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்*
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு

5)
*உரிய தேவியரையும்*

வராகவெல்கொடிமுதல் இராசபரிச்சந்தமும்
இனையன பிறவும் முனைவயிற்கொண்டு....'  

                    இதைத் தொடர்ந்து எழுப்பிய கேள்வி -

                    யானை, குதிரை, ஒட்டகங்களுடன் அரசனுடைய மனைவிமார்,  அவர்களுடைய உடன்கூட்டத்தினர் அனைவரையும் கைப்பற்றிக் கொண்டனர்.

                    கைப்பற்றி என்ன செய்தார்கள் என்பது கேள்வி?
   
                    இதற்கு விடை காண இன்னொரு கல்வெட்டைப் பார்க்கவேண்டும்.
   
                    இரண்டாம் ராஜேந்திரர் 1052 - 1064 வரைக்கும் ஆண்டவர். அவருக்கு 1052-இல் பட்டத்து இளவரசுப் பட்டம் கட்டி, 1054-இல் நடந்த கொப்பத்துப் போர்க்களத்தில் முடிசூட்டிக்கொண்டார்.
   
                    அவருக்குப் பின் அவருடைய தம்பி வீரராஜேந்திரரும் வீரராஜேந்திரரின் மகன் அதிராஜேந்திரனும் ஆண்டனர்.
   
                    பிறகு வந்தவர் முதலாம் குலோத்துங்கர்.
                    அவருடைய வழியில் வந்த மூவர் ஆண்டபின்னர் கிளைவழிச் சோழராகிய  இரண்டாம் ராஜாதிராஜர் வந்தார்.  
                    அதன்பின் மூன்றாம் குலோத்துங்கர். 1178-இல் பட்டத்துக்கு வந்தவர்.  

                    இவர்களுடைய காலத்தில் பாண்டியர் பங்காளிப்போர் ஒன்று நடந்தது.

                    மதுரையில் பராக்கிரம பாண்டியர் என்பவர் ஆண்டார்.   
                    அவருடைய பங்காளி குலசேகர பாண்டியர் திருநெல்வேலியில் ஆண்டார்.
                    பாண்டிநாட்டில் ஒரே சமயத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து ஆண்டார்கள். தலைமையானவர் மதுரைப் பாண்டியர்.   
                    மதுரையின்மீது குலசேகரர் படையெடுத்தார்.   
                    பராக்கிமர் தன்னுடைய உறவினராகிய இலங்கைப் பாராக்கிரமபாகு மன்னரிடம் உதவிகேட்டார்.   
                    அவர் தம்முடைய சேனாபதியாகிய லங்காபுரா தண்டநாயகனின் தலைமையில் Crack Troops பத்தாயிரவரை அனுப்பிவைத்தார்.
   
                    லங்காபுரி வருவதற்குள் குலசேகரர் பராக்கிரமரையும் அவருடைய மனைவியர் மக்கள்ளையும் கொன்றுவிட்டு மதுரையைக் கைப்பற்றிக்கொண்டார்.
   
                    ஒரே ஒரு மகனாகிய வீரபாண்டியர் தம்முடைய மாமனுடைய நாடாகிய மலைநாட்டில்போய் அடைக்கலமாக இருந்தார்.
   
                    லங்காபுரா பெருங்கோபம் கொண்டு பாண்டிநாட்டின் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றினான்.
   
                    லங்காபுரா இந்த விபரத்தைப் பராக்கிரமபாகுவிடம் கூறியதும் குலசேகரரை விரட்டி
விட்டு, வீரபாண்டியரை மதுரையில் அமர்த்த உத்தரவிட்டார்.

   
                    பாண்டிநாட்டின் பல இடங்களில் லங்காபுராவின் படைகளுக்கும் குலசேகரர் படைகளுக்குமிடையில் போர்கள் நடைபெற்றன.
   
                    லங்காபுராவே வெற்றிபெற்றான்.
   
                    குலசேகரர் தம்முடைய மாமனுடைய கொங்குநட்டுப் படைகளையும் தம்முடைய படைகளையும் சிதறிக்கிடந்த பராக்கிரமர் படைகளையும்  சேர்த்துக்கொண்டு லங்காபுராவை எதிர்த்தார்.
                    அத்தனை படைகளையும் லங்காபுரா தோற்கடித்தான்.
   
                    மதுரையைக் கைப்பற்றி அங்கு வீரபாண்டியரை வரவழைத்து முடிசூட்டினான்.
                    விரைவில் குலசேகரர் மீண்டு சிதறிக்கிடந்த படைகளையெல்லாம்  ஒருங்கு சேர்த்து லங்காபுரா/வீரபாண்டியர்  கூட்டணியைத் தாக்கினார்.  அதில் வெற்றி பெற்று வீரபாண்டியரை மதுரையிலிருந்து விரட்டிவிட்டார்.   
                    லங்காபுரா இன்னும் படைகள் கோரினான். பராக்கிரமபாகு  மேலும் பத்தாயிரவரை ஜகத்விஜயா தண்டநாயகனுடன் அனுப்பினார்.   
                    குலசேகரர், பாண்டிநாட்டுச் சிற்றரசர்கள் கூட்டணிப்படைகள் தோற்றன.
                    வீரபாண்டியனை வரவழைத்து லங்காபுரா/ஜெகத்விஜயா இருவரும் தடபுடலாக் முடிசூட்டி வைத்தனர்.   
                   லங்காபுரா ஒரு மில்ட்டரி ஆட்சியைப் பாண்டிநாட்டின்மீது  புகுத்தினான். பாண்டிநாட்டின் நாணயத்தைக்கூட வாபஸ் செய்துவிட்டு தம் நாட்டின் ஈழக்கருங்காசு என்னும் நாணயத்தைப் புகுத்தினான்.
                    சர்வாதிகாரியாக லங்காபுராவே விளங்கியிருப்பான்போல.  
                    புரட்சி செய்த பாண்டிநாட்டின் சிற்றரசர்கள் சிலரின் தலையை வெட்டிமதுரைக் கோட்டையின் வாசலில் ஈட்டியில் செருகிவைத்தான்.   
                    தனக்கு அடங்கி நடக்கக்கூடிய நாட்டுத்தலைவர்களின் கீழ் பாண்டிநாட்டின் முக்கிய பகுதிகளை வைத்தான்.  
                    பாண்டிநாட்டு ஸிவில் போர் தொடர்ந்து நடந்தது. பாண்டிநாட்டின் சிற்றரசர்களில் சிலர் குலசேகரருடன் சேர்ந்துகொண்டனர்.  
                    அடிக்கடி தோல்வியுற்ற குலசேகரர் சோழர் ராஜாதிராஜரிடம் உதவி கேட்டார். சோழப்படைகளும் உதவிக்கு வந்தன.   
                    திருச்சிற்றம்பலமுடையான் பெருமாநம்பிப் பல்லவராயரின் தலைமையில் சோழர் படைகள் வந்தன. ஆனால் சோழர்/குலசேகரர் கூட்டணியை லங்காபுரா தோற்கடித்தான்.  
                    சோழநாட்டுக்குள் இலங்கைப் படைகள் நுழைந்து அழிவைச் செய்தன.   
                    ஆகவே சோழநாட்டுப் படைகளை பல்லவராயரின் தலைமையில் குலசேகரர் படைகள், புரட்சிச் சிற்றரசர் படைகள் முதலியவற்றைச் சேர்த்து தீவிரமாகப் பல இடங்களில் இன்னும் கடுமையாகப் போரிட்டு, முடிவில் சோழர் கட்சி வென்றது. 
   
                    லங்காபுரா, ஜகத்விஜயா ஆகியோரின் தலையை வெட்டி பல்லவராயர் மதுரைக்கோட்டை வாசலில் ஈட்டியில் மாட்டி வைத்தார்.
   
                    மீண்டும் குலசேகரர் ஆட்சிக்கு வந்தார்.
   
                    இந்த சமயத்தில் ராஜாதிராஜரை ஆந்திரப் பகுதிகளுக்குத் தள்ளி விட்டு சோழநாட்டின் சக்கரவர்த்தியாக மூன்றாம் குலோத்துங்கர் பட்டம் சூட்டிக்கொண்டார்.
   
                    பராக்கிரபாகு சும்மா இருக்கவில்லை. ராஜதந்திரத்தால் குலசேகரரைத் தன் வசம் இழுத்துக்கொண்டார். குலசேகரர் குடும்பத்தில் தம்முடைய பெண்ணை மணம் செய்துவைத்தார்.
                    குலசேகரர் இப்போது பராக்கிரமபாகுவின் ஆளாகிவிட்டார்.     சோழநாட்டின் படைகளை விரட்டி விட்டார்.  
                    குலோத்துங்கர் கோபமுற்று குலசேகரரைப் பாண்டிநாட்டிலிருந்து விரட்டிவிட்டு பழைய வீரபாண்டியரை வரவழைத்துப் பட்டம் சூட்டினார்.
   
                    பராக்கிரபாகு சளைக்கவில்லை.
   
                    வீரபாண்டியரைக் கைக்குள் போட்டுக்கொண்டார்.

                    ஆகவே குலோத்துங்கர் ஒரு பெரிய படையெடுப்பைச் செய்தார்.
   
                    மிகவும் பயங்கரமான போர். மூர்க்கமும் கொடூரமும் மிக்க போர் அது.     வீரபாண்டியரைத் தோற்கடித்தார்.
   
                    வீரபாண்டியனின் மகனைக் கொன்றார். இன்னொரு மகனுடைய மூக்கை அறுக்கச்
செய்தார்.                    
                    பிடிபட்ட சிங்க
ப் படையினர் அனைவரின் மூக்கையும் வெட்டிவிட்டு அவர்களைக் கடலுக்குள் தள்ளிவிடச் செய்தார்.
   
                    குலசேகரரின் மகன் விக்கிரபாண்டியரை வரவழைத்து முடிசூட்டச் செய்தார்.   
                    வீரபாண்டியர் இன்னும் படைகளைத் திரட்டி மீண்டும் போரிட்டார்.
   
                    குலோத்துங்கர் வீரபாண்டியரை முடிவாகத் தோற்கடித்தார்.

கல்வெட்டைப் பார்ப்போம் -

"தண்டொன்றால் வழுதி மகனை மூக்கரிந்து தமிழ் மதுரை
கொண்டு விக்கிரபாண்டியர்க்குக் கொடுத்து மீண்டபின் பரிபவத்தால்
எடுத்துவந்து நெட்டூரில் எதிர்ந்த வீரபாண்டியனை
முடித்தலைகொண்டமர் முடித்து *அவன் மடக்கொடியை வேளம் ஏற்றித்*
திருவிழந்த தென்னவனும் சேரலனும் வந்திரைஞ்சி
அரியணையின் கீழிருக்க அவன்முடிமேல் அடிவைத்துப்
படிவழங்கி......."  

                    நெட்டூர் என்னும் ஊரில் வீரப்பாண்டியனைத் தோற்கடித்து போரை முடித்து, வீரபாண்டியனின் மனவியைத் தம்முடைய வேளத்தில் சேர்ப்பித்துவிட்டார்.   

                    'வேளமேற்றுதல்' என்பது பழங்கால வழக்கம்.   

                    'வேளம்' என்பது அரசனுடைய பட்டமகிஷி அல்லாத மற்ற மனைவியர், காமக்கிழத்திகள், அந்தப்புர அழகிகள், ஆட்டக்காரிகள், அவர்களின் பரிவாரத்துப ்பெண்கள், பணிப்பெண்கள், பெண்ணடிமைகள், பெண் காவலாளிகள், போராளிகள் முதலியோரைக் கொண்ட அமைப்பு. அந்தப்புரத்தில் அது ஒருவகை.   

                    இந்த மாதிரியான வேளத்தில் கைப்பற்றப்பட்ட எதிரி ராணிகள், அரசகுமாரிகளைச் சேர்த்துவிடுவார்கள்.
   
                    இது ஒருமிகப் பெரிய அவமதிப்பாக விளங்கியது.

அன்புடன்

ஜெயபாரதி


DR.S.JAYABARATHI
SUNGAI PETANI
KEDAH
MALAYSIA

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU